Sunday, October 9, 2011

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் Photo From http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_11.html

எம்.எஸ்.ராமசாமி பாரதியாரின் ‘காற்றே வா’ கவிதையை ஆங்கிலத்தில் wind come என்று ஆரம்பித்து மொழிபெயர்த்திருந்ததை சிறுபிள்ளைத்தனமாக திட்டி ஒரு முறை எழுதியிருந்தேன். இதைப் படித்த திலீப்குமார் நேர்ப்பேச்சில் பின் எப்படித்தான் இந்த வரியை மொழிபெயர்ப்பதாம் என்று கேட்டார். O wind come என்று மொழிபெயர்த்துவிட்டால் ‘காற்றே வா’ என்ற வரியின் கவித்துவம் ஆங்கிலத்திற்கு பெயர்ந்துவிடுமா என்ன என்றும் கேட்டார். பாரதிக்கு என்று மட்டுமில்லாமல் நவீன தமிழ் எழுத்து என்று நாம் கொண்டாடும் பல கவிதைகளுக்கும் உரைநடைக்கும் கூட இந்த ஆங்கிலத்திலோ இதர இந்திய மொழிகளிலோ மொழிபெயர்க்கமுடியாத தன்மை இருக்கிறது. லஷ்மி ஹோல்ம்ஸ்றாமின் ந.முத்துசாமி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பிலுள்ள ‘செம்பனார் கோவிலுக்குப் போவதெப்படி?’ என்ற கதையில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்டார் என் மலையாள நண்பர். நிலப்பிரபுத்துவ மனோநிலை இயக்கமற்று தேங்கிப்போவதை வண்டி வண்டியாய் எழுதி மலையாள நாவல்கள் சாதிப்பதை ஒரு சிறுகதையில் சாதிக்கிறார் முத்துசாமி என்றேன்; அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படம் தருகின்ற அனுபவத்தைத் தருகின்ற சிறுகதை அது என்றும் வாதிட்டேன். என்னால் அந்த மலையாள நண்பரை புரிந்துகொள்ளவைக்க முடியவேயில்லை.

இந்த மொழிபெயர்க்க முடியா தன்மை தமிழின் உள் கலாச்சார முகம் நோக்கித் திரும்பி தமிழ் நுண்ணுர்வுகளோடும் தமிழ் பண்பாட்டுக் குழுஉ குறிகளோடும் செறிவாகிவிட்ட தமிழ் நவீனத்துவத்தின் பண்பாகும். இந்த தமிழ் நவீனத்துவ பண்பை தமிழ்க்கவிதைக்கு தீர்மானமாக தீர்க்கமாக உருவாக்கிக்கொடுத்தவர் சுப்பிரமணியபாரதியார் ஆவார். அதனாலேயேதான் அவரை நாம் மகாகவி என்கிறோம்.

இந்த தமிழ் நவீனத்துவ பண்புகள் பாரதியின் கவிதைகளில் என்னென்னவாக இருக்கின்றன என்று சற்றே பார்ப்போம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட ‘காற்றே வா’ வரியில் எது மொழிபெயர்க்கமுடியாமல் போகிறது என்றால் அதன் நிகழ்த்து தன்மை (Performative quality). காற்றை தூலமான பொருளாக, ஆளாக உருவகித்து விளிக்கும்போதே அந்த வரி ஒரு நிகழ்த்துதன்மையை இரண்டே வார்த்தைகளில் அடைந்துவிடுகிறது. சங்க அக இலக்கியங்களிலிருந்து கவிதைக்கு ஒரு நிகழ்த்துதன்மையைத் தருகிற மரபின் நவீன நீட்சி இது. ‘மழை’, ‘அக்னிக்குஞ்சு’ ஆகிய குறுங்கவிதைகளிலும் ‘வள்ளிப்பாட்டிலும்’ இந்த நிகழ்த்துதல் அக நாடகீயமாய் உச்சம் பெறுவதைக்காணலாம். இந்தத் தன்மை ஏன் நம்மாழ்வாரில் இல்லையா, பெரியாழ்வாரிடம் இல்லையா, ஆண்டாளிடம் இல்லையா ஏன் மாணிக்கவாசகரிடமும் திருநாவுக்கரசரிடமும் இல்லையா என்று ஒருவர் வினவலாம்தான். பாரதியிடம்தான் இந்த நிகழ்த்துதன்மை கண்ணன் பாட்டு போன்ற பக்தி மரபு பாடல்களோடு நின்றுவிடாமல் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே’, போன்ற பாடல்களுக்கும் நீள்கின்றன. பக்தி மரபுக் கவிஞர்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களின் நிகழ்த்துத்தன்மையினை புறத்திலுள்ள பரம்பொருள் நோக்கிப் பேசும் கவித்துவ குரலின் நிகழ்த்துத்தன்மையாக மாற்றினார்கள் என்றால் பாரதி மீண்டும் அதை அகம் நோக்கிப் பேசுகின்ற நிகழ்த்துதன்மையுடைய நவீன குரலாக மீட்டெடுக்கிறார்.

