Tuesday, February 24, 2026

பஞ்சாபிய கரம் மசாலா, ஒரு நாடோடிப் பாடல்

பஞ்சாபிய சமையலில் கரம் மசாலா என்பது சூரியனின் கடும் வெப்பம், பஞ்சாபிப் பெண்களின் இடுப்பு வளைவின் அமிர்த நினைவு, எல்லையற்று விரிந்திருக்கும் நாடுகளின் எல்லைச் சாலைகளில் இருந்து எழுந்து வரும் மெல்லிசை ஆகியன நன்றாகப் பொடியாக அரைக்கப்பட்டு பழைய பீங்கான் ஜாடிகளில் சேமித்து வைக்கப்படுவதாகும். கரம் மசாலாவை வீட்டில் செய்யாமல் சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கடும் கலைக்குற்றங்களுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டியது. நாடோடிப் பாணன் ஒருவன் சந்தைச் சதுக்கங்களிலிருந்தும் சூரியன் சுட்ட பொன்னிற கோதுமை வயல்களிலிருந்தும் சாலையோர டாபாக்களிலிருந்தும் கவிதைகளைச் சேகரிப்பது போலவே கரம் மசாலாவும் தனது குறிப்புகளை ஆட்டோரைட்டிங் போலத் தானே சேகரிக்கிறது. இந்த மசாலாவைக் கூட்டிச் சேர்ப்பது என்பது வேர்களையும் பாதைகளையும், மரபுகளையும் எதிர்ப்புகளையும் ஒன்றாய்க் கூட்டுவதாகும். இதையே டி.எஸ். எலியட் தன் வழக்கமான மென் சோகத்தோடு, “These fragments I have shored against my ruins,” என்று எழுதுவார். அதுபோலவே பஞ்சாபிய கரம் மசாலாவும் பல துண்டுகளைச் சேகரிக்கிறது - கொத்தமல்லி, சீரகம், கிராம்பு என - மனதில் உடலின் மந்த நிலையை அழித்து சுறுசுறுப்பை மீட்டெடுப்பதற்காக.

பஞ்சாபிய கரம் மசாலாவின் நாடோடிப் பாடலின் பல்லவி கொத்தமல்லி விதைகளில் தொடங்குகிறது, மண் சார்ந்த அமைதியற்ற புகைமூட்டமான சீரகம் அடுத்து வருவது. டெலூஸும் கத்தாரியும் ரைசோம் என்பதை ‘கட்டுப்படுத்தப்படாத தொடர்ச்சியான இணைப்புகள்’ என்று வரையறுப்பது போலத் தொடர்புகள் சுவைகளாக்கப்படுகின்றன. இதில் சிவப்பு மிளகாய்ப்பொடி அழையா விருந்தாளி; அது பாடலுக்கு உக்கிர தொனி சேர்ப்பது. தங்க நிறமும், ஆதாரப் பகுதியாகவும் விளங்கும் மஞ்சளோ சோகமான தத்துவஞானியின் பாத்திரத்தை வகிப்பது. நீட்ஷேவைப் போலவே அது கிசுகிசுக்கிறது, “இசை இல்லாமல் வாழ்க்கை ஒரு தவறாகப் போயிருக்கும்” என. கருப்பு மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை மூன்றுமே தந்திரக்காரர்கள். Three tricksters. மூன்றும் கூடும்போது அதில் ஒரு மெல்லிய இனிப்பு எங்கிருந்து வருகிறது? அது தந்திரமில்லாமல் வேறு என்ன? மிலன் குந்தேரா எழுதுவாரில்லையா ‘அதிகாரத்துக்கு எதிரான மனிதனின் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டம்’ என்று; அது ஒரு இனிப்பை உங்களுக்கு மனதில் கொண்டுவருகிறதில்லையா? அதுவே அந்த இனிப்பாகும். அது நினைவைப் போலவே மெல்லியது; தடித்த நாக்குகளுக்குப் புலப்படாதது. இதோடு ஒரு துண்டு அம்ச்சூரை (உலர்ந்த மாம்பழம்) சேர்ப்பது நாடோடிப் பாடலின் சேட்டை. நினைவின் இனிப்பில் நாம் சென்டிமென்டல் முட்டாள்களாக உருகி விடாமல் தடுத்துக் காப்பாற்றுவது. அது சில சமயங்களில் புளிக்கும் என்பது கூடுதல் நன்மை. நாடோடிப் பாடலிலும் ஒரு தனிப்பாட்டின் ராகம் இடைவெட்டி ஓடுமல்லவா? 

சமையல் குறிப்புகள் துல்லியத்தைக் கோருபவை. 2 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கிராம்பு என்றுதான் நான் இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நாடோடி விகிதங்கள் வெறும் பரிந்துரைகள் என அறிவான். "நடனமாடும் நட்சத்திரத்தைப் பெற்றெடுக்க உங்களிடம் குழப்பம் இருக்க வேண்டும்," என்று நீட்ஷே அறிவித்தது நாடோடிக்கு அனுபவப் பாடம்தானே? அதனால் ஒரு துரோகி மிளகாயை இடையிடையேயும் வெடிக்கும் மிளகை ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் சேர்க்கலாம். தொல்காப்பியர் அத்தனை விதிகளையும் கூறிவிட்டு, அவை இல்லாமலும் கவிதை எழுதலாம் என்று சொல்வாரில்லையா? அது போலத்தான் கரம் மசாலாவின் துல்லிய அளவைகளும். குழப்பத்தைத் தழுவத் தழுவ சுவை துலங்கும்.

மசாலாப் பொருட்களைச் சேர்த்து வார்ப்பிரும்பு கடாயில் வறுப்பது என்பது மில்ஸ் அண்ட் பூன்ஸ் நாவல்களில் செக்ஸை வாசிப்பதற்கு சமமானது. ஏதோ நடக்கப் போகிறது என்று நாம் காத்திருப்போம். என்னதான் நடந்தாலும் அது நமக்குத் தெரிந்த படுக்கையறையாகத்தான் இருக்கும் என்றாலும் கூட. ஆனால் ஒன்றுமே நடக்காது. வறுத்தலில் சீரகம் கருப்பாக, மிளகாய் மேலும் சிவக்க கொத்தமல்லி புகைமூட்டமான பாடலைப் பாடுவது நமக்கு ஏற்கனவே தெரிந்ததாகத்தான் இருக்கும். சலிப்பூட்டும் படுக்கை அறை ஒன்றில் எல்லாமே எதிர்பார்த்தது போலவே பழகிய விதத்திலேயே நடப்பது போல. பழக்கம் உடலையும் மனதையும் மொண்ணையாக்குவது மட்டுமல்ல; அது நாக்கையும் மொண்ணையாக்கிவிடும்.

கரம் மசாலாவின் நாடோடிப் பாடல் உண்மையில் மார்சல் ப்ரூஸ்டின் நாயகி மெடலின் போலப் புதிய சூழல்களுக்குப் புதிய அனுபவங்களுக்கு ஏங்குவது. அதை ஒரு சுற்றித் திரியும் மந்திரவாதியாக, தந்திரக்காரக் கடவுளாகக் கையாளும்போது பரிசோதனைகளில் ஈடுபடும்போது அதன் உயிர்ப்பு அபாரமானதாக இருக்கும். உதாரணமாக பலாப்பழத்தை கரம் மசாலா போட்டு வறுத்துப் பாருங்கள்; அல்லது பெரிய நெல்லிக்காயை. அது உங்களை அறியப்படாத படுக்கை அறையின் ஆனந்தங்களுக்கு ஒப்பான அனுபவங்களுக்கு இட்டுச் செல்லும்.

பஞ்சாபிய கரம் மசாலா என்ற நாடோடிப் பாடலைக் கையாளும்போது சல்மான் ருஷ்டி "ஒரு கவிஞனின் பணி பெயரிட முடியாததை பெயரிடுவது, மோசடிகளைச் சுட்டிக்காட்டுவது, உலகம் தூங்குவதைத் தடுப்பது” என்று எழுதியதை நினைவில் கொள்ளுங்கள்.

 

No comments: