Monday, May 27, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-40

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-40

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: அணிலாடு முன்றிலார்

குறுந்தொகையில் பாடல் எண்; 41

திணை: பாலை

————-

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து

சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,

அத்த நண்ணிய அம் குடிச் சீறூர்

மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்

புலம்பில் போலப் புல்லென்று  

அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, காதலன் அருகிலிருக்க விழாக்கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல நிச்சயமாக விரும்பி மகிழ்வேன். அவன் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில் பாலை நிலத்தில் பொருந்திய அழகிய குடியையுடைய சிறிய ஊரில் மனிதர் நீங்கிச் சென்ற அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப் போல பொலிவிழந்து வருந்துவேன்.

———

ஒரு துடிப்பான நகரம், ஒரு மக்களில்லா குடியிருப்பு: இருப்பு இல்லாதது இரண்டின்  இருமை

———-

காதலனின் இருப்பு அல்லது இல்லாமையால் தீர்மானிக்கப்பட்ட இருத்தலின் இரு எதிரெதிர் நிலைகளுக்கு இடையே இந்தப் பாடல் உயிரோட்டம் பெறுகிறது.  “சாறு கொள் ஊரின் புகல்வேன்” என்று தலைவி அறிவிப்பது சமூக மகிழ்ச்சியும் உயிர்ச்சக்தியும் ஒன்றோடொன்று இணைந்து  விழாக்காலத்தே ஓரூர் கொண்டிருப்பது போல தனது இயற்கை நலங்களோடு சிறப்பாக இருப்பேன் என்பதைக் குறித்தது. அவளுடைய அனுபவத்தின் முழுமையை வலியுறுத்தும் தீவிரமான அறிவிப்பாக இது இருக்கிறது. 

———-

புறப்பாடு: பாழடைதலின் ஆரம்பம்

———

இப்பாடலில் தலைவனின் புறப்பாட்டிற்குப் பிறகு தீவிரமான மாற்றம் நிகழ்கிறது. “அத்த நண்ணிய அம் குடிச் சீறூர்” அவன்  வெளியேறியவுடன்,  ‘நான் ஒரு பாழடைந்த குடியிருப்பாக மாறுகிறேன்’, மகிழ்ச்சியான நகரம் ஒரு தனியான “குடியிருப்பாக" மாறிவிடுகிறது  அதன் தனிமை "பாழான நிலத்தில்" இருக்கிறது; இது வெறுமனே ஒரு வெற்று வீடு அல்ல, ஆனால் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்”- கைவிடப்பட்ட, பொலிவு இல்லாத குடியிருப்பு, அணில்கள் கூட முதன்மையான குடியிருப்பாளர்களாக இருக்கும் இடம். பொதுவாக விளையாட்டுத்தனத்துடன் தொடர்புடைய அணில்கள், இப்போது குடியிருப்பின் வெறுமை  மனித செயல்பாடுகளற்ற தனிமை ஆகியவற்றின் குறியீடுகளாய் மாறுகின்றன. 

———-

வினையூக்கியாக காதலன்

———-

காதலனின் அடையாளம் இப்பாடலில் குறிப்பிடப்படவில்லை, ஆனால்  உணர்ச்சிபூர்வமான  ஆழத்தில் அவனை ஒரு வினையூக்கியாக இப்பாடல்  நிலைநிறுத்துகிறது. அவன் ஒரு துணை மட்டுமல்ல, தலைவியின்  உள் வெளி உலகங்களை மாற்றும் ஒரு ஊக்கியாக இருக்கிறான்.

——

தனிமையில் பெண் குரல்

——-

தனிமையிலிருக்கும் பெண்ணிண் குரலாக இந்தக் கவிதையின் மைய செய்தியாக மாற்றம் இருக்கிறது.  இருப்பு இல்லாமையின் எதிரிணை இருமைகள்  "நகரம்" X "குடியிருப்பு", "கொண்டாட்டம்" X"பாழான நிலம்", "மகிழ்ச்சி" X "கைவிடப்பட்டவை" - இந்த எதிரெதிர் இருமைகள் கவிதையில்  ஒரு பதற்றத்தை உருவாக்குகின்றன, அது கவிதையின் உணர்ச்சியை செழுமையாக்குகிறது. இந்தக் கவிதையில் தலைவியின் அனுபவம் படிப்படியான மாற்றம் அல்ல, திடீரென முழுவதுமாக மாறுவது.

அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.

——

மக்கள் போகிய புலப்பில் போலப் புல்லென்று அலெப்பெனென்ற உவமையினால் அழகு நீங்கிய உடம்பையுடையவள் ஆவேன் என்பது பெறப்படும் என இதற்கு  உ.வே.சா. விளக்கமளிக்கிறார்.  

——

No comments: