Thursday, January 3, 2013

கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 2


 தற்சார்பு, தன்னடையாளம்  ஆகியவற்றை உரத்துச் சொல்லும் விக்கிரமாதித்யன் நம்பி அவற்றை அஞ்சுதலின்றி உரத்துச் சொல்வதினாலேயே மரபின் இறுக்கமும் அதிகாரமும் அவர்கவிதைகளில் வெளிப்படையாகத் தெரிகின்றன. “ ஆடித்தான் பார்த்தாள் அவள், அடக்கிவிட்டான் அவன், ஊர்த்துவ நடனமும் சின் முத்திரையும் கற்றுத் தேர்ந்தவன் அவன்என்பது போன்ற விக்கிரமாதித்யனின் கவிதை வரிகள் மரபான ஆண் அகங்காரத்தினை வெளிப்படையாக political correctness என்றெல்லாம் பசப்பாமல் சொல்கின்றன. அவருடையசேகர் சைக்கிள் ஷாப்கவிதைத் தொகுதியின் முன்னுரையில் சுகுமாரன் விக்கிரமாதித்யன் கவிதைகளில் காணப்படும் இத்தன்மையினைப் பற்றி எழுதும்போதுபெண்கள் குறித்த விக்கிரமாதித்யன் கவிதைகளிலும் மரபான அகங்காரமே தென்படுகிறது. தேவி ஸ்துதி- கணிகையர் ஒழுக்கம் என்று இரண்டு எல்லைகளுக்குள் ஒடுங்கிவிடுகின்றன. மோகமும், காமமும், பெண்ணுறுப்புகள் ஆணின் வேட்கையை நிறைவு செய்யும் உபகரணங்களாகவே சித்தரிப்பு பெறுகின்றன. காமத்தின் புனிதப் பெருவெளியில் இரு உயிர்கள் கலந்து பரஸ்பரம் இனம் காணும் ஒரு கவிதைக்கணம் கூட இல்லாத உலகம்என்று சரியாகவே சொல்கிறார்.

தேவி ஸ்துதி- கணிகையர் ஒழுக்கம் ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மட்டுமே ஆண் பெண் உறவு குறித்த நம் இந்தியச் சொல்லாடல்கள் அடங்கியிருப்பதை டெல்லியில் 2012 வருட இறுதியில் நடந்த மருத்துவக் கல்லூரி மாணவி வன்புணர்வுக்குள்ளாக்கபட்ட துயரச் சம்பவத்தினைத் தொடர்ந்து எழுந்த பொதுவெளி விவாதங்கள் உணர்த்தின. தேவி ஸ்துதி எல்லையில் நின்று பேசியவர்கள் வெட்டுவேன் கொல், குத்துவேன் கொல், அமிலத்தால் காயடிப்பேன் கொல், கொத்துப் பரோட்டா போடுவேன் கொல், என்று சட்டத்தின் மூலம் வன்புணர்வு தவிர்த்து நேர் செய்யும் வழி கண்டுபிடிக்க, கணிகையர் ஒழுக்கம் என்ற மறு முனையில் நின்றவர்களோ பெண்களின் நடத்தை, ஆடை ஆகியவற்றை சரி செய்யும் மார்க்கம் கண்டுபிடிக்க  திகைத்து நின்ற நமக்கு பிரச்சினை என்ன என்பதினை நேர்பட கவிதை எழுதும் விக்கிரமாதித்தனும் அவரை வாசித்துச் சொன்ன சுகுமாரனுமே நமக்கு உணர்த்தினார்கள். கற்பில் சிறந்த கண்ணகியா கணிகை மாதவியா என்ற இரண்டு தேர்வுகளுக்கு அப்பால் எந்தத் தேர்வுமே இல்லாத நிலையில் மணிமேகலைக்கு புத்த துறவியாவது மட்டுமே வழி என இன்னும் தொடர்கிற மரபின் நீட்சியில் என்னவாக இருக்க முடியும் கவிதை? ஆணுடல், பெண்ணுடல் என்ற பேதங்களின்றி ஆண் மைய மரபின் அகங்காரம் நீக்கமின்றி எங்கும் நிறைந்திருக்கையில்ஆடித்தான் பார்த்தாள் அவள்என்ற விக்கிரமாத்தியனின் கவிதையில் வரியில் வரும்அவள்பெண்ணா ஆணா? பாலின சம நோக்கின் நவீன சொல்லாடல்களை அறியாதவரா விக்கிரமாதித்யன்உள்ளது உள்ளபடி எழுதும் ஜி.நாகராஜன், கண்ணதாசன் ஆகியோரைத் தன் இலக்கிய மூதாதைகள் என விக்கிரமாதித்யன் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதன் அர்த்தம் எனக்கு மீள் புலனாகியது.

கடல் கற்க கற்பித்த கவி பிரம்மராஜனின்அவ்வளவு அழகேயில்லாத கடலில்கூட கண்ணதாசனுக்கு இடமில்லை என்பதும் அதை அவர் விக்கிரமாதித்யனுக்கு எதிராக எழுதிய திறந்த கடிதத்தில் குறிப்பிட்டதும் நம் மரபுப்பொதுவெளி சட்டகத்தின்  நேர்மையான கவிக்குரல் விக்கிரமாதித்யன் என்பதை உறுதிப்படுத்தி அதிலிருந்து தப்பித்து புதிய cosmopolitan space உருவாக்கும் பிரம்மராஜனின் எதிர் முனை தெளிவாகத் திட்பம் பெறுவதையும் காட்டுகின்றன.

விக்கிரமாதித்யன் கவிதைகள் காட்டும் ஆண்- பெண் உறவுகளின் புற யதார்த்தம் பட்டவர்த்தனமான உண்மை என டெல்லி வன்புணர்வுத் துயரச் சம்பவத்தினைத் தொடர்ந்த விவாதங்கள் உறுதிப்படுத்துகின்றன எனும்போது அதன் எல்லைகளுக்கு உட்பட்ட மாற்று வழி நம் மரபின் அராஜகத்தினை ஒப்புக்கொண்டு பாவசங்கீர்த்தனம் செய்வதுதான். ஞாநி (பரிக்ஷாஞாநி கோவை ஞானி அல்ல) வன்புணர்வுக்கு ஆளான பெண்ணுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு கவியின் குரலாகவே ஆத்மார்த்தமாக ஒலித்தது.

விக்கிரமாதித்யன் கவிதைகளை விமர்சிக்கும் சுகுமாரன்  சொல்லும்காமத்தின் புனிதப் பெருவெளியில் இரு உயிர்கள் கலந்து பரஸ்பரம் இனம் காணும் ஒரு கவிதைக்கணம் கூட இல்லாத உலகம்இன்னும் சிக்கலானது; அதன் ஒரு அம்சம் சாதி.

பிரமிள் 1972இல் கசடதபற் இதழில