எளிய ஒப்பீடு ஒன்றினை பாருங்கள். அபிராமி பட்டரின் ‘தனம் தரும் கல்வி தரும் தளர்வறியா மனம் தரும்’ அந்தாதியும் பாரதியின் ‘மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்’ கவிதையும் பிரார்த்தனை வடிவங்கள்தான். ஆனால் பாரதியிடத்து அது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் குரலாக மாறுகிறது. வாசகனுக்கோ அது தன் சுய குரல் போலவே ஒலிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்ற மகத்தான தருணமது. இந்த கவித்துவ குரல் பாரதியிடத்து நாம், நீ, வாடா போடா என்ற உரையாடல் பாங்குகள் பெற்ற சுதந்திரப் போராட்ட விடுதலைக் கவிதைகளாக நீட்சி பெறும்போது அவை அவற்றின் சரித்திர சூழலினால் மக்கள் திரட்சிப் பாடல்களாகின்றன. பாரதியின் கவிதைகளில் இதனால் உச்ச உணர்ச்சிகளின் உன்மத்தம் எளிய வரிகளில் எளிதில் தொடப்படுகிறது.

பாரதிக்கும் தாகூருக்கும் இந்திய சுதந்திரப்போராட்டம் நவீன இந்தியாவின் அகக்கவித்துவக் குரலையும் எனவே அதன் சுயத்தையும் கட்டமைக்கின்ற வாய்ப்புகளை சமமான அளவிலே தந்திருந்தபோதும் பாரதி அளவுக்கு தாகூரால் தன் மொழி சார்ந்த நாட்டுபுறப் பாடல்களை நவீன கவிதைகளுக்குள் இணைக்கமுடியவில்லை. தனித்துவ பண்பாட்டின் வரலாற்றிலேயே உலகளாவிய மனிதனுக்கான விழுமியங்களை காணவேண்டும் என்று தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தாலும் கூட. தமிழ் பக்தி மரபின் கவிஞர்கள் பாரதிக்கு கொடுத்த சௌகரியம் தாகூருக்கு இருந்திருக்கவில்லை. இதனாலேயே தாகூரின் கவிதைகளுக்கு உலகளாவிய வாசிப்புத்தன்மை அதிகமானபோது பாரதியின் நவீனத்துவம் தமிழ் நவீனத்துவமாய் தனித்துவம் பெற்றது. ஆழ்வார் பாசுரங்களில் எடுத்தாளப்பட்ட அம்மானை, தாலாட்டு, ஊஞ்சல்பாட்டு ஆகிய தமிழ் நாட்டுப்புற பாடல் வகைமைகள் நிஜ மனிதர்களுக்கு பதிலாய் கடவுளை தங்கள் பாடல்பொருட்களாய் மாற்றுவதில் மட்டுமே வெற்றி பெறுகின்றன. பாரதியிடமோ சொல்லப்பட்ட நாட்டுப்புற வகைமைகள் தவிர சித்தர் பாடல்கள், சிந்து, வாய்மொழி காப்பியம் (பாஞ்சாலி சபதத்தை தமிழ் மகாபாரத வாய்மொழிக்காப்பிய மரபின் நீட்சியாகவே வாசிக்க வேண்டும்; இது பற்றி பின்னொரு சமயத்தில்) ஆகிய வடிவங்களும் நவீன வடிவம் பெறுகின்றன. இது எப்படியென்றால் அருணாச்சல கவிராயரின் காவடிச்சிந்தினை காவடி எடுத்துச்செல்லும்போது வழி நடைப்பதமாகவேதான் பாடமுடியும் இதர சூழல்களில் பாடுவதென்பது தாலாட்டினை குழந்தையோ தொட்டிலோ இல்லாத இடத்தில் பாடுவது போலாகும். பாரதியே இந்த சூழல்சார் நாட்டுப்புற வகைமைகளை (contex bound forms) சூழல் மீறிய நவீன கவிதை வடிவங்களாக்குகிறார் (context free modern forms). இது எளிதான சாதனை அல்ல. உலகம் முழுவதும் தங்கள் மொழிகளில் இவ்வாறாக நாட்டுப்புற இலக்கிய கலை வகைமைகளை நவீனப்படுத்துபவர்களோ அல்லது நவீன வடிவங்களுக்குள் உள்வாங்கும் இலக்கியகர்த்தாக்களோ சாதனையாளர்கள் என்றே கொண்டாடப்படுகிறார்கள். ரெபெலெய்சின் நாவல்களின் இலக்கிய சாதனையாக மிகைல் பக்தின் குறிப்பிடுவதும் இதைத்தான்.

பல சூழல் பொருத்தப்பாடுள்ள தமிழ் கவித்துவ அகத்தின் குரலாக பாரதியின் கவிதைகள் இருப்பதாலேயேதான் அவை என்றென்றைக்குமான தமிழரனைவருக்குமான கவிதைகளாகின்றன. தமிழ் மரபுகளின் பல நீட்சிகள் பாரதியில் சங்கமிப்பதால் அவற்றின் நுண்ணுணர்வுகள் தமிழ் நாளங்களையே மீட்டுவதால் ‘தமிழரனைவருக்குமான’ என்று சொல்ல நேரிட்டது; இல்லையென்றால் உலகத்தினரெல்லோருக்கும் என்று மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கலாம்.

இது தவிர, வித விதமான இசையமைப்புகளில் பாரதியின் கவிதைகள் வேறுபட்ட அனுபவங்களைத் தருவதை நாம் உணர்ந்திருக்கிறோம். பாடல்கள் முதிர்ந்து கவிதைகளாகிவிட்டதை அடையாளம் காட்டும் எளிய சமிக்ஞைகள் அவை.  எல்.வைத்தியநாதனின் இசையமைப்பில் வந்த பாரதி கவிதைகள் என்னுடைய தனிப்பட்ட விருப்ப  தேர்வுகள். ஆயிரம் பாடலாசிரியர்கள் வந்தாலும் பாரதியின் இந்த சாதனையையும் யாரும் எட்ட முடியுமா என்று தெரியவில்லை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழின் அளப்பிற்கரிய செல்வம்; அவரை மகாகவி என்றழைப்பது தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் நவீனத்துவ வாசலை திறப்பதற்கு நம்மளவிலான சிறு முயற்சியே ஆகும்.

வங்காளத்தில் எந்த ஒரு வாசகனும் தாகூர் மகாகவி என்று நிரூபிப்பதற்கான காரணங்களை அடுக்க நிர்ப்பந்திக்கப்படமாட்டான்.

தமிழர்களுக்கென்றால் எல்லாமே தனிதானே.22 comments:

Anonymous said...

Tons of Thanks!

Anonymous said...

எதை சொன்னாலும் முதலையும்,மூர்க்கனும் கொண்டதும் விடா என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வாதிடும் அவருக்கு இக்கட்டுரையால் பயனேதும் இல்லை.ஏனெனில் இவையெல்லாம் அவர் அழகியல் ரசனை விமர்சன பாணிக்கு வெளியே உள்ளவை.தமிழில் கோட்பாடு ரீதியாக தேங்கிப் போன விமர்சன பாணி அது.அதன் கடைசி தலைமுறை அவரும்,வெ.சா,வேதசகாய குமார் போன்ற சிலரும்.
பாரதியை விடுங்கள் அவர் தாஸ்தாவோஸ்கி பற்றி எழுதி எழுதி தள்ளுகிறார், அதில் தாஸ்தாவஸ்கி பக்தின் எழுதியதை படித்து விவாதித்தற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா.ஆனால் இன்றைக்கு பல பல்கலைகழகங்களில் முதுகலை பாடத்திட்டத்தில் இலக்கிய விமர்சனம் பற்றி படிக்கும் மாணவர்களுக்கு பக்தின் எழுதியதன் முக்கியத்துவம் தெரியும்.அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
தனக்கு இதெல்லாம் தெரியாது என்பதைப் பற்றி வெட்கமே இல்லாமல்
நிபுணர் என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்களிடம் எதை சொல்லி புரியவைக்க முடியும்.

Rajan Kurai Krishnan said...

அருமையான கட்டுரை. மனது பூரிக்கிறது. குதூகலிக்கிறது. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு சொன்னால் நீங்கள் சில காலம் எழுதாமலிருந்து மீண்டும் இப்படி ஒரு கட்டுரை எழுதி படிக்கும்போது இரவு முடிந்து உதயத்தை பார்ப்பதுபோல இருக்கிறது. நன்றி எம்.டி.எம்.

நாகு (Nagu) said...

//வங்காளத்தில் எந்த ஒரு வாசகனும் தாகூர் மகாகவி என்று நிரூபிப்பதற்கான காரணங்களை அடுக்க நிர்ப்பந்திக்கப்படமாட்டான்.

தமிழர்களுக்கென்றால் எல்லாமே தனிதானே.//

பாரதியை மகாகவி என்பதற்கு எதிர்ப்பு இருக்கிறதா? எ.கொ.சா.

Yuvabharathy Manikandan said...

ஜெயமோகன் வலைத் தளத்தைப் பாருங்கள் தோழர் நாகு...

ஜமாலன் said...

அருமையான கட்டுரை. நீங்கள் தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மரபுகளை அறிந்துகொள்ள அது துணையாகும்.

காவ்யா said...

I hav come to know abt this blog from Tamilmanam where one blogger wrote abt u thus:

எம்.டி.எம்மின் இந்தக் கட்டுரை தமிழர்களால் மட்டுமல்லாது தன்னைத் தமிழன் என்று உணரும் ஒவ்வொருவராலும் வாசிக்கப்படவேண்டியதாகும் என்பது இந்தக் கன்னட-மராட்டிய எளிய தமிழனின் வேண்டுகோள்.
சூடிக்கொண்ட சூனியங்களும் சூனியங்களையே தேடித்தேடி கூட்டிக்கொள்ளும் குழுமமும் எம்டிஎம்மின் முத்தாய்ப்பு வரி புரியாதது போல் எவ்வளவு நாட்கள் சுரணையற்று நடிக்கப்போகிறார்கள் என்பதைக் காண்பதுதான் எவ்வளவு சுவாரசியமானது.''

I have read u and my comments r:

எம் டி எம் என்று அழைக்கப்படும் நீங்கள் யார் ? ராமசாமி, திலீப் குமார் இவர்களெல்லாம் யார் ?

பாரதியார் ஒரு எளிய கவிஞர். அவரை ஏன் இந்த பாடுபடுத்துகிறீர்கள் ? உங்கள் கொடுந்தமிழைச்சொல்கிறேன். எளிய தமிழில் எழுத வராதா ?

காற்றே வா; என்ற பாரதியாரின் கவிதை இங்கே குறிப்பிடப்படுகிறது. அதன் மொழிபெயர்ப்புச் சரியில்லை எனப்படுகிறது. அப்படியொரு கவிதையை நான் வாசிக்கவில்லை. அதையும் போட்டு அந்த மொழிபெயர்ப்பையும் போட்டுவிட்டுப் பின்னர் சரியில்லையென்றால், நீங்கள் சொல்வது சரியா இல்லையா என்று பார்க்கலாம். எனக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கொஞ்சம் பாண்டித்தியம் உண்டு அதை வைத்துச் சொல்ல முடியும். ஒரேயடியாக எவராலும் எக்காலத்தும் முடியாது என்று எப்படி தீர்க்கதரிசனமாகச் சொல்கிறீர்கள் முத்துக்குமாரசாமி ?

பாரதியார் ஒரு கவிஞர் நண்பரே. அவரின் கவிதைகள் பொது அரங்கில் தமிழர்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அரசுடைமாக்கப்பட்டிருக்கின்றன. அதை எவரும் படித்து எப்படியும் விமர்சிக்க்லாம்.

//ஆயிரம் பாடலாசிரியர்கள் வந்தாலும் பாரதியின் இந்த சாதனையையும் யாரும் எட்ட முடியுமா என்று தெரியவில்லை.//

இதெல்லாம் ஓவர். ஃபனாடிசிசம் . பாரதியார் என்ன அரசியல் தலைவரா அல்லது சினிமா நடிகனா ? இப்படி ஒரேயடியாக வெறித்தனமாக எழுதுகிறீர்கள். மெல்ல வாசியுங்கள். இன்புறுங்கள். விமர்சனம் செய்வதும் அவர் கவிதைகளுக்குப் பெருமையே. அதைச்செய்தால் போதும். இரசிகர் மன்றங்கள் வேண்டாம். தமிழனின் சாபக்கேடு ஃப்னாடிசிசம். இது ஒரு நல்ல விமர்சனக்கலையைத் தமிழில் வரவிடாமல் தடுக்கிறது

From ur blog I understand that even literature can make some fanatical.

But I thank u for keeping ur blog open to comments. The Tamilmanam blogger doesn't even do that.

காவ்யா said...

திண்ணையில் 'இலக்கியவாதிகளின் அடிமைகள்' என்று ஒரு கட்டுரை வரைந்திருக்கிறேன். அஃது உங்களைப்போலவர்களைப் பார்த்துத்தான் எழுதினேன்.
The essay still appears there.

mislexic said...

எம்டிஎம் சார், வெல்கம் டு இண்டர்நெட். :-)

RV said...

எனக்கு கவிதை பொதுவாக புரிவதில்லை. எனக்குப் பிடிக்கும் கவிதைகள் அபூர்வமே. ஆனால் சின்ன வயதிலிருந்து பாரதியார் மகாகவி என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. சிறு வயதில் அவரது கவிதைகளைப் படித்து இல்லை இல்லை பாடும்போது ஒரு உத்வேகம் ஏற்பட்டது. அது இன்றும் அழியவில்லை. எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்று அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு பாடினால் சில சமயம் கண்ணில் நீர் மல்கத்தான் செய்கிறது. பாரதியாரின் கவிதைகளை, கவித்துவத்தை தரவரிசைப்படுத்தும் மனநிலையும் அறிவு நிலையம் எனக்கில்லை என்பதுதான் உண்மை. அறியாத வயதில் நான் மூளைச் சலவை செய்யப்பட்டேனோ என்னவோ நானறியேன், அவர் மகாகவி, அல்லது இல்லை என்றெல்லாம் வாதிட என்னால் முடியாது. அவரை அறிவுபூர்வமாக இல்லை உணர்வுபூர்வமாகவே என்னால் அணுக முடிகிறது. (அவரது வசன கவிதை,கட்டுரை, கதை எல்லாவற்றையும் என்னால் அறிவுபூர்வமாக அனுகமுடிகிறது). இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

ஒரு படைப்பு மொழி என்ற எல்லையைத் தாண்டி நிற்க முடியவில்லை என்பது அந்தப் படைப்பின் குறை அல்லவா? பாரதியின் கவித்துவம் கன்னடிகனுக்கு புரியாது என்றால் அவன் பாரதியை மகாகவி என்று ஏன் ஏற்கவேண்டும்? கன்னடிகனுக்கே புரியாது என்றால் கனடாக்காரனுக்கு எப்படி புரியும்? அப்படி மொழியைத் தாண்டிய கவிதைகளை அல்லவா நாம் உயர்ந்த கவிதைகள் என்று சொல்ல வேண்டும்? உதாரணமாக - வோலே சோயின்காவின் A Telephone Conversation - என் கண்ணில் அது மகா உன்னதமான கவிதை. மொழி அதற்கு ஒரு பொருட்டே இல்லை. அப்படி மொழி தாண்டிய கவிதை அனுபவம் என்றால் எனக்கு பாரதியின் வசன கவிதை மட்டுமே நினைவு வருகிறது. We will stroll on the silvery snow clad mountains என்று மொழிபெயர்த்தால் தமிழனுக்கு கிடைக்கும் வாசிப்பு அனுபவம் அமெரிக்கனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லையே?

எம்.டி.எம். // வங்காளத்தில் எந்த ஒரு வாசகனும் தாகூர் மகாகவி என்று நிரூபிப்பதற்கான காரணங்களை அடுக்க நிர்ப்பந்திக்கப்படமாட்டான்.

தமிழர்களுக்கென்றால் எல்லாமே தனிதானே // என்று எழுதுவதும் எனக்கு உணர்வுபூர்வமான அணுகுமுறையாகவே தெரிகிறது. என்னுடைய மனநிலையே எம்.டி.எம்முக்கும் இருக்கலாம். அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர் மகாகவி, சொன்னா ஒத்துக்கணும், கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது என்று எழுதுவதும் எம்ஜிஆர் புரட்சித்தலைவர், என்ன புரட்சி என்று யாரும் கேக்கக்கூடாது என்பதற்கும் வித்தியாசம் இல்லை.

ஒரு பழைய பதிவு - http://siliconshelf.wordpress.com/2011/01/04/கவிஞர்-பாரதி-ஒரு-மதிப்பீ/

dj said...

நல்லதொரு கட்டுரை. நன்றி.

Anonymous said...

நண்பர் RV:
எம்டிஎம் தன்னுடைய கறாரான ஆய்வினை முன் வைத்த பின்புதானே தன்னுடைய உணர்வுபூர்வமான வரியை எழுதுகிறார்? இதில் சொன்னா ஒத்துக்கிடனும் என்பது எங்கிருந்து வருகிறது?

mdmuthukumaraswamy said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. கணையாழியில் வராவுக்கும் கல்கிக்கும் நடந்த விவாதம் பற்றி நரசய்யாவின் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையை நண்பர்கள் வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன். சுட்டி கீழே http://kanaiyazhi-ezine.blogspot.com/2011/09/blog-post_8350.html பிறிதொரு சமயம் தமிழின் நவீனத்துவம் பாரதியிடம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதை அவதானிக்க நரசய்யாவின் கட்டுரையிலுள்ள வரலாற்றுத் தகவல்கள் உதவும்.

காவ்யா said...

//தமிழனுக்கு கிடைக்கும் வாசிப்பு அனுபவம் அமெரிக்கனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லையே? // ஆர்.வி

நல்ல கேள்வி. இன்றைய தமிழகத்தில் தமிழில் ஆழ்ந்த புலமையுடையோர் ஏராளம். ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமையுடயோர் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமையுடைய தமிழைத் தாய்மொழியாகக்கொண்டோரிப்பினும் அவர்கள் தமிழ்க் கவிதைகளில் நாட்டம் கொண்டவராக இருப்பதாகத் தெரியவில்லை. பிரேமா நந்தகுமார் இருக்கிறார். ஆனால் அவர் மொழிபெயர்ப்பில் ஈடுபடவில்லை.. வெறும் விமர்சகராக மட்டுமே எழுதிவருகிறார் தி இந்துவில். முன்பு பேரா. அ.சீ.ரா இருந்தார். ஆனால் - என்னே ஆச்சரியம்! - அவர் தாகூரைத் தமிழில் 'குருதேவரின் குரல்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அ.சீ.ரா, ஆங்கிலப் பேராசிரியர். தமிழ், ஆங்கிலம், வங்காளி மொழிகளில் நல்ல புலமை. ஆழ்வார்களின் பாசுரங்கள் மொழி பெயர்ப்புடன் கூடிய 'நம்மாழ்வார்' என்ற அவர் நூல சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. பாரதியை அவர் தொடவேயில்லை. இத்தனைக்கும் ஆழ்வார்களை மொழிபெயர்த்தல் பெரும்சாதனை. It is not that much difficult to translate Bharati as he wrote much plain poetry, unlike Azhwaars.


இன்னிலை வங்காளத்தில் இல்லை. வங்க மொழியில் கவித்துவத்தை இரசித்து போற்றி அதே வேளையில் ஆங்கில ஆழ்ந்த ஞானமும் புலமையும் உள்ள ஆங்கிலப்பேராசியர்கள் நிறையப்பேருண்டு. தாகூரே அப்படிப்பட்ட ஒருவர். அவர் தன்னையே மொழிபெயர்த்தவர்.

தாகூரின் கவிதைகள் இலக்கியநயம் பொருள் நயமும் கெடாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் பேசும் நாடுகளில் பரவலாகப் படிக்கப்பட்டதால் அவருக்கு உலகப்புகழும் நோபல் பரிசும் கிட்டியது. ஆங்கிலக்கவிஞர் யேட்ஸ், தான் லண்டன் பேருந்துப்பயணங்களில் தன்னை மறந்து தாகூரின் கீதாஞசலியில் மூழ்கினதாக‌ எழுதிப் பரபரப்படைய வைத்துவிட்டார்.

தமிழின் இன்னிலை இல்லாத்தால், ஏதோவொருவன் அரைகுறையாகப் பாரதியாரை மொழிபெயர்க்க முத்துக்குமாரசசாமி அதைப்படித்து 'கறாராகப்' பேசிவிட்டார். அந்த மொழிபெயர்ப்புக் கவிதைக்கு இவர் இங்கே இணைப்புக்கொடுத்திருக்க வேண்டும். பாரதியின் முழக்கவிதையும் இங்கு போடப்பட்ட்டிருக்கவேண்டும். முத்துக்குமாரசாமியின் 'கறார்' கோபம் நியாயமானதா என்றறிய உதவலாம்.

கொஞ்சம் இலக்கிய உணர்வும் இரச‌னையும் இருந்தாலே துள்ளிக்குதிக்கிறார்கள். இதே துள்ளலை மொழிபெயர்ப்பிலும் காட்டட்டும் பார்க்கலாம். இந்த முத்துக்குமாரசாமி ஏதாவது ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறாரா கொஞ்சம் சொன்னால் திறந்து படிக்கிறேன் நன்றியுடன். Why not give me a chance to read you in English ?

vasu said...

hey folks!! who is this guy Kavvaya?

vasu said...

hey folks!! who is this guy Kavvaya?

Anonymous said...

//கொஞ்சம் இலக்கிய உணர்வும் இரச‌னையும் இருந்தாலே துள்ளிக்குதிக்கிறார்கள். //

Kavya, Gandhi died in 1948.

If you wrote the same things to Jeyamohan, he'd have called you a petite charlatan in less than a second and trounced you in a pile of paper two seconds later - rightfully so.

Anonymous said...

http://www.central-musiq.com/Bharathi-tamil-mp3-download.php

Ganesh said...

பெயரும் புகழும் இருக்கிறது என்பதற்காகவே, பிழையான கருத்துக்களுக்கு அறிவு முலாம் பூசி விளம்பரம் தேடிக்கொண்டிருக்கும் சில பேர் இன்றைய நாட்களில் பாரதியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இன்றும் டாப் செல்லராக விளங்கி வரும் பாரதியாரின் கவிதைகள் புத்தகத்தின் விற்பனையை எப்படியாவது குறைத்து, தங்களுடைய புத்தகத்தின் விற்பனையை திருக்குறளுக்கினையாக கொண்டுவந்துவிடலாமென்ற பகல் கனவுதான். முயலட்டும்.

shankara said...

எம்.டி.எம்-க்கு வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..அன்புடன்
ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஸ்ரீநாராயணன் said...

Dear Sir,

When i read about Jeyamohans comments about Bharati, i cried ...

How, a person like him say about Bharati, just because he has a Blog and couple of people to say yes to him !!!!

The only thing i can say about this article is, when i was wandering in Chennai for searching job, 'nalam geda pulidhiyil erivandhuno ' line put me infront of god...

Thats is voice of me..not bharathi..

Can this guy give a single novel to create this feeling?

ramanujam said...

முதல் இரு வாசிப்புக்களில் மேலோட்டமாகப் புரிந்தது.ஆனால் மிண்டும் எனக்கு விளங்காமல் இருந்த சிலகலைச்சொற்களைப் பற்றி அறிந்து கொண்டு மீண்டும் வாசிக்கும் போது உங்கள் கட்டுரையின் நுட்பம் புரிகிறது.உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரு அம்சம் இருப்பதே நல்ல கவிதை என்பது ஜெயமோகனின் தரப்பு.ஆனால் அது ஒரு பெருங்கதையாடல் .தமிழ்ச்சூழலின் பின்னணியில் பாரதியின் மகத்துவத்தைத் தனித்தன்மையைப் பார்க்கிறது எம்.டி.எம்மின்பின்நவீனத்துவப் பார்வை.கட்டுரையை வாசிப்பதற்கே உழைப்பைக் கோருகிறது.அட்லீஸ்ட் என் போன்ற வாசகர்களுக்கு.வாழ்த்துக்கள்.நீங்கள் நிறைய எழுதவேண்டும் என்பது என் அவா.