Saturday, October 1, 2011

ராம் தயாள் முண்டா


நேற்று செப்டம்பர் 30 அறிஞர் ராம் தயாள் முண்டா ராஞ்சியில் மரணமடைந்தார் என்ற செய்தியை இன்றைய நாளிதழ்களில் படித்து துக்கமடைந்தேன். போன மாதம் ராஞ்சியிலுள்ள ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு நான் உரையாற்றச் சென்றிருந்தபோது ராம் தயாள் முண்டாவைச் சந்தித்திருக்கவேண்டியது; அவர் உடல் நலக்குறைவினால் டெல்லியிலிருந்து ராஞ்சிக்கு வரவில்லையாதலால் அவரை சந்திக்கும் வாய்ப்பு நழுவிப்போனது.

இப்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள டுஹ்ரியா என்ற கிராமத்தில் பிறந்த ராம் தயாள் முண்டா ஜார்க்கண்ட் மாநிலம் தனி மாநிலமாக நவம்பர் 15, 2000 அன்று பிரியக் காரணமான ஜார்க்கண்ட் மக்கள் இயக்கத்தின் முக்கிய தலைவரும் கருத்தியல்வாதியும் ஆவார். மானிடவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராம் தயாள் முண்டா சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பழைய ராஞ்சி பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியிருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ராம் தயாள் முண்டா கழிந்த பல வருடங்களாக ராஜ்யசபை அங்கத்தினராக டெல்லியில் வசித்து வந்தார். நேரில் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கும் ராம் தயாள் முண்டாவிற்கு வயது 72 என்று இன்றைய நாளிதழ்களில் படித்தேன்.

முண்டா ஆதிவாசிகள் அதிக சுதந்திர வேட்கை கொண்டவர்கள் தங்கள் பண்பாட்டினைப் பற்றிய தீர்க்கமான பார்வையுடையவர்கள். ஆங்கிலேயரை எதிர்த்து கிளர்ச்சி செய்த பிர்சா முண்டா பல தரப்பு ஆதிவாசிகளாலும் மதிக்கப்படக்கூடிய உயரிய தலைவராவார். பீகார் மாநிலத்தின் பகுதியாக பொருளாதார பண்பாட்டுச் சுரண்டலுக்கு ஆதிவாசிகள் உட்படுத்தப்படுவதை எதிர்த்து எழுந்த தனி ஜார்க்கண்ட் மாநில மக்கள் இயக்கம் பிர்சா முண்டாவின் கிளர்ச்சியையே தனது ஆதர்சமாகக்கொண்டிருந்தது. சாதி இந்துக்களின் அடக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்ப்பதும் ஆதிவாசி போராட்டங்களின் மையத்தில் இருப்பதினால் தங்களுக்கான தனி அடையாளங்களை தங்கள் மொழிகளிலும் பண்பாட்டுக்கூறுகளிலும் கண்டு அவற்றைக் காப்பற்றுவதற்கான அரசியல் பண்பாட்டு வழிமுறைகளைக் காணவேண்டிய அவசியம் ஆதிவாசி மக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் சென்ற ஆதிவாசி அறிவுஜீவிகளுக்கு இருந்தது. ஆதிக்க கருத்தியல் நிறுவனங்களான இலக்கியம், பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள்  இந்து தேசீய கருத்தியலுக்கு அனைத்து ஆதிவாசி பண்பாடுகளையும் ஏதோ ஒரு வகையில் உட்படுத்திவிடுவது ஆதிவாசி அறிவுஜீவிகள் தொடர்ந்து எதிர்கொள்கிற சவாலாகும். ஆதிவாசி மதச் சடங்குகள், புராணக்கதைகள் ஆகியவை எப்படியாவது ராமாயணத்தோடும், மகாபாரதத்தோடும் ஆதிக்க இந்து தேசீய கருத்தியலால் தொடர்புபடுத்தப்பட்டன. ஐராவதி கார்வே, ஏ.எல்.பாஷாம், ரோமிலா தாப்பர் ஆகிய அறிஞர்கள் தொடர்ந்து  ஆதிவாசிக்குழுக்களின் வாழ்வுக்கும் பண்பாடுகளுக்கும் எதிரான வன்முறையை வைதீக இந்து சாதி அமைப்பு எந்தெந்த மாதிரியெல்லாம் காலங்காலமாகக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதை பலவிதமாக நிறுவியிருந்தாலும் ஆதிக்க இந்து தேசீய கருத்தியல் ஆதிவாசிகளின் பண்பாட்டு வகைமைகளை இந்து அடையாளத்திற்குள் சுருக்கி அடைத்துக்கொண்டேயிருந்தது. உதாரணமாக ஐராவதி கார்வே மகாபாரதப் பிரதியில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் காண்டவ வன அழிப்பில் ஈடுபடுவது எப்படி சாதீய இந்து சமூகம் தன் சாதீய அமைப்பிற்கு வெளியிலிருந்த ஆதிவாசிகளை அழித்தொழித்தது என்பதற்கான எடுத்துக்காட்டு என்று வாசித்துகாட்டியது ஜார்க்கண்ட் இயக்கத்தினரிடையே பிரபலமானபோது ஆதிக்க இந்து தேசீய கருத்தியல்வாதிகள் முண்டா ஆதிவாசிகள் கைபர் வழியாக வந்து குடியேறியவர்கள் அவர்கள் கிருஷ்ணனும் அர்ஜுனனும் அழித்த வனவாசிகளின் வழித்தோன்றல்கள் அல்ல என்று எழுதினார்கள். இத்தகைய கருத்தியல் சூழலிலேயே ராம் தயாள் முண்டா மதச்சடங்குகள், புராணக்கதைகள் ஆகியவற்றை விடுத்து நடனங்களிலேயே ஆதிவாசிகள் தங்கள் அடையாளங்களைக் காணவேண்டும் என்றார்.

தன்னுடய தந்தையிடமிருந்து புல்லாங்குழல் வாசிக்கவும் முண்டா குழு நடனத்தில் பங்கேற்கவும் கற்றுக்கொண்ட ராம் தயாள் முண்டா பழைய ராஞ்சி பல்கலைக்கழகத்தில் விரிவிரையாளராக இருந்தபோதே ஆதிவாசி நடனங்களை பல்கலை வளாகத்திற்குக்கொண்டு வந்தார். வாழ்வது என்பதே நடனமாடுவதற்குத்தான், வாழவே நடனமாடு, நடனமாடவே வாழ், போன்ற கோஷங்கள் ராம் தயாள் முண்டாவினால் பிரபலமடைந்தன. 1999 இல் நான் ராம் தயாள் முண்டாவைச் சந்தித்தபோது வழக்கம்போலவே நடன வெளியில் அவர் இருந்தார். ஆண்களும் பெண்களும் கைகளைக் கோர்த்துக்கொண்டு கொசுவர்த்தி சுருள் போல வட்டத்தினுள் வட்டமாக விரிவு பெறும் வரிசையில் என்னையும் சேர்ந்துகொள்ளச் சொன்னார். வட்டத்திலிருந்த சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளை சேலையினால் முதுகில் கட்டியிருந்தனர். ராம் தயாள் முண்டா பாடப் பாட விரிந்திருந்த வட்டம் ஆடி ஆடி குறுகி இணைந்தது. அத்தனை மனித உடல்களும் ஆடி கூடி இணைவது என்னவொரு குதூகலம்! ராம் தயாள் முண்டா அந்த எளிமையான நடனம் ஆதிவாசிகளின் ஏற்றத்தாழ்வற்ற சமூக மனம், குழு பந்தம், குழு விசுவாசம் ஆகியவற்றை எப்படி வெளிப்படுத்துகிறது எப்படி பாதுகாக்கிறது என்று பின்னர் விளக்கினார். பல செழுமையான ஆதிவாசி நடனங்களையும் அன்று பார்த்தேன். சேர்ந்து நடனமாடியதால்  பல ஆதிவாசி நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். ஜார்க்கண்ட் தனி மாநிலமான பின்பு கிராமம்தோறும் மக்கள் கூடி நடனமாட ‘அகாரா’ என்ற மரபு வெளிப் பயன்பாட்டினை மீண்டும் ஏற்படுத்த ராம் தயாள் முண்டா முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார். ஜார்க்கண்ட் தனி மாநிலம் தான் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்ற வருத்தமே அவரை காங்கிரசுக்கு கட்சி மாறச்செய்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் பிஜேபி என்று மாறி மாறி கூட்டு வைத்திருந்ததிலும் அவர் மனச்சலனம் அடைந்திருந்தார்.

சுதந்திர இந்தியாவின் ஆதிவாசி சிந்தனையாளர்களுள் முக்கியமானவர் ராம் தயாள் முண்டா. அவரது சிந்தனைகளைப் பயில்வது நம்மை வளமாக்கும். அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜார்க்கண்ட் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தப் பதிவின்  ஆங்கில நகலை ஜார்க்கண்ட் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

No comments: