Monday, June 29, 2026

ஜாய்ஸும் வுல்ஃபும் : "திருமதி டாலோவே" நாவலுக்கு எழுதிய முன்னுரை

பிக் பென்னின் இடையறாத மணியோசை: வர்ஜீனியா வுல்ஃபின் நனவோடை

—-





 என்னுடைய ஆங்கில இலக்கிய முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வேட்டிற்காக ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசஸ்’ நாவலை 1985-இல் எடுத்திருந்தேன். ஜாய்ஸுடைய நனவோடை எழுத்தையும் நடையையும் உள்வாங்கிக்கொள்ள, அவரைப் போலவே நனவோடை எழுத்தை வேறொரு வகையில் கையாளும் வர்ஜீனியா வுல்ஃபையும் ஒப்பீட்டிற்காகவும் அணுக்கமாக வாசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய அணுக்க வாசிப்பு என்பது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இந்த இரண்டு எழுத்தாளர்களின் நாவல்களையும் மொழிபெயர்த்து வாசிப்பதாக இருந்தது. ஜாய்ஸின் எழுத்தும் வுல்ஃபின் நடையும் என்னுடைய ஆரம்பக்காலச் சிறுகதைகளின் நடையை வெகுவாகப் பாதித்தன.


'திருமதி டாலோவே' 1925 ஆம் ஆண்டிலும், 'யுலிசஸ்' 1922 ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. 'திருமதி டாலோவே' லண்டனையும், 'யுலிசஸ்' டப்ளினையும் கதைக்களமாகக் கொண்டுள்ளன. இரண்டு நாவல்களுமே ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கின்றன; 'திருமதி டாலோவே' ஜூன் மாதத்தின் ஒரு நாளையும், 'யுலிசஸ்' ஜூன் 16, 1904 அன்றைய நாளையும் சித்தரிக்கின்றன. முதன்மைக் கதைசொல்லல் உத்தியைப் பொறுத்தவரை, 'திருமதி டாலோவே’யில் வுல்ஃப் அக உரையாடலை நனவோடையாகப் பயன்படுத்துகிறார். அது கவித்துவமாகவும் தங்கு தடையற்ற நனவிலியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. ஜாய்ஸ் 'யுலிசஸ்' நாவலில் நனவோடை உத்தியைப் பல்வேறு பாணிகளில் பயன்படுத்துகிறார். ஜாய்ஸின் பாணி பெரும்பாலும் தடையற்றதாகவும், தொடர்புப்படுத்தும் வார்த்தைகளில் வழுக்கிச் செல்வதாகவும், வடிகட்டப்படாத எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. நனவோடைப் பகுதிகளில் இலக்கணம், நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, 'திருமதி டாலோவே' பொதுவாக இலக்கணக் கட்டமைப்பையும் நிறுத்தற்குறிகளையும் ஓரளவு பராமரிக்கிறது. இருப்பினும், அதன் திரவமான கவித்துவம், வாக்கிய அமைப்புகளை விருப்பப்படி மாற்றி அமைப்பதில் அடங்கியிருக்கிறது. நான் மொழிபெயர்ப்பாளனாக வர்ஜீனியா வுல்ஃபின் கவித்துவ நனவோடை எழுத்தை அப்படியே தமிழில் கொண்டுவரப் படாதபாடு பட்டிருக்கிறேன். 


ஜாய்ஸின் 'யுலிஸஸ்' மொழிபெயர்ப்பதற்கு இன்னும் பல சவால்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் வழக்கமான இலக்கணம், நிறுத்தற்குறிகள் ஆகியவற்றை ஜாய்ஸ் கைவிட்டுவிடுகிறார். குறிப்பாக, முக்கியமான தனியுரைகளில், சிந்தனையின் ஓட்டத்தை அப்படியே ஜாய்ஸ் பிரதிபலிப்பதால், வுல்ஃபை விட உள்வாங்கக் கடினமான பாணியை ஜாய்ஸ் கையாள்கிறார். வுல்ஃபின் 'திருமதி டாலோவே' நாவலில் உள்ள ஒரு சௌகரியம் என்னவென்றால், அவர் ஒரு சர்வஞானமுள்ள மூன்றாம் நபர் கதைசொல்லியைக் கொண்டு கதையைச் சொல்கிறார். அந்தக் கதைசொல்லி பல்வேறு பாத்திரங்களின் நனவுகளுக்குள் திரவமாக நுழைந்து வெளியேறுகிறார். 'யுலிசஸில்', கதைசொல்லல் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறுபடுகிறது; நேரடி உள் தனியுரை, ஆழமான சிந்தனைக் குவிப்புடன் கூடிய மூன்றாம் நபர் கதைசொல்லல், பகடி, கேலிச்சித்திரம் ஆகியவை அடங்கியதாக இருக்கிறது. நனவு தொடர்பான கருப்பொருள் கவனத்தைப் பொறுத்தவரை, 'திருமதி டாலோவே' காலம் அகநிலையாக அனுபவமாதல், நினைவாகச் சேகரமாதல், மனதின் பலவீனம், சமூக விமர்சனம், இருப்பின் தருணங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 'யுலிசஸ்' நனவின் முழுமையை ஆராய்கிறது, அன்றாடத்தின் சாதாரணத்தைக் காவியமாக மாற்றுகிறது. அடையாளம், நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை, தந்தைவழி, தேசிய அடையாளம் ஆகியவற்றை ஆராய்கிறது. 'திருமதி டாலோவே' கவித்துவமானது, உளவியல் ரீதியானது, உள்நோக்கமுடையது, பெரும்பாலும் துக்ககரமானது; மனித இருப்பின் தனிமையை ஆராய்ந்து அறிவது. 'யுலிசஸ்' விரிவானது, கலைக்களஞ்சியம் போல அசரவைப்பது, மனதைப் போலவே உடலையும் நனவோடை தரும் சுதந்திரத்தில் தங்குதடையின்றி ஆராய்வது. ‘திருமதி டாலோவே’ ஒரு லண்டன் நாவல் என்றால், ‘யுலிஸஸ்’ டப்ளின் நகரத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ள நாவலாகும்.


இந்த வேறுபாடுகள் வெவ்வேறு கலை நோக்கங்களைப் பரிந்துரைக்கின்றன. ஜாய்ஸ், வுல்ஃப் இருவருமே முன்னோடிகளாக இருந்தபோதிலும், ஜாய்ஸ் தன்னுடைய கதை மரபைத் தீவிரமாக அகற்றுவதிலும் அதைப் புத்தாக்கம் செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதேசமயம், வுல்ஃப் ஆழ்ந்த பரிசோதனையாளராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவிலான கதைக் கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக்கொண்டார். ஜாய்ஸின் நனவோடை காட்டாற்று வெள்ளமென்றால், வுல்ஃபினுடையது லண்டன் மாநகரில் சலசலத்து ஓடும் தேம்ஸ் நதி. இந்த நுணுக்கமான சமநிலை, வுல்ஃபின் குறிப்பிட்ட பெண்ணிய நவீனத்துவத்தின் ஓர் அடையாளமாகக் கருதப்படலாம்.


ஒரே நாளில் நடக்கும் கதைகள் எனும் கதை உத்தி, இரு நாவல்களுக்குமே பொதுவான ஒரு முக்கிய நவீனத்துவ உருவகமாகும். ஜாய்ஸைப் பொறுத்தவரை, இந்தச் சுருக்கப்பட்ட காலக்கெடு, ஒரு நகரத்தின் கூட்டு நனவைக் கலைக்களஞ்சியம் போல ஆய்வு செய்ய அனுமதிக்கிறது; இது ஒரு காவியக் கட்டமைப்பில் வரைபடமாக்கப்பட்ட பரந்த மனித அனுபவத்தின் ஒரு நுண் உலகம். ‘திருமதி டாலோவேயில்’ வுல்ஃபைப் பொறுத்தவரை, ஒற்றை நாள் காலத்தின் அகநிலை அனுபவத்தின் மீதான கவனத்தைத் தீவிரப்படுத்துகிறது; ஒரு முழு வாழ்நாள் உணர்ச்சிகள், நினைவுகள், வருத்தங்கள் எவ்வாறு தற்போதைய தருணத்தில் வெள்ளப்பெருக்காக மாறி, இக்கணத்தை வரையறுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. லண்டன் நகரின் பிக் பென்னின் தொடர்ச்சியான மணியோசை, நாவலில் நினைவூட்டலாகச் செயல்படுகிறது.


உளவியல் யதார்த்தத்திற்கான அதன் திறனுக்கு அப்பால், ‘திருமதி டாலோவேயில் வுல்ஃபின் நனவோடை வேறு பல நுட்பங்களையும் கொண்டுள்ளது. தன்னுடைய பாத்திரங்களின் செழுமையான, பெரும்பாலும் கொந்தளிப்பான, உள்வாழ்க்கைகளுக்கும் அவர்களுடைய கவனமாகச் செதுக்கப்பட்ட சமூக முகப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம், வுல்ஃப் போருக்குப் பிந்தைய ஆங்கிலச் சமுதாயத்தின் உள்ளார்ந்த கட்டுப்பாடுகள், மேலோட்டமான தன்மை, பாசாங்குகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறார். குறிப்பாக, உயர் வகுப்பினரிடையே உள்ள பாசாங்குகள் வுல்ஃபின் எழுத்தில் அம்பலமாகின்றன. உதாரணமாக, கிளாரிசா டாலோவே தனது நாளை வெளிப்புற நிதானத்துடன் கையாள்கிறாள், தனது விருந்தை உன்னிப்பாகத் திட்டமிடுகிறாள். ஆயினும்கூட, அவளது உள் தனியுரை ஒரு கவலையின் நீரோட்டமாக இருக்கிறது. அவளது உள் தனி மொழி, வழுக்கிச் செல்லும் சொல்லோடையில், அவளது வாழ்க்கை தேர்வுகள் குறித்த கேள்வியையும் தனது சொந்த மரணம் குறித்த ஆழ்ந்த விழிப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. அவளது உள் யதார்த்தத்திற்கு மாறாக, ஒரு சிறந்த தொகுப்பாளினியாக அவள் தொடர்ந்து இருக்க முயல்வதும், அதன் சாகசமும் முரண்களுமே வுல்ஃபின் உரைநடையாகின்றன. அந்த நடையை நான் அப்படியே தமிழில் கொண்டுவந்திருப்பதாக நம்புகிறேன்.

அடிலைன் வெர்ஜீனியா ஸ்டீஃபன் (1882-1941), பின்னர் வர்ஜீனியா வுல்ஃப் என்று அழைக்கப்பட்டவர், இலக்கிய, அறிவுசார் முயற்சிகளில் ஆழ்ந்திருந்த ஒரு குடும்பச் சூழலில் பிறந்தார். அவரது தந்தை, சர் லெஸ்லி ஸ்டீஃபன், ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், வரலாற்றாசிரியர், கட்டுரையாளர், ‘தேசிய வாழ்க்கை வரலாற்று அகராதி’யின் முதல் பதிப்பாசிரியர் ஆவார். அவரது தாயார், ஜூலியா பிரின்செப் ஸ்டீஃபன், ப்ரீ-ரஃபேலைட் கலைஞர்களுடன் தொடர்புடைய ஒரு புகழ்பெற்ற அழகி. விக்டோரியா காலத்தின் பிற்பகுதியில் லண்டனில் இந்த உயர்குடி வளர்ப்பு, வுல்ஃபுக்கு அவரது தந்தையின் விரிவான நூலகத்தை வழங்கியது. அங்கு அவர் ஆங்கிலச் செவ்வியல், விக்டோரிய இலக்கியங்களில் மூழ்கி, கேம்பிரிட்ஜில் படித்த அவரது ஆண் சமகாலத்தவர்களை விடவும் பெரிய படிப்பாளியானார். அவரது ஆரம்பக்கால வாழ்க்கை ஆழ்ந்த இழப்புகளால் நிறைந்திருந்தது. வுல்ஃபுக்குப் பதின்மூன்று வயதாக இருந்தபோது அவரது தாயாரின் மரணம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஸ்டெல்லா டக்வொர்த்தின் மரணம், பின்னர் 1904-இல் அவரது தந்தையின் மரணம் ஆகியவை கடுமையான மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தின. மனநோயுடனான இந்தத் தொடர்ச்சியான போராட்டங்கள், அவர் தனது "பைத்தியக்காரத்தனம்" என்று அழைத்தது, அவரது வாழ்க்கையில் நீண்ட கரு நிழலைப் படர்த்தியிருந்தது. குறிப்பாக, நனவின் ஆய்வு, சுயத்தின் பலவீனம், ‘திருமதி டாலோவேயில்’ செப்டிமஸ் வாரன் ஸ்மித் போன்ற பாத்திரங்களில் மன வேதனையின் சித்தரிப்பு ஆகியன வுல்ஃபின் மனநோய்களின் சித்தரிப்புகளே. உண்மையில், வுல்ஃப் தனது நோயை ஒரு சுமையாக நினைக்காமல், தனது அடையாளத்தின் உள்ளார்ந்த பகுதியாகவும், தனது கலைப் பார்வைக்கான ஒரு பரிசோதனையாகவும் கருதினார். இது மனித மனதின் சிக்கல்களைப் பற்றிய ஒரு தனித்துவமான, வேதனையில் கிளைத்த நுண்ணறிவை அவருக்கு வழங்கியது.


தந்தை சர் லெஸ்லி ஸ்டீஃபனின் மரணத்திற்குப் பிறகு, வர்ஜீனியாவும் அவரது உடன்பிறப்புகளும் ப்ளூம்ஸ்பரியில் உள்ள 46 கார்டன் சதுக்கத்திற்குக் குடிபெயர்ந்தனர். இது ப்ளூம்ஸ்பரி இலக்கியக் குழுவின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. லிட்டன் ஸ்ட்ராச்சி, கிளைவ் பெல் (வர்ஜீனியாவின் சகோதரி வனேசாவை மணந்தவர்), ஈ.எம். ஃபார்ஸ்டர், ஜான் மேனார்ட் கெய்ன்ஸ், ரோஜர் ஃப்ரை, லியனார்ட் வுல்ஃப் போன்றவர்களை உள்ளடக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகளைக் கொண்ட செல்வாக்குமிக்க குழுவாகும் இது. ஆரம்பத்தில் தோபியின் கேம்பிரிட்ஜ் நண்பர்கள், அவர்களுடைய "நள்ளிரவு சங்கம்" வாசிப்புக் குழுவின் நீட்டிப்பாக இருந்த இந்தக் குழு, அதன் முற்போக்கான, பெரும்பாலும் மரபுமீறல் பார்வைகள், விக்டோரிய சமூக, பாலியல் நெறிமுறைகளை நிராகரித்தல், அழகியல், தத்துவ விசாரணைக்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காகப் புகழ்பெற்றதாக விளங்கியது. அவர்கள் கலை, இலக்கியம் முதல் மதம், பாலியல், ஓரினச்சேர்க்கை வரையிலான தலைப்புகளில் வெளிப்படையான விவாதங்களில் ஈடுபட்டனர்; இவை பெரும்பாலும் அவர்களுடைய சமகாலத்தவர்களால் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்பட்ட விஷயங்கள். தனது சகோதரர்களைப் போலல்லாமல், முறையான பல்கலைக்கழகக் கல்வியை மறுக்கப்பட்ட வர்ஜீனியாவுக்கு, ப்ளூம்ஸ்பரி குழு ஒரு முக்கிய அறிவுசார் மன்றமாக இருந்தது. இது அவரது உலகக் கண்ணோட்டத்தையும் கலை வளர்ச்சியையும் ஆழமாக வடிவமைத்ததோடு நில்லாமல், அவருடைய இலக்கியச் செயல்பாடுகளை விரிவுபடுத்த ஊக்குவித்த ஓர் ஆதரவான சூழ்நிலையையும் வழங்கியது. 1912-இல், வர்ஜீனியா லியனார்ட் வுல்ஃபை மணந்தார்; அவர் ஒரு எழுத்தாளர், அரசியல் கோட்பாட்டாளர், இலங்கையின் முன்னாள் காலனிய நிர்வாகி. அவர்களுடைய கூட்டாண்மை ஆழ்ந்த அறிவுசார்ந்த, உணர்ச்சிப்பூர்வமான தோழமையாக விளங்கியது.

வர்ஜீனியா, லியனார்ட் வுல்ஃப் இருவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என 1917-இல் அவர்கள் ஹோகார்த் அச்சகத்தை நிறுவியதைச் சொல்லலாம். அவர்களுடைய சாப்பாட்டு அறையில் ஒரு சிறிய கை அச்சகத்துடன் ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கியது, ஒரு மரியாதைக்குரிய இலக்கியப் பதிப்பகமாக வளர்ச்சி பெற்றது. ஹோகார்த் அச்சகம் வர்ஜீனியா வுல்ஃபின் ‘திருமதி டாலோவே’ உட்படத் தன்னுடைய சொந்த நாவல்கள் பலவற்றை வெளியிட்டது. அத்துடன், டி.எஸ். எலியட் (‘தி வேஸ்ட் லேண்டின்’ முதல் ஆங்கிலப் பதிப்பு), கேத்தரின் மான்ஸ்ஃபீல்ட், ஈ.எம். ஃபார்ஸ்டர் போன்ற அப்போது வளர்ந்துவரும் எழுத்தாளர்களாக இருந்தவர்களின் படைப்புகளையும், சிக்மண்ட் ஃபிராய்டின் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டது. இந்த முயற்சி வுல்ஃபிற்கு ஒரு முக்கியமான கலை சுதந்திரத்தையும் அவரது படைப்பின் மீதான கட்டுப்பாட்டையும் வழங்கியது.

வுல்ஃபின் இலக்கிய உணர்வுகள் பல்வேறு தாக்கங்களால் வடிவமைக்கப்பட்டன. அவரது தந்தையின் நூலகத்தில் அவரது விரிவான வாசிப்பு, ஆங்கில இலக்கிய நியதியில் ஒரு அடித்தளத்தை அமைத்தது. இருப்பினும், அவர் தனது சமகாலத்தவர்களின் தீவிர வாசகராகவும் இருந்தார், மேலும் பிற இலக்கிய மரபுகளையும் கவனித்தார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செகாவ், இவான் துர்கனேவ் போன்ற ரஷ்ய நாவலாசிரியர்கள் 1912 முதல் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஹென்றி டேவிட் தோரோ, அவருடைய எளிமை, கணத்தைப் பிடிக்கும் திறனுக்காக வுல்ஃப் பாராட்டிய மற்றொரு எழுத்தாளர் ஆவார். வுல்ஃப் பாரம்பரிய விக்டோரிய நாவலின் வரம்புகளை நன்கு அறிந்திருந்தார். 1908 ஆம் ஆண்டிலேயே, அவர் நாவலை மீண்டும் உருவாக்க, புதிதாகக் கண்டுபிடிக்கத் தீர்மானித்தார். 1910-இல் ரோஜர் ஃப்ரை ஏற்பாடு செய்த பிந்தைய இம்ப்ரஷனிஸ்ட் கண்காட்சி, செசான், பிக்காசோ போன்ற ஓவியர்களின் தீவிர ஐரோப்பியக் கலையை லண்டனுக்கு அறிமுகப்படுத்தியது. இலக்கிய வடிவத்தைப் புரட்சிகரமாக்கக் காட்சி கலைகளிலிருந்து கடன் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அவருடைய எண்ணங்களை இவை தூண்டின. தனிப்பட்ட அனுபவம், அறிவுசார் ஈடுபாடு, கலை லட்சியம் ஆகியவற்றின் இந்தச் சங்கமம், அவரது தனித்துவமான நவீனத்துவக் குரலாக ‘திருமதி டாலோவே’ நாவலில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

‘திருமதி டாலோவே’, ஹோகார்த் அச்சகத்தால் 14 மே 1925 அன்று வெளியிடப்பட்டது. இது வுல்ஃபின் முந்தைய, மிகவும் வழக்கமான நாவல்களான ‘தி வாயேஜ் அவுட்’ (1915), ‘நைட் அண்ட் டே’ (1919), கணிசமாக அதிக சோதனைக்குரிய ‘ஜேக்கப்ஸ் ரூம்’ (1922) ஆகியவற்றைத் தொடர்ந்து வந்தது. ‘திருமதி டாலோவே’, வுல்ஃப் தனது முதிர்ந்த நவீனத்துவப் பாணியைப் படிகமாக்கி, தனது குரலை உண்மையாகக் கண்டறிந்த நாவலாக விமர்சகர்களால் பரவலாகக் கருதப்படுகிறது. இது ‘டு தி லைட்ஹவுஸ்’ (1927), கற்பனையான வாழ்க்கை வரலாறான ‘ஆர்லாண்டோ’ (1928), மிகவும் கவித்துவமான ‘தி வேவ்ஸ்’ (1931) போன்ற பிற முக்கிய சோதனைப் படைப்புகளுக்கு முந்தியது. 1925-இல், முதல் உலகப் போர் முடிந்த ஏழாவது ஆண்டு ‘திருமதி டாலோவே’ வெளியானது என்பது அதன் வடிவம், கருப்பொருள், உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது. போருக்குப் பிந்தைய இங்கிலாந்தின் புதிய உண்மைகளான முன்னோடியில்லாத இழப்பு, அதிர்ச்சி, சமூக எழுச்சியுடன் போராடும் ஒரு சமூகம் ஆகியவை ஒரு புதிய இலக்கிய மொழியைக் கோரின. வுல்ஃப், பல நவீனத்துவ எழுத்தாளர்களைப் போலவே, பாரம்பரியக் கதைப் பாணிகள் போருக்குப் பிந்தைய வாழ்க்கையில் ஏற்பட்ட துண்டாடப்பட்ட, குழப்பமான நிலையைச் சித்தரிக்கப் போதுமானதாக இல்லை என்று உணர்ந்தார். ஐரோப்பியப் போரின் பரந்த பேரழிவு, கலையில் செயலாக்கப்படுவதற்கு முன்பு உணர்ச்சிகளை உடைக்க வேண்டியிருந்தது. எனவே, போர் பரிசோதனைக் கல்லாகச் செயல்பட்டது; பழைய நிச்சயமின்மைகளையும், பழைய இலக்கிய வடிவங்களையும் சிதைத்தது. ‘திருமதி டாலோவே’யின் நனவோடை, துண்டுத் துண்டான உணர்ச்சிகள், அகநிலை அனுபவம், ஏமாற்றத்தின் பரவலான உணர்வு ஆகியவற்றில் அதன் கவனம், இந்தச் சமூகச் சிதைவுக்கு நேரடிக் கலை ரீதியான பதிலாகும். நாவலின் வடிவம் இந்த புதிய, உடைந்த யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில் அதன் உள்ளடக்கத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைந்திருக்கிறது. இது போருக்குப் பிந்தைய சூழலை வுல்ஃபின் கனிந்த பாணிக்கான ஓர் உறுதியான சூழலைக் கொடுத்தது.


‘திருமதி டாலோவே’யின் கதைக்களம் லண்டனில் உறுதியாக வேரூன்றியிருந்தாலும், இந்தியாவின் இருப்பு பின்னணியில் கணிசமாக இருக்கிறது. இது முதன்மையாக பீட்டர் வால்ஷின் நனவோடை அனுபவங்கள் மூலம் வடிகட்டப்படுகிறது. இந்தியா, நாவலில் நேரடியாகச் சித்தரிக்கப்பட்ட நிலப்பரப்பு அல்ல; மாறாக, அது சக்திவாய்ந்த நினைவாக, ஒரு சின்னமாக, நாவலின் அடையாளமாக, பிரிட்டிஷ் பேரரசின் பரவலான செல்வாக்கை நுட்பமாகப் பாதிக்கும் ஒரு குறிப்புப் புள்ளியாகச் சித்தரிக்கப்படுகிறது. கிளாரிசா டாலோவேயின் முன்னாள் காதலரான பீட்டர், இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் கழித்த பிறகு சமீபத்தில்தான் நாவலில் லண்டனுக்குத் திரும்புகிறார். அவருடைய நினைவுகளும் தற்போதைய கவலைகளும் நாவலின் பெருநகர உலகின் இதயத்தில் தனிப்பட்ட, ஏகாதிபத்திய வரலாறுகளின் சிக்கல்களை அறிமுகப்படுத்த உதவுகின்றன. பீட்டரின் மனதில் இந்தியா, அவருக்கு ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை வழங்கும் அவருடைய ஆண்பால், நிர்வாகப் பங்கை உறுதிப்படுத்தும் ஓர் அடையாளமாக இருக்கிறது, அவர் அதனுடன் தொடர்புடைய கவலைகளுடன் போராடும்போதும் கூட. அவருடைய இந்திய நினைவுகள் பெரும்பாலும் தட்டையானவையாக, சுருக்கமானவையாக, காமக்கவர்ச்சியுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.


பீட்டர், மிஸ் பாரி போன்ற பாத்திரங்கள் மூலம், காலனியப் பிரதேசங்கள் பற்றிய அவர்களுடைய நினைவுகளும் ஆர்வங்களும் கூலிகளின் முதுகில் சுமந்து செல்லப்படுவதன் வசதி, மனிதர்களை அங்கீகரிப்பதை விட முன்னுரிமை பெறுகின்றன. இந்தியாவும் அதன் மக்களும் அடிக்கடி ஒரு கீழைத்தேய, ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறார்கள்; பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றப்படுகிறார்கள் அல்லது பிரிட்டிஷ் அடையாளங்கள், கதைகளால் கட்டமைக்கப்படும் பின்னணியாகக் குறைக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தில் இந்திய மக்கள், பெரும்பாலும் ஒரு காலனியப் படிநிலையின் அடிப்பகுதியில் ஒரு கூட்டமாக நிலைநிறுத்தப்படுகிறார்கள், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக "மற்றவர்களாக" கட்டமைக்கப்படுகிறார்கள். இந்த மனிதாபிமானமற்ற பார்வை, வுல்ஃப் நுட்பமாக அம்பலப்படுத்தும் காலனிய உளவியல் வழிமுறைகளில் ஒரு முக்கியமான அங்கமாகும்.

ஏகாதிபத்தியப் பேரரசின் செல்வாக்கு, நாவலுக்குள் ஆழ்ந்த தனிப்பட்ட தேர்வுகளில் கூட வெளிப்படுகிறது. கிளாரிசா, நிலையான, பாரம்பரியமான ரிச்சர்ட் டாலோவேயை (ஒரு கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்), உணர்ச்சி ரீதியாக நிலையற்ற பீட்டர் வால்ஷை விட விரும்பத்தக்கவராகக் கருதித் திருமணம் செய்துகொள்ளும் முடிவு, அவளது வர்க்கம், காலத்தின் சமூக எதிர்பார்ப்புகள், அரசியல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. அவள் பீட்டரைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவள் இந்தியாவில் ஓர் இந்திய சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) அதிகாரியின் மனைவியின் வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், காலனிய அமைப்பிற்குள் ஒரு "மெம்சாஹிப்" பாத்திரத்தை வகித்திருக்கலாம் என்று கதை ஒரு மாற்று யதார்த்தச் சூழலைப் பரிந்துரைக்கிறது.


பீட்டர் இந்தியாவில் கழித்த காலம், அவரது காலனியச் சேவையின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட நிறைவேறாமை, தோல்வியுற்ற ஆண்மை ஆகியவற்றையும் குறிப்பதாகத் தெரிகிறது. அவர் இங்கிலாந்துக்குத் திரும்புவது, இந்திய இராணுவத்தில் ஒரு மேஜரின் இளம் மனைவியான டெய்சியுடனான ஒரு சிக்கலான காதல் சிக்கலால் நிகழ்கிறது; அவருக்காக அவர் விவாகரத்து ஏற்பாடு செய்ய முயல்கிறார். இந்த "சாகசம்", அவர் தானே ஓரளவு ஒப்புக்கொள்வது போல, "பாதி புனையப்பட்டது… பாதி கண்டுபிடிக்கப்பட்டது”. அவரது இந்திய வாழ்க்கை, அவரது வாழ்க்கையின் பெரும்பகுதியைப் போலவே, திடமான சாதனை இல்லாதது. அவர் பல விஷயங்களில் தன்னை ஒரு தோல்வியாளராகக் கருதுகிறார். இதனால், பீட்டருக்கு இந்தியா ஒரு வெற்றிகரமான காலனிய வாழ்க்கையின் தளம் அல்ல, மாறாக அவரது தொடர்ச்சியான தனிப்பட்ட போதாமை, அமைதியின்மை ஆகியவை கலந்த கதையில் மற்றொரு அத்தியாயம். ஏகாதிபத்தியச் சூழல் அவரது தனிப்பட்ட குறைபாடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவருடைய இந்திய நினைவுகள் பெரும்பாலும் ஏகாதிபத்தியப் பெருமையை விட, இந்த அதிருப்தி உணர்வால் கறைபட்டுள்ளன.

வர்ஜீனியா வுல்ஃபின் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய புரிதலில் மிகவும் நேரடியான, ஆழ்ந்த செல்வாக்கு அவரது கணவர் லியனார்ட் வுல்ஃபிடமிருந்து வந்தது. லியனார்ட் 1904 முதல் 1911 வரை இலங்கை சிவில் சர்வீஸில் பணியாற்றி, காலனிய அமைப்புடன் ஆழ்ந்த ஏமாற்றத்தை வளர்த்துக்கொண்டார். அவருடைய அனுபவங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்த விமர்சனக் கண்ணோட்டத்திற்கு வழிவகுத்தன. அதை அவர் தனது அரசியல் செயல்பாடு மற்றும் எழுத்துக்களில் வெளிப்படுத்தினார். அவருடைய காலனிய எதிர்ப்பு நாவலான ‘தி வில்லேஜ் இன் தி ஜங்கிள்’ (1913), பின்னர் ‘பேரரசும் ஆப்பிரிக்க வர்த்தகமும்’ போன்ற படைப்புகள் உட்படப் பல படைப்புகள் அவருடைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தின. வர்ஜீனியா வுல்ஃப், லியனார்டுக்கு ‘பேரரசும் ஆப்பிரிக்க வர்த்தகமும்’ நூலுக்கான ஆராய்ச்சியில் உதவினார்; அந்தப் படைப்பைப் பலமுறை வாசித்தார்.

காலனியச் சொல்லாடல் பற்றிய இந்த விழிப்புணர்வு, வுல்ஃபின் இலக்கியச் செயல்பாட்டின் அடிநாதமாய் இருக்கிறது. அவரது முதல் நாவலான ‘தி வாயேஜ் அவுட்’ (1915), ஒரு கற்பனையான தென் அமெரிக்கக் குடியேற்றத்தில் நிகழ்கிறது. வெற்றி, இராணுவ வாதம், ஏகாதிபத்திய அதிகாரக் கட்டமைப்புகளின் விளைவுகள், பாலின அடையாளத்துடன் தொடர்புடையதாக இருப்பது பற்றிய அவரது வாழ்நாள் முழுவதுமான சிந்தனையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அவரது முக்கியப் பெண்ணியக் கட்டுரைகளான ‘எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன்’ (1929), ‘த்ரீ கினியாஸ்’ (1938) ஆகியவை பெண்கள் ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருப்பதற்கும் காலனியக் குடிமக்களின் ஏகாதிபத்திய அடிபணிதலுக்கும் இடையிலான ஒன்றோடொன்றான இணைவை வெளிப்படையாக ஆராய்கின்றன. அவர் லியனார்டுடன் இணைந்து நிறுவிய ஹோகார்த் அச்சகம், டிரினிடாடியன் சி.எல்.ஆர். ஜேம்ஸ் (அவருடைய ‘மேற்கிந்திய சுயராஜ்ஜியத்திற்கான வழக்கு’ அவர்களுடைய தினசரித் துண்டுப்பிரசுரத் தொடரின் ஒரு பகுதியாக இருந்தது) போன்ற காலனிய எதிர்ப்பு எழுத்தாளர்களை வெளியிடுவதன் மூலமும், இந்தியத் தேசியவாத எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்தைப் பணியமர்த்தியதன் மூலமும் காலனிய எதிர்ப்புச் சிந்தனைகளைப் பரப்புகின்ற நோக்கங்களைக் கொண்டிருந்தது.


‘திருமதி டாலோவே’ பல்வேறு கோட்பாட்டுக் கண்ணோட்டங்களிலிருந்து விரிவான விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசிப்பும் வெவ்வேறு அர்த்த அடுக்குகளை வெளிக்கொணர்ந்து, நாவலின் நீடித்த புகழைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றன.


பெண்ணிய விமர்சகர்கள் ‘திருமதி டாலோவேயைப்’ பெண் அனுபவத்தின் ஆழ்ந்த ஆய்வு, ஆணாதிக்கச் சமுதாயத்தின் விமர்சனம் ஆகியவற்றிற்காக நீண்ட காலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த வாசிப்புகள் பெரும்பாலும் கிளாரிசா டாலோவேயின் கட்டுப்படுத்தப்பட்ட சமூகப் பாத்திரத்தை ஒரு மனைவியாக, சமூகத் தொகுப்பாளினியாக மையமாகக் கொண்டு, அவரது செழுமையான உள் வாழ்க்கையை ஒரு வகையான எதிர்ப்பு அல்லது நிறைவேறாத ஆசையின் தளமாகப் பகுப்பாய்வு செய்கின்றன. பெண் உறவுகளின் முக்கியத்துவம், குறிப்பாக கிளாரிசாவின் சாலி செட்டனுடனான தீவிரமான இளமைக்காலப் பிணைப்பு, அதன் ஓரினக்காதல் சாயல்கள், இந்த விவாதத்தின் மையப் புள்ளியாகும்.


ஃபிராய்டிய, பிற்கால உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் விமர்சனங்கள், பாத்திரங்களின் உளவியல் ஆழங்களுக்குள் சென்று, அதிர்ச்சி, அடக்குமுறை, நனவிலி நிலை, சுயம் கட்டுமானம் போன்ற கருப்பொருள்களை ‘திருமதி டாலோவேயில்’ ஆராய்கின்றன. சில விமர்சகர்கள் கிளாரிசா, செப்டிமஸ் ஆகிய கதாபாத்திரங்களை ஒரு நனவின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் பார்க்கிறார்கள்.

பின்காலனியத்துவ வாசிப்புகள் பீட்டர் வால்ஷின் பாத்திரம், இந்தியாவில் அவருடைய அனுபவங்கள், அவருடைய நினைவுகளும் உணர்வுகளும் காலனிய அணுகுமுறைகளையும் 'இந்தியா' எனும் 'பிறிதினத்தின்' (otherness) கட்டுமானத்தையும் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை ஆராய்கின்றன.

புதிய வரலாற்று வாத வாசிப்புகள் நாவலின் கருப்பொருள்கள், பாத்திரங்கள், கதை உத்திகளை முதல் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டனின் குறிப்பிட்ட நிலைமைகளுடன் இணைத்து விளக்கமளிக்கின்றன. இந்த வாசிப்புகள் அதிகாரக் கட்டமைப்புகள், தேசிய, ஏகாதிபத்திய அடையாளத்தின் நெருக்கடி, வர்க்க இயக்கவியல், மாறிவரும் சமூக நெறிமுறைகள் ஆகியவற்றை நாவல் எப்படிப் பிரதிபலிக்கிறது என்று பகுப்பாய்வு செய்கின்றன. சில அறிஞர்கள் வுல்ஃப் ஒரு புதிய வரலாற்று வாதப் பிரக்ஞையுடன் எழுதினார் என்று வாதிடுகின்றனர்.


வர்ஜீனியா வுல்ஃபின் ‘திருமதி டாலோவே’ நவீனத்துவ இலக்கியத்தின் மறுக்க முடியாத ஒரு மைல்கல்லாகும். இது கதை வடிவத்தின் சாத்தியக்கூறுகளை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மனித நனவின் ஆழ்ந்த ஆய்வையும் வழங்கியது. அதன் புதுமையான பாணி, குறிப்பாக நனவோடை நுட்பத்தின் திறமையான பயன்பாடு, அதன் கூர்மையான உளவியல் ஆழம், சமூக வர்ணனையுடன் இணைந்து, இலக்கிய நியதிக்குள் அதன் சரித்திர இடத்தை உறுதிசெய்துள்ளது. இந்த நாவல் பெண்ணியப் புனைகதையின் ஒரு அற்புதமான படைப்பாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது; இது பெண் அனுபவங்களுக்கு முன்னோடியில்லாத நுணுக்கத்துடன் கூடிய குரலைப் பதிவு செய்தது.


வர்ஜீனியா வுல்ஃபின் தாக்கம், தமிழின் நவீனத்துவ முன்னோடி எழுத்தாளர்களில் முக்கியமானவரான நகுலனிடமும் இருந்தது.


மார்ச் 28, 1941-இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, தனது ஓவர்கோட் பாக்கெட்டுகளைக் கற்களால் நிரப்பிக்கொண்ட வர்ஜீனியா வுல்ஃப், தன் வீட்டுக்குப் பின்புறம் ஓடிய ஊஸ் (Ouse) நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். வாழ்நாளெல்லாம் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகியிருந்த வர்ஜீனியா வுல்ஃப், தன்னை அந்நோயின் மோசமான கணங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். நாவல்கள், நாட்குறிப்புகள், கட்டுரைகள், சிறார் இலக்கியம் என ஆயிரக்கணக்கான பக்கங்களோடு, அவர் தன் கணவர் லியனார்டுக்கு எழுதிய தற்கொலைக் கடிதமும் சேர்ந்துகொண்டது. 'நான் மீண்டும் பைத்தியமாகிக்கொண்டிருக்கிறேன் லியனார்ட்' என்று ஆரம்பிக்கும் அந்த மனத்தை உலுக்கும் கடிதம், மனச்சோர்வு நோயின் விளைவுகளைப் பற்றி உலகுக்குச் சொல்கிறது. அவருடைய மரணத்திற்கு டி.எஸ். எலியட், எடித் சிட்வெல், இ.எம். ஃபார்ஸ்டர், எலிசபெத் போவென், ஹெச்.ஜி. வெல்ஸ் எனப் பலரும் மனமுருகி அஞ்சலிக் கட்டுரைகள் எழுதினார்கள்.


இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் வர்ஜீனியா வுல்ஃபின் நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

 

No comments: