Thursday, May 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-32

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-32

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

இளம் பாணன் கேட்க தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: படுமரத்து மோசிகீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 33

திணை:மருதம்

————-

அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்

தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ

இரந்தூ ணிரம்பா மேனியோடு

விருந்தி னூரும்  பெருஞ்செம்மலனே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழியே, இவன் ஒரு இளைய மாணாக்கன். தனது ஊரிலுள்ள பொதுவிடத்து எத்தகையவனோ? இரந்து பெறும்  உணவினால் முற்ற வளராத மேனியோடு, புதியதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையையுடையவன்.

———-

படுமரத்து மோசிகீரனார்

—————

படுமரத்து மோசிகீரனாரின் இந்தக் கவிதை தனித்துவமானது. குறுந்தொகையிலுள்ள பெரும்பான்மையான பாடல்களின் அமைப்பை இப்பாடல் கொண்டிருக்கவில்லை. இளம் பாணனின் மெலிந்த உடல், பெரு விருந்து ஆகிய இரண்டு குறிப்புகளே, அக்குறிப்புகளில்  அடங்கியிருக்கும் உள் ஆலோசனைகளே  ( suggestions) இதைக் கவிதையாக மாற்றப் போதுமானதாக இருக்கிறது. அந்தக் குறிப்புகளிலிருந்து விமர்சன விளக்கங்கள் அளித்தே இக்கவிதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டுமாகையால் வாசக பங்கேற்பினை அதிகம் கோரும் கவிதையாகவும் இது இருக்கிறது. உம்பர்ட்டோ எக்கோ தன்னுடைய நூலொன்றில் ஒவ்வொரு இலக்கிய பிரதியும் ஒரு சோம்பேறி எந்திரம் அது வாசகரை அர்த்ததைப் பெற உழைக்க வைக்கிறது என்று எழுதுவார். (பார்க்க: Eco, Umberto. The Role of the Reader: Explorations in the Semiotics of Texts. Indiana University Press, 1979.) அது இந்தக் கவிதைக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை இயற்றியதால்தான் மன்னன் சாமரம் வீச மோசிகீரனாரால் பரிசில் வாங்கச் சென்ற இடத்தில் அரசுக் கட்டிலில் தூக்கம் போட முடிந்தது போலும். 

—————

உடல் எனும் பிரதி (Body as text)

——-

இளம் பாணனின் உடலை இரந்து உண்ணும் மாணவனின் உடல் எனவும், மெலிந்த உடல் எனவும் தலைவி தன் தோழியிடம் சொல்வது ஒரு காமவிருப்பக் குறிப்பை உள்ளடக்கி வைத்திருக்கிறது.  இதையே உ.வே.சா. பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்பட பாராட்டியதால் அவனை ‘இள மாணாக்கன்’ என்றாள்; அவனை புகழ்ந்ததால் அவன் மேலும், தலைவன் மேலும் அவளுக்குள்ள பிரியம் புலப்பட்டது என்று எழுதுகிறார். மெலிந்த பசித்த உடலுக்கு விருந்து என்பது வெறும் உணவாக மட்டும் இருக்க முடியுமா? ‘ஊண் நிரம்பா மேனி’ என்பதிலும் காமக்கூடுதலை வேண்டுகின்ற மேனி என்ற உள்க்குறிப்பு அடங்கியிருக்கிறது. இரா. இராகவையங்கார் விருந்தோடு யானை, பரி, தேர் இவற்றில் ஊர்ந்து செல்லும் என்று பொருளை இன்னும் விரித்து எழுதுகிறார். விருந்தின் ஊர்தலாவது விருந்து பெறுதற்குரிய இடங்களுக்கெல்லாம் செல்லுதல். சீவகசிந்தாமணியில்  286 ஆவது செய்யுளில் “ ஊர்தல் ஈண்டு போதமேற்று” என்றொரு குறிப்பு வருகிறது. 

———

விருந்தினூரும் பெருஞ்செம்மலன்

——-

தலைவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமுடையவளாக தலைவி இருப்பதால் தலைவன் வரும்போது விருந்தயர்தலும் அவனுக்கு வாயிலாக வந்த பாணனும் விருந்துணவு பெறுதலும் நேரும் என்பதால் விருந்தினூரும் பெருஞ்செம்மலன் என்றாள். தோழியை நோக்கி இப்படி தலைவி கூறியவற்றால் அவளது உடன்பாட்டுக் குறிப்பை அறிந்த பாணன் அதனைத் தலைவனிடம் சென்று உணர்த்த அவன் வந்து தலைவியோடு அளவாளவுவான் என்பது இன்னொரு உள்க்கிடக்கை.  


தோழியை ‘அன்னாய்’  ( அன்னை) என விளிப்பதும் மரபு.  

————-

என்னென்கொல்லோ

——-

அயலிடாமாகிய இங்கேயே இவ்வளவு சொல்வன்மையுடன் பேசுவோன் தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் எத்தைகைய சிறப்புடையவனோ என “என்னென்கொல்லோ’ என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் விள்க்கமளிக்கிறார். ‘கொல்’  என்பது ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்; ஆகையால் எப்படி சிறந்திருப்பானோ என்ற கேள்வியாக அதை வாசிக்கவேண்டும். 

பாணர்கள் காதலருக்கிடையில் தூது சென்றிருப்பது நல்ல மரபாக இருந்திருக்கிறது. 

——-


No comments: