Saturday, October 31, 2026

வாதிடும் இரு காகங்களின் அலகுகளிடையே காற்று சலனமற்று நிற்கிறது: மையம், விளிம்பு, எதிர்ப்பு


ஃபூக்கோவின் தத்துவத்தில் , மையமும் (ஆதிக்க விதிகள், நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமான கட்டமைப்புகள்)  விளிம்புகளும் (ஒதுக்கப்பட்ட, பிறழ்ந்த அல்லது ஓரங்கட்டப்பட்ட மக்கள்) ஆகிய இரண்டும் தனித்தனியாக இயங்குவதில்லை. மையம் தனது சொந்த அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள விளிம்புகளை முழுமையாகச் சார்ந்துள்ளது. மையம் எது சாதாரணமானது,பகுத்தறிவுடையது அல்லது ஆரோக்கியமானது என்பதை வரையறுக்க, எது அசாதாரணமானது, பைத்தியக்காரத்தனமானது அல்லது நோயுற்றது என்பதை வெளிப்படையாக உருவாக்கி, அதைத் தூக்கி எறிகிறது. Madness and Civilization என்ற தனது நூலில், "பகுத்தறிவு" என்ற நவீனக் கருத்துருவானது, "பைத்தியக்காரத்தனம்" என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி, பைத்தியம் பிடித்தவர்களை உடல்ரீதியாகத் தனிமைப்படுத்துவதன் மூலமே தன்னை வரையறுத்துக் கொள்ள முடிந்தது என்பதை ஃபூக்கோ விவரிக்கிறார்.

 விளிம்புகள் மையத்தின் கவலைகளையும் மதிப்புகளையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகச் செயல்படுகின்றன. ஒரு சமூகம் எதனைத் தண்டிக்கிறது, குற்றமாக்குகிறது அல்லது நோயாகக் கருதுகிறது என்பதைப் பார்க்கும் வரை, அச்சமூகம் எதற்கு அதிக மதிப்பு அளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

மையம் விளிம்புகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முயன்றாலும், அது விளிம்புகளையே பெரிதும் சார்ந்து வாழ்கிறது. மையத்தின் நிறுவனங்கள் (சிறைச்சாலைகள், மனநலக் காப்பகங்கள், கிளினிக்குகள்) தங்களுடைய அதிகாரம், நிதி, இருப்பு ஆகியவற்றை நியாயப்படுத்துவதற்கு விளிம்புகள் எப்போதும் நீடித்திருக்க வேண்டியது அவசியமாகிறது. விளிம்புகள் என்பது அமைப்பிற்கு வெளியே இருப்பதில்லை; அவையே அந்த அமைப்பிற்கு வடிவத்தைத் தருகின்றன.

நிறுவன அதிகாரத்தின் மறைமுகச் செயல்பாடுகளை அம்பலப்படுத்தவும், கேலி செய்யவும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இலக்கியத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ஜார்ஜ் ஆர்வெல்லின் (George Orwell) “1984 “அல்லது மார்கரெட் அட்வுட்டின் (Margaret Atwood) “The Handmaid’s Tale” ஆகிய நாவல்கள் ஃபூக்கோவின் 'உயிரதிகாரம்' (biopower)  'கண்காணிப்பு' (surveillance) ஆகியவற்றை நிகழ்த்திக்காட்டும்  இலக்கியங்கள் எனலாம் . நிறுவனங்கள் எவ்வாறு உடல், மொழி , சிந்தனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை அவை அம்பலப்படுத்துகின்றன, அத்துடன் வாசகர்களுக்கு இந்த நிறுவன அதிகாரம் இயல்பாக்கப்படுவதை  எதிர்ப்பதற்கான தத்துவ நோக்கைக் கொடுக்கின்றன.

எதிர்ப்பிலக்கியமானது கற்பனையை விரிவும் ஆழமும் கொண்டதாக அதீதக் கற்பனையை முன்வைப்பதாகவும் இருக்கலாம். நவீனக் கலையில், தாதாயிசம், சர்ரியலிசம்,  அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசம்  போன்ற இயக்கங்களை அழகியல் ரீதியான எதிர்ப்பாகப் புரிந்து கொள்ளலாம். கலை என்பது ஒழுங்காகவும், போதனை சார்ந்ததாகவும் அல்லது எளிதில் வணிகமயமாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று கோரும் கல்வி, அரசியல் மையங்களை, வேண்டுமென்றே குழப்பமான, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அல்லது எளிதான பொருள் விளக்கத்திற்கு அடங்காத கலைகளை உருவாக்குவதன் மூலம் கலைஞர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர்.

எழுத்தாளர் என்ற கருத்துருவம் கூட எழுத்துக்களைக் கட்டுப்படுத்தவும், வகைப்படுத்தவும், கண்காணிக்கவும் மையத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்ட கலாச்சாரக் கட்டமைப்பு என்று ஃபூக்கோ வாதிடுகிறார். ஒரு பிரதியை ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருடன் இணைப்பதன் மூலம், சமூகம் அந்த மீறல் சிந்தனைகளுக்கு ஒருவரைச் சட்டப்பூர்வமாகப் பொறுப்பாக்க முடியும். தணிக்கையும் ,பதிப்புரிமைச் சட்டங்களும் இலக்கியத்தை வணிகமயமாக்குவதோடு,  ஒரு இலக்கியப் பிரதி தரக்கூடிய எல்லையற்ற அர்த்தச் சாத்தியப்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும். இவற்றுக்குப் புனிதங்கள் ஏதுமில்லை. 

எது விலக்கப்படுகிறதோ, எது புறக்கணிக்கப்படுகிறதோ, எது விளிம்பிலிருக்கிறதோ அதுவே கலையாக இருக்கிறது, முன்னோடி இலக்கியமாகச் செழிக்கிறது 

Friday, October 30, 2026

எழுத்து ஒரு புதிய தொழில்நுட்பமாக அச்சத்துடன் பார்க்கப்பட்டபோது



பிளேட்டோவின் நூல் “ஃபியாட்ரஸ்” சாக்ரட்டிஸுக்கும் ஃபியாட்ரஸுக்கும் இடையே நடைபெற்ற  முக்கியமான தத்துவ உரையாடலைப் பதிவு செய்கிறது. 

அன்பு,  ஆன்மாவின் இயல்பு  ஆகியவற்றைக் குறித்த விவாதமாகத் தொடங்கும் இந்நூல், பின்னர் சொல்லாட்சிக் கலை, அக்காலத்தில் வளர்ந்து வந்த எழுத்து என்ற புதிய தொழில்நுட்பத்தின் மீதான கூர்மையான விமர்சனமாக மாறுகிறது. பண்டைய கிரேக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த வாய்மொழிப் பண்பாடு மெல்ல மெல்ல எழுத்தறிவுப் பண்பாடாக மாறிக்கொண்டிருந்த ஒரு முக்கிய வரலாற்றுக் காலகட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டது. எழுதப்பட்ட வார்த்தைகள் மனித மனதையும் உண்மையைத் தேடும் முயற்சியையும் எவ்வாறு சிதைக்கக்கூடும் என்பது குறித்த மிகப்பழமையான,  அச்சங்களை இப்படைப்பு பதிவுசெய்திருப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியதாக இருக்கலாம்.  ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும், ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித குலத்தால் அச்சத்துடன் எதிர்கொள்ளப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. 



ஃபியாட்ரஸ் நூலின் இறுதிப் பகுதியில், எழுத்து எனும் புதிய தொழில்நுட்பத்தின் ஆபத்துகளை விளக்க சாக்ரட்டீஸ் எகிப்திய உருவகக் கதை ஒன்றைக் கூறுகிறார். இதில் கணிதம், வானியல், எழுத்து உள்ளிட்ட கலைகளைக் கண்டுபிடித்த கடவுளான தியுத்தும் (மாற்றுப் பெயர்: தோத் - Thoth) எகிப்தின் மன்னரான தமுஸும் (மாற்றுப் பெயர்:அம்மோன் - Ammon) இடம்பெறுகின்றனர்.


தியுத் தனது எழுத்துக் கலையை மன்னரிடம் சமர்ப்பிக்கும்போது, அது எகிப்தியர்களை மேலும் ஞானமுள்ளவர்களாக மாற்றும் என்றும், அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் ஒரு "அமிர்தம்" அல்லது "மருந்து" (pharmakon) என்றும் புகழ்கிறார். ஆனால் மன்னர் தமுஸ் அந்தப் பரிசை நிராகரிக்கிறார்; ஒரு கலையைக் கண்டுபிடிப்பவரே அதன் உண்மையான விளைவுகளைக் கணிப்பதில் மிக மோசமான நடுவராக இருப்பார் என்று வாதிடுகிறார்.  பிளேட்டோ இங்கு ஃபார்மகான் (pharmakon) என்ற கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இச்சொல்லுக்கு இரு வேறு பொருள்கள் உண்டு: இது மருந்து/நிவாரணி என்பதையும்  விஷம் என்பதையும் என இரண்டையுமே குறிக்கும். தியுத் எழுத்தை மறதிக்கான மருந்தாகக் கருதும் வேளையில், தமுஸ் அதை உண்மையான புரிதலுக்கு எதிரான விஷம் என்று வாதிடுகிறார்.


மன்னர் தமுஸின் வார்த்தைகள் மூலமாகவும், அதைத் தொடர்ந்து வரும் சாக்ரட்டீஸின் உரையாடல் பகுப்பாய்வு மூலமாகவும், வாய்மொழியிலிருந்து  எழுத்து வடிவத்திற்கு மாறுவது குறித்த நான்கு முக்கிய அச்சங்களை பிளேட்டோ முன்வைக்கிறார்:


அகத்திற்குப் பதிலாக புறத்தில் எழுதிச் சேமிப்பதால் நினைவாற்றல் சிதைவடையும் என்பது முதல் அச்சம். கற்பவர்கள் தங்கள் உள்ளார்ந்த நினைவாற்றலைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்பதால், எழுத்து அவர்களின் ஆன்மாவில் மறதியை உண்டாக்கும் என்று தமுஸ் எச்சரிக்கிறார். அக நினைவாற்றலை (mnēmē - internal recollection) நம்புவதற்குப் பதிலாக, புற எழுத்து வடிவங்களை (hypomnēsis - வெறும் நினைவூட்டல்) சார்ந்திருப்பதன் மூலம் மக்கள் தங்கள் மன ஆற்றலை இழக்கிறார்கள். இது, கால்குலேட்டர்களும் தேடுபொறிகளும்  மனிதர்களின் மனக்கணக்கு போடும் திறனையும் நினைவாற்றலையும் பலவீனப்படுத்துவதாக இன்றைக்கு நாம் கவலைப்படுவதைப் போன்றதாகும்.


 முறையான வாய்மொழி வழிகாட்டுதல் இன்றி, எழுதப்பட்டவற்றை  மட்டுமே அதிகளவில் வாசிப்பவர்கள், அதிகம் அறிந்தவர்கள் போலத் தோன்றுவார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் எதையுமே அறியாதவர்களாக இருப்பார்கள் என்று சாக்ரட்டீஸ் வாதிடுகிறார். உண்மையை முழுமையாக உள்வாங்கத் தேவையான கடினமான தத்துவ உழைப்பின்றி, ஞானத்தைப் பெற்றது போன்ற ஒரு போலித் தோற்றத்தை விரைவாகப் பெற எழுத்து வழிவகுக்கிறது. இது மனிதர்களை உண்மையான ஞானிகளாக மாற்றுவதற்குப் பதிலாக, அகந்தை கொண்டவர்களாகவும் பழகுவதற்குக் கடினமானவர்களாகவும் மாற்றுகிறது.


 சாக்ரட்டீஸ் எழுத்தை ஓவியக்கலையுடன் ஒப்பிடுகிறார்: ஓவியத்தில் உள்ள உருவங்கள் நம் முன் உயிருள்ளவை போலவே நிற்கின்றன; ஆனால் அவற்றிடம் நாம் ஏதேனும் கேள்வி கேட்டால், அவை மிகவும் கம்பீரமான மௌனத்தை மட்டுமே பதிலாகத் தருகின்றன. நேரடி வாய்மொழி விவாதத்தில்  ஈடுபடுபவரால்  தவறானப் புரிதல்களைத் தெளிவுபடுத்தவும், கேட்பவரின் மனநிலைக்கு ஏற்பத் தனது பேச்சை மாற்றியமைக்கவும், தனது வாதங்களை நிகழ்காலத்தில் தற்காத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், எழுதப்பட்ட ஒரு பிரதியானது, தன்னை விளக்கவோ அல்லது தவறான புரிதல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவோ முடியாமல், கூறிய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும்.


ஒரு படைப்பாளி எதையாவது எழுதிவிட்டால், அந்தப் பிரதி எந்தப் பாகுபாடுமின்றி எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகிறது—அதைப் புரிந்துகொள்ளும் தகுதியுடையவர்கள் கைகளிலும், அதைப் படிக்கத் தகுதியற்றவர்கள் கைகளிலும் அது ஒரே மாதிரியாகச் சென்று சேர்கிறது. பேசப்படும் வார்த்தைகள் ஒரு ஆசிரியரால் குறிப்பிட்ட மாணவரின் பக்குவத்திற்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. ஆனால், எழுதப்பட்ட பிரதியானது ஒரு அனாதையைப் போன்றது; அது நியாயமின்றி விமர்சிக்கப்படும்போதோ அல்லது தவறாகப் பொருள் கொள்ளப்படும்போதோ, அதைக் காப்பாற்ற அதைப் “பெற்றவர்" (எழுத்தாளர்) எப்போதும் தேவைப்படுகிறார்.


பண்டைய காலத்தில், பாணர்கள், கவிஞர்கள்,  தத்துவஞானிகள் ஆகியோரால் கடுமையான நினைவாற்றல் பயிற்சிகள் மூலமாகவும் நேருக்கு நேர் அளிக்கப்படும் குரு-சிஷ்ய வழிகாட்டுதல்கள் மூலமாகவும் அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது. எழுத்துக்கலையின் வருகையானது வாய்மொழி ஆசிரியர்களின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்ததோடு, குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான அறம் சார்ந்த உறவிலிருந்து அறிவைப் பிரித்தது. பண்டைய கிரேக்கர்களைப் பொறுத்தவரை, ஞானம் என்பது ஒரு தோல் சுருளில் சேமித்து வைக்கக்கூடிய நிலையான தகவல்களின் தொகுப்பு அல்ல; அது உரையாடலின் வழியாகப் பரிமாறிக்கொள்ளப்படும், ஆன்மாவின் துடிப்பான  வாழும் ஒரு நிலை.


பேசிக்கொண்டு மட்டுமே இருந்த சாக்ரட்டீஸ் ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைக்கவில்லை; ஆனாலும், எழுத்தின் மீதான அவரது தீவிரமான விமர்சனத்தை பிளேட்டோ எழுதி வைத்ததால் மட்டுமே இன்று நம்மால் அறிய முடிகிறது. பிளேட்டோ இந்த முரண்பாட்டைத் தீர்க்க, வறட்சியான கட்டுரைகளுக்குப் பதிலாகத் தனது படைப்புகளை முழுக்க முழுக்க உரையாடல்களாகவே எழுதினார். முரண்நகை, விடையளிக்கப்படாத கேள்விகள் ,மாறிவரும் கோணங்கள் நிறைந்த நாடகத்தன்மை கொண்ட உரையாடல்களை உருவாக்குவதன் மூலம், உயிருள்ள பேச்சைப் பிரதிபலிக்கும் ஒரு எழுத்து வடிவத்தை பிளேட்டோ உருவாக்க முயன்றார். இது வாசகர்களைத் தகவல்களை வெறுமனே உள்வாங்குபவர்களாக இல்லாமல், வாதங்களோடு நேரடியாக மோதிச் சிந்திப்பவர்களாக மாற்றியது.


1968-ஆம் ஆண்டு வெளியான தனது புகழ்பெற்ற "பிளேட்டோவின் மருந்தகம்" (Plato’s Pharmacy / La pharmacie de Platon — பின்னர் 1972-இல் அவரது Dissemination நூலில் தொகுக்கப்பட்டது) என்ற கட்டுரையில், பிரெஞ்சு தத்துவஞானி  தெரிதா (Jacques Derrida), மேற்கத்திய மெய்யியல் வரலாற்றை முழுமையாகக் கட்டுடைக்க  பிளேட்டோவின் ஃபியாட்ரஸ் நூலையும், குறிப்பாக ஃபார்மகான் (pharmakon) என்ற கிரேக்கச் சொல் குறிக்கும் மருந்து/விஷம் என்ற இரட்டைப் பொருளைப் பயன்படுத்துகிறார்.


தெரிதாவைப் பொறுத்தவரை, ஃபார்மகான் என்பது பிளேட்டோ பயன்படுத்திய வெறும் இரட்டைப் பொருள் கொண்ட ஒரு சொல் மட்டுமல்ல; அது எழுதப்பட்ட பிரதியை விடப் பேச்சு மொழியே உயர்ந்தது என நிறுவ முயலும் பிளேட்டோவின் வாதத்தை உள்ளிருந்தே தகர்க்கும் ஒரு தீர்மானிக்க முடியாத கருத்தாக்கம் ஆகும். 


பிளேட்டோவின் காலம் தொட்டு மேற்கத்திய தத்துவம் முழுவதுமே அறுதியான, நிலையான உண்மை அல்லது logos மீது கொண்ட நம்பிக்கையின்மீதும், எழுத்தை விடப் பேசப்படும் குரலே ஆன்மாவிற்கும் உண்மைக்கும் நெருக்கமானது என்ற நம்பிக்கையின் மீதும்  அடிப்படையில்  கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிதா வாதிடுகிறார்.



ஃபியாட்ரஸ் நூலில், அகத்தே நிகழும் உயிருள்ள பேச்சைச் சிதைக்கும் ஒரு புற ஒட்டுண்ணியாக எழுத்தைச் சித்தரிப்பதன் மூலம், இந்த இருமை எதிர்வுகளைத் தனித்தனியே பிரித்து வைக்க பிளேட்டோ முயல்கிறார். ஆனால், ஃபார்மகான் என்ற ஒற்றைச் சொல் பிளேட்டோவின் இந்த இருமைக் கட்டமைப்பை உள்ளிருந்தே எவ்வாறு தகர்க்கிறது என்பதை தெரிதா எடுத்துக்காட்டுகிறார்.


பண்டைய கிரேக்க மொழியில், ஃபார்மகான் என்ற சொல் ஒரே நேரத்தில் மருந்து, விஷம், செய்முறை, போதைப்பொருள், வசிய மருந்து. வண்ணச்சாயம்/ஒப்பனைப் பொருள் ஆகிய பல பொருள்களைத் தருகிறது.


தியுத், மன்னர் தமுஸிடம் எழுத்தை நினைவாற்றலுக்கான ஒரு ஃபார்மகான் என்று வழங்கும்போது, அதை "மருந்து" என்ற பொருளில் கூறுகிறார்; ஆனால் மன்னர் தமுஸ் அதை "விஷம்" என்ற பொருளில் அணுகிப் பதிலளிக்கிறார். மொழிபெயர்ப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான சிக்கலை தெரிதா இங்கு சுட்டிக்காட்டுகிறார்: பாரம்பரியமாக மொழிபெயர்ப்பாளர்கள் இடத்திற்கு ஏற்றவாறு இச்சொல்லை "மருந்து" அல்லது "விஷம்" என ஏதேனும் ஒரு பொருளில் மட்டுமே மொழிபெயர்த்து வந்துள்ளனர்.


அந்தச் சொல்லின் மீது ஏதேனும் ஒரு பொருளை மட்டுமே திணிப்பதன் மூலம், மொழிபெயர்ப்பாளர்கள் மூலக் கிரேக்கச் சொல்லில் உள்ள இயங்கியல் பதற்றத்தை  அழித்துவிடுகிறார்கள்;  பிளேட்டோ தனது இருமை எதிர்வுகளைச் சிக்கலின்றித் தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறார்கள். தெரிதாவைப் பொறுத்தவரை, ஃபார்மகான் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று —அது வெறுமனே இதுவோ அல்லது அதுவோ அல்ல; இரண்டின் இணக்கமான கலவையும் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும், அகத்திற்கும் புறத்திற்கும், மருந்திற்கும் நஞ்சிற்கும் இடையிலான பிரிவினைகள் உருவாவதற்கு முந்தைய நிலையற்ற ஊடகமே அது.


பண்டைய கிரேக்க மொழியில் ஃபார்மகான் என்ற சொல்லின் "சொற் குடும்பத்தை"  ஆராய்வதன் மூலம் தெரிதா ஒரு முக்கியமான பார்வையை முன்வைக்கிறார்


ஃபார்மகான் என்ற சொல்லிலிருந்து பெறப்படும்  ஃபார்மகியூஸ் என்ற கிரேக்க சொல்  மந்திரவாதி / சூனியக்காரர் / விஷம் வைப்பவர் என்ற பல அர்த்தங்களைக் கொண்டது.  பிளேட்டோ தனது பிற நூல்களில் சோஃபிஸ்டுகளை மட்டுமன்றி, தனது வார்த்தைகளால் கேட்பவர்களை மயக்கிச் செயலிழக்கச் செய்யும் சாக்ரட்டீஸையும் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறார். 


பண்டைய ஏதென்ஸ் நகரில், கொள்ளைநோய், பஞ்சம் அல்லது நெருக்கடி காலங்களில், சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள சில மனிதர்களை (pharmakoi) அரசாங்கச் செலவில் பராமரிப்பார்கள். பின்னர், நகரின் உள்பகுதியைத் (அகத்தை) தூய்மைப்படுத்துவதற்காக, சடங்கு ரீதியாக அவர்களைத் துன்புறுத்தி நகர மதில்களுக்கு வெளியே (புறத்தே) விரட்டியடிப்பார்கள்.


பிளேட்டோ தனது படைப்புகளில் ஃபார்மகான் மற்றும் ஃபார்மகியூஸ் ஆகிய சொற்களைப் பயன்படுத்திய போதிலும், ஃபார்மகோஸ் என்ற சொல்லை மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் தவிர்த்துள்ளார் என்பதை தெரிதா சுட்டிக்காட்டுகிறார். ஆயினும், அந்தச் சொல்லின் தர்க்கமே ஃபியாட்ரஸ் நூல் முழுவதையும் வழிநடத்துகிறது. பிளேட்டோ எழுத்தை தத்துவத்தின் பலிகடாவாக (pharmakos) நடத்துகிறார். பேச்சையும் அக நினைவாற்றலையும் தூய்மையானதாகவும் களங்கமற்றதாகவும் காட்டுவதற்காக, மொழியின் அனைத்து ஆபத்துகளையும் (தவறான புரிதல், திரிபுபடுத்தல், உயிரற்ற திரும்பக் கூறல்) எழுத்தின் மீது சுமத்தி, அதை உண்மையான தத்துவத்தின் மதில்களுக்கு வெளியே பிளேட்டோ விரட்டியடிக்கிறார்.


பிளேட்டோ தன்னை அறியாமலேயே எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதைக் காட்டுவதுதான் தெரிதாவின் வாசிப்பின்  உச்சக்கட்டமாகும். ஃபியாட்ரஸ் நூலின் பிற்பகுதியில், உயிருள்ள தத்துவப் பேச்சின் மிகத் தூய்மையான வடிவத்தை விவரிக்க விரும்பும் சாக்ரட்டீஸ், அதை எவ்வாறு வர்ணிக்கிறார்? அது "கற்பவரின் ஆன்மாவில் அறிவோடு எழுதப்படும்" ஒரு உரையாடல் என்கிறார்.


இந்த உருவகத்தை தெரிதா இறுகப் பற்றிக்கொள்கிறார்: பேச்சின் மிக உயர்ந்த வடிவத்தை விளக்குவதற்கு பிளேட்டோ ஏன் எழுத்து என்ற உருவகத்தைப் பயன்படுத்த வேண்டும்?


ஏனெனில், அக நினைவாற்றல் (mnēmē) செயல்படுவதற்கும் கூட குறியீடுகள், தடயங்கள் (traces), திரும்பச் செய்தல் (repetition), கட்டமைப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆன்மாவில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டுமானால், அது அங்கே "பொறிக்கப்பட" (inscribed) வேண்டும். எனவே, புற எழுத்தில் பிளேட்டோ எதைக் கண்டிக்கிறாரோ (அதாவது, உடனடி மூலத்திலிருந்து பிரிந்த, திரும்பப் பயன்படுத்தக்கூடிய குறியீடுகளைச் சார்ந்திருப்பது, அதுவே பேச்சு உட்பட அனைத்து மொழி மற்றும் சிந்தனையின் அடிப்படை நிபந்தனையாகும். இந்த அடிப்படைக் கட்டமைப்பை தெரிதா ஆதி-எழுத்து (arche-writing / archi-écriture) என்று அழைக்கிறார். பேச்சு என்பது எழுத்தின் தூய்மையான தந்தை அல்ல; மாறாக, பேச்சே ஏற்கனவே எழுத்தின் ஒரு வடிவமாகத்தான் இருக்கிறது.


பிளேட்டோவின் பிரதிக்குள் ஃபார்மகான் என்ற சொல்லின் தடத்தைப் பின்தொடர்வதன் மூலம், எந்தவொரு பிரதியும் தன்னைத்தானே கட்டவிழ்த்துக்கொள்ளும் விதைகளைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறது என்பதை தெரிதா நிரூபிக்கிறார். இது பிளேட்டோவின் கவனக்குறைவால் நிகழ்ந்ததல்ல; மாறாக, மொழி என்பதே இயல்பாகவே நிலையற்றதாகவும், பன்முகப் பொருள் கொண்டதாகவும் (polysemous), இறுக்கமான தத்துவ எல்லைகளுக்குள் பூட்டி வைக்க முடியாததாகவும் இருப்பதே இதற்குக் காரணமாகும். 

Wednesday, October 21, 2026

ஆன் கார்சனின் கவிதை நாவல் “சிவப்பின் சுயசரிதை”



ஆன் கார்சனின் “ சிவப்பின் சுயசரிதை” (Autobiography of Red) கவிதை நாவலை ரொம்ப நாட்களாக வைத்த கண் வாங்காமல் நொட்டை விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன். முழுக்க முழுக்க கவிதைகளால் எழுதப்பட்ட நாவல் என்பது எனக்கு மிகவும் வசீகரமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தின் காரணமாக நூலை வாங்காமல் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தேன். என்னுடைய ஒரு நண்பர் “சிவப்பின் சுயசரிதை” ஒன்றுமே புரியவில்லை என்று சொன்னதும் இன்னொரு நண்பர் மிகப் பிரமாதமான நூல் என்று இரண்டு வேறுபட்ட அபிப்ராயங்களைக் கேள்விப்பட்டதாலும் இருக்கலாம். நாவல்  ஒரு வழியாகக் கைக்கு வந்து சேர்ந்ததும் உடனடியாக வாசிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. போன மாதத்திலிருந்து காஃபி அருந்துவது போல மிடறு மிடறாக நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 


நாவல் புரிவதற்குச் சிரமமாக இருப்பதற்குக் காரணம் அது நாம் அதிகமும் அறிந்திராத கிரேக்கத் தொன்மம் ஒன்றைச் சமகாலக் கனவு போன்ற பின்னணிக்கு மாற்றி அமைப்பதுதான். ஸ்டெசிகோரஸ் (Stesichorus) எழுதிய பழங்காலக் கிரேக்கப் பாடல் கவிதையான 'ஜெரியோனிஸ்' (Geryoneis)-இன் எஞ்சிய பகுதிகளை கார்சனின் நாவல் மறு புனைவு செய்கிறது; இதில் சிவப்பு இறக்கைகள் கொண்ட அரக்கனான ஜெரியானின் (Geryon) கால்நடைகளை ஹெராக்லெஸ் (Heracles) என்ற வீரன் கவர்ந்து செல்வது விவரிக்கப்படுகிறது.நாவலின் மையத்தில் இருப்பது ஒரு பால் காதலுறவு. ஜெரியான் சிவப்புத் தோலும் இறக்கைகளும் கொண்ட, வெட்கமும் மென்மையான உணர்வுகளும் நிறைந்த ஒரு பதின்ம வயதுப் பையன். அவன் தனது மாறுபட்ட தன்மையுடன் போராடி, புகைப்படக் கலையில் தஞ்சம் புகுகிறான்;  ஐந்து வயதிலிருந்தே தன் வாழ்க்கையை ஒரு சுயசரிதையாகப் பதிவு செய்கிறான். ஜெரியான் ஹெராக்லெஸை ஆழமாகக் காதலிக்கிறான்; அவன் வசீகரமும் அலட்சியமும் கொண்ட ஒரு நாடோடி. அவன் இறுதியில் ஜெரியானைக் கைவிட்டுவிடுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெரியானும் ஹெராக்லெஸும் மீண்டும் சந்திக்கின்றனர். ஜெரியான் தனது சுய அடையாளத்தை இறுதியில் ஏற்றுக்கொள்கிறான்.


ஜெரியானின் சிவப்பு இறக்கைகளும் அவனது அரக்கத் தோற்றமும் அவனது ஓரினச்சேர்க்கை,  சமூகத் தனிமை ஆகியவற்றுக்கான உருவகங்களாக இருக்கலாம். புகைப்படக் கலை ஜெரியானுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகவும், உலகத்துடனான அவனது வலிமிகுந்த தொடர்புகளைக் கையாள்வதற்கான வழியாகவும் அமைகிறது. கார்சனின் நாவல் முழுவதும் எரிமலைகளும் உருமாற்றங்களும் உணர்ச்சி கொந்தளிப்புகளின் சமிக்ஞைகளாக மீண்டும் மீண்டும் வருகின்றன. 


நாவலில் ஆன் கார்சனின் கவிதைகள் எளிமையாக இருப்பது போன்ற தோற்றம் கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் வாசிக்கும்போது சில வரிகள் சட்டென்று உங்களை ஆக்கிரமிக்கலாம்.  ஜெரியானின் தனிமையை விவரிக்கும்போது கார்சன் “ அவன் தனிமையில் இருக்க விரும்பினான், தன்னுடைய பேயின் குளிர்ந்த வெறுமையையும், அதன் அழகையும் உணர” என்று ஓரிடத்தில் எழுதுகிறார். இன்னொரு இடத்தில் “நீ ஒரு மிருகம் இல்லையென்றால் வேறு யார் நீ” என்பதற்கு “நானொரு கோரப் பூதம்” என்கிறான் ஜெரியான். இவ்வாறாகவே சிவப்பை நேசிக்கும் பையானாகத் தனக்குள்ளாகவே ஜெரியான் சிறைப்பட்டுக்கொள்கிறான்.


கிரேக்கத் தொன்மத்தை கார்சன் சமகால நிகழ்வுகளாக மாற்றுவது நுட்பமானது. “ஹெராக்லெஸ் நடைமேடையில் நடந்து வந்துகொண்டிருந்தான், ஹேட்ஸ் ரயில் நிலையத்தில், 4.15 மணிக்குப் பிற்பகலில்,  வெள்ளிக்கிழமையொன்றில்” என்று கார்சன் எழுதும்போது காலத்தில் தொலைந்த தொன்மம் ஒன்றை அவர் எழுதவில்லை என்பது மட்டுமில்லாமல் தொன்மத்திற்கு என்று சமகால விழிப்பு ஒன்றும் இருக்கும் என்பதும் தெளிவாகிறது.


“தனக்கென்று ஓருலகம் இல்லாத நபர் ஒருவருமில்லை”, “சொற்கள் துள்ளிக் குதிப்பவை, அவற்றை நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய விட்டீர்களென்றால் அவை தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யும்” போன்ற வரிகள் மழைக்காலம் தரும் நம்பிக்கையை நமக்குத் தரக்கூடியவை.

கிரேக்கத் தொன்மத்தில் ஜெரியான் ஹெராக்லெஸினால் வெட்டப்பட்டு உயிர்துறப்பதற்காகவே காத்திருக்கிறான். கார்சனோ ஜெரியானுக்கு ஹெராக்லெஸின் வெட்டுக்கு அப்பாலான ஒரு ஜீவிதத்தைக் கொடுக்கிறார். ஜெரியானின் தனிமையும், சாபமும், விசித்திரமும், திக்கு தெரியாத அலைவுறுதலும் கார்சனின் கைகளில் ஒளிர்வின் கௌரவத்தையும் தன்னுணர்வையும் இறுதியில் அடைகின்றன. தொன்மத்தின் துயரார்ந்த கதாபாத்திரத்துக்கு ஒரு கவிதாயினி மட்டுமே அளிக்கக்கூடிய ஒளிர்வு அது. மழைக்கால வாசிப்பில் அப்படியொரு ஒளிக்கீற்று நம்மைத் தீண்டுவது நமக்கொரு கதகதப்பை நல்கக்கூடும். 

 

Monday, October 12, 2026

வீடு திரும்புதல் :கூத்தனூர் பயணம்





தொலைந்து போனபின் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.

—

திருவாரூருக்கு அருகில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கு ஒரு முறை சென்றேன். சிறு குழந்தையாக இருந்தபோது அம்மா சரஸ்வதி படத்தின் முன் என்னை உட்கார்த்தி வைத்து ‘வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய்’ என்று மனனம் செய்யவைத்து தினசரி வழிபாட்டின் பகுதியாக மாற்றியதிலிருந்து சரஸ்வதியின் உருவம் மனதில் ஆழமாய் படிந்து விட்டது. ரவிவர்மா வரைந்த நாட்காட்டி சரஸ்வதியின் உருவமே அது. எப்போது சமஸ்கிருத சரஸ்வதி மந்திரம் ‘சரஸ்வதி நமோஸ்துப்யம் வரதே காமரூபினி, வித்யாரம்பம் கரிஷ்யாமி, சித்திர் பவதுமே சதா’ தினசரி வழிபாட்டின் பகுதியாயிற்று என்று நினைவில்லை ஆனால் சரஸ்வதி காமரூபினி என்ற எண்ணம் ஏற்படுத்தும் உவகையும் கிளர்ச்சியும் ஆச்சரியமானவை; ரவிவர்மாவின் ஓவிய சரஸ்வதியை காமரூபினி என்று எந்தவகையிலும் சொல்ல இயலாது. 

பாறையொன்றின் மேல் நான்கு கைகளோடு இரு கைகளில் வீணையையும், ஒரு கையில் தியான மாலையையும், மறு கையில் ஓலைச் சுவடிகளையும் வைத்திருக்கும் ரவிவர்மாவின் சரஸ்வதி ஒரு அம்மாமியின் முகத்தோற்றமும் சாந்தமும் உடையவள். மனதிற்குள் சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கும் வெளியில் இருக்கும் உருவப்படத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடு மனதினை ஒரு முகப்படுத்த விடுவதில்லை. வருடா வருடம் சரஸ்வதி பூஜையின்போது வசீகர சரஸ்வதி உருவமொன்றை கற்பிதம் செய்வது வழக்கமாக மாறிவிட்டது. பார்ப்பது ஒன்று அதன் மேல் நாம் கொள்ளும் கற்பிதம் வேறொன்று என்ற அ-யதார்த்த கலை சித்தாந்தம் எனக்கு உவப்பானதாக உறுதிபெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். சரஸ்வதியை காமரூபினி என்பது ஒரு அக ஊற்றினை, கண்ணுக்குப் புலப்படாத நதியினை, ஒரு பிரவாகத்தினை, ஒரு உயிரெழுச்சியை, உயிர் திளைத்தலை குறிப்பதாகும் என்று பதினைந்து பதினாறு வயதில் எனக்கு வசமாயிற்று. கம்பனின் சரஸ்வதி அந்தாதி காப்பில் வரும் “படிக நிறமும் பவளச் செவ்வாயும், கடி கமழ்பூந்தாமரை போற் கையுந்-துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி” என்ற துதி அக ஊற்றின் அழகிய உருவம் என்பதாக எனக்கொரு எண்ணம் உண்டு. “சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை’ என்ற குமரகுருபரின் வரிக்கு கம்பனே சரியான உருவமளிக்கிறார் என்றால் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரே சரஸ்வதி உருவத்திற்கு “மந்திரத்தை முணுமுணுத்தேட்டை, வரிசையாக அடுக்கி, அதன் மேல் சந்தனத்தை, மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனையன்றாம்! வீடு தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள், நகர்கள் எங்கும் பல பள்ளி” என்று அதற்குச் செயல் வடிவம் கொடுக்கின்றார். 

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் என்றொரு கிராமம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து கிளை பிரிகின்ற சாலையில் ஆரெழு கிலோமீட்டர் தூரத்தில் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயம் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் பயணம் செய்வது என்பது ஒரு சுகானுபவம். சுத்தமான கிராமங்கள். பச்சைப் பசேல் என்று வயல்வெளிகள். சிற்றோடைகள், கால்வாய்கள் என்று நீர் சலசலத்து ஓடும் காட்சிகளும் சப்தங்களும் நம் கூடவே வருகின்றன. காற்றில் சுகம் தரும் ஈரப்பதம் நிரம்பியிருக்கிறது. மூலவர் சரஸ்வதி வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். இடது கைகளில் அமிர்த கலசமும் புத்தகமும், வலது கைகளில் அட்சர மாலையும் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறாள். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாசரஸ்வதிக்கு மூன்று கண்கள். இரண்டாம் ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தருக்கு   பரிசாக வழங்கிய கிராமத்தில் ஒட்டக்கூத்தரின் பேரனான ஓவாதகூத்தர் மகாசரஸ்வதி ஆலயத்தை கி.பி.1185 ஆம் ஆண்டில் கட்டினார் என்பது வரலாறு.

ஒட்டக்கூத்தர் பேரன் கட்டிய ஆலயத்தில் ஒட்டக்கூத்தரின் இலக்கிய எதிரியான கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியால் துதிக்கலாமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. ‘விநோதரசமஞ்சரியில்’ ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் நடந்த சோழ அரசவை அரசியல் சண்டைகள் யார் கவிச்சக்கவர்த்தி என்ற போட்டி எல்லாம் கதைகளாக்கப்பட்டிருக்கின்றன. கம்பருடன் ஒப்பிடுகையில் ஓட்டக்கூத்தரின்  படைப்புகள் உப்புப் பெறாது. அவருடைய ‘மூவருலா’ மூன்று சோழ அரசர்களின் புகழ் பாடுவது; வராலாற்றுச் செய்திகளை அறியலாம். மற்றபடிக்கு பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. ‘தக்கையாகப் பரணியி’ல் விநாயகர் துதிக்கு பதிலாக வரும் பைரவர் துதி அபூர்வமானது. ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ அரும்பாக்கம்  மணவிற்கூத்தன் என்ற விக்கிரமச் சோழனின் படைத்தலைவனின் புகழ் பாடுவது. ‘எழுப்பெழுபது’, ‘ஈட்டியெழுபது’ ஆகியன செங்குந்தர் வரலாறுகளைப் பாடுகின்றன. ‘எழுப்பெழுபதில்’ பன்னிரெண்டு பாடல்களே கிடைதுள்ளன. செங்குந்தர் வரலாறுகளை முதலில் ஒட்டக்கூத்தர் பாட மறுத்ததாகவும் செங்குந்தர் தங்கள் தலைகளை அறுத்துப் போட்டதால் ஒட்டக்கூத்தர் பாடல்கள் பாடி அவர்களை உயிர் மீட்டு எழுப்பியதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. ‘ஈட்டியெழுபதினை’த் தொடர்ந்து ‘களிப்பொருபது’, ‘செங்குந்தர் பிரபந்தத் திரட்டு’, ‘செங்குந்தர் துகில் விடு தூது’ ஆகிய பிற்கால நூல்கள் செங்குந்த மரபினைச் சொல்லும்போதே அந்தக்கால யாழ்ப்பாண- தமிழ்நாடு தமிழ் உறவுகளையும் சேர்த்துச் சொல்கின்றன. மந்திரசக்தியும், அரசவை கௌரவங்களையும் பெற்றிருந்த ஒட்டக்கூத்தர் தன் காலம் விஞ்சி நிற்காமல் போனது இலக்கியத்திற்கும் காலத்திற்கும் உள்ள விசித்திர உறவினை விளக்குகிறதென்றால்   பத்து நூற்றாண்டுகளுக்கு மேல்  ஆகிவிட்ட இலக்கியச் சண்டையில் விளைந்த  பலன் என்னவென்றால் கம்பரினால் ஓட்டக்கூத்தரின் பெயரும் விளங்குவதுதான். சரஸ்வதி என்ற பிரவாகம் கால ஓட்டத்தில் எவ்வெவெற்றை யார் யாரை எப்படியெல்லாம் இணைக்கும் என்று யாரே முன்கூட்டிச் சொல்ல முடியும்?

கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம் சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது. சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது, கல்விக்கரசியான தன்னாலேயே  சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்திய லோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துவிட்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்தபோது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு," என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.

பிறவாமையே முக்தி என்ற மதிப்பீடு இருக்கின்ற சமூகத்தில் பிறப்பு சாபமாக அறியப்படுவதாக புராணக்கதை சொல்லப்படுவதில் வியப்பேதுமில்லை. ஆனால் சாப விமோசனத்திற்கே சாத்தியமில்லாமல் போய் பிரம்மனும் சரஸ்வதியும் இணையவே முடியாமல் போவது அபூர்வமான கதையாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தல புராணமும் இறைவனும் இறைவியும் திருமணத்தால் இணையமுடியாமல் போக கன்னி பகவதியாகவே அருள் பாலிப்பது குமரி தெய்மாகும்; ஆனால் அங்கே இறைவனும் இறைவியும் சகோதர சகோதரியாய் பிறந்ததாகக் கதை இல்லை. கன்னியாகுமரி தல புராணத்தைப் போன்ற தடைப்பட்ட திருமணமாக இருந்தாலோ அல்லது திருமணமே நடக்க இயலாத உறவு இருந்தாலோ கன்னியாக அம்மன் அருள் பாலிப்பது புராணமாக்கப்பட்டு கன்னி சக்திகள் அபூர்வ கிரியா சக்தி கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. கூடுதலின் சாத்தியமே அற்ற கன்னிதான் காமரூபினி என வருணிக்கப்படுகிறாளோ? கூத்தனூர் சரஸ்வதி படைப்பின் எல்லையற்ற அறிவை இணைய இயலாதவளாக, ஆனால் அதற்கான கிரியையை சதா தூண்டிவிடக்கூடியவளாக  இருப்பவளை அருள்பாலிப்பவள் என்றில்லாமல் வேறு எப்படி விவரிப்பது?  அந்த சக்தியை எப்போதும் உள்ளூரக் கனன்றுகொண்டிருக்க வைப்பது எப்படி?

படைப்பூக்கத்தின், அறிவின்,  மரபான உள்க்கட்டமைப்பு என்ன என்பதினை அறிவதில்தான் ஊர் திரும்புதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். வாக்கின் தேவி, சாரதா, கலைமகள், கலைவாணி என்ற பெயர்களெல்லாம் ரவி வர்மா ஓவியத்தில் தேவி அணிந்திருக்கும்  வெண் பட்டினை ஸ்பரிசிப்பது போன்ற உணர்வுகளை உருவாக்க கூத்தனூர் கோவில் வாசல் கடைகளிலோ புட்டா போட்ட வெள்ளை சுங்கடிச் சேலைகளைப் பார்த்தேன், பிரார்த்தனைக்காக அந்தச் சேலைகளை வாங்கி சாத்துகிறார்கள். தளையும் வெண்பட்டின் மென் புலன் வருடல் சட்டென்று நீங்கி சுங்கடிச் சேலையின் கஞ்சி மொடமொடப்பின் தீண்டலில் புலன் நவீனமாகியது. கோவில் வாசல் கடைத்தெரு முழுக்க நோட்டுப்புத்தகங்களையும் பேனாக்களையும் பென்சில்களையும் விற்கும் கடைகள் நிறைத்திருக்கின்றன. தகடுகளில் வரையப்பட்ட சரஸ்வதி எந்திரங்களும் விற்கப்படுகின்றன. 

கடைகளிலிருந்து கோவிலுக்குள் செல்வதும்  மீண்டும் கடைகளைப் பார்வையிடுவதுமாய் பல தடவைகள் சென்று வந்துகொண்டிருந்தேன். கூத்தனூர் மகாசரஸ்வதி கோவிலை விட்டு கிளம்ப மனம் வரவில்லை.

சரஸ்வதிக்கு என ஒரு துதி எழுதினேன்:

சரஸ்வதி வந்தனம்

---

நீர்க்கர்ப்பத்தின் 

சுழுமுனை 

இமை திறக்க

செவி குளிர 

முதுமொழிக்காவிய தெளி பாடல் 

வீணையின் மீட்டலுடன்

நாளொன்று எழ

முக்குணக் கடல் தாண்டி 

முகிழ்க்கும் கமலப்பூ

உன் கால் விரல் தீண்டலால்

வெண்மைப் பேரொளி பரப்ப

புவியும் நீ

மறிபுனலும் நீ

கனலும் நீ

வளியும் நீ

வெளியும் நீ

மனமும் நீ

நீ நீயென 

தானழிப்பாய் மாதோ

யாதோ உன் 

நித்திய கிருபையென

உன் பிணை விழியால்

கலை பல அமுதத்தாரையாய்

அகிலம் நிறைக்க

மங்கல போகம் நகை வீச

பிரவாகம்

இடுகாடு தாண்டியோட

மேனி முயங்கு தொறும்

தடுத்தாட்கொள்வாய்

என்

சாரதே

----

ஓவியம்: Sunayani Devi, Saraswati, c 1920, Tempera on paper