எலுமிச்சை மரமா, செடியா என்ற இலக்கியத்தின் சாரமான வாழ்க்கை பற்றிய விசாரம் என் மனதில் எழும்போதெல்லாம் நான் அதைப் பதின்பருவ பெண்ணாய் உவமித்திருத்திருக்கிறேன்.
என்னுடைய ஒரு கவிதையில்
“தோட்டத்தில் தொடையிடுக்கில் பாவாடை திணித்த
பதின்பருவப் பெண்ணாய் காற்றுக்கு ஆடுகிறது
பழங்கள் குலுங்கும் எலுமிச்சை” என்று விவரித்திருக்கிறேன்.
எலுமிச்சையை தாவரமாக, பழமாக பார்க்கும்போதெல்லாம் என்னுள் எழும் sensuousness உண்மையில் விவரிக்க இயலாதது. அதன் தடித்த இலைகள், முட்கள், காய்களும் பழங்களாகவும் காய்த்து குலுங்கும் எலுமிச்சை மரத்தை தரைக்கு இறங்கி வந்த தேவதை என்றே சொல்ல வேண்டும். எலுமிச்சை சாறினை புதினா இலைகளோடு சேர்த்து அதில் மலைத்தேன் சேர்த்து அருந்துவது என்பது ஒரு பேரெழில் கொண்ட ஹைக்கூவை மனதில் அசை போட்டு அசை போட்டு ஆத்ம உய்வினைப் பெறுவதற்கு ஒப்பான செயலாகும்.
எலுமிச்சை சாறை புதினா இலைகளோடும் தேனோடும் சேர்க்கலாம் என்ற கண்டுபிடிப்பு ஃபிரெஞ்சு தத்துவ அறிஞரான ஆலெய்ன் பாத்யூ ஃப்ரெஞ்சு புரட்சியையும், மே 18 பாரீஸ் மாணவர் போராட்டத்தையும் வரலாற்று நிகழ்வு (Event) என்று அழைத்ததற்கு ஒப்பானதாகும். பாத்யூவின் நிகழ்வுகளைப் போலவே எலுமிச்சை- புதினா பானமும் பானங்களின் வரலாற்றில் ஒரு பெரும் நிகழ்வு. ஏனெனில் அது ஒரு எதிர்வினை. தாகத்திற்கு எதிரான எதிர்வினையாகத் தொடங்கி, தாகத்தினையும் அதன் தணிவையையும் சுகானுபவமாக மாற்றிய எதிர்வினை. ஜப்பானில் ஹைக்கூ என்ற கவிதா வடிவம் கண்டுபிடித்ததற்கு நிகரான எதிர்வினை. நான் இந்தக் கட்டுரையை உண்மையில் ஆங்கிலத்தில் “The Ontology of Refreshment- Being and Thirst” என்று தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த தேவாமிர்த பானம் ஹைக்கூவை போன்றது என்ற வடிவ போதம் என்னைத் தரையிறக்கிக் கூட்டி வந்துவிட்டது.
உதாரணமாக, அதிக அளவில், உலகளாவிய அளவில் மேற்கோள் காட்டப்பட்டு அடித்து துவைக்கப்பட்ட பாஷோவின் இந்த ஹைக்கூவின் ஒரு வடிவத்தை வாசியுங்கள்:
“பழைய குளம்
தவளை அதில் குதிக்கிறது
நீரின் சப்தம்”
பாஷோ இதில் குளத்தை விவரிக்கவில்லை, குளத்தில் உண்டாகும் சலனத்தை, இடையீட்டினை விவரிக்கிறார். வாழ்க்கைபற்றிய விசாரம் என்பது இலக்கியத்தில் இடையீட்டினை நிகழ்த்துவதுதான். பாஷோவின் ஹைக்கூ ஒரு நிலைபேறுடைய, ஆழ்ந்த, நிரந்தர, மௌனத்தில், கண நேரமேனும் நிகழ்ந்த ஒரு சலனத்தை, பதிவு செய்கிறது. எலுமிச்சை- புதினா பானமும் அவ்வாறே செயல்படுகிறது. ஹைக்கூவின் மூன்று வரிகள் என எலுமிச்சை, சாறு, புதினா இலைகள், மலைத்தேன் ஆகியவற்றைச் சொல்லலாம். கடும் கோடையில் வறண்ட தொண்டையான பழைய குளத்தில், இந்த தேவலோக பானம் குளிர்ந்து இறங்கும்போது நீரின் சப்தம் என்பது உடல் முழுவப் பரவும் ஆசுவாச விதிர்விதிர்ப்பு என்பதை உடலரசியல் இலக்கிய விமர்சகர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். தலைவன் நீட்ஷே நம்முடைய மனதில் ஒரு பெருங்குழப்பம் இருந்தால்தான் ஒரு நடனமிடும் நட்சத்திரம் நம்மிடமிருந்து பிறக்கும் என்று எழுதியிருக்கிறார் அல்லவா?, அது போலவே தாகத்தில் தொண்டை எந்த அளவுக்கு பாளம் பாளமாக வெடித்து வறண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு ஆசுவாச விதிர்விதிர்ப்பின் பரவசம் இருக்கும்.
