Sunday, November 15, 2026

கடல் மோகினிகளின் மௌனம் - காஃப்கா - தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

 

குறைபாடுடைய, ஏன் குழந்தைத்தனமான செயல் நடவடிக்கைகள் கூட ஒருவரைப் பேராபத்திலிருந்து காப்பாற்றும் என்பதற்கு நிரூபணம்:


கடல் மோகினிகளின் பாடல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள யுலிசஸ் தன் காதுகளை மெழுகால் அடைத்துக்கொண்டு தன்னைத் தானே கப்பலின் பாய்மரக்கம்பத்தில் கட்டிக்கொண்டான்.  இயல்பாகவே வேறு எந்தப் பயணியும், யுலிசஸுக்கு முன்னால் ஒவ்வொரு  பயணியும் கூட இதைச் செய்திருக்கமுடியும், கடல் மோகினிகள் ஈர்த்த வெகு தூரத்திலிருப்பவர்களைத் தவிர; ஆனால் உலகத்துக்கே தெரியும் அந்தமாதிரியான விஷயங்கள்  எந்த பாதுகாப்பையும் வழங்காது என்று; கடல் மோகினிகளின் பாடல் எதையும் துளைத்துச் செல்லமுடியும் என்பதும் அவர்களின் ஏக்கம் சங்கிலிகளையும் பாய்மரக்கம்பத்தையும் விட வலுவானவற்றையும்  கூட உடைத்துவிடும் என்றும். ஆனால் அவற்றையெல்லாம் யுலிசஸ் கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றை அவன் யோசிக்கவே இல்லை. அவன் தன்னுடைய கையிலிருந்த மெழுகையும், சங்கிலியின் நீளத்தையும், தன் கள்ளமற்ற சிறிய உத்தியையும் நம்பி கடல் மோகினிகளைச் சந்திக்கச் சென்றான். 


இப்போது  கடல் மோகினிகளிடம் அவர்களின் பாடலை விட இன்னும் அதிக அபாயகரமான ஆயுதம் இருந்தது, அது என்னவென்றால் அவர்களின் மௌனம். அப்படியொரு விஷயம் என்றுமே நடந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும் கூட யாரோ ஒருவன் அவர்களுடைய பாடலிலிருந்து தப்பித்திருக்கமுடியும்  என்பது எண்ணத்தக்கதே, ஆனால் அவர்களின் மௌனத்திலிருந்து நிச்சயமாக என்றுமே யாருமே தப்பித்திருக்க இயலாது. அப்படி நடந்திருந்தால்  தன்னுடைய சொந்த பலத்தினால் வென்றுவிட்டோம் என்ற எண்ணம் உண்டாக்கும் பெருமகிழ்ச்சி அதற்கு முன்னால் நடந்த எல்லாவற்றையும் மூழ்கடிக்க, பூமியின் எந்தப் பெரிய சக்தியும் 

சேதமுறாமல் இருந்திருக்க இயலாது. 


யுலிசஸ் பாடக்கூடியவர்களை  அணுகியபோது அவர்கள் உண்மையில் பாடவில்லை, ஏனென்றால் ஒன்று அவர்கள் தங்கள் எதிரியைத்  தங்கள் மௌனத்தின் மூலமாக மட்டுமே அழிக்கமுடியும் என்றோ அல்லது தன் மெழுகையும் சங்கிலிகளையும் தவிர எதையும் நினைக்காத  யுலிசஸின் முகத்திலிருந்த பெருமகிழ்ச்சியைப் பார்த்து தங்கள் பாடலை மறந்தோ போயிருக்கவேண்டும். 


ஆனால் யுலிசஸ், ஒருவர் அதை அவ்வாறாக வெளிப்படுத்தலாமென்றால், மௌனத்தைக் கேட்கவில்லை; அவர்கள் பாடிக்கொண்டிருப்பதாகவும், அவன் மட்டும்தான் அதைக் கேட்கவில்லை என்றும் அவன் நினைத்தான்.  


விரைவாகக் கடந்து செல்லும் ஒரு கணத்தில் அவன் அவர்கள் தொண்டைகள் எழுந்து வீழ்வதையும், அவர்கள் முலைகள் விம்மி மேலே எழுவதையும், அவர்கள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருப்பதையும்,அவர்கள் உதடுகள் பாதி விரிந்திருப்பதையும், அவன் பார்த்தான். ஆனால் அவையனைத்தும் தன்னால் கேட்கப்படாமல் அவனைச் சுற்றி அழிந்துபோகும் காற்றின் துணைகளே என்று நம்பினான். 


ஆனால் அவன் தன் பார்வையைத் தூரத்தில்  நிலை நிறுத்தியபோது,

சீக்கிரமே,  அது அவன் பார்வையிலிருந்து அகன்றுவிட்டது. கடல் மோகினிகள் அவனுடைய மனவுறுதியின் முன்னால் மறைந்துவிட்டார்கள். அவர்கள் அவனுக்கு மிகவும் அண்மையில் இருக்கும்போது அவர்களைப் பற்றி மேலும் எதுவும் அவன் அறிந்தானில்லை. 


ஆனால் அவர்கள் எப்போதையும் விட அன்பானவர்களாகத் தங்கள் கழுத்துகளை நீட்டித் திருப்பி, தங்கள் குளிர்ந்த கூந்தல்களைக் காற்றில் பறக்கவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு தங்கள் நீண்ட நகங்களால் பாறைகளைப் பற்றிக்கொண்டு கிடந்தார்கள். அவர்களுக்கு இனிமேலும் யாரையும் ஈர்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கவில்லை. யுலிசஸின் மதிப்பு வாய்ந்த கண்களிலிருந்து வரும் பிரகாசத்தை எவ்வளவு நேரம் ஏற்றிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஏற்றிருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய ஒரே விருப்பமாக இருந்தது. 


கடல் மோகினிகளுக்குப் பிரக்ஞை இருந்திருக்குமென்றால் அவர்கள் அந்தக் கணமே அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் என்னவாக இருந்தார்களோ அவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் யுலிசஸ் அவர்களிடமிருந்து தப்பிச்சென்றுவிட்டான் என்பதுதான். 


ஒரு துணைவிதியும் கூடவே கையளிக்கப்பட்டது. யுலிசஸ் ஒரு நரியைப் போல, சூழ்ச்சித்திறன் மிக்கவனாய் இருந்தான் என்று சொல்லப்படுகிறது. அதனால் விதியின் தேவதை கூட அவனுடைய கவசங்களைத் துளைக்க முடியவில்லை. ஒருவேளை அவன் உண்மையிலேயே கடல் மோகினிகள் மௌனமாக இருப்பதைக் கவனித்தான், -இங்கே மனிதப் புரிதல் என்பது அதன் ஆழங்களுக்கு அப்பால் இருக்கக்கூடியதாக இருந்தாலும் - மேலே சொன்னதைப் போன்ற பாவனையை அவன் அவர்களுக்கு எதிராகக் காண்பித்தான், கடவுளர் அவனுக்கான வெறும் கவசங்களாய் இருந்தனர்.




Friday, November 13, 2026

யுலிசஸ் - நாற்பது வருடக் கனவு



ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசஸ்’ நாவலை நான் 1985 ஆம் ஆண்டு என்னுடைய ஆங்கில இலக்கிய  முதுகலை ஆய்வேட்டிற்காக எடுத்திருந்தேன்.  

என்னுடைய ஆய்வு வழிகாட்டி ‘யுலிசஸ்’ நாவல் ஹோமரின் ‘ஒடிசி’  காப்பியத்தின் நிகழ்வுகளை லியொபோல்ட் ப்ளூம் என்ற டப்ளின் நகர விளம்பர விற்பனையாளனின் வாழ்க்கையில் ஒரு நாள் சம்பவங்களாக அமைத்திருப்பதால் அவர் என்னை முதலில் ஹோமரின் ஒடிசியைப் படித்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதச் சொன்னார். பிறகு அயர்லாந்தின் வரலாறு பற்றி ஜாய்ஸுக்கு ஒரு தனித்துவமான பார்வை இருந்ததால் அயர்லாந்து வரலாற்றைப் படிக்கச் சொன்னார். அதைப்பற்றியும் ஒரு கட்டுரை எழுத வைத்தார். ஜாய்ஸின் சக ஐரிஷ் கவியான டபிள்யூ.பி.யேட்ஸ் ஜாய்ஸிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வையை அயர்லாந்தின் வரலாறு பற்றிக் கொண்டிருந்தார். அதனால் நான் ‘அயர்லாந்து வரலாறு பற்றி ஜாய்ஸும் யேட்ஸும் கொண்டிருந்த பார்வைகள்’ என ஒரு கட்டுரை எழுதினேன். ஜாய்ஸ் யுலிசஸை பாரிஸ் நகரில் வாழ்ந்துகொண்டு டப்ளின் நகரில் நடப்பதான கதையாக எழுதியதால் டப்ளின் நகர இடங்கள் எல்லாவற்றையும் நுணுக்கமாக விவரித்து எழுதியிருப்பார்.  டப்ளின் நகர வரைபடம் ஒன்றை வாங்கி அதில் நாவலில் வரும் இடங்கள் என்னென்ன, எந்த எந்த இடங்களில் ஹோமரின் ஒடிசியில் வரும் சம்பவங்கள் நடக்கின்றன என ஒப்பிட்டு பட்டியல் தயாரித்து பின்னர் அதைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினேன். ஜாய்ஸினுடைய உரைநடை புரிந்துகொள்வதற்குச் சிரமமானது என்பதால் அதைத் தமிழில் மொழிபெயர்த்தும் படித்து வந்தேன். 

2004 இல் ஓர் ஆய்வேடு, 2008 இல் இன்னொரு ஆய்வேடு என்று ‘யுலிசஸ்’ நாவலைப் பற்றி எழுதுவதும் மொழிபெயர்ப்பதும் தொடர்ந்தது. 2020 ஆம் ஆண்டு பகுதி பகுதியாகச் செய்து வந்த மொழிபெயர்ப்பின் முதல் வரைவு  முடிந்தது. 2022 ஆம் யுலிசஸ் பிரசுரமாகி நூறாண்டு கண்டபோது தமிழ் மொழிபெயர்ப்பைப் பிரசுரிக்க விரும்பினேன். அது நடக்கவில்லை. 

அடுத்த நான்கு ஆண்டுகளாக மெதுவாக மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்தி முடித்தேன். என்னுடைய ஆரம்பக்காலச் சிறுகதைகளில் ஜாய்ஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. நான் எழுதி பிரசுரிக்காமல் வைத்திருக்கும் என் நாவல்களிலும் ஜாய்ஸின் தாக்கம் இருக்கிறது.  

கடந்த நான்கு வருடங்களில் என்னுடைய மொழிபெயர்ப்பின் நோக்கம் ‘யுலிசஸை’ சாதாரண வாசகர்களும் கூட அணுகக்கூடியதாக மேம்படுத்துவதாகவே இருந்திருக்கிறது.  ஓர் இளைஞனாக என்னிடத்தில் ஆரம்பித்த கனவு ஒரு முதியவனின் ஞானமாக நிறைவடைந்திருக்கிறது. இந்த நாவலோடு நான் நெடுங்காலம் பயணித்திருந்தாலும் இந்த நாவல் பற்றிய என்னுடைய அறிவு முழுமையானது, பிழையில்லாதது என்று சொல்ல முடியாது. 


யுலிசஸ் சம்பவம்

ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசஸ்’ நாவல் மொழிபெயர்ப்பு அறிவிப்பு வெளியானதிலிருந்து எனக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அதே சமயம் தாக்குதல்களுக்கும் குறைவில்லை. சிலருக்கு அஸ்தியில் ஜுரம் கண்டுவிட்டது. சிலர் பீதியில் உறைந்துவிட்டார்களாம். சிலருக்கு அண்டிக் கலங்கி விட்டதாம். இன்னும் குண்டாந்தடியர்கள், மல்யுத்த வீரர்கள், ஒற்றைக் கண் ராட்சசர்கள் (காலிப்சோக்கள்) களத்தில் நுழையவில்லை. அவர்களெல்லாம் நாவல் வெளிவந்த பின் என்னைத் துவம்சம் பண்ணக் களத்தில் இறங்குவார்கள். இவர்களெல்லாம் ஜாய்ஸின் நாவலைப் புரட்டிக் கூடப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. நான் யுலிசஸ் பற்றி  எழுதியிருக்கும் ஒரு டஜன் கட்டுரைகளை வாசித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே. மாஃபியாவின் குடிபடைகள் கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு சின்ன சின்னத் துரும்புகளைக் கண்டுபிடித்து பேனை பெருமாளாக்குவார்கள். இரண்டு மூன்று நாவல்களின் மொழிபெயர்ப்புகள் வருவதால் அறிவின் அடித்தளமே அல்லவா அழிந்துவிடும்.

 நான் என்ன சொல்கிறேன் என்றால்  தமிழில் வண்டி வண்டியாய் கொட்டப்படும் மொழிபெயர்ப்புகள் அத்தனையையும், ஆய்வுத்துறை நூல்கள் அனைத்தையும் பதம் பதமாய் வாசியுங்கள். அப்போதுதான் இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியவரும். நாம்  எல்லாவற்றையும் அப்படிப்பட்ட மறுமதிப்பீடு செய்ய வேண்டிய  காலத்தில் நுழைந்துகொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.

 ‘யுலிசஸ்’ நாவல் பிற உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது பிரெஞ்சு மொழி தவிர மற்ற எல்லா மொழிகளிலுமே பெரும் பூகம்பங்களை உண்டாக்கியிருக்கிறது. பேச்சு-எழுத்து, ஆபாசத்தை மட்டுப்படுத்துவது- ஆபாசத்தை அதிகப்படுத்துவது, வாசிப்பைச் சுலபமாக்குவது- இன்னும் கடினமாக்குவது, யுலிசஸ் மொழிபெயர்ப்பாளர்கள் மேதைகளாகவும் கிறுக்கர்களாகவும் பல மொழிகளிலும் இருந்திருப்பது எனச் சர்ச்சைகளுக்கு “யுலிசஸ்” சென்ற எந்த மொழியிலும் குறைவிருக்கவில்லை. தமிழில் நாம் என்ன விட்டுவிட்டா தேடுவோம்? 

 ‘யுலிசஸ்’ சர்ச்சைகளால் வரும் புத்தகக்கண்காட்சி அல்லோகல்லோலப்படும். மற்ற மொழிகளில் யுலிசஸ் நாவல் உண்டாக்கிய சர்ச்சைகள் அந்தந்த மொழியில் பெரும் பங்களிப்புகளைக் கொடுத்திருக்கின்றன. அது போலவே தமிழிலும் நடைபெற வேண்டும் என்பதே என் விருப்பம். I am also rolling up my sleeves. நான் எதை வெறுக்கிறேன் என்றால் நூலைப் படிக்காமல் இன்னொருத்தர் சொல்வதை வைத்து மட்டுமே அவதூறு பரப்புபவர்களையும்,  கேளிக்கையை மட்டுமே உத்தேசித்திருப்பவர்களையும். 

நாவலுக்கான முன்பதிவைச் சீர் வாசகர் வட்டம் அறிவித்தபின், நூல் வெளியாகும் வரை, தினசரி ஏதாவது  யுலிசஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுக்கொண்டே இருப்பேன். அறிவிப்பு வெளியானபின் வந்த எதிர்வினைகளை ஓரளவு ஓடியாடிச் சேகரித்திருக்கிறேன். அவை எல்லாம் என்னுடைய சொந்த நாவலுக்கான கச்சாப்பொருட்கள். ஏற்கனவே ‘ரோஜாவின் பெயர்’ நாவல் எனக்கு ஏகப்பட்ட கச்சடாப் பொருட்களைத் தந்திருக்கிறது. என் நாவலின் தற்காலிகப் பெயர் “யுலிசஸ் சம்பவம்” . It is a mystery comedy thriller featuring a rogue translator as the protagonist and the villains are everywhere. 

Wednesday, November 11, 2026

அறிவின் அடித்தளத்தை அழித்தல்


ஜெயமோகன்தான் செயற்கை நுண்ணறிவை எழுத்தில் பயன்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்திவருகிறார். அவருடைய அணுக்கத் தொண்டரான ஜெகதீஷ்குமார் என்பவர்தான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி  எத்தனை விதமான மொழிபெயர்ப்புகள் சாத்தியம் என்று தேர்ந்தெடுத்து அதில் சிறப்பானதைத் தேர்வு செய்து மொழிபெயர்க்கலாம் என்று யோசனையை முன்வைத்து எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டு அந்த யோசனையை வாபஸ் பெற்றுவிட்டார். ஆனால் அவருடைய முன்னெடுப்பில் தமிழ் படைப்புகள்  செயற்கை நுண்ணறிவின் துணையோடு மொழிபெயர்க்கப்பட்டு ஜெயமோகனின் மாஃபியா கும்பல் சார்பில் வெளியாகி இருப்பதாகவும், அது பல்லிளித்துவிட்டதாகவும் கோகுல் பிரசாத், சுசித்ரா ஆகியோரின் பதிவுகளில் வாசித்துத் தெரிந்து கொண்டேன். தமிழ் அன்னையை சீரழித்துவிட்டாய் என்று அவருடைய அடிவருடி கோமாளிக்கு எந்த ஆவேசமும் வரவில்லை. 

இன்றுவரை ஜெயமோகன் தன்னுடைய ‘வெண்முரசு’ நாவல்களுக்கு பயன்படுத்திய மகாபாரத ஆராய்ச்சி நூல்கள் என்னனென்ன என்பதைத் தெரிவிக்கவில்லை. இலக்கியங்களை வரலாறு, இனவரைவியல் தரவுகளை சேகரிப்பதற்கான அடிப்படைக் களமாக தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்வோர் ‘வெண்முரசு’ நாவல்களில் திரிக்கப்பட்டிருக்கும் இனவரைவியல், வரலாற்றுத் தரவுகள் எத்தனை என்பதை எடுத்துச் சொல்லி அவற்றைத் திருத்துவதற்குள் பல ஜென்மாந்திரங்கள் தீர்ந்துவிடும். 

ஜெயமோகன் தனக்கு ஆய்வு அனுபவமோ, முறையான பயிற்சியோ இல்லாத  நாட்டுப்புறவியல், வரலாறு, சமூகவியல், சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும், சிறு தெய்வங்கள், மதங்களின் வரலாறு, இந்தியத் தத்துவம்,  தெரிதாவின் கட்டுடைப்பு, கிராம்சியின் சிந்தனை, நீட்ஷேயின் அதி மனிதக் கோட்பாடு, தன்னற சுய உதவி, வேதாந்தம்  ஆகிய துறைகளில்/ கருப்பொருள்களில் (எனக்குத் தெரிந்தவரை- இன்னும் ஏராளமான பொருட்களில் அவர் எழுதியிருக்கலாம்) மலை மலையாக குப்பைகளை எழுதிக் குவித்திருக்கிறார். இந்தப் பொருட்களில் எல்லாம் அவர் தன் மனதிற்குத் தோன்றியபடியும், புனைவின் கற்பனைக்கும், கருத்துருவ கோமாளித்தனத்திற்கும் ஏற்ப தரவுகளின் அடிப்படை இல்லாமல் குப்பை மலைகளைக் கொட்டியிருக்கிறார். இவற்றையெல்லாம் சரி செய்ய பல நூற்றாண்டுகள் ஆகும். நான் அவருடைய சில கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த காலங்களில் எழுதிவிட்டு அப்புறம் இது தனி ஒருவனால் ஆகிற காரியமல்ல என்று விட்டுவிட்டேன்.

தமிழ் விக்கிக்கு கட்டுரைகள் எழுதுவதற்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ‘வேகமாக’ வாசிப்பதாக ஒரு பதிவில் குறிப்பிடும் ஜெயமோகன் நீண்டகாலமாக சமூகவியல், தத்துவம், சுய உதவி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏராளமான குப்பைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய தட்சஷீலா தனியார் சுய நிதி (அதாவது மாணவர்களிடமிருந்து கொள்ளை கொள்ளையாய் நிதி வசூலிக்கும்) பல்கலை ஜெயமோகன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் விற்பன்னர் என்று குறிப்பிடுகிறது. 

பெரியார் நூலகப் போலி நூல்களை விடக் கொடுமையான ஊழலும் பித்தலாட்டமும் நிறைந்தது ஜெயமோகன் என்ற அழிவு சக்தியின் அற்ப வேலைகள்.

ஜெயமோகனின் விஷவிருட்சம் இன்று பல என்.ஜி.ஓக்களாக இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும்  வேரூன்றியிருக்கிறது. தமிழ் வணிக சினிமாவிலிருந்து மட்டுமல்லாமல் ஜெயமோகனுக்கும் அவருடைய என்.ஜி.ஓக்களுக்கும் நன்கொடைகளாகப் பணம் கொட்டுகிறது. அவருக்கு இன்னும் இன்னும்கோடி கோடியாய் பணத்தைப் பெருக்க ரியல் எஸ்டேட் முதலீடுகள் வேறு இருக்கின்றன. வெளி நாட்டு உரைகள் , முழுமை அறிவு வகுப்புகள் என்று வேறு வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அப்புறம் எதற்காக செயற்கை நுண்ணறிவு கட்டுரைகளையும், பொய்புனைவுகளையும் எழுதுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நிச்சயமாக  , தமிழ் சமூகத்தின் அறிவு அடித்தளங்களை அழிப்பதற்குப் பதிலாக வேறு வேலைகள் செய்து பிழைக்கலாம். 

Monday, November 9, 2026

பிரதிகளின் திரிபு, திட்டமிட்ட போலியாக்கம், கள்ள உரை விளக்கம், புனிதமாக்குதல் ஆகியவை பற்றிய 3 நாவல்கள்

 பகுதி 1: ஜார்ஜ் ஆர்வெல்லின் “1984”

—-


 நான் சமீபத்தில் அகல்விளக்கு பதிப்பகம், அதன் போலி மோசடி எழுத்தாளர்கள் பெயர்கள், தலைப்புகள், அந்தப் புத்தகங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் விலைகள் ஆகியவற்றைப் படிக்கும்போது இதன் பின்னே ஒரு குரூர நகைச்சுவையும், தந்திரமான, இரகசியமான, மறைமுகத் தாக்குதல் மூலமாக  அரசு, அல்லது நூலக அமைப்பை அழிக்க அல்லது சீர்குலைக்க முயல்கிற அல்லது பெரிய ஊழல்களை அம்பலப்படுத்துகிற கவன ஈர்ப்பு  முயற்சி இருப்பதாகச் சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றும் இதை நான் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘குற்ற முகங்கள்’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘மூன்றாந்தரன்’ கதையை ஒப்பிட்டும்  எழுதியிருந்தேன்.  இதற்கு ஜமாலன் , “இதன் பின் ஒரு திட்டமிட்ட அறிவுலகைப் பகடி செய்து பதற்றமடைய வைக்கும் எண்ணமும், இதனை அம்பலப்படுத்தி யாரையோ முச்சந்தியில் நிறுத்தும் எண்ணமும் உள்ளது. இது தமிழ்நாடு அறிவார்ந்த மண் என்பதைப் பகடி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ள குரூரமான தமிழ் சிந்தனை மறுப்பு கும்பல் உள்ளது என்பதாகவே தெரிகிறது” என்று பின்னூட்டமிட்டிருந்தார். அதற்கு நான் “‘பெரியார் அறிவுலகம்’ என்று பெயரிடப்பட்ட நூலகத்தில் இது நடந்திருக்கிறது என்பதும், ‘நாலடியார்’ என்ற நீதி நூலின் பகடியும் ‘ பாரதியாரின் கதைகள்’ என்ற போலி நூலும் கவனப்படுத்தப்பட்டுள்ளன என்பதிலிருந்தும் இந்த ஊழல் பகடியின் பின்னணியில் இருக்கும் அரசியலின் நிறத்தை யூகிக்கலாம். பெருமாள் முருகனின் கட்டுரை, சோ.தர்மனின் எதிர்வினை ஆகியவற்றை வாசிக்கும்போது இது பதிப்பகங்கள் தங்கள் அறிவு/ பணபல/ செல்வாக்கு மேலாண்மையை நிறுவிக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளும் சர்ச்சை என்ற பரிமாணமும் தெரியவருகிறது. இது அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி/ பண ஊழல்  மூலமாக நடந்திருக்கிறதா இல்லை அரசு அதிகாரிகளிடையே நடந்திருக்கக்கூடிய கருத்துருவ ஊடுருவல் வழி நடந்திருக்கிறதா என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டியது” என்று பதிலெழுதினேன். இந்த விவகாரம் குறித்து எஸ்.சண்முகத்தோடு தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் ஜமாலன், நான், நாங்கள் இருவருமே எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பதற்றத்தின் காரணமாக ஒரு  மோசடிக்கு அதிகப்படியான விளக்கமளிப்பதாகக் கூறிச் சிரித்தார்.   


