Saturday, May 11, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-27

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-27

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 28

திணை: பாலை

————-

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்

ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்

டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்

அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

சுழலுதலையுடைய, அசைந்து வருகின்ற தென்றற்காற்று வருந்தாது நிற்க, எனது வருந்துதலையுடைய காமநோயை உணர்ந்துகொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரிலுள்ளாரை நான், முட்டுவேன் கொல்- முட்டுவேனா, தாக்குவேன் கொல்- தாக்குவேனா, ஒருதலைக் கீட்டை மேற்கொண்டு ஆஅ ஒல்லென- ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாகக் கூவுவேன் கொல்- கூப்பிடுவேனா, இன்னது செய்வதென்பதை அறியேன்.

————

முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்

——-

காம நோய் பீடித்து என்ன செய்வதென்று அறியாத தலைவி, முட்டுவேன் கொல், தாகுவேன் கொல் என்று சொல்லும் ஆரம்பர வரி சுவாரஸ்யமானது. முட்டுதல் உடம்பால் செய்யப்பட்டதென்றும் தாக்குதல் கோல் முதலிய ஆயுதங்களால் செய்யப்ப்டுவது எனவும் உ.வே.சா. உரை எழுதுகிறார். கொல் என்ற சொல் கொல்லுதல் என்ற பொருளில் வரவில்லை. கொல் என்பது ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல் ஆகையால் முட்டுவேனோ, தாக்குவேனோ என்று தலைவி கேட்பதாக பொருள் கொள்ள வேண்டும். தலைவியின் ஆற்றாமை அறியாது தூங்கிக்கொண்டிருக்கும் மொத்த ஊரையும் தலைவி தாக்குவாளா என்றால் இல்லை என்கிறார் இரா. இராகவையங்கார்; அவருடைய உரையில் ஊர் என்பது செவிலி, தாய் முதலிய நெருங்கியோர் என்று எழுதுகிறார்.

——-

ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்

——-

தலைவியின் காம நோயானது, ‘ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்’ என்ற வரியில் இன்னும் அடிப்படையான தொன்மையான நனவிலியின் எல்லையற்ற விகாசத்தை அடைகிறது. மொழிக்கு முந்தைய சப்தங்களால் தன் காம நோயைக் கூவுவேனோ எனத் தலைவி  கேட்பது நனவிலியின் நீர்த்தேக்கம் பீறிட்டு உடைந்திருப்பதை உணர்த்துகிறது. தலைவியின் உயவு நோய் அறியாது துயிலும் ஊரை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தர்க்கம் இந்த நனவிலியின் பீறிடலால் நியாயமாகிறது. உயவு என்பது உயா என்ற சொல்லின் திரிபு. தொல்காப்பியம் உரிப்பொருள் 71 ஆவது சூத்திரம் ‘உயாவே யுங்கல்’ எனக் குறிப்பிடுகிறது. இக்கவிதைவுன் இறுதி சொல், ‘ஊர்க்கே’ என்பது ‘ஊரை’ என்றிருக்க வேண்டும். அதாவது எனது துயர நிலை அறியாது துயிலுகின்ற இந்த ஊரை என்ன செய்வேன் என்பது கவிதை வரியின் பொருள். ஆகவே’ ஊர்க்கே’ என்பது ‘ஊரை’ என்பதன் உருபு மயக்கம்.

———  

அலமரல் அசை வளி

——-

இந்தக் கவிதையிலுள்ள ஒரே இயற்கைக் குறிப்பு ‘அலமரல் அசை வளி’ என்பதாகும்.  1141 ஆவது திருக்குறளில் ‘அலரெழ வாருயிர் நிற்கும்’ என்ற குறிப்பு இருக்கிறது. அலமரல்- சுழலுதலையுடைய, அசை வளி- அசைந்து வருகின்ற தென்றற்காற்று, அலைப்ப- வருந்தாமல் நிற்க- தலைவியின் அகமோ புயலடித்ததாய் இருக்கிறது. அகச்சூழலும், புறச்சூழலும் எதிரெதிராய் நிற்பதை இந்த இயற்கைக் குறிப்பு உணர்த்தியது. தொல்காப்பியம் சொல்லதிகாரம் 310 ஆவது சூத்திரம் அலமரல், தெருமரல் இரண்டும் சுழற்சி எனப் பொருளுரைக்கிறது. பொ. வே. சோமசுந்தரனார்  வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை என மேலும் விளக்கம் சேர்க்கிறார். 

——

ஓரேன்

——

இன்னது செய்வது அறியேன் எனத் தலைவி அரற்றுவது, ‘ஒரேன்’ என்ற சொல்லால் பெறப்பட்டது. ஊரை முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? கூவுவேன்கொல்? ஒரேன் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு நிலை. 



No comments: