Thursday, October 20, 2011

ஜெயமோகனின் எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும் கட்டுரைக்கு எதிர்வினை பகுதி 1


கீழே // அடைப்புக்குள் கொடுக்கப்பட்டவை ஜெயமோகன் மேற்சொன்ன கட்டுரையில் எழுதியிருக்கும் வரிகள். அதன் கீழே // அடைப்புக்குறிகளில்லாமல் கொடுக்கப்பட்டிருப்பவை என் பதில்கள்
1.//பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் பாரதி மகாகவியே என எம்.டி.முத்துக்குமாரசாமி அறிவித்திருப்பது பற்றி என்னுடைய எதிர்வினை.//
எதிர் கலாச்சார, எதிர் அற அடிப்படையில் என்று நான் எங்கே சொன்னேன்? எதிர் அற என்ற ஜெயமோகன் உருவாக்கியுள்ள பிரயோகத்தை இப்போதுதான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். எதிர் அறம் என்றால் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி விவாதத்தை ஆரம்பிப்பது, தவறாகப் புரிந்து கொள்வது, என்ன போர்த்தந்திரம் என்றாலும் சரி சகோதரக்கொலை என்றாலும் சரி பயன்படுத்தி வெற்றி பெறுவதே இலக்கு, மோதி உடைத்தே தீருவது- என்றெல்லாம் பொருள்கொள்ளலாமா?
2.//இல்லை, அவர் ஒரு தரவேற்றுமை காண்கிறார், அதற்கான அளவுகோலை வைத்திருக்கிறார், அதனடிப்படையில்தான் பாரதியை மகாகவி என்கிறார் என்றால் அந்த உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என்று தயவுசெய்து சொல்லக்கூடாது.பாரதியை மகாகவி அல்ல என்று சொல்பவரும் அதேபோல தரவேற்றுமை காணலாம் , அதற்கான அளவுகோலை கொண்டிருக்கலாம், அது அவரது வன்முறை போக்கு அல்ல அவரும் நல்லவர்தான் என்று அவர் தயவுசெய்து ஒத்துக்கொள்ளவேண்டும்.//
தரவேற்றுமை என்ற அளவுகோல்களை உருவாக்கி அதன் அடிப்படையில் விமர்சிக்கின்ற முறைமை இல்லை நான் சார்ந்திருக்கும், பயன்படுத்தும் விமர்சன முறைமை. சமூக ஏற்ற தாழ்வுகளை அப்படியே நிலை நிறுத்துவதற்கான விமர்சன முறையான ரசனை விமர்சன முறைக்கே தரவேற்றுமை அளவுகோல்கள் தேவை. தரவேற்றுமைப்படுத்தாமலும், படிவரிசைப்படுத்தி இன்னாருக்கு இன்ன இடம் என்று இருக்கை ஒதுக்காமலும் இலக்கியத்தை விமர்சிக்கலாம். அதனால்தான் சொன்னேன் நான் சார்ந்திருப்பது மாற்று விமர்சன முறை. இது செயல்படும் முறைமையே பின் நவீனத்துவ பின் காலனீய முறைமை என்ற பெயர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. பின் நவீன விமர்சகன் சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளாத அடிப்படையிருந்தே தன் விமர்சனத்தைத் துவங்குகிறான். ரசனை விமர்சனமோ தன் சமகால சமூக ஏற்றதாழ்வினை நிலை நிறுத்துகிற கட்டிக்காக்கிற அறுதியிடுகிற விமர்சன முறைமை. இது பற்றி நான் ஏற்கனவே எழுதியதை மீண்டும் கீழே தருகிறேன்.
ரசனை விமர்சனம் பண்டு தொட்டு இருந்து வருவதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது சமூக ஏற்ற தாழ்வினை நிலை நிறுத்துகிற அழகியல் கோட்பாடாகவே இருந்து வருகிறது. நவரசங்களை வரைமுறைப்படுத்தி பகுக்கும் நாட்டிய சாஸ்திரமும் எண்சுவையை (எட்டு மெய்ப்பாடுகள்) வரைமுறைப்படுத்தி பகுக்கும் தொல்காப்பியமும் எந்தெந்த ரசனை எந்தெந்த சுவை எந்தெந்த வகுப்பு மக்களுக்கு உரித்தானது என்றும் கூறி சமூக ஏற்றதாழ்வினை அழகியலாக அறுதி செய்கிறது. நாட்டிய சாஸ்திரம் உதாரணமாக சாந்தம் என்ற ரசமே நவரசங்களில் மிகவும் உயர்ந்தது உயர் சாதியினருக்கு உரியது சிருங்காரம், ஹாஸ்யம் கீழ் சாதியினருக்கு உரியது என்கிறது. சாந்தம் தவிர்த்த எண்சுவையை விவரிக்கும் தொல்காப்பியமும் இவ்வாறாகவே சுவைகளை தன் சமூக  ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப படிவரிசைப்படுத்துகிறது. நம் சமகாலத்தில் ஏற்ற தாழ்வுகளை அறுதி செய்யும் அழகியலான ரசனை விமர்சனம் சந்தைப்பொருளாதாரத்தின் ஏற்றதாழ்வுகளையும் மதிப்பீடுகளையும் அழகியலாக்கும் முறைமை என்கிறேன். 
இரண்டும் வெவ்வேறு முறைமைகள் ஒன்றின் செயல்முறையை மற்றதில் எதிர்பார்க்கவோ, கலந்துகட்டி அடித்துவிடவோ முடியாது.
3. //ரசனை விமர்சனம் எப்போதுமே முதற்பேரிலக்கிய மரபு [canon] ஒன்றை நிறுவிக்கொண்டுதான் பேசும். அதுவே அதன் வழிமுறை. அந்த முதற்பேரிலக்கிய மரபிலிருந்துதான் அது தன் அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளும். ஒப்பிடுவதன் மூலமே அது தன் தரமதிப்பீடுகளை உருவாக்கும்//
சரி. ரசனை விமர்சனம் செயல்படும் முறை அதுதான். ஆனால் canonization தனிப்பட்ட விமர்சகனால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. ரசனை விமர்சகன் செயல்படும் காலகட்டத்திலுள்ள ஆதிக்க நிறுவனங்கள், அரசு, மத நிறுவனங்கள், சமூக ஏற்றதாழ்வுகள், சமூக அமைப்பினை புனிதமாக மாற்றி காப்பாற்றுகின்ற கருத்தியல் எந்திரங்கள்,போட்டி அமைப்புக்கள் எல்லாம் இணைந்தே பேரிலக்கியம் என்று ஒரு சிலவற்றை உச்சத்தில் வைக்கின்றன. ஜெயமோகன் பாரதிக்கு மகாகவி அந்தஸ்தை தர மறுத்து முன் வைக்கும் ரசனை விமர்சனமும் அவர் முன்னிறுத்துகிற அளவுகோல்களும் எந்த கருத்தியல் எந்திரங்களின் ( ideological apparatus) வழி கட்டமைக்கப்படுகின்றன என்று வாசகர்கள் பார்க்கவேண்டும்.
பதில்கள் தொடரும்.
பின்குறிப்பு: எதற்காக என் புகைப்படத்தையும் நான் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது அவர்கள் பிரசுரித்த என் biodata இணைப்பையும் ஜெயமோகன் தன் கட்டுரையில் கொடுத்திருக்கிறார்? ஒருவர் தான் வேலை பார்க்கும், வேலை பார்த்த நிறுவனங்கள், பிறந்த சாதி இவற்றைத் தாண்டி எந்தக் கருத்தும் சொல்லமுடியாது என்று சுட்டுவதற்கா? இந்த விஷயத்திற்குத்தானே மன்னிப்பு கேட்டீர்கள்? இப்பொது அதை புது வடிவத்தில் தருகிறீர்களாக்கும்? அப்படியென்றால் மன்னிப்பு கோரியது பொய்யா? சரி போகட்டும் இதன் பெயர் முத்திரைகுத்துதல் என்று சொல்லலாமா? ஆனால் நீங்கள் தந்த இணைப்பில் பல தகவல் பிழைகள் இருக்கின்றனவே, நாம் உரையாடலில்தானே இருக்கிறோம்? என்னிடம் கேட்டிருக்கலாமே

7 comments:

Anonymous said...

பார்க்க:
http://www.facebook.com/notes/vasu-devan/எப்போதும்-தன்-முகம்-பார்த்து-எழுதும்-எழுத்தாளருக்கு-2இன்றைய-கட்டுரையை-முன்வைத்து/2293992682585

Anonymous said...

தர வரிசையை சமூக ஏற்றத்தாழுகளால் உருவாக்கினர் என்பதால் தான் பல இலக்கியங்களை இன்று மறுபார்வை செய்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப ரசனை விமர்சனை மாறும் என நீங்கள் ஒத்துக்கொள்ளும்போது இக்காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வில்லாத சமூக மதிப்பீடை வைத்து தரவரிசை மீண்டும் செய்தால் என்ன?

பிந்னவீனத்துவம் எந்த அரசியலுக்கும் உட்பட்டதில்லை, மிக நடுனிலையாஆஆன கருதுகோள் என்பது எப்படி உறுதி செய்கிறீர்கள்? விளிம்பு நிலை நகர்ந்த படி இருக்கும், புது விளிம்புகளும்,புது மையங்களும் உருவாகியபடிதான் இருக்கும்?

ரவி.

vasu said...

Dear MDM,

Surprised to see someone in “ Anonymous” name has recommended my facebook page. This has happened in your earlier post also. Some of our friends spoke to me and brought to my notice this morning. This is to clarify that I always post my comments in my name only. Due to lack of space in blog comments section, I have written as separate note in my FB Page. Above recommendations and in your earlier post also not done by me. Thanks. vasudevan

Anonymous said...

voodra voodra mamu

Anonymous said...

எம்டிஎம் அவர்களே,
நவீன தமிழிலக்கியத்தின் இரு கண்களாக ஜெயமோகன் அவர்களும் சாருநிவேதிதா அவர்களும் விளங்குகிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. இவ்வளவு தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிக்கவும் ஒரு தகுதி வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
சி.கணேசன்

Anonymous said...

எம்டிஎம் அவர்களே,
நவீன தமிழிலக்கியத்தின் இரு கண்களாக ஜெயமோகன் அவர்களும் சாருநிவேதிதா அவர்களும் விளங்குகிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. இவ்வளவு தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிக்கவும் ஒரு தகுதி வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
சி.கணேசன்


வெளங்கிரும்...

எம்டிம் நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் மெனக்கெட்டு என்னை கட்டுடைத்து இந்தமாதிரி வரிகளில் இருந்து காப்பாற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உடைத்தபின் திரும்ப சேர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை

ஜெயமோகன்

Anonymous said...

அப்ப இது:

http://www.jeyamohan.in/?p=21743

அறிவாளி ஜெமோ

பாரதியும் சிவாஜியும் தமிழ்ப்பண்பாட்டின் இரண்டு கண்கள். அவர்களைப்பற்றிக் கருத்துச்சொல்ல எவருக்குமே தகுதி கிடையாது. இதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். பாரதியின் கவிதைகள் நெருப்பு. நெருங்கினவனை அவை பொசுக்கிவிடும். ஆகவே உங்கள் பிதற்றல்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளவும்

நடராஜன்