Saturday, October 8, 2011

சென்னை நகர எதிர் கலாச்சார வெளியில் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்


என்னுடைய ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுரையைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் எதிர் கலாச்சார இயக்கங்கள்/குழுக்கள் இருக்கின்றனவா என்று கேட்டு பலர் கடிதம் எழுதியுள்ளனர். தமிழ் சிறு இலக்கியப் பத்திரிக்கைளையும் அவை சார்ந்து இயங்கிய நண்பர்களின் குழுச் செயல்பாடுகளையும் எதிர் கலாச்சார இயக்கங்களின் avant garde கலை இலக்கியச் செயல்பாடுகளைப் போன்றவை என்று ஓரளவுக்கு சொல்ல முடியும். வணிக இலக்கியம், சினிமா ஆகியவற்றிற்கான எதிர்ப்பு, இடதுசாரிப் பார்வை, நிலப்பிரபுத்துவ முதலாளீய மனப்பாங்குகள் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான எதிர்ப்பு, சுய சாதி, மதம், வர்க்க துறப்பு,  பலகீனர்கள், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதல், நவ காலனீய எதிர்ப்பு, புதிய இலக்கிய வெளிப்பாடுகளையும் வடிவங்களையும் தேடுதல்  ஆகியன சிறு இலக்கியப் பத்திரிக்கைகளின் விழுமியங்களாக இருந்தன. அல்லது இந்த விழுமியங்கள் இருப்பதாக நம்பியதாலேயே என்னைப் போன்ற இளைஞர்கள் 1980 களின் மத்தியில் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளுக்குள் நுழைந்தோம். இன்றைக்கு அதே விழுமியங்களோடு கூடிய சிறு கலை இலக்கிய குழுக்கள் இருக்கின்றனவா என்பது சந்தேகமே. 1996இல் ஆரம்பித்த இந்திய பொருளாதார தாராளமயமாக்கலும் internet-இன் வளர்ச்சியும் சிறு இலக்கியப்பத்திரிக்கைகளில் இயங்கிய சிலரை வெகுஜன தளத்திற்குக் கூட்டிச்சென்றுவிட்டன.

இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட மாற்று எதிர்கலாச்சார வெளிகளாக ஜெயகாந்தனின் மடங்கள் இருந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாமல்லன் ஜெயகாந்தனின் மடக் கூட்டங்களில் பங்கேற்றதைப் பதிவு செய்திருக்கிறார். மாமல்லன் அவற்றைப்பற்றி எழுதும்பட்சத்தில் நாம் அவை எதிர்கலாச்சார வெளிகளாக இயங்கினவா என்று நாம் அறியவரக்கூடும்.

இது தவிர தமிழ்நாட்டின் எதிர்கலாச்சார வெளிகள் என சென்னை நகர கானாப் பாடல்கள் பாடப்படும் மடங்களையே சொல்வேன். 1980களின் மத்தியில் சென்னை நகர கானாப்பாடல்களை நான் சேகரித்துக்கொண்டிருந்தபோது அவை சினிமா இசையமைப்பாளர்களின் கவனத்தை அதிகம் பெற்றிருக்கவில்லை. பல வருட இடைவெளிக்குபின் கானா ராமகிருஷ்ணனின் உதவியோடு சென்னை நகர கானாப் பாடல்களை சேகரித்தபோது அவை பல மாற்றங்களை அடைந்துவிட்டதை கவனித்தேன். சேரிகளில் தலைவர்கள் இறந்தபோது சைக்கிள் டயர் எரியும் வெளிச்சத்தில் இரவுகளில் அரவாணிகள் நடனமாட பாடப்பட்ட கானாப்பாடல்கள் 2000களில் ஒதுங்கிய மடங்களின் இருள் மூலைகளில் பாடப்படுவதை கவனித்தேன். வாழ்வின் நிலையாமை, தற்காலிகத்தன்மை, சட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை புகழ்ந்து பாடுதல் ஆகிய தன்மைகளைக் கொண்டிருந்த பாடல்களோடு குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் சேர்ந்திருப்பதைக் கவனித்தேன். கானாப் பாடல்களில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ராமகிருஷ்ணன் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்கள் சென்னை நகர கானாப் பாடல்களோடு இணைந்திருப்பது நீண்ட மரபு என்று எனக்குச் சொன்னார். இசையமைப்பாளர் தேவா தமிழ் சினிமாவில் கானாப்பாடல்களை பிரபலப்படுத்தியதிலிருந்து கானாப்பாடகர்களின் மத்தியிலும் ஒரு வகையான ஸ்டார் சிஸ்டம் ஏற்பட்டுவிட்டிருந்தது. அந்த ஸ்டார் சிஸ்டத்திற்குள் மாட்டாத மயிலை வேணுவை கானா ராமகிருஷ்ணண் எனக்கு அறிமுகப்படுத்தினார். சென்னை மயிலாப்பூரின் நடைபாதைகளில் வசித்து வந்த மயிலை வேணு அற்புதமான குரல் வளம் கொண்டவர். அவர் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைப்பாடுவதை மெய் மறந்து கேட்டிருக்கிறேன். எதிர் கலாச்சாரத்தினை நமது படைப்பாக்கத்திற்கும் அடுத்த கட்ட சமூக வளர்ச்சிக்குமான உந்திச்சுழியாய் நாம் இனம்கண்டிருப்போமென்றால் மயிலை வேணு இன்றைக்கு நம்முடைய உயரிய பாடகர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டிருப்பார். நாம்தான் பகவத் கீதையை படித்துக்கொண்டு, வியாபார கழிசடை சினிமாவிற்கு கதை எழுதிக்கொண்டு, நவீனத்துவத்தின் எல்லா வெளிப்பாடுகளையும் மட்டம் தட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோமே  நாம் எப்படி மயிலை வேணு மூலமாக குணங்குடி மஸ்தானின் பாடல்கள் எதிர்கலாச்சாரத்தன்மை பெற்றன என்று அறியப்போகிறோம்?

மயிலை வேணு சில வருடங்களுக்கு முன் மயிலையின் நடைபாதைகளிலேயே மரணமடைந்துவிட்டார்.

நல்ல வேளையாக கானா ராமகிருஷ்ணனின் உதவியோடு மயிலை வேணு பாடிய குணங்குடி மஸ்தான் பாடல்களை பதிவு செய்து ஒலி நாடாவாக ஆவணப்படுத்தியிருக்கிறேன். நீங்கள் இந்தச் சுட்டியில் அந்தப்பாடல்களைக் கேட்கலாம்: http://youtu.be/_5z26IuizDg

ஆனால் இந்தப் பாடல்களை எதிர்கலாச்சார கலை வெளிப்பாடாக அடையாளம் காண உலக எதிர்கலாச்சார இயக்கங்களைப் பற்றியும் அவை தத்துவம் முதல் தொழில்நுட்பம் வரை சகல துறைகளிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

2 comments:

Nizami said...

மயிலை வேணு அவர்கள் பாடிய குணங்குடி மஸ்தான் பாடல்கள் வேண்டும் . எங்கு கிடைக்கும் . நீங்கள் குறிப்பிட்ட யூடூப சுட்டி உங்களால் அகற்றப்பட்டு விட்டதாக கூறுகிறது எனவே மீண்டும் பதிவேற்றவும். தங்களின் இத்தகு முயற்சிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்

mdmuthukumaraswamy said...

யூடூபில் இருந்த சேனல் என்ன காரணத்தினாலோ அழிந்துவிட்டது. அதை மீட்க தொடர்ந்து முயற்சித்த்உ வருகிறோம். குணங்குடி மஸ்தான் பாடல்களை வாங்குவதற்கான சுட்டியை கீழே இணைத்துள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
http://wiki.indianfolklore.org/index.php?title=Folk_Music_Album_1%3B_Songs_of_Gunankudi_Masthan_Sahib_from_the_streets_of_Chennai