Friday, October 21, 2011

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விவாதம்


அப்பாடா இசகு பிசகாய் பனியனையும் ஜட்டியையும் இடம் மாற்றி அணிந்துகொண்டு நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த ஜெயமோகனை ஒருவழியாய் எதை எங்கே போடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாயிற்று.  இனிமேல் அவர் பின் நவீனத்துவக் கலைச்சொற்களை தன் இஷ்டத்துக்கு தன் ரசனை விமர்சனத்துக்கு நடுவே வகைதொகையில்லாமல் போடமாட்டார் நானும் இதுக்குப் பெயரா ஐயா கட்டுடைப்பு என்று கிடுக்குப்பிடி போடமாட்டேன்.
சீக்கிரமே அவருடைய மழித்த முகத்துக்கு ஒரு முறுக்கிய மீசை வளர்த்து, இடுங்கிய கண்களில் ஆணவம் அகற்றி, பேதமை ஊட்டி, முடிந்தால் அணிந்து பாருங்கள் என்று கையில் ஒரு முண்டாசையும் கொடுத்துவிடலாம்.
இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் இரண்டு. 
ஒன்று ஜெயமோகனின் ரசனை விமர்சனம்,  நவீன textual criticismஆக இருந்தாலும் அவர் literary canonஐ உருவாக்குவார், literary canons மேலாதிக்க அதிகாரப் பண்புடையவை என்றும் அவருக்குத் தெரியும். அவர் கேட்பதெல்லாம் பின் நவீனத்துவ விமர்சனமும் அதிகாரத்தை, எந்த அறிவுச்செயல்பாட்டினையும் போல செயல்படுத்துவதுதானே என்பது. இங்கேதான் பின் நவீனத்துவ விமர்சன முறைமை வேறுபடுகிறது. அது முதலில் வாசிப்பை மேலும் மேலும் பூடகமாக்காமல், வாசிக்கும் முறையை வெளிப்படையாக்குகிறது. வாசகன் இலக்கியப் பிரதியோடு கொள்ளும் ஊடாட்டத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆசிரியர் மற்றும் விமர்சகர்களின் விசேஷ அதிகார பீடங்களில்லாமலேயே நமது வாசக அனுபவத்தை முதன்மைப்படுத்தியே  இலக்கியப்பிரதிகளை படிக்கலாம் என்கிறது. ஜெயமோகன் இப்படி வழாவழா கொழகொழா என்று பேசிக்கொண்டேஇருக்காமல் அப்படி கொஞ்சம் ஓரமாய் உட்காருங்கள் என்று சொல்கிறது. நாங்கள் எங்களுக்கு வேண்டிய எங்களுடைய காலகட்டத்திற்கு வேண்டிய கவிதைகளை நாங்கள் தேர்ந்தெடுத்து சுதந்திரமாகப் படித்துக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதாவது வாசிப்பை ஜனநாயகப்படுத்தி  வாசிப்பின் அனுபவம் எப்படி அமைப்பாக்கம் பெறுகிறது என்று பார்க்கச் சொல்கிறது. தன் வாசிப்பை சுயவிமர்சனத்தோடு சுய எள்ளலோடு பார்க்கவைக்கிறது.
இரண்டாவதாக ஜெயமோகனின் முறைமை போல வரலாற்றில் பிரதியை வைக்காமல் பின் நவீனத்துவ விமர்சனம் வாசகனை வைக்கிறது. உதாரணமாக நாட்டிய சாஸ்திரமும், தொல்காப்பியமும் ஏற்ற தாழ்வுள்ள சமூகக் கட்டமைப்பை அறுதி செய்கிற அழகியல் முறைமையை வைக்கின்றன என்று இன்று வாசிக்கிறோம். இந்த இப்போதைய காலகட்டத்தினுள் நடக்கிற critical praxis ஆக வாசிப்பை மாற்றி அந்தப்பிரதிகளையும் நமக்கானதாக்கிக்கொள்கிறோம். இது எப்படி என்பதை பார்ப்பதற்கு முன் ஜெயமோகன் எதிர்வினையிலுள்ள பிழையான புரிதல்களை களைந்துவிடுவோம்.
ஜெயமோகன் எழுதியது:
//மரபான தமிழ் பக்தி கவிதைகளில் உள்ள இறைவனை முன்னிறுத்தி வேண்டிக்கொள்ளும் முறை பாரதியில் தனக்குத்தானே வேண்டிக்கொள்ளும் போக்காக மாறியிருப்பதை சுட்டி அது ஒரு மகத்தான தருணம் என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அது நல்ல கவிதை என அவர் நினைத்தால் அது வேறு. ஆனால் ’தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்ற மகத்தான தருணமது’ என்கிறார் அவர்.
தமிழ் இலக்கியவரலாற்றிலேயே தன் அகம் நோக்கி பேசும் கவித்துவக் குரலே இல்லையா என்ன? திருமூலரில் இருந்து வள்ளலார் வரை? அகம் என்பதை பாரதி தமிழில் கட்டமைத்தார் என்று சொல்லும் வரியை நினைத்துக்கொண்டு நெடுநேரம் அமர்ந்துவிட்டேன்.//
அகம் என்பதை பாரதி கட்டமைத்தார் என்று எங்கே நான் சொன்னேன்? நெடுநேரம் அமர்ந்துவிட்டாராம். இப்படி தப்புதப்பாய் படித்துவிட்டு உட்கார்ந்திருந்தால் உட்கார்ந்தே இருக்கவேண்டியதுதான். மழித்த முகத்தில் முறுக்கு மீசை வளர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும். இரண்டு பத்திகள் எழுதியதிலுள்ள இரண்டு முக்கிய வாக்கியங்களைக்கூட பொறுமையாய் வாசிக்காத ஜெயமோகன் என்ன textual criticism படித்தார்?
நான் எழுதியவை:
 “பக்தி மரபுக் கவிஞர்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களின் நிகழ்த்துத்தன்மையினை புறத்திலுள்ள பரம்பொருள் நோக்கிப் பேசும் கவித்துவ குரலின் நிகழ்த்துத்தன்மையாக மாற்றினார்கள் என்றால் பாரதி மீண்டும் அதை அகம் நோக்கிப் பேசுகின்ற நிகழ்த்துதன்மையுடைய நவீன குரலாக மீட்டெடுக்கிறார்.”
அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல். கவித்துவ குரல்தானே தவிர அகமே அல்லது சுயமே அல்ல ஜெயமோகன் சொல்வது போல. கவித்துவ குரல் என்பதை இரு வகையாகப் பொருள் கொள்ளலாம்; ஒன்று கவிதைக்குள் இயங்குகிற poetic voice, இரண்டாவது கவித்துவமான குரல் என்று மொழியின் தொனியை கவிதைக்கு வெளியிலும் ஒரு மொழிக்குழு அடையாளப்படுத்துவது.
டி.எஸ். எலியட்டின் புகழ் பெற்ற நெடுங்கவிதையான பாழ்நிலம் ‘April is the cruelest of the times’ என்று துவங்குகிறது. இது சாதாரண உரைநடை வாக்கியம்போல்தானே இருக்கிறது என்று கேட்கலாம். சரியாத்தான்யா சொல்றான் எலியட், ஏப்ரல் மாசம் இழவு வெயில் கொளுத்து கொளுத்துது இதிலே பவர் கட் வேற. நம்ம எஸ்.ராமகிருஷ்ணன் வெயில் தாரை தாரையாய் ஊற்றுகிறது, வெயில் ஊர்ந்து வருகிறது என்றெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதியதை எலியட் ஒரே வரியில் சொல்லிட்டான்யா என்று நம் ஊர் ஆட்கள் வாசிப்பைத் தொடங்கலாம்தான். பலருக்கு ‘ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை’ என்ற தமிழ் சினிமாப்பாடல் நினைவுக்கு வரலாம். தப்பேயில்லை. நம் வாசக அனுபவத்தை  மையப்படுத்தியே நாம் வாசிக்கவேண்டும். மேற்கத்திய ரசனை விமர்சகர் யாரெனும் இது மேற்கத்திய உலகின் ஆன்மிகம் திவாலானதை காட்டும் நவீன வரி என்று தன் பேச்சைத் துவக்கலாம்தான். ஆனால் இது கவிதை வரி சாதாரண உரைநடை இல்லை என்பது நமக்கு காட்டுவது அதன் கவித்துவ குரல்தான். கவிதைக்குள் இயங்குகிற குரலை எலியட்டின் அடுத்த வரியான ‘breeding dead lilacs out of the dead land’ நமக்குசொல்லி நம் வாசக அனுபவத்தை கட்டமைக்கிறதென்றால் ஆங்கில மொழிக்குழுமத்தினருக்கு (ஜெயமோகன் விவாதகுழுமம் அல்ல) மொழிப்பயன்பாட்டிலிருந்தே அந்தப் பிரதிக்கு வெளியிலேயே அதன் தொனி கவித்துவகுரலினுடையது  என்று தெரிவித்துவிடுகிறது. இந்தக் கவித்துவ குரல் நம்மோடு பேசுவதே வாசிப்பின் துவக்கப் புள்ளி.
நான் எலியட்டின் வரியை மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் இருக்கிறது. அதை பாரதியை வாசித்துக்காட்டும்போது விரைவிலேயே சொல்கிறேன்.
மேஜையை ஓங்கித்தட்டி (ஜன் லோக்பால் பில் விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் எல்லோரும் தட்டியது போன்ற வெற்றுத் தட்டலல்ல இந்தத் தட்டல்) ஜெயமோகனை நோக்கிச் சொல்வதாவது:
நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதால் உங்களோடு நான் உரையாடவில்லை ஜெயமோகன். மகாகவி சுப்பிரமணி பாரதியாரை இன்று வாசிப்பதன் பொருட்டு நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அடுத்த பதிவை எழுதவதற்கு முன்   த்வனி என்பதைப்பற்றி ஆனந்தரின் த்வன்யலோகா என்ற சமஸ்கிருத நூல் என்ன சொல்கிறது தெரியுமா, அது எழுதப்பட்டபோது விவசாயம் எப்படி இருந்தது தெரியுமா என்று diachronic details வைத்து ஒரு பத்துபக்க கட்டுரையை வெளியிடவேண்டாம். முடிந்தால் synchronic approach என்றால் என்ன என்ற ஒரு விளக்கக்கட்டுரையை நகத்தைக் கடிக்காமல் எழுதி பதிவேற்றுங்கள் நான் ஜெயா டிவியில் ஒரு பேட்டி கொடுக்க வேண்டியிருக்கிறது அதை முடித்துவிட்டு வந்து தொடர்கிறேன். நல்லபடியாகவே தீபாவளி கொண்டாடிவிடுவோம். 


ஜெயமோகனின் புதுக்கட்டுரைக்கு என் பதில்: பாரதியை இன்றைக்கான வாசிப்பின்படியே recannoize செய்தே மகாகவி என்கிறேன். தொடர்கிறேன்.

5 comments:

Henry said...

என்ன ஐயா உங்கள் பிரச்சனை? பாரதியை, ஜெயமோகன், மகாகவி இல்லை என்கிறாரா? சொல்லட்டுமே! அதற்கான காரணங்களையும், தரவுகளையும் முன் வைக்க அவருக்கு (எல்லாருக்குமேதான்!) உரிமை உண்டுதானே! அதெல்லாம் கிடையாது, பாரதி மகாகவிதான், அதனை மறுத்துப்பேசக் கூடாது என்று நீங்கள் சொல்வது, கடாஃபின் சர்வாதிகார வன்முறையாகப்படவில்லை?

இதில், அவர் பெரிய கட்டுரைகளாக எழுதுகிறார் என்று சின்னபிள்ளைத்தனமாக குறை வேறு!

Anonymous said...

What MDM says this, or at least that's what i guess since the whole thing is little over my head, anybody can say Bharathi is 'Mahakavi' or just 'Kavi' based on their experience.

Whereas JeMo says Bharathi is just 'kavi' based on his yardstick and orders everyone to accept it. If say otherwise mavane... kind of attitude.

ravichandran said...

//நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதால் உங்களோடு நான் உரையாடவில்லை ஜெயமோகன். மகாகவி சுப்பிரமணி பாரதியாரை இன்று வாசிப்பதன் பொருட்டு நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அடுத்த பதிவை எழுதவதற்கு முன் த்வனி என்பதைப்பற்றி ஆனந்தரின் த்வன்யலோகா என்ற சமஸ்கிருத நூல் என்ன சொல்கிறது தெரியுமா, அது எழுதப்பட்டபோது விவசாயம் எப்படி இருந்தது தெரியுமா என்று diachronic details வைத்து ஒரு பத்துபக்க கட்டுரையை வெளியிடவேண்டாம். முடிந்தால் synchronic approach என்றால் என்ன என்ற ஒரு விளக்கக்கட்டுரையை நகத்தைக் கடிக்காமல் எழுதி பதிவேற்றுங்கள்//

ஜெயமோகன் உங்களுடன் உரையாடவிரும்பும் காரணம் தெளிவாக அவரால் விளக்கப்பட்டிருந்தும், அதையும் சிறுமைப்படுத்தத் துணியும் தங்களின் எழுத்து ஆணவககுறியீடே. தவிர்க்கவும். தரமான விமரிசனக் கருத்துப் பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. சில அனாமதேயங்களுடன் பலரும் இதை ஊன்றிப் படித்துவருகிறோம்.

Anonymous said...

@ ரவிச்சந்திரன்
மன்னிக்கவும் ரவிச்சந்திரன் அவர்களே .
திரு ஜெயமோகனின் மறுதலிப்புகள் தாக்குதல் முறையிலேயே அமைகிறது என்பதை அவரது பதிவுகளை படிக்கும் பொழுது தெரிகிறது. அதே தாக்குதல் தொனியிலயே திரு எம். டி. எம் பதிலளிக்கிறார். இதில் என்ன தவறு. திரு எம்.டி.எம் மற்றும் திரு ஜெயமொகனுக்கிடையேயான விவாதங்களில் அக்னி ஜுவாலைகள் தெறிப்பதே தற்போதைய தமிழ் இலக்கிய சூழலின் சிறந்த அம்சமாகவே கருதுகிறேன்.

ஆனால் சாருவை இலக்கியவாதி என்று சில பின்னூட்டங்களில் பதியபடுவதை, கொடுமை என்று சொல்வதை தவிர வேறில்லை. ஆனாலும் அதை நான் இந்த விவாதங்களுக்கான கண் திருஸ்டியாகவே பார்க்கிறேன்.

Anonymous said...

என்னாங்க அனானி , எம்.டி.எம் சாருவ பாத்து தான் நான்-லினியர் எழுதுனாராமே? நீங்க சாருவ இலக்கியவாதி இல்லேன்னு சொல்றீங்க.