Wednesday, October 26, 2011

என் ஆசிரியர் ஏ.கே. ராமானுஜன்







1990 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு மாத காலம் பேராசிரியர் ஏ.கே.ராமானுஜனிடம் மாணவனாய் பாடம் கேட்டேன். காலை உரைகளுக்குப் பின் மாலை வேளைகளில்  உரையாடிக்கொண்டே மலைப்பாதையில் நடப்பது இரண்டொரு நாளிலேயே வழக்கமாகிவிட்டது. அவருடைய அமெரிக்க மாணவர்களைப் போலவே என்னையும் அவரை ராமன் என்று அழைக்கவேண்டுமென்றார்; சீக்கிரமே வயது வித்தியாசம் தாண்டிய இயல்பான நட்பு அரும்பிவிட்டது.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நவீன தமிழ் சிறுகதைகள், நாட்டுப்புறக்கதைகள், கவிதை  என்று மெலிதான நகைச்சுவையுடன், நுட்பமான விளக்கங்களுடன் அவர் பேசுவதைக் கேட்பது அலாதியான அனுபவம். ராமன், ராமன் என்று அவருடைய அத்தனை அமெரிக்க மாணவர்களும் அவரிடம் சொக்கிக்கிடந்ததற்கு அசோகமித்திரனைப் போன்ற நகைச்சுவை தவிர ஒரு ஆசிரியருக்கே இருக்கவேண்டிய பெருந்தன்மையும் சாதாரண உரையாடல்களில்கூட இழந்துவிடாத கவி மொழியும் அவருக்கு இருந்ததே என்று நான் அடிக்கடி நினைப்பேன். கவிதை எழுதும்போது மட்டும் அவர் கவிஞனாக இருக்கவில்லை, வாழும் கணம்தோறும் அவர் கவிஞராகவே இருந்தார். கட்டுரை எழுதினாலும் சரி, மொழி பெயர்த்தாலும் சரி உரையாடலோ, பேருரையோ அவர் ஒரு கவிஞரே என்பதையே உலகுக்குச் சொல்லும். 
கொடைக்கானலில் எங்கள் மாலை நடை உரையாடல்கள் தமிழ் நவீன சிறுகதைகளைப் பற்றியியதாயிருந்தது. சா.கந்தசாமியின் கதைகளில் சொல்லாமல் சொல்லும் நுட்பம் ராமனை வெகுவாக கவர்ந்திருந்தது. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ தொகுப்பில் சா.கந்தசாமியின் கதை சொல்லும் பாணி, அவருடைய அடங்கிய தொனி ஆகியவற்றை ராமன் வியந்து வியந்து பல மணி நேரம் பேசுவதை நான் மௌனமாக மரியாதையுடன்  கேட்டிருக்கிறேன். 
சொல்லாமல் சொல்லுதலையும், தன்னைத் தானே சுட்டிப் பேசுகின்ற பிரதிகளையும் ராமன் வெகுவாக ரசித்தார். ராமாயண நாட்டுப்புறக் கதையொன்றில் தான் மட்டும் காட்டுக்குப் போவதாய் சொல்லும் ராமனிடம் சீதை எல்லா ராமாயாணங்களிலும் ராமனோடு சீதையும்தானே காட்டுக்குப் போகிறாள், இந்த ராமாயணத்தில் மட்டும் எப்படி அவள் போகாமலிருப்பாள் என்று கேட்பதை விளக்கி இலக்கியப்பிரதி என்பதே தன்னைச் சுட்டுவதும், பல பாட பேதங்கள் கொண்டிருப்பதும், வெவ்வேறு பிரதிகளோடு தொடர்பு படுத்தப்படுவதும், பல் வகை வாசிப்புகளை அனுமதிப்பதும்தான் என்று ராமன் விளக்குவதைக் கேட்க கேட்க இலக்கிய வாசிப்பு என்பதே மனத்திலொரு சாகசம் போல் விரியும். ராமன் தன் வாசிப்பைக் கொண்டே அவரை கவிஞனாகக் கருதவேண்டும் தான் எழுதியதை வைத்து அல்ல என்று அவருக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லுவார். 
லவனும் குசனும் ராமாயணத்தில் ராமனுக்கே அவனுடைய கதையையே சொல்லுதலென்ற கதை சொல்லல் உத்தி எப்படியெப்படியான வாசக பங்கேற்புகளை அனுமதிக்கிறது எனவே வாசகப்பங்கேற்பின் மூலமே ராமாயணம் இதிகாசமாகிறது என்பார் ராமன். பல பாட பேதங்கள் இருப்பதும், தொடர்ந்து பேதங்கள் வளர்வதும், வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழி அதே ராமாயாணம் வித விதமாகச் சொல்லப்படுவதும் ராமாயாணம் என்ற இதிகாசம் மக்கள் காப்பியமாக இருப்பதற்கான சான்றுகள் என்று ராமன் சொல்வார். 
கொடைக்கானல் நாட்களுக்குப் பிறகு எங்களிடையே தொடர்ந்த கடிதப்பரிமாற்றம் இருந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும், மொழி பெயர்ப்பின் சிக்கல்களைப் பற்றியுமே அவருடைய கடிதங்கள் பேசின. சங்க இலக்கியத்தை ‘Poems of love and war’ என்று அவர் மொழிபெயர்த்திருந்தது ராமனுக்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்திருந்தது. அதுவரை சங்க இலக்கியங்களுக்கு இல்லாத வகையில் அவர் மொழிபெயர்ப்பு முதன்மையானதாகவும், மொழிபெயர்ப்பு என்ற சிறு உணர்வையும் ஏற்படுத்தாவகையில் இருக்கக்கூடிய ஆங்கிலக்கவிதைகளாகவுமே  அவை வாசிக்கப்பட்டன. ராமனின் சங்கக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புகளிலேயே tour de force என்று கருதப்படுகிறது. அவர் நம்மாழ்வாரின் பாசுரங்களை ‘Hymns for Drowning’ என்று மொழிபெயர்த்தது சங்கக்கவிதை மொழி பெயர்ப்பு போல புகழ் பெறவில்லை. ராமன் எனக்கு எழுதிய கடிதங்களில் நம்மாழ்வாரின் எந்தெந்த கவித்துவ அம்சங்கள் ஆங்கிலத்திற்குள் செல்லவில்லை என்று படித்து எழுதுமாறு கேட்டுக்கொள்வார். நான் சொல்லும் அம்சங்களை கனக்கிலெடுத்து மொழிபெயர்ப்பினை நுட்பமாக்கி மீண்டும் எழுதுவார். இவ்வாறாக  1993இல் அவர் மறையும் வரை எங்களிடையே மொழிபெயர்ப்பு குறித்தான கடிதப்பரிவர்த்தனை தொடர்ந்தது. 
ஒரு மொழிபெயர்ப்பு தன் தாய்மொழியின் இயல்புகளைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அது செல்கின்ற மொழியின் தன்மைகளையே வெளிப்படுத்த வேண்டும் அப்போதுதான் மூல மொழிப்பிரதிகளுக்கு நாம் நியாயம் செய்தவராவோம் என்று ராமன் உறுதியாகச் சொல்லக்கூடியவராக இருந்தார். மொழிபெயர்ப்பில் ஆர்வமுடைய அவருடைய பல மாணவர்களும் ராமனோடு ஒத்துப்போகவில்லை. ராமனின் ஒரு சில மாணவர்களும் அவருக்குப்பின் மொழிபெயர்ப்பின் முறைமைகள் பற்றி விவாதிப்பவர்களும் மூல மொழியின் தனித்துவங்களே செல் மொழியிலும் அழுத்தம் பெறவேண்டும் என்றும் அப்போதுதான் செல்மொழியின் பல்வகைத்தன்மை வளம் பெறும் என்று வாதிட்டனர்; கூடவே பல்மொழித்தன்மையை ஒரு மொழியில் வளர்த்தெடுப்பதென்பது பல்வகைப் பண்பாடுகளை போற்றுவதற்கான ஒரு வழிமுறையை சமூகத்தில் உண்டாக்குவதாகும் என்றும் வாதிட்டனர். நம்மாழ்வார் மொழிபெயர்ப்பு கடிதப்பரிவர்த்தனையில் ராமன் தன் ஆரம்ப நிலையிலிருந்து மாறி மூல மொழியின் தனித்துவங்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் அப்படி அழுத்தம் கொடுக்கப்பட்ட தனித்துவங்களை போற்றவைப்பதுமே சிறப்பான மொழிபெயர்ப்பாகும் என்று தன் கருத்து  எப்படி மாறி வந்தது என்றும் குறிப்பிடுகிறார்.
பன்மொழித்தன்மை, பல பண்பாட்டுத்தன்மை, பண்பாடுகளின் தனித்துவ கூறுகள் ஆகியவற்றைப் போற்றுதலே ராமனின் விழுமியமாக இருந்தது.
1993 இல் நான் அவரைப் பார்ப்பதற்காக சிகாகோ நகருக்குச் சென்றேன். என்னை விமான நிலையத்தில் சந்தித்து அவருடைய வீட்டிற்கும், பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் அவர் என்னை அழைத்து செல்வதாக ஏற்பாடு. ராமன் விமான நிலையத்திற்கு வரவில்லை. மின்னஞ்சல் வருகைக்கு முந்தைய நாட்கள் அவை. தொலைபேசியிலோ பதிலில்லை. சிகாகோ விமான நிலையத்திலேயே பொழுதைக் கழித்துவிட்டு வேறு வழி தெரியாமல் வாஷிங்டன் நகருக்குப்போய்விட்டேன்.
வாஷிங்டன் சென்ற பிறகுதான் தெரிந்தது. ராமன் முந்தைய தினம் இயற்கை எய்திவிட்டாரென்று. வாஷிங்டன் போஸ்டும், நியுயார்க் டைம்சும் ராமனின் மரணச் செய்தியை முதல் பக்கத்தில் பெரிதாய் வெளியிட்டிருந்தன. இரண்டு பத்திரிக்கைகளுமே ராமன் கவிஞர் என்று குறிப்பிட்டு அவர் சங்க இலக்கியத்தையும், நம்மாழ்வார் பாசுரங்களை மொழி பெயர்த்ததையும் பெரிதாகக் குறிப்பிட்டு தமிழ் பாரம்பரியக் கவிதைகளையும், கவியுலகையும் மொழி பெயர்த்து அமெரிக்க பண்பாட்டின் பன்முகத்தன்மை வளமாவதற்கு பங்களித்த பெருந்தகையென்று புகழாரம் சூட்டியிருந்தன.


தமிழில் ஏ.கே.ராமானுஜன் பற்றி எஸ்.ராமகிருஷ்ணண் எழுதியுள்ள விரிவான முன்னுரையை கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1031

ஜமாலன் எழுதிய கட்டுரைக்கான சுட்டி:

http://ettuththikkum.blogspot.com/2009/07/blog-post_26.html
இன்றைக்கு ஏ.கே.ராமானுஜனின் முந்நூறு ராமாயணங்கள் என்ற கட்டுரையை டெல்லிப் பல்கலைக்கழகம் தன் பாடத்திட்டத்திலிருந்து எடுத்துவிட்டது என்ற செய்தியைப் படித்தபோது, அதற்காகக் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் சேர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைப் படிக்கும்போது ராமன் நம் சமூகத்திற்கும், நம் இலக்கிய பாரம்பரியத்திற்கும் ஆற்றியிருக்கும் தொண்டு, பன்மைக்கலாச்சாரம் என்ற விழுமியம் இவற்றை நாம் குறைந்தபட்சமாகவாவது அறிந்திருக்கிறோமோ என்ற சந்தேகமே எழுகிறது.
ஏ.கே.ராமனுஜனின் முந்நூறு ராமாயணங்கள் கட்டுரையை கீழ்க்கண்ட சுட்டியில் வாசியுங்கள். இதை எந்த காரணத்திற்காகவேனும் பாடத்திடத்திலிருந்து  நீக்க முடியுமா என்று சிந்தியுங்கள்.
அவ்வாறு நீக்கியது தவறு என்று நீங்கள் நினைத்தால் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு ராமனின் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்த்தி அறிவுறுத்தும் கீழ்கண்ட மனுவில் ஒப்பமிட்டு ராமனின் கட்டுரையை நீக்கியதற்கு எதிர்ப்பையும், மீண்டும் சேர்ப்பதற்கு ஆதரவையும் தெரிவியுங்கள்
மேலும் இந்த விவகாரம் பற்றி படிக்க
http://www.telegraphindia.com/1111027/jsp/opinion/story_14672561.jsp 

2 comments:

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

My Post on A K Ramanujam

http://mowlee.blogspot.com/2011/05/blog-post_29.html

Unknown said...

http://www.sandeepweb.com/2011/10/26/return-of-the-academic-mullahs/
http://www.sandeepweb.com/2008/03/15/ramanujans-ramayana/

Perhaps you should consider this too. while most always find right wingers at fault, right wingers consider as "politics" of "marxist/stalinist" historians.