இதைப் பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தபோது பிரதிகளின் திரிபு, திட்டமிட்ட போலியாக்கம், கள்ள உரை விளக்கம், புனிதமாக்குதல் ஆகியவை மொழிகளின் வரலாறுகளிலும், எனவே மக்களின் சரித்திரங்களிலும் வன்முறையான இடையீடுகளை நிகழ்த்தக்கூடியவை என்பதும் இந்தப் பொருள்களில் எழுதப்பட்ட பல நாவல்களும் எனக்கு நினைவுக்கு வந்தன. நான் அந்த நாவல்களைப் பற்றிய சிறு குறிப்புகளைப்  பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  


ஜார்ஜ் ஆர்வெல்லின் “1984”  நாவலில் வின்ஸ்டன் ஸ்மித் 'உண்மை அமைச்சகத்தில்' உள்ள ஆவணக் காப்பகச் செய்தித்தாள்களை மாற்றி எழுதி, களங்கப்பட்ட குடிமக்களை வரலாற்றிலிருந்து அழிப்பதன் மூலம், எழுத்துப்பூர்வ ஆவணங்களைத் திரிப்பது புறநிலை யதார்த்தத்தையே அழித்துவிடும் என்பதை நிரூபிக்கிறார். ஆர்வெல்லின் நாவலில், 'பெரியண்ணன்'  தலைமையிலான சர்வாதிகார அரசு, மக்களின் சிந்தனையையும் வரலாற்றையும் முழுமையாகக் கட்டுப்படுத்த 'உண்மை அமைச்சகம்'  என்ற அமைப்பைப் பயன்படுத்துகிறது. பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசின் அப்போதைய அரசியலுக்கு ஏற்ப கடந்த கால வரலாற்றைத் திரிப்பதே இந்த அமைச்சகத்தின் முக்கியப் பணியாகும். வின்ஸ்டன் ஸ்மித்தின் பணியும் வழிமுறைகளும் பலதரப்பட்டதாக இருக்கிறது. இதில் முதன்மையானது கணிப்புகளை மாற்றி எழுதுதலாக இருக்கிறது.  


 அரசின் பொருளாதாரக் கணிப்புகளோ போர் அறிவிப்புகளோ பொய்த்துப் போனால், அரசு முதலில் இருந்தே சரியாகத்தான் கணித்தது என்பதுபோலப் பழைய தி டைம்ஸ்  செய்தித்தாள்களை வின்ஸ்டன் ஸ்மித்  மாற்றி எழுதுகிறார்.திருத்தப்பட்ட புதிய செய்தித்தாள் அச்சிடப்பட்டவுடன், உண்மையான பழைய நகல்கள் ‘நினைவுக்குழி' எனப்படும் குழாய்களில் வீசப்பட்டுத் தீயில் எரிக்கப்படுகின்றன; இதனால் பழைய உண்மைக்கான சான்றுகளே இல்லாமல் போகிறது


அரசுக்குப் பிடிக்காதவர்கள் இரகசியமாகக் கொல்லப்படும்போது, அவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் ஆவணங்களிலிருந்து வின்ஸ்டன் ஸ்மித் நீக்கி, அவர்கள் வாழ்ந்ததற்கான தடயத்தையே அழித்துவிடுகிறார். 


இல்லாத ஒரு போர் வீரனைத் தேசபக்திக்கு உதாரணமாகக் காட்ட, வின்ஸ்டன் ஸ்மித் தனது கற்பனையிலேயே 'காம்ரேட் ஓகில்வி'  என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி ஆவணங்களில் சேர்க்கிறார்.


எழுத்துப்பூர்வ ஆவணங்களும் புகைப்படச் சான்றுகளும் அழிக்கப்படும்போது 'புறநிலை யதார்த்தம்'  என்பதே இல்லாமல் போகிறது என்பது ஆர்வெல்லின் நாவல் முன்வைக்கும் முக்கியக் கருத்தாகும். நேற்றைய வரலாறு மாற்றப்பட்டதை மக்கள் தங்கள் நினைவில் வைத்திருந்தாலும், அதை நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லாததால், தங்கள் சொந்த நினைவாற்றலையே சந்தேகித்து அரசின் பொய்யை உண்மையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் . "கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர்களே எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்; நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துபவர்களே கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்" என்ற  முழக்கத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாகவே வின்ஸ்டன் ஸ்மித்தின் பணி அமைகிறது.


இன்றைக்கு வாசித்தாலும் ‘1984’ முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கக்கூடியது. 


பகுதி 2:  யோஸே சரமாகோவின் “லிஸ்பன் நகர முற்றுகை பற்றிய வரலாறு”


யோஸே சரமாகோவைப் பற்றிய பிரமாதமான நூல் ஒன்றை எஸ்.வி.ராஜதுரை எழுதியிருக்கிறார். அந்த நூல் போன வருட சென்னைப் புத்தகக்கண்காட்சியை ஒட்டி வெளிவந்ததாக ஞாபகம். அந்த நூலை உடனடியாக என்னுடைய புத்தக அலமாரியிலிருந்து தேடி எடுக்க முடியவில்லை. நிற்க. 


நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர் யோஸே  சரமாகோ (José Saramago) 1989-ஆம் ஆண்டு எழுதிய '“லிஸ்பன் நகர முற்றுகை பற்றிய வரலாறு' (The History of the Siege of Lisbon) என்ற நாவல், வரலாற்று உண்மைகள் சிறிய அளவு பொய்யாகத் திருத்தப்பட்டால் கூட எத்தனை அனர்த்தங்கள் விளையும் என்பதைச் சொல்கிறது.  1147-ஆம் ஆண்டு போர்த்துகீசிய மன்னர் அஃபோன்சோ ஹென்றிக்ஸ், ஐரோப்பியச் சிலுவைப்போர் வீரர்களின்  உதவியுடன் லிஸ்பன் நகரை மூர்களிடமிருந்து  கைப்பற்றிய வரலாற்று நிகழ்வை வைத்து சரமாகோ இந்த புனைவை எழுதியிருக்கிறார்.


இந்நாவலின் முதன்மைக் கதாபாத்திரமான ராய்முண்டோ சில்வா, நடுத்தர வயதைக் கடந்த, தனிமையில் வாழும் ஒரு சாதாரணப் பிழைதிருத்துநர். பிறர் எழுதிய வரிகளில் உள்ள எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் மட்டுமே திருத்தும் அதிகாரம் கொண்ட அவருக்கு, மூலப் பிரதியின் கருத்தை மாற்றும் உரிமை கிடையாது. தமது பணி வெறும் இயந்திரத்தனமானது என்ற சலிப்போடு வாழும் அவர், ஒருநாள் லிஸ்பன் முற்றுகை குறித்த வறண்ட நடையில் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகம் ஒன்றைத் திருத்திக்கொண்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், "போர்த்துகீசியர்கள் லிஸ்பனைக் கைப்பற்றச் சிலுவைப்போர் வீரர்கள் உதவுவார்கள்" என்ற வரலாற்று உண்மை இடம்பெற்றுள்ளது.


வாழ்நாள் முழுவதும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, பிறரின் எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்து வாழ்ந்த சில்வாவுக்கு, அந்தக் கணத்தில் ஒரு திடீர் உந்துதல் ஏற்படுகிறது. அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்ட வரலாற்றின் மீது ஒரு சிறிய கலகத்தை  விளைவிக்கும் நோக்கில், அந்த வாக்கியத்தில் "இல்லை"  என்ற ஒற்றைச் சொல்லைச் செருகி, "சிலுவைப்போர் வீரர்கள் உதவ மாட்டார்கள்" என்று மாற்றிவிடுகிறார். அந்தப் புத்தகமும் யாரும் கவனிக்காமல் அதே பிழையோடு அச்சாகி வெளியாகிவிடுகிறது.


இந்த வரலாற்றுத் திரிபு பதிப்பகத்தில் கண்டறியப்படும்போது, சில்வா உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பதிப்பகத்தின் புதிய மேற்பார்வையாளரான மரியா சாரா, சில்வாவின் இந்த விசித்திரமான கலகச் செயலில் உள்ள தத்துவார்த்த ஆழத்தையும் படைப்பாற்றலையும் கவனிக்கிறார். அவர் சில்வாவைத் தண்டிப்பதற்குப் பதிலாக, சில்வாவுக்கு அந்தத் தவற்றை அறுதி செய்து எழுதச் சொல்கிறார்: அதாவது சிலுவைப்போர் வீரர்களின் உதவியின்றியே போர்த்துகீசியர்கள் தாங்களாகவே லிஸ்பன் நகரை முற்றுகையிட்டு வென்றதாக ஒரு 'மாற்று வரலாற்றை' சில்வாவேப் புதிதாக எழுத வேண்டும் என்று தூண்டுகிறார்.


இதனைத் தொடர்ந்து, நாவல் இரண்டு காலகட்டங்களில் இணையாகப் பயணிக்கிறது. ஒருபுறம், 12-ஆம் நூற்றாண்டில் அந்நியப் படைகளின் உதவியின்றி, குறைந்த படைபலத்தோடு போர்த்துகீசிய மன்னரும் வீரர்களும் எவ்வாறு லிஸ்பன் கோட்டையை முற்றுகையிட்டார்கள் என்பதை சில்வா தன் கற்பனையால் மீட்டுருவாக்கம் செய்கிறார். அந்தப் போர்க்களத்தில் மோகெய்ம்  என்ற போர்வீரனுக்கும் ஔரோவானா  என்ற பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை அவர் உயிர்ப்போடு எழுதுகிறார். மறுபுறம், இந்தப் புதிய வரலாற்றை எழுதும் செயல்முறையின் வழியே, நிகழ்காலத்தில் சில்வாவின் தயக்கங்கள் உடைந்து, அவருக்கும் மரியா சாராவுக்கும் இடையே ஒரு காதல் மலர்கிறது.


வரலாறும் ஒருவகைப் புனைவுதான்; வரலாற்றாசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த தரவுகளைத் தேர்ந்தெடுத்து உருவாக்கும் ஒரு கதையே அதிகாரப்பூர்வ வரலாறாக மாறுகிறது என்பதை சரமாகோ சுட்டிக்காட்டுகிறார். வரலாறு எது, புராணம் எது, கற்பனை எது அன்று அறியாத நமக்கு இது ஒன்றும் புதிய செய்தியல்ல.


இல்லை என்ற ஒற்றை எதிர்மறைச் சொல் அதிகாரப்பூர்வ உண்மைகளைக் கேள்விக்குட்படுத்தும் மனிதச் சுதந்திரத்தின் அடையாளமாக மாறுகிறது.


 பிறரின் எழுத்துக்களைத் திருத்தும் வெறும் பார்வையாளராக, திருத்துநராக இருந்த சில்வா, வரலாற்றை மாற்றி எழுதுவதன் மூலம் தன் சொந்த வாழ்க்கையையே மாற்றி எழுதும் படைப்பாளியாக உயர்கிறார்.


கடந்த கால வரலாற்றில் நிகழ்த்தப்படும் ஒரு சிறிய மாற்றம், ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கட்டமைப்பைத் தலைகீழாக்குவதோடு, தயக்கத்தோடு வாழ்ந்த ஒரு மனிதனின் நிகழ்கால வாழ்வையும் எவ்வாறு அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது என்பதைச் சொல்வதாகவும் சரமாகோவின் நாவலை வாசிக்கலாம். 