எலுமிச்சை- புதினா பானத்தைத் தயாரிக்கும் முன்பு எலுமிச்சம்பழங்களை நன்றாக சமையல் மேடையில் வைத்து கையால் அழுத்தி உருட்டவேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் தன்னுடைய “Taste of Well being” என்ற சமையல் குறிப்புகள் நூலில் குறிப்பிடுக்கிறார். ஆமாம். அப்போதுதான் வாழ்வின் சாற்றினை ஒரு துளி விடாமல் பிழிந்து எடுக்க முடியும். ஜக்கி வாசுதேவ் புதினா இலைகளை எலுமிச்சை சாறோடு கலந்து மிக்சியில் போட்டு அரைத்துவிடச் சொல்கிறார். அதில் எனக்கு சம்மதமில்லை.
புதினா இலைகள் ஹைக்கூவின் இரண்டாவது வரி முதல் வரியில் ஒட்டாமல் வேறொன்றாக இருப்பது போல, எலுமிச்சை சாற்றில் இரண்டறக் கலக்காமல் தனியாக மிதக்க வேண்டும். பெருங்கடலில் தற்காலிக படகு தத்தளிப்பது போன்ற காட்சியை அது நமக்குத் தரும். அது பல நினைவுகளை நம்மில் தூண்டலாம். புதினா இலைகளின் மிதத்தலின் தற்காலிகம் கடந்து செல்லும் காலத்தைப் போன்றது.
மார்சல் ப்ரூஸ்ட் தன்னுடைய “In Search of time” என்ற புகழ்பெற்ற நூலில் மேடலினைப் பற்றி பின்வருமாறு எழுதுவார், “No sooner had the warm liquid mixed with the crumbs touched my palate than a shudder ran through me and I stopped, intent upon the extraordinary thing that was happening to me.” எலுமிச்சை புதினா பானம் என்பது ஒரு கண்ணாடிக் கோப்பையில் கிடைக்கும் மேடலின்.
தவிர என்னுடைய இஷ்ட தத்துவ அறிஞரான (இஷ்ட தெய்வம் என்று சொல்கிறோமில்லையா அது போல) ஹென்றி பெர்க்சன் காலம் என்பது துண்டு துண்டாக பகுக்கப்பட முடியாதது என்று durée என்ற கருத்தாக்கத்தின் மூலம் விளக்குவாரில்லையா அது போன்றதுதான் எலுமிச்சை பானத்தில் புதினா இலைகள் மிதப்பதும். புதினாவின் குளிர்ச்சியாகவே காலத்தின் தொடர்ச்சி தொண்டையில் உணரப்படவேண்டும். ஆனால் உலகளவில் பனிக்கட்டிகளை இந்த பானத்தில் போட்டு புதினாவின் இயற்கையான குளிர்ச்சியை நம்மால் உணர இயலாதவாறு தடுத்துவிடுகிறார்கள். அர்ஜெண்டினாவின் tereré, மொரொக்கோவின் atay b' na’na அமெரிக்காவின் summer pitcher என்று மட்டுமில்லாமல் நம்மூர் நட்சத்திர விடுதிகளின் எலுமிச்சை புதினா பானத்திற்கும் இதுவேதான் நிலைமை. இயற்கையானது இயற்கையிலேயே உயர்வானது என்பதை நாம் இயற்கையாகவே உணர்வதில்லை. ஐஸ் கட்டிகளைப் போட்டு பானத்தை துவம்சம் செய்துவிடுகிறார்கள். இதனால் எலுமிச்சை பானத்தில் புதினா உண்டாக்கும் அடுக்கு அடுக்கான காலம் (palimpsest time) பனிக்கட்டிகளின் ஒற்றை காலத்தினால் பறித்தெடுக்கப்பட்டுவிட்டுகிறது. ஹைக்கூக்கு உலகளாவிய அளவில் நடந்தது போல இது ஒரு சீர்கேடு.
எலுமிச்சை- புதினா பானம் போன்ற எளிமையான ஒன்று எப்படி இத்தனை முக்கியமான இலக்கிய விசாரங்களைக் கொண்டிருக்க முடியும் என்று ஒருவர் வினவலாம். இது ஒரு இலக்கிய இடையீட்டுக் கட்டுரை என ஒருவர் எலுமிச்சை புதினா பான அனுபவத்தை நிராகரிக்கலாம். எம்டிஎம் ஒரு literary subversive என ஒருவர் அவதூறு பரப்பலாம். அவை எல்லாம் பொருட்படுத்தத்தக்கவை அல்ல.
கோபயாஷி இஸ்ஸா எழுதிய ஹைக்கூ ஒன்று உண்டு:
“ஓ நத்தையே
ஃபுஜி மலையை ஏறு
ஆனால் மெதுவாக, மெதுவாக”
எலுமிச்சை புதினா பானத்தின் தெளிவினையே, எளிமையையே இஸ்ஸாவின் ஹைக்கூ நல்குகிறது. எஸ்ரா பவுண்ட் இச்சாவின் ஹைக்கூவில் இருக்கும் நத்தை ஒன்று ஃபுஜி மலையை மெதுவாக ஏறுவதையே “that which presents an intellectual and emotional complex in an instant of time.” என்ற படிமமாகக் குறிப்பிடுவார்.
எலுமிச்சை புதினா பானத்தில் மலைத்தேனை சேர்க்கவேண்டும் என்பதுதான் இந்த பானத்தைத் தயாரிப்பதில் உள்ள சிக்கலான நடைமுறை. ஏனெனில் மலைத்தேன் என்று சந்தையில் விற்கப்படுவதில் உண்மையான தேனைக் கண்டறிய நாம் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும். அப்படியே நாம் கண்டுபிடித்து எலுமிச்சை புதினா பானத்தில் சேர்த்துவிட்டாலும் அது உண்மையான மலைத்தேன்தானா என்ற சந்தேகம் நம்மைக் குடைந்துகொண்டே இருக்கும். நாம் உண்மையில் உயிரோடு இருக்கிறோமா என்ற சந்தேகத்தை விட அது ஒன்றும் பெரிய சந்தேகமில்லை என்பதால் நாம் அதைப் பற்றி அதிகமும் கவலைப்படத் தேவையில்லை. மேலும் சுத்தமான வெள்ளை சீனிக்கு கள்ள மலைத்தேன் எவ்வளவோ மேல்.
எலுமிச்சை புதினா பானம் நாட்பட்ட திராட்சை மதுவைப் போலவோ, பல மது வர்க்கங்களினால் நேர்த்தியுடன் உண்டாக்கப்பட்ட காக்டெய்லைப் போலவோ, இறக்குமதி செய்யப்பட்ட சிங்கிள் மால்ட் விஸ்கி போலவோ டாம்பீகமும் டம்பாச்சாரித்தனமும் இல்லாது. எளிமையானது.
எலுமிச்சை புதினா பானம் இப்போதைய கணத்தின் தீஞ்சுவை மிடறு.
மிடறு மிடறாக அதனோடு நாம் மலையேறலாம்.
No comments:
Post a Comment