—-

பகுதி 3: இட்டாலோ கால்வினோவின் “குளிர்கால இரவில் ஒரு பயணி”

—-


 

இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ (Italo Calvino) 1979-ஆம் ஆண்டு எழுதிய ‘குளிர்கால இரவில் ஒரு பயணி' (If on a winter's night a traveler) ஒரு ஜாலியான நாவல்.  பின்நவீனத்துவ நாவல்,  மீபுனைவு நாவல் என்ற அடையாளங்களெல்லாம் இந்த நாவலுக்கு அடிக்கடிக் கொடுக்கப்பட்டாலும் அவையெல்லாம் இந்த நாவல் என்ன சொல்கிறது என்பதைச் சொல்வதில்லை.  ஆகையால் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்டுவிட்டு மறந்துவிடுவோம். யாரோ ஒருவர் பெயரில் என்னதான் இல்லை எனக் கேட்கக்கூடும். அப்படி யாராவது எப்போதும் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள் என்பதால் அதை மறந்துவிடுவோம். அதாவது  முதல் கேள்வியை அல்லது இரண்டாவது கேள்வியை. மறதி அருமருந்து. தமிழில் இந்த நாவல் சா.தேவதாசினால்  மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  நான் மொழிபெயர்ப்பை வாசித்திருக்கவில்லை. 


நீ  என்று வாசகனை நேரடியாக விளித்து இந்நாவல் தொடங்குகிறது. நான் என்று தன்மையில் கதையாடல்கள் எழுதப்படுவதை விட நீ என்று முன்னிலையில் எழுதப்படுவது எப்போதுமே கொள்ளாம் என்று நான் நினைப்பதுண்டு. உனக்கு என்ன நடந்தாலும் நான் கவலைப்படவேண்டாம் என்பது அதன் தலையாய ஆதாயம்.   கால்வினோவின் நாவலை வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகன், அச்சுப் பிழைகள், கையெழுத்துப் பிரதிகளின் குளறுபடிகளால்  திரும்பத் திரும்ப முதல் பதினாறு  பக்கங்களே வருவதைப் படித்து நொந்துபோய் அதைப் புத்தகக்கடையில் கொடுத்து ஒழுங்கான பிரதி ஒன்றை வாங்க விழைகிறான். ஒவ்வொரு முறை அவன் புத்தகத்தை மாற்றப் போகும்போதும் புதிய குளறுபடிகளுடன் கூடிய இன்னொரு நூல் கிடைக்கிறது. ஒவ்வொரு நூலும் மத்தியிலிருந்து ஆரம்பிக்கிறது முடிவற்று இருக்கிறது. சிதறுண்ட உலகில் நாம் இருப்பது போலவே  அடுத்தடுத்துப் பத்து வெவ்வேறு முற்றுப்பெறாத நாவல்களின் மத்தியப் பகுதிகளுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை நாவல் விவரிக்கிறது.  நமது வாசகத் தேடல் என்பதும் இப்படி ஓர் அடி முடி தேடும் படலம்தான். அடி என்ன என்பதும் நமக்குத் தெரியாது முடியும் கண்ணில் படாது.  



இந்த அனைத்துக் குழப்பங்களுக்கும் பின்னால் இருப்பவன் எர்மெஸ் மரானா என்ற தந்திரமான, நேர்மையற்ற புத்திசாலி. புத்தகத்தில் ஏற்பட்ட அச்சுப் பிழையைக் குறித்துக் கேட்கப் புத்தகக் கடைக்குச் செல்லும் வாசகன், அங்கே லுட்மில்லா  என்ற சக வாசகியைச் சந்திக்கிறான். லுட்மில்லா எப்போதும் புத்தகங்களிலும், அவற்றைப் படைக்கும் உண்மையான எழுத்தாளர்களின் நேர்மையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவள். அவள் மீது மரானாவுக்குத் தீவிரமான பொறாமையும் ஒருதலைப்பட்சமான காதலும் உண்டும். ஒரு எழுத்தாளனுக்கும் வாசகியான லுட்மில்லாவுக்கும் இடையே உருவாகும்  தூய்மையான இலக்கியப் பிணைப்பைத் தகர்க்க மரானா முடிவு செய்கிறான்.


இலக்கியத்தில் 'உண்மை' அல்லது 'அசல்' என்று எதுவுமே இல்லை என்பதையும், அனைத்து எழுத்துக்களின் பின்னாலும் பொய்யும் தந்திரமும் மட்டுமே உள்ளன என்பதையும் லுட்மில்லாவுக்கு நிரூபிக்க அவன் சபதம் செய்கிறான். இதற்காக, உலகெங்கிலும் உள்ள பதிப்பகங்களில்  பிரதிகளை வேண்டுமென்றே மாற்றி வழங்குகிறான்; போலியான எழுத்தாளர்களின் பெயர்களில் கதைகளைப் புனைகிறான்; 'சிம்மேரியா' , 'சிம்பிரியா' (Cimbria) போன்ற கற்பனை நாடுகளின் மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதாக ஏமாற்றுகிறான். இதன் விளைவாக, லுட்மில்லாவும் வாசகனும் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் உச்சக்கட்ட ஆர்வத்தைத் தூண்டும் இடத்தில் பாதியிலேயே அறுபட்டுப் போகிறது.


ஒரே ஒரு வாசகியை ஏமாற்றத் தொடங்கப்பட்ட மரானாவின் இந்தச் சதி, விரைவிலேயே உலகளாவிய இலக்கிய மோசடி வலையமைப்பாக விரிவடைகிறது. அயர்லாந்து நாட்டுப் புகழ்பெற்ற எழுத்தாளர் சைலஸ் ஃபிளானரி  என்பவர் பல காலமாக writer’s block ஏற்பட்டு எழுதாமல் இருக்கிறான். அதை ப் பயன்படுத்திக்கொள்ளும் மரானா, கணினிகள்,  இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நாவல்களைப் போலியாக உற்பத்தி செய்யும் சர்வதேச அமைப்புகளை உருவாக்குகிறான்.


வாசகன் தான் படித்த கதைகளின் மீதிப் பக்கங்களைத் தேடி உலகம் முழுவதும் பயணிக்கும்போது, தென் அமெரிக்காவிலும்  கிழக்கு ஐரோப்பாவிலும் உள்ளச்  சர்வாதிகார நாடுகளின் அரச தணிக்கைக்குள்  சிக்கிக்கொள்கிறான். அங்குள்ள இரகசியக் காவல்துறையினர், புரட்சிகரக் கருத்துக்களைக் கண்டறியவும், போலியான தடைசெய்யப்பட்ட புத்தகங்களை உருவாக்கிப் புரட்சியாளர்களைக் கைது செய்யவும் மரானாவின் மோசடி வலையமைப்பையே பயன்படுத்துகின்றனர். உண்மையான புத்தகங்களைத் தடை செய்யும் அரசாங்கமே, மக்களைக் குழப்புவதற்காகப் போலிப் புத்தகங்களை அச்சிட்டுப் பரப்பும் விசித்திரமான அரசியல் சூழலை கால்வினோ நகைச்சுவையோடும் கூர்மையோடும் சித்தரிக்கிறார்.


புத்தகத்தை எழுதியவர் யார் என்பது முக்கியமல்ல; சிதைக்கப்பட்ட பிரதிகளுக்கு நடுவே கதையைத் தேடும் வாசகனே இலக்கியத்தின் உண்மையான மையப்புள்ளி என்பதை கால்வினோவின் நாவல் நிறுவுகிறது


 மொழிபெயர்ப்பாளனான மரானா, மூலப் படைப்பாளியின் இடத்தை நாவலில் அபகரிக்கிறான், இலக்கியத்தில் உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான கோடு மிகவும் மெல்லியது என்பதைக் காட்டுகிறான்.


ஆயிரத்தியோரு அரேபிய இரவுகளில் வரும் ஷீரசாத் கதைகளைப் பாதியில் நிறுத்துவதுபோல, வாசகனின் கவனத்தைத் தக்கவைக்க மரானா கதைகளைப் பாதியில் துண்டிக்கிறான்.


 மரானாவின் இலக்கிய மோசடிகளாலும் அரசாங்கங்களின் கடுமையான தணிக்கை முறைகளாலும் வாசகர்களின் தேடலைத் தடுக்க முடிவதில்லை. பாதியில் நின்ற பத்து நாவல்களின் தலைப்புகளையே ஒன்றிணைத்து ஒரு புதிய கவித்துவமான தொடக்கத்தை உருவாக்கும் வாசகனும் லுட்மில்லாவும், எத்தகைய தணிக்கையையும் மோசடியையும் தாண்டி வாசிப்பு என்ற செயல் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை நிரூபிக்கிறார்கள். 


நாவலைப் போலவே இக்கட்டுரையையும் நான் திரும்ப ஒரு முறை மத்தியில் ஆரம்பித்து முடிக்காமல் விட்டுவிட வேண்டும்.


 கால்வினோவின் ‘குளிர்கால இரவில் ஒரு பயணி” நாவல்  வாசிப்பின் வழியே காதலில் விழுவதைப் பற்றிய ஒரு புத்தகம்.  தொடக்கத்தில், வாசகராகிய நீங்கள்  பெரியார் நூலகம் போன்ற ஒரு புத்தகக் கடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்; அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து இந்த ‘குளிர் கால இரவின் பயணி' புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். ஆனால், அதன் முதல் முப்பத்திரண்டு பக்கங்களை (ஓர் இரயில் நிலையத்தில் மர்மமான சூட்கேஸுக்காகக் காத்திருக்கும் ஓர் அந்நியனைப் பற்றிய பகுதி) வாசித்த பிறகுதான், அச்சுப் பிழையின் காரணமாக முந்தைய பதினாறு பக்கங்களே மீண்டும் மீண்டும் வருவதைக் கண்டறிகிறீர்கள்.


அந்தப் புத்தகத்தை மாற்றக் கடையிடம் (நம் கதையில் நூலகத்திடம்)  ஒப்படைத்துவிட்டு, “மால்ப்ரோக் நகரத்திற்கு வெளியே"  என்ற வேறொரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் (நம் கதையில் அது ‘ஊழலின் மொத்த உருவம்’ என்ற தலைப்பைத் தாங்கியிருக்கிறது) —அதன் ஒரு அத்தியாயத்தை வாசித்த பிறகும், அதுவும் குறைபாடுடையது என்று தெரிகிறது. நீங்கள் “வழுக்கு மரத்தில் சறுக்குதல்" (நம் தலைப்பு: ஊழலின் அடி முடி தேடி அதள் பாதாளத்தில் கண் மண் தெரியாமல் விழுதல்)  என்ற அடுத்த புத்தகத்தைத் தொடங்குகிறீர்கள், அதற்குப் பிறகு மற்றொன்று எனத் தொடர்ந்து—ஏமாற்றம், தாமதம், முடிவற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு நீண்ட தேடலில், அடுத்தடுத்துப் பல நாவல்களின் மத்தியப் பகுதிகளை மட்டும்  தொடக்கங்களாக வாசித்துக் கொண்டே போகிறீர்கள்.



இந்தக் குறைபாடுள்ள அல்லது முழுமையற்ற நாவல்களின் தொடக்க அத்தியாயங்கள், வாசகராகிய உங்களின் தனிமையான அகவாழ்க்கையையும், அந்தப் புத்தகத்தையும் அதை உங்களுடன் சேர்ந்து வாசிப்பதற்கான ஒருவரையும் நீங்கள் தேடும் பயணத்தையும் விவரிக்கும் அத்தியாயங்களோடு மாறி மாறி வருகின்றன. முதல் புத்தகத்தை மாற்றுவதற்காக நீங்கள் கடைக்குத் திரும்பும்போது, லுட்மிலா  என்ற பெண்ணைச் சந்திக்கிறீர்கள்; அவளும் ஒரு குறைபாடுள்ள பிரதியை மாற்றுவதற்காக அங்கு வந்திருக்கிறாள். நீங்கள் அவள்பால் முற்றிலும் ஈர்க்கப்படுகிறீர்கள், அவள் உங்கள் கற்பனையில் 'மற்றொரு வாசகராக'  மாறுகிறாள்.


இருப்பினும், அந்த மற்றொரு வாசகரோடு பல சிக்கல்களும் சேர்ந்தே வருகின்றன. குறிப்பாக அவளுடைய சகோதரி லோடாரியா  ஒரு தீவிரப் பெண் விடுதலைப் போராட்டவாதி; அவளுடைய தோழர்கள் உங்களிடம் விகாரப் பாலியல் பற்றியும்  சந்தை பொருளாதாரத்தின் விதிகள் பற்றியும் கத்திக் கத்திப் பேசுகிறார்கள். சிமேரியன் என்ற அழியப்போன மொழியில் நிபுணரான விசித்திரப் பேராசிரியர் உஸ்ஸி-துஸ்ஸி (Uzzi-Tuzii) இருக்கிறார், உங்களிடமிருக்கும் ஒரு புத்தகம் இந்த மொழியிலிருந்து தான் மொழிபெயர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. மேலும், மர்மமான எர்ம்ஸ் மரானாவும் எங்கோ இருக்கிறார். 


 

Sunday, November 8, 2026

அறிவிப்பு: ஜேம்ஸ் ஜாய்ஸின் "யுலிசஸ்" தமிழில்- சீர் வாசகர் வட்ட வெளியீடாக




அறிவிப்பு

இருபதாம் நூற்றாண்டின் காலத்தை வென்ற படைப்பு

#யுலிசஸ் (Ulysses)

#ஜேம்ஸ்_ஜாய்ஸ்

விரிவான ஆய்வு முன்னுரையுடன் தமிழில்:

#எம்_டி_முத்துக்குமாரசாமி

#சீர்_வாசகர்_வட்டம்

ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிசஸ் (Ulysses) நாவல், நவீன உலக இலக்கியத்தை வரையறை செய்த மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று. ஹோமரின் ஒடிஸி காவியத்தின் இணைப் பிரதியான நவீனப் படைப்பு.

ஜூன் 16, 1904 ஒரே நாளில் டப்ளின் நகரில் நடைபெறும் நிகழ்வுகளின் வழியாக மனித மனத்தின் எண்ணங்கள், நினைவுகள், ஆசைகள், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை ஆழமாகப் பதிவு செய்கிறது.

நனவோடை உத்தி, மொழி, கதை சொல்லல் முறை ஆகியவற்றில் பல புதுமைகளைச் செய்து உலக நவீன இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழும் படைப்பு. நாவல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய மகத்தான நவீனக் காவியம்.

1200 பக்கங்களில் கெட்டி அட்டையில் டிசம்பரில் சீர் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவர உள்ளது. விரைவில் முன்பதிவு அறிவிப்பு வெளியாகும்.

அட்டை வடிவமைப்பு: ஓவியர் சந்தோஷ் நாராயணன்.

Thursday, November 5, 2026

படைப்பிலக்கியவாதிகளின் காஃப்கா மொழிபெயர்ப்புகள்




ஃபிரான்ஸ் காஃப்கா மறைந்த 1924-ஆம் ஆண்டை 2024 இல் அவரது இறப்பின் நூற்றாண்டாக நினைவு கூர்வதை விட, அவரது மறுபிறப்பின் நூற்றாண்டு விழாவாகவே பார்க்க வேண்டும் என்று மாயா ஹ்ருஷ்கா கூறுகிறார்; ஏனெனில் அவரது மரணத்திற்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள பத்து எழுத்தாளர்கள் அவரது படைப்புகளை மொழிபெயர்ப்பதை ஒரு முக்கியமான இலட்சியமாகக் கருதினர். இவர்கள் காஃப்காவை வெறும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களாகப் போல   அணுகாமல், அவருடைய புனைகதைகளைத் தங்களது சொந்த அடையாளங்கள், அழகியல் நாட்டங்கள் ஆகியவற்றைப் பிரதிபலித்த பிரதிகளாக அணுகினர்; இதன் மூலம் நீக்கமற நிலைத்துவிட்ட வரலாற்று இணைப்புகள் (காஃப்கா–போர்ஹெஸ், காஃப்கா–பிரைமோ லேவி ,  காஃப்கா–யெசென்ஸ்கா போன்றவை) உருவாகின.


 சோவியத் தணிக்கைத் துறையான ‘கிளாவ்லிட்’டால் (Glavlit) நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த காஃப்காவின் படைப்புகள், அதிகாரப்பூர்வ வழிகளில் அல்லாமல், 'சம்யிஸ்டாட்' (samizdat) எனப்படும் நிலவறை அச்சுப் பிரதிகள் வழியாகவே ரகசியமாக ரஷிய மொழிக்குள் நுழைந்தன. பெயரைக் குறிப்பிடாமல் அநாமதேயமாகக் காஃப்காவை மொழிபெயர்த்த இந்தச் செயல், ஒருவித இருத்தலியல் பாவனையாக மாறியது: தங்களை மறைத்துக் கொண்ட சோவியத் மொழிபெயர்ப்பாளர்கள், காஃப்காவின் கதாநாயகனான யோசப் கே. (Josef K)-வின் அடையாளமற்ற முகத்தையே பிரதிபலித்தனர். 



காஃப்காவின் நிதானமான, உணர்ச்சிப் பிரவாகமற்ற, எதிலும் கட்டுப்படாத நடை, சோசலிச யதார்த்தவாதத்திலோ புரட்சிகரக் கோட்பாடுகளிலோ பொருந்தாத காரணத்தினால் சோவியத் அதிகாரிகள் அவரை நிராகரித்தனர். அரசு ஒட்டுமொத்த மக்கள் திரளின் தீவிர அர்ப்பணிப்பைக் கோரியபோது, காஃப்காவோ ஒருவரது சொந்த அறை, சுயமான உள் அமைதி ஆகிய இரண்டையும் குறிக்கும் 'பொகோய்' (pokoj) என்ற மொழிபெயர்க்க இயலாத ஸ்லாவிக் கருத்தாக்கத்தையே முன்னிறுத்தினார். 


கலாச்சாரத்தை இராணுவமயமாக்கலிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மாஸ்கோவில் 1962-இல் சார்த்தர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, காஃப்காவின் "தண்டனையின் சிறைப்புறத்தில்" (In the Penal Colony),  "உருமாற்றம்" (The Metamorphosis) ஆகிய படைப்புகள் விரிவான அரசியல் முன்னுரைகளுடன் 1964-இல் இனோஸ்த்ரானாயா லித்தரதுரா (Inostranaya Literatura) இதழில் வெளிவந்தன; எனினும், 'கோட்டை' (The Castle) நாவல் பெரெஸ்ட்ரோய்கா (perestroika) காலம் வரை வெளியிடப்படவில்லை. 


பிரான்சின் கொலம்பே-லே-தோ-எக்லீஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய அல்சேஷியன்-அமெரிக்கப் பலமொழியாளரான யூஜின் யோலாஸ், பாரிஸிலிருந்து வெளிவந்த தனது நவீனத்துவ இலக்கிய இதழான ‘டிரான்சிஷன்’ வழியாகக் காஃப்காவை ஆங்கில மொழிக்குக் கொண்டு வந்தார். ஜேம்ஸ் ஜாய்சையும்  சர்ரியலிசக் கலைஞர்களையும் காஃப்காவையும் இரவின் மொழியைப் பேசிய மேதையாகக் கருதிய யோலாஸ், 1928-இல் “தீர்ப்பு" (“The Judgement") சிறுகதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் வெளியிட்டார். 



யோலாஸின் இலக்கிய இதழ், ஐரோப்பாவின் உளவியல் அன்னியமாதலை அட்லாண்டிக் கடலுக்கு அப்பாலுள்ள அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.  நாஜி ஆதிக்கத்திலிருந்து தப்பி அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த தியோடார் அடோர்னோ, குந்தர் ஆண்டர்ஸ், விளாடிமிர் நபக்கோவ் போன்றோரின் மூலமாகக் காஃப்காவின் படைப்புலகம் அமெரிக்காவிற்குள் பரவியது.  தங்கள் நினைவுகளிலேயே காஃப்காவின் 'பொகோய்'யைச் சுமந்து சென்ற இந்த எழுத்தாளர்கள், தங்களின் சொந்தத் தாய்மொழியை இழந்ததால் ஏற்பட்ட திசை தடுமாற்றத்தை விவரிக்க அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் காஃப்காவைப் பாடம் நடத்தினர். 


 அர்ஜென்டினிய எழுத்தாளரான ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ், 1938-ஆம் ஆண்டு பியூனஸ் ஐரிஸில் உள்ள கதே கல்வி நிறுவனத்தில் காஃப்காவின் புத்தகங்களை வாங்கி, எடிட்டோரியல் லோசாடா (Editorial Losada) மூலம் காஃப்காவின் படைப்புகளை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 


மூலப் படைப்புக்கான புனிதத் தன்மையை நிராகரித்த போர்ஹெஸ், மொழிபெயர்ப்பு என்பதை இரு முற்றுப்பெறாத படைப்புகளின் சந்திப்பாகவே பார்த்தார். காஃப்காவின் நிறைவடையாத நாவல்கள் தொடர்ந்து மீளுருவாக்கம் செய்ய அழைப்பு விடுக்கும் வரைபடங்கள் போன்றவையென்றும், ஆக்கப்பூர்வமான மொழிபெயர்ப்பு என்பது மூலத்தை வெறும் நகலெடுப்பதாக இல்லாமல் அதனை மேலும் செழுமைப்படுத்துகிறது என்றும் அவர் வாதிட்டார். 


காஃப்காவை மொழிபெயர்த்த அனுபவமே போர்ஹெஸின் “பேபல் நூலகம்" (The Library of Babel) போன்ற புகழ்பெற்ற போர்ஹெஸின் கதைகளுக்கு உத்வேகமாக அமைந்தது. காஃப்கா அதிகாரத்தின் எல்லையற்ற சிக்கல் வழிகளை ஒரு மூச்சுத்திணறும் சிறைச்சாலையாக உணர்ந்த வேளையில், போர்ஹெஸோ முடிவற்ற இந்த நடைபாதைகளை நூலகங்கள், கண்ணாடிகள், அளப்பரிய இலக்கியச் சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓர் அழகியல் விளையாட்டுக்களமாக அணுகினார். 


செர்னோவிட்ஸில் பிறந்து, நாஜி முகாம்களில் தனது பெற்றோரைப் பறிகொடுத்து உயிர் பிழைத்த கவிஞரான பால் செலான், 1947-ஆம் ஆண்டில் “சட்டத்தின் முன்னால்" (Before the Law) என்ற நீதிக்கதையை மொழிபெயர்த்து காஃப்காவை ருமேனிய மொழிக்குக் கொண்டு வந்தார். காஃப்காவைப் போன்றே ஆஸ்திரோ-ஜெர்மன் மொழி எல்லைக்குள் வளர்ந்த செலான், பெரும் யூத  இனப்படுகொலைக்குப் பின்னர் தப்பிப் பிழைத்த  சூழலில் கவிஞராகவும்  மொழிபெயர்ப்பாளராகவும்  பால் செலான் உயிர் பிழைத்துக் கிடந்தார். 


 ஜெர்மன் மொழியைப் புறக்கணிக்காமல், மரணத்தின் சொந்த மொழிக்குள்ளேயே  நின்று எழுதவும் மொழிபெயர்க்கவும் செலான் முடிவு செய்தார். ஜெர்மன் மொழியை யூதமயமாக்கி, அதன் இலக்கண அமைப்பை உடைத்து, பாதிக்கப்பட்டவர்களின் மரண ஓலத்தைப் பதிவு செய்ய முயன்றதன் மூலம், மொழிபெயர்ப்பைச்  சொந்த வீட்டிற்குத் திரும்புவதாகவும்  அதே சமயம் அதை ஒரு மோதலாகவும் பால் செலான் மாற்றினார். 


பிரிமோ லேவியின் தர்க்கரீதியான தெளிவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செலானின் இருண்ட, உடைந்த மொழிபெயர்ப்புகள், இனப்படுகொலைக்குப் பிறகு தப்பிப் பிழைத்தவர்களின் குற்றவுணர்வை வெளிப்படுத்த எழுத்தாளர்கள் காஃப்காவின் உருவகங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதற்குச் சாட்சியங்களாக  இருக்கின்றன. 


 கவிஞர் மெலெக் ரவிச் (யெகாரியா சோனே பெர்க்னரின் புனைப்பெயர்), 1960-களில் மாண்ட்ரீலில் இருந்தவாறு காஃப்காவின் ‘விசாரணை’ நாவலை இத்திஷ் (Yiddish) மொழியில் மொழிபெயர்த்து, நாஜி முகாம்களிலிருந்து தப்பி எஞ்சியிருந்த வயதான வாசகர்களுக்காக வெறும் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிட்டு வெளியிட்டார். 


1912-ஆம் ஆண்டு பிராக்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், காஃப்கா அங்கு வந்திருந்த கிழக்கு ஐரோப்பிய இத்திஷ் நாடகக் குழுவினரைப் பாராட்டிப் பேசினார்; இத்திஷ் மொழியை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தால் அதன் மென்மையான, உயிரோட்டமான இழைகள் அறுந்துவிடும் என்று அவர் வாதிட்டார். ஜெர்மன் மொழியே இத்திஷின் எண்பது சதவீத அடித்தளமாக இருந்ததால், அத்தகைய நெருக்கமான மொழிபெயர்ப்பு இந்தச் சிறுபான்மை மொழியை விழுங்கி அழித்துவிடும் அபாயம் இருந்தது. 


 ரவிச்சின் மொழிபெயர்ப்பு இந்த நிலையைத் தலைகீழாக மாற்றியது: காஃப்காவை இத்திஷ் மொழிக்குக் கொண்டு வந்த செயல் ஒரு துயரார்ந்த சகோதரத்துவ வெளிப்பாடாகும்; பேசுபவர்களும் கலாச்சாரமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்ட ஒரு மொழியில் காஃப்காவிற்குப் புகலிடம் அளிப்பதாக அது அமைந்தது. 


ஐனாவுடி (Einaudi) பதிப்பகத்தின் 'எழுத்தாளர்களால் மொழிபெயர்க்கப்படும் எழுத்தாளர்கள்' (Scrittori tradotti da scrittori) என்ற தொடருக்காக இடாலோ கால்வினோவின் வேண்டுகோளை ஏற்று, பிரிமோ லேவி 1982-இல் “விசாரணை’   நாவலை இத்தாலிய மொழியில் மீண்டும் மொழிபெயர்த்தார். அறிவியல் பூர்வமான தர்க்கத்தையும் தெளிவான சாட்சியத்தையும் நம்பி ஆஷ்விட்ஸ் முகாமிலிருந்து தப்பிய லேவி, காஃப்காவின் இருண்ட, பகுத்தறிவற்ற உலகத்தை அணுக முதலில் மிகவும் தயங்கினார். 


 லேவி காஃப்காவை மொழிபெயர்க்கப் பயன்படுத்தியது அவர் ஆஷ்விட்ஸ் முகாமில் கற்றுக் கொண்ட கடுமையான, மூர்க்கத்தனமான கட்டளைகளும் புரிந்துகொள்ள முடியாத தன்மையும் நிறைந்த ஜெர்மன் மொழியையே ஆகும். வதைமுகாமின் விதியான -இங்கு ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை- என்பதையும் தப்பிப் பிழைத்தவரின் குற்றவுணர்வையும் யோசப் கே. கதாபாத்திரத்தில் கண்ட லேவி, தன்னையே அந்தக் கதாபாத்திரத்துடன் ஆழமாக இணைத்துப் பார்த்தார். 


 காஃப்காவை மொழிபெயர்த்த செயல், லேவியின் உளவியல் தற்காப்புச் சுவர்களை உடைத்துச் சிதைத்தது. இந்நூல் தன்னை ஓர் அம்பைப் போலத் துளைத்த ஒரு நோய்க்காரணி  என்று வர்ணித்த லேவி, ஆறாத பழைய காயங்களை மீண்டும் எதிர்கொள்ள நேரிட்டதால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்; இந்நிகழ்வே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தற்கொலை செய்துகொள்ளவும் வழிவகுத்தது. 


 1926-ஆம் ஆண்டு ஜெர்மனியின் மைன்ஸ் நகரில் தங்கியிருந்தபோது “கோட்டை”  நாவலை வாசித்தறிந்த  அலெக்சாண்டர் வியாலாத், கலிமார்த் (Gallimard) பதிப்பகம் மூலமாக “உருமாற்றம்” (1928), “விசாரணை” (1933) “கோட்டை”  (1938) ஆகிய படைப்புகளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். 


 சார்த்தர்,  காம்யு ஆகியோரின் இருத்தலியல் தத்துவங்களை நிராகரித்த வியாலாத், காஃப்கா விசித்திரமான நகைச்சுவை உணர்வும் எள்ளலும் கொண்ட ஒரு மாபெரும் கலைஞர் என்று வாதிட்டார். காஃப்காவைத் தனது ஆத்மார்த்தமான நண்பனாகக் கருதிய அவர், நவீன வாழ்க்கையின் முரண்பாடுகளையும் அதிகார நடைமுறைகளின் அபத்தங்களையும் தனது மொழிபெயர்ப்பில் நகைச்சுவையோடு வெளிக்கொணர்ந்தார். 


1974-ஆம் ஆண்டில், பிலியட் (Pléiade) பதிப்பிற்காகப் பேராசிரியர் கிளாட் டேவிட் என்பவரால் வியாலாத்தின் தனித்துவமான கலைப்படைப்பு மொழிபெயர்ப்புகள் மிகக் கடுமையான தணிக்கைக்கும் பிழைதிருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பின்படி, வியாலாத்தின் அசல் மொழிபெயர்ப்புகளும் டேவிட்டின் திருத்தங்களும் ஒரே நூலில் அருகருகே இடம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; இது  ஆரம்பகாலப் படைப்பாற்றல் மிக்க   மொழிபெயர்ப்புக்கும் பிற்காலக் கல்வித்துறை வரன்முறைகளுக்கும் இடையிலான மோதலாக உருமாறியது 


போலந்து நாட்டு எழுத்தாளரும் ஓவியருமான புரூனோ ஷூல்ஸ், தனது காதலி ஜோசஃபினா ஷெலின்ஸ்காவுடன் இணைந்து, 1936-இல் ரோஜ் (Rój) பதிப்பகத்திற்காக ‘விசாரணை’ நாவலைப் போலிஷ் மொழியில் மொழிபெயர்த்தார். தனிமை நிறைந்த துரோகோபிச் (Drohobych) நகரில் வாழ்ந்த ஷூல்ஸ், தனது ஒதுங்கிய வாழ்க்கையை காஃப்காவின் பிராக் நகரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனை உலகமாக மாற்றினார். 


 யோசப் கே. செய்த ஒரே தவறு, நியாயமற்ற ஒரு அதிகார அமைப்பை மனிதப் பகுத்தறிவைக் கொண்டு எதிர்கொள்ள நினைத்ததுதான் என்று ஷூல்ஸ் தனது பின்னுரையில் குறிப்பிட்டார். நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் இந்த உண்மையை அவர் தன் சொந்த வாழ்க்கையிலேயே அனுபவித்தார்; எஸ்.எஸ். அதிகாரி பெலிக்ஸ் லாண்டாவுக்காக அவருடைய மகனின் அறையில் விசித்திரக் கதைகளை ஓவியமாக வரையும் அந்தரங்கப் பணியாள்- யூதராக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்ட ஷூல்ஸ், இறுதியில் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். 


துரோகோபிச் சுவர்களில் எஞ்சியிருந்த ஷூல்ஸின் ஓவியங்களையும் காஃப்காவின் சர்ச்சைக்குரிய கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பிடும்போது  எந்த ஒரு நிலப்பரப்பிற்கும் உட்படாத யூத எழுத்தாளர்களின் படைப்புகளைப் பலவீனமான சிறிய நாடுகள் எப்படி  உரிமை கொண்டாடுகின்றன என்று தெரிய வருகிறது. 


 காஃப்கா தனது இறுதிக் காலத்தில் ஹீப்ரு மொழியை ஆர்வத்துடன் கற்றபோதிலும், ஆரம்பக்கால இஸ்ரேலில் அவருடைய படைப்புகள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டன. பதிப்பாளர் சல்மான் ஷோக்கன், இட்சாக் ஷென்ஹாரின் மொழிபெயர்ப்பில் “அமெரிக்கா” (1945) நாவலை வெளியிட்டதன் மூலம் காஃப்காவை நவீன ஹீப்ருவில் நிலைநிறுத்த முயன்றார்; ஆனால் கெர்ஷோம் ஷோலெமின் கடுமையான விமர்சனத்தால் “ விசாரணை” நாவல் மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டது. 


இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில், கொடூரங்களை நிகழ்த்தியவர்களின் மொழியாகக் கருதப்பட்டதால் இஸ்ரேலில் ஜெர்மன் மொழி புறக்கணிக்கப்பட்டது; இதனால் காஃப்காவின் படைப்புகளைப் புத்துயிர் பெற்றுவந்த ஹீப்ரு தேசிய மொழிக்குள் கொண்டுவருவது கடினமாக இருந்தது. 


 1961-இல் ஜெருசலேமில் நடைபெற்ற அடோல்ஃப் ஐச்மேன் மீதான வழக்கு விசாரணையே இந்தத் தடையை உடைத்தது: இஸ்ரேலிய நீதிபதிகள் ஐச்மேனை நேரடியாக ஜெர்மன் மொழியிலேயே விசாரித்தபோது, நாஜிக்களுக்கு முந்தைய யூதக் கலாச்சார ஜெர்மன் மொழி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. இந்த வரலாற்றுத் திருப்பம் மொழிச் சூழலை மாற்றி, “கோட்டை”  (1967),  “மிலேனாவுக்கான கடிதங்கள்” (1976), “நாட்குறிப்புகள்” (1978) போன்ற காஃப்காவின் முக்கிய நூல்கள் ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட வழிவகுத்தது. 


காஃப்கா நேரில் சந்தித்த ஒரே மொழிபெயர்ப்பாளர் மிலேனா யெசென்ஸ்கா மட்டுமே ஆவார்; இவர் 1920-ஆம் ஆண்டில் க்மென் (Kmen) என்ற செக் இதழுக்காகக் காஃப்காவின் சிறு கதை ஒன்றை அவர் செக் மொழியில் மொழிபெயர்த்தார். அவர்களுக்கிடையே நிகழ்ந்த தீவிரமான கடிதப் போக்குவரத்து,  காதல், படைப்பு  மொழி  ஆகியவை பற்றிய ஆழமான விசாரமாகவும் அமைந்தது. 


வால்டர் பெஞ்சமினின் தத்துவத்தை நினைவுகூரும் வகையில், மிலேனா காஃப்காவின் மூலப் பிரதிக்கு  அளித்த அசைக்க முடியாத விசுவாசம் என்பது, போருக்குப் பிந்தைய பிராக் நகரின் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் செக்,  ஜெர்மன் ஆகிய  மொழிகளுக்கு இடையிலான எல்லையைத் தகர்த்து  ஒரு தூய மொழியை உருவாக்குவதற்கான தேடலாக மாறியது. அவரது செக் மொழிபெயர்ப்பை மனதார ஏற்றுக்கொண்ட காஃப்கா, அதனைத் தனது படைப்பின் கண்ணாடியாகவே பார்த்தார். 


ராவன்ஸ்ப்ரூக் வதைமுகாமில் இறப்பதற்கு முன் மிலேனா காஃப்காவின் கடிதங்களைப் பாதுகாத்து வைத்தார்; 1963-ஆம் ஆண்டு லிப்லிஸ் மாநாடு , 1968-ஆம் ஆண்டின் பிராக் வசந்தகாலப் புரட்சி வரை வரை செக் கம்யூனிச ஆட்சியில் இவர்களது கலாச்சார மரபு வெளியில் தெரியாதபடி   அடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியின் மார்பாக்கில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த அசலான கடிதங்கள், அவர்களின் ஆழமான மொழிபெயர்ப்புக் காதலின் அழியாத வரலாற்று அடையாளங்களாக நிலைத்து நிற்கின்றன. 



 

 



 

Wednesday, November 4, 2026

சோரென் கீர்க்ககார்டும் ரோலாண்ட் பார்த்தும்: சிதறல்களாகச் சில


சோரென் கீர்க்ககார்டின் ‘Seducer’s diary’ ஓர் ஆச்சரியமான நூல். கீர்க்ககார்டிற்கு ஒரு தத்துவஞானியின் நிதானம் வாழ்க்கையில் என்றுமே இருந்ததில்லை; அவர் ஒரு கவிஞனின் கொந்தளிப்புடனே வாழ்ந்தார். அவர் தன்னைவிடப் பத்து வயது குறைந்த ரெஜின் ஓல்சனிடம் காதல் வயப்பட நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே அந்த நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டது. Seducer’s diary இல் கீர்க்ககார்ட் தனக்கும் ரெஜினுக்கும் இடையில் முறிவு ஏற்பட முக்கிய  காரணம் ரெஜினின் மறைமுகமான தொடர்புறுத்தல்களை, தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் முறையைத் தான் புரிந்துகொள்ளாததுதான் என எழுதுகிறார். தன்னை ஒரு போக்கிரியாகவும் கயவனாகவும்  கற்பனை செய்துகொள்ளும் கீர்க்ககார்ட் ரெஜின் தன்னைவிட்டு விலகியது சரிதான் என்றும் வாதிடுகிறார். கீர்க்ககார்டின் இந்த நூலை ரோலாண்ட் பார்த்தின் A Lover’s discourse Fragmaents நூலுக்கு முன்னோடியான காதல் பற்றிய தத்துவார்த்தக் கவித்துவ நூல் என்றும் வாசிக்கலாம். இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஜான் அப்டைக் கடும் ஜுரத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் கீர்க்ககார்ட் தன் காதலில் கிடைத்த விழுப்புண்களை வெற்றிகரமான சிந்தனையாக மாற்றி தன் காயங்களை மறைத்துக்கொண்ட முகமூடி இந்த நூல் என்று எழுதுகிறார். அப்டைக் இப்படிப் பலருடைய உள்க்காயங்களை கண்டு சொல்லியிருக்கிறார். நாம் அவற்றை ஒரு சிறு புன்னகையோடு கடந்து போய்விட வேண்டும். என்னைப் பொறுத்தவரை கீர்க்ககார்ட் நூலில் ஓர் இடத்தில் எழுதுகிறார், “என்னவொரு வித்தியாசம்! அழகியலின் ஆகாயத்திற்குக் கீழே எல்லாமே அழகு, மிதந்து கொண்டிருப்பவை, எல்லாமே தற்காலிகமானவை. அறம் என்ற கருத்து நுழையும்போது அனைத்துமே கடிமானதாகிவிடுகிறது; கோணலாகிவிடுகிறது; எல்லையற்ற சலிப்பைத் தருவதாகிவிடுகிறது”- இதுவே இந்நூலின் முக்கிய சரடு. தத்துவத்தில் கவிதை போன்ற வேகமும் அடர்த்தியும் கொண்ட நூல்.

——-

ரோலாண்ட் பார்த்தினுடைய மொழி நடையை அவருடைய கவித்துவத்தைக் கைக்கொள்ள நான் அடிக்கடி வாசிக்கும் அவருடைய நூல் "A Lover's Discourse: Fragments”. பார்த்தின் ‘ஒரு காதலனின் சொல்லாடல்: சிதறல்கள்” ஒரு புத்தகமல்ல; அது மனதினுள் குடியிருக்க வைக்கும் உணர்வு. காதலின் ஏக்கத்திலும், பைத்தியமாய் காதலில் மையமிட்ட சிந்தனையிலும் பல நெடிய மூச்செறிதல்களின் தொகுப்பு. பார்த்தின் நூல் ஒரு மரபான காதல் கதையாடலை முன்வைப்பதில்லை; அது நேர் கோடற்ற பல உணர்வுகளின் கலைடாஸ்கோப்பினை, இதயத்தின் அகராதியை, சிதறல்களாக நமக்குச் சொல்கிறது. புகழ்பெற்ற குறியியல் அறிஞரான பார்த் காதலின் மொழியை ஒரு கவிஞனின் அந்தரங்கத் தொடுகையோடு நமக்கு உள் பிரித்துக் காட்டுகிறார். அவருடைய நூலைக் காதலின் உருவுகள் (figures) ஆக்கிரமித்திருப்பதாகச் சொல்லலாம். பரவசத்தின் உருவு உலகமே காதலிக்கப்படுபவராய் சுருங்கிவிட , பொறாமையின் உருவோ பகுத்தறிவைத் தின்றுவிடுகிறது. முட்டாள்தனத்தின் உருவு காதலின் தற்செயலான தற்போக்கெண்ணங்களுக்கு சரணடைந்துவிடுகிறது. காதலுணர்வு அடர்ந்து பைத்தியம் நிலைகொள்ளாமல் ஆகும்போது சொற்களற்ற, பேச்சற்ற மௌனம் ஆட்கொள்கிறது.  

இந்த நூலின் மிக அழகான அம்சம் என்னவென்றால் பார்த் காதலைப் பற்றிய எந்த விதமான மதிப்பீடுகளையும் முன்வைப்பதில்லை. பார்த் காதலின் தர்க்கமற்ற எந்தவிதமான உணர்ச்சிகளுக்குள்ளும் தன்னைத் தாழ்த்திக்கொள்வதில்லை. அவர் எல்லாவற்றையும் கைக்கொண்டு ஒருவரை ஆக்கிரமிக்கும் காதலின் இயற்கை குணத்தை இந்த நூலில் எடுத்துச் சொல்லிவிடுகிறார். காதல் ஒரு பைத்தியம் நிறைந்த மையமிட்ட சிந்தனையாகும்போது காதலன் நிற்கவே நிற்காத ஒரு தனி நெடுமொழியால் தண்டிக்கப்படுகிறான். ‘என்னால் உன்னைத் தவிர வேறெதையும் சிந்திக்க முடியாது எனப் புலம்புகிறான். காதலின் என்றென்றைக்குமான நிழலான தனிமை அவனை ஆட்கொள்கிறது. காதலின் தனிமைக்கு ஒரு குரலையும் அதற்கான சொற்களையும் பார்த் இந்த நூலில் வழங்குகிறார். பார்த் காதலின் பெரும் அச்சுறுத்தலாகக் காதலிக்கப்படுபவரின் இன்மையைச் சொல்கிறார். காதலிக்கப்படுபவர் காணாமல் போகும்போது சூழும் வெறுமை தாங்கமுடியாததாகவும் கொடூரமானதாகவும் இருக்கிறது. வெறுமையின் அச்சுறுத்தலில் எழும் பதற்றங்கள் அழகாக இருக்கின்றன. அந்த அழகு ஒளிர்வின் உருவாக உலகமே பிரகாசமாகிறது.  ஒளிர்வின் உருவு சுயம் மாற, அல்லது சுயம் மாறும் அனுபவங்களுக்கு வித்தாக சுயக் கண்டுபிடிப்பின் பயணமும் தொடங்குகிறது. 

சிதறல்களாக பார்த்தின் நூல் இருப்பதைக் காதலின் அலங்கோல நிலையைச் சொல்வதாகவும் நாம் வாசிக்கலாம்.  இந்த சிதறல்களில் உணர்ச்சிகளின் உரையாடல்களுக்கு ஓர் ஆரம்பமோ முடிவோ இருப்பதில்லை. பார்த் இலக்கியத்தையும் தத்துவத்தையும் நூல் முழுக்க இழைக்கிறார்; ஸ்டெந்தாலும் ஃபிராய்டும், இன்னும் பலரும் அவர்களின் பல மேற்கோள்களும் ஊடிழைப்பாவாய் நூல் முழுக்க வளம் சேர்க்கின்றன. ஆகையால் இந்த நூல் காதல் என்ற அந்தரங்க அனுபவத்திற்கு அப்பால் விரிகிறது.

பார்த்தின் நூல் ஒரு சுய உதவிப் பனுவலல்ல; அது ஒரு கண்ணாடியைத் தூக்கி நம் முகத்தின் முன் காட்டுகிறது; நமக்கு மனிதனாக இருப்பதென்பது வலுவற்றமென்நிலையில் உழல்வது என்பதைச் சொல்கிறது. பார்த்தின் கவித்துவ மொழிநடை நம் மனதில் என்றென்றைக்கும் எதிரொலிக்கும் மன அலைகளை விட்டுச் செல்கிறது. காதலிப்பதற்கும் காதலிக்கப்படுவதற்கும் என்ன அர்த்தம் என்று சொல்கிறது. மிகவும் அந்தரங்கமான, மிகவும் ஆழமான உணர்ச்சிகளையும் கூட இதயத்தில் கிசுகிசுக்கும் சொற்களாய், சிதறல்களாய் நம்மால் வெளிப்படுத்த முடியும் என நினைவூட்டுகிறது.

————-

ரோலாண்ட் பார்த்தை (Roland Barthes) வாசிப்பது எப்பொழுதுமே மிகவும் இன்பம் தரக்கூடியதாக இருக்கிறது; அவருடையது ஒரு sensuous prose. அப்படி ஓர் உரைநடையை எழுதக்கூடிய இன்னொரு எழுத்தாளர் இல்லவே இல்லை எனலாம். நம்மூரில் விமர்சனமும் ஏன் இலக்கியமும் கூட வறண்ட உரைநடையில் எழுதப்படுவதுதான் பல வாசகர்களை அந்நியப்படுத்துகிறது என்பது என் எண்ணம். பார்த்துக்கு அடுத்த படியில் டி.எஸ் எலியட், ரொபோர்டோ கலாஸ்ஸோ (Roberto Calasso) ஆகியோரைச் சொல்லலாம். எலியட்டின் அடிநாதமாக இருக்கும் மெலியத் துக்கம் அதன் வசீகரத்தை- என்னைப் பொறுத்தவரை- இழந்து வருகிறது. கலாஸ்ஸோவின் உரைநடையின் கவித்துவம் பல பரிமாணங்கள் கொண்டது; sensuousness குறைவு. பார்த் ஒரு முறை எழுதினார்,"Language is a skin: I rub my language against the other. It is as if I had words instead of fingers, or fingers at the tip of my words. My language trembles with desire." (Lover's discourse, Fragments). எவ்வளவு உண்மை!

 from  ” Roland Barthes in “A Lover’s Discourse, Fragments”

" Every pain, every misfortune, Nietzsche remarks, has been falsified by a notion of guilt, of being at fault: "We have deprived pain of its innocence." Passionate love (the lover's discourse) keeps succumbing to this falsification. Yet there might be the possibility of an innocent suffering in this kind of love, of an innocent misery (if I were faithful to the pure Image-repertoire, and if I were to reproduce within myself only the infantile dyad, the suffering of the child separated from its mother) ; I should then not accuse what lacerates me, I might even affirm suffering. Such would be the innocence of passion: not a purity at all, but quite simply the rejection of Fault.”

——

“A mandarin fell in love with a courtesan. “ I shall be yours,” she told him , “ when you have spent a hundred nights waiting for me, sitting on a stool, in my garden, beneath my window.” But on the ninety-ninth night, the mandarin stood up, put his stool under his arm, and went away. 

 

Sunday, November 1, 2026

ஜென், சுந்தரர், ஜாய்ஸ், லா.ச.ரா



இன்று காலை நடைக்குப் போனபோது அந்தப் பெரியவரைப் பல மாதங்களுக்குப் பின் சந்தித்தேன். அவருக்கு ஜென் பௌத்தத்தில் ஆர்வம் அதிகம். அவர் அவ்வப்போது, அவர் படித்த ஏதாவது ஜென் கதைகளை என்னிடம் சொல்வார். நான் கேட்டுக்கொள்வேன். இன்று அவர், ஜென் பௌத்தத்தில் இருப்பது போலத் திடீர் விழிப்பு நிலையைச் சொல்லும் கதைகள் சைவத்திலோ வைணவத்திலோ இருக்கிறதா என்று கேட்டார்.

நான் அவருக்குச் சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையைச் சொன்னேன். சேக்கிழார் திருத்தொண்டர்புராணத்தில் சுந்தரரின் கதையைச் சோழர் அவையில் சொல்கிறார். இளைஞரான சுந்தரருக்குத் திருமணம். அவர் தாலி கட்ட வேண்டிய தருணம். அப்போது ஒரு முதியவர் வந்து சுந்தரரைப் பார்த்து, "நீ எனது அடிமை, இதோ அதற்குரிய ஓலைச் சுவடி ஆவணம்" என்று காட்டுகிறார். முதியவரின் கூற்றில் மயங்கி, தாலி கட்டாமல், சுந்தரர் அவர் பின்னாலேயே சென்று விடுகிறார். அந்த முதியவரோ திருவெண்ணெய்நல்லூர் சிவாலயத்தின் அருகில் மறைந்து விடுகிறார். அத்தலத்தில் நடராஜரைப் பார்த்துப் ‘பித்தா, பிறைசூடி பெருமானே அருளாளா’ என்ற பதிகத்தைப் பாடுகிறார். தாலி கட்டப் போகிற தருணத்தில் தடுத்தாட்கொள்ளப்பட்ட சுந்தரருக்கு ஏற்பட்டது திடீர் விழிப்பு நிலை தானே என்று கேட்டேன்.

முரட்டு பக்திக்குப் பெயர் போன சுந்தரர், பதிகங்களில் எத்தனை இடங்களில் அவர் பித்து நிலையை அடைகிறார்; அந்தப் பித்து நிலையைப் பாடவும் செய்கிறார். அவரும் பித்தன்; அவர் வணங்கும் சிவனும் பித்தன். சுந்தரரின் பதிகங்களில், நாம் இந்தத் திடீர் விழிப்பு நிலைக்கு ஆட்படுவோமே என்று பாதி பிரார்த்தனையாகவும் பாதி தன் பித்து நிலையை எடுத்துச் சொல்வதாகவும் உள்ள ‘மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை’ என்ற பதிகத்தையும் அவருக்குச் சொன்னேன். அது ஒரு கவியின் திடீர் விழிப்பும் கூட. 


திருநெல்வேலிப் பக்கம் துன்பங்கள் அதிகமாகும்போது பெரியபுராணத்தில் நூல் போட்டுப் பார்ப்பார்கள். பெரியபுராண புத்தகத்தில் நூல் போட்டு எந்தப் பக்கம் வருகிறதோ, அதிலுள்ள செய்யுளை, கதைச் சூழலைத் தெய்வ வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்வார்கள். என் ஆச்சி இப்படிப் பெரியபுராணத்தில் நூல் போட்டுப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அந்தப் பழக்கமும் கூட, ஒரு சாதாரணனும் தன்னை ஒரு தடுத்தாட்கொள்ளுதலுக்கு, திடீர் விழிப்பு நிலைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான் என்று நான் நினைப்பதுண்டு.


இது போலவே ஜேம்ஸ் ஜாய்ஸின் இலக்கிய உலகைப் புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான திறவுகோல் ‘எபிஃபனி’ (Epiphany) எனப்படும் அகத்தரிசனம் அல்லது நொடிப்பொழுது விழிப்புணர்வு ஆகும். கிறித்தவ இறையியலில் ‘இறைவனின் திருக்காட்சி’ என்று பொருள்படும் இச்சொல்லை, ஜாய்ஸ் தனது படைப்புகளில் மனித மனதின் ஆழமான உளவியல் அழகியல் தருணங்களைக் குறிக்கப் பயன்படுத்தினார்.


வாழ்க்கையின் மிகச் சாதாரணமான, அற்பமான ஒரு நிகழ்வு, உரையாடலின் ஒரு துணுக்கு, அல்லது தற்செயலாகக் கடந்து செல்லும் ஒரு காட்சி, திடீரென ஒரு மனிதனின் ஆழ்மனதில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, வாழ்க்கையின் அல்லது தன்னுடைய இருப்பின் மறைக்கப்பட்ட உண்மையை உணர்த்தும் தருணமே ‘எபிஃபனி’ ஆகும். ஜாய்ஸின் கதாபாத்திரங்கள் பெரும் வீரதீரச் செயல்களின் வழியே தங்களை உணர்வதில்லை; மாறாக, அன்றாட வாழ்வின் மிக எளிய தருணங்களின் வழியேயே தங்களின் அக உண்மைகளை தரிசிக்கின்றனர்.


‘டப்ளினர்ஸ்’ சிறுகதைத் தொகுப்பிலும், ‘ஒரு கலைஞனின் இளமைக்கால உருவச்சித்திரம்’ நாவலிலும் இந்த உத்தியை ஜாய்ஸ் விரிவாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக, கடற்கரையில் நிற்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும் நாயகன் ஸ்டீஃபன் டெடாலஸ், அந்த நொடியில் மதத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு, கலையே தனது வாழ்வின் உயரிய நோக்கம் என்பதை உணர்வது உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த ‘எபிஃபனி’ தருணங்களில் ஒன்றாகும்.


‘யுலிசஸ்’ நாவலில் இந்த அகத்தரிசனம் இன்னும் நுட்பமான பரிமாணத்தை அடைகிறது. ஜூன் 16-ஆம் நாளின் சாதாரண அலைச்சல்களுக்கு நடுவே, லியோபோல்ட் ப்ளூமும் ஸ்டீஃபன் டெடாலஸும் எதிர்கொள்ளும் சிறு நிகழ்வுகள் அவர்களின் தனிமை, இழப்பு, மனித உறவுகளின் நிலையாமை ஆகியவற்றை நொடிப்பொழுதில் பளிச்சென உணர்த்திச் செல்கின்றன. 


நாவலின் இறுதியில் மாலி ப்ளூமின் நனவோடையில் வெளிப்படும் ‘ஆமாம் என்ற ஒற்றைச் சொல், வாழ்வை அதன் அனைத்து முரண்பாடுகளோடும் ஏற்றுக்கொள்ளும் மாபெரும் தரிசனமாக விரிகிறது. அன்றாட வாழ்வின் சாதாரணத் தருணங்களுக்குள் ஒளிந்திருக்கும் பேரழகையும் பேருண்மையையும் வாசகனின் கண்முன் நிறுத்தும் ஜாய்ஸின் இலக்கிய மந்திரமே ‘எபிஃபனி’. ஜாய்ஸ் ஒலி வழுக்கலும், மொழிப் பொருண்மையின் கூட்டிணைவும் ஆற்றின் சுழிப்புகளோடு ஓடும் நனவோடையைப் பயன்படுத்தும்போது மொழியின் உண்மையாகவே தீடீர் விழிப்பு சித்திக்கிறது. தமிழில் நனடோடை எழுத்தின் பிதமகரான லா.ச.ராமாமிர்தத்தின் எழுத்தில் இந்த தீடீர் விழிப்பு நிகழ்வதை பல முறை கவனித்திருக்கிறேன்.


2000 ஆம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன். சென்னையில் மிகப்பெரிய  அகில இந்திய நாட்டுப்புறக்கலைகள் திருவிழா ஒன்றை நடத்தினேன். அந்த விழாவுக்குத்  தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் முக்கிய விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருந்தேன். ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ரா. உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்தத் திருவிழாவின்போதுதான் லா.ச.ரா.வோடு சில மணி நேரங்கள் உரையாடும்  சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதிர்ந்த லா.ச.ரா.வின்  கண்கள் கம்பளிப் பூச்சிகள் போன்ற அவருடைய  கனத்த நரைத்த புருவங்களுக்குக் கீழே மின்ன அலாதியான குறும்புடனும் நகைச்சுவையுடனும் அவர் உரையாடியது எனக்குப் பிரமாதமான அனுபவமாக இருந்தது. முதிய நகுலனின் புகைப்படங்களைப் பார்க்கும்போது நம்மைத் தாக்கும் அவருடைய தனிமை உணர்வும் அனாதைத்தன்மையும் நாம் லா.ச.ரா.விடம் சுத்தமாகப் பார்க்கமுடியாதவை. 

 

“அபிதா” நாவலில் அபிதா குடத்தை இடுப்பில் தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருப்பாள்; அவளைப் பார்க்கும் முதியவனின் மனம் அவள் அழகில் பேதலித்து அரற்றும். “அபிதா, அபிதா, அபிதா, அபிதகுஜாம்பாள் இடுப்பின் வளைவு, குடத்தின் செருக்கு “ என்று லா.ச.ரா. எழுதுவார்.  அவர் சொல் ஒலியாலும் கருத்தாலும் ஒன்றோடு ஒன்று பின்னி ஓடுவதை எழுதுவதையே தன் வாழ்க்கையின் பெரும் சாகசமாக நினைத்தார்.


 “பாற்கடலில்” அவர் எழுதுகிறார் : 

"என் சுயசரிதையை அதன் சம்பவ ரீதியில் மட்டும் எழுதுமளவுக்கு அதை நான் முக்கியமாக ஒருநாளும் கருதியதில்லை. என் வரலாறு என்கிற பெயரில் வாழ்க்கையில் கமழும் மணங்களை நுகர, பிறருடன் பங்கிட்டுக்கொள்ள, விசுவதரிசனம் காணச் சுயசரிதை ஒரு சாக்கு அவ்வளவுதான். மற்றபடி என் வாழ்க் கையில் கரடி வித்தைகள், ஆச்சரியகரமான தப்பித்தல்கள் (Escapes), ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியேறல்கள், நூலேணியின் மூலம் இராஜகுமாரி யின் உப்பரிகையில் புகல், ஏழுபேரை ஒரே அடியில் வீழ்த்தும் தீரச் செயல்கள், ஸாம்ஸன் ஸாஹஸங்கள், Bruce Leeஇன் ஒரு கத்தல், ஒரு குத்தல், ஒரு வீழ்த்தல் இவை போன்ற பராக்கிரமங்களுக்கு எங்கே போவேன்? கேவலம், சப்பணம் போட்டுச் சேர்ந்தாப்போல அரை மணி நேரம் உட்கார முடியவில்லை. கொஞ்ச நாட்களாக வலதுகால் சொன்னதைக் கேட்க மறுக்கிறது. இத்தனைக்கும் முடக்குவாதம் மூட்டுவாதம் என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. Some trouble; சரி, போகட்டும்.”


சிந்தா நதி, சிந்தனா நதி என்ற வார்த்தை விளையாட்டைத்  தலைப்பாகக்கொண்ட நூலில் தன்னடையாளம் பற்றி  லா.ச.ரா. எழுதுவார்: 

“சிந்தனா நதியில் அவன் முகத்துக்குக் காத்துக்கிடக்கிறான்.

மொழி முத்து.

முத்தான சொல்.

எழுத்தாய்க் கோர்த்த சொல் எனும் ஜபமணி.

சொல் எனும் உருவேற்றம்.

எப்பவோ ‘நான்-’ என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் எழுத்து வாக்கில் ஒரு சொற்றொடர்.

‘நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும்’ என்று விழுந்துவிட்டது. கேலியாகவோ, ஒரு சில சமயம் பாராட்டியோ, இன்னும் அபூர்வத்தில் சொந்த வியப்பில், இந்த வாக்கியம் இன்னமும் எனக்கு நினைவூட்டப்படுகிறது.

சொல் எனும் உருவேற்றம்.”

நெருப்பு என்றால் வாய் வெந்து போகவேண்டுமென்றால் அங்கே சொல் மந்திரமாகிவிட்டது என்றுதானே அர்த்தம்?


அதே நூலில் ‘உபதேச மந்திரம்” என்று அவர் எழுதிய பத்தி பின்வருமாறு இருக்கிறது: 

“-ஓரு முள் தைப்பு

-ஒரு பாம்புப் பிடுங்கல்

-ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய உபதேச மந்திரம் இப்படித்தான் அமையுமோ?

சிந்தா நதியில் தண்ணீர் எப்பவுமே பளிங்கல்ல.

உச்சி வெயிலுக்கு கக்கல் கரைசல், பாசி, கும்மி, அழுகிய தழை, இலை, வேரொடு பிடுங்கிக்கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும்!”


லா.ச.ரா.வின்  “மாயமான்” சிறுகதையில் அவருடைய பாணியில் கதாநாயகன் சக்கு, சக்கு சகுந்தலா என்று அரட்டிக்கொண்டிருக்கிறான். அப்போது அவர் எழுதுகிறார்: “நாமம் என்ன திவ்யமானாலும் ரூபத்துக்கு இணையாகுமோ? ரூபத்தின் நிழல்களைத்தான் நாமம் தரமுடியும். தவிர, நாம ஜபத்தில் நாம ரூபம்தான் கிட்டும். அதுவும் நிழல்கள். ரூப தரிசனம் தானே தந்த பின் நாமஜபம் என்ன பயன்?” இப்படி மொழியின் வழுக்கலின் கசத்துக்கும் கச்சடாவுக்கும் நடுவே ஒரு தரிசனம் நொடிப்பொழுதில் எண்ணற்ற இடங்களில் லா.ச.ராவுக்கு சாத்தியமாகிறது.


எழுத்தாளனும் வாசகனும் விமர்சகனும் தன்னை மொழியின் ஓட்டத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். ஒரு கவிதையிலோ கதையிலோ வரும் சிட்டுக்குருவி மழையில் நனைந்திருக்கிறதா, வெயிலில் காய்ந்திருக்கிறதா என்பது முக்கியமல்ல. அது ஒரு அழிவுறும் பறவையினமாக எழுத்தில் மட்டுமே கழுத்தை சிலுப்புகிறதா என்பதும் முக்கியமல்ல. அது தன் சிலுப்பலில்  விட்டு விடுதலையாகும் ஒரு தருணத்தை நொடிப்பொழுதில் காட்டித்தருகிறதா என்பதே கேள்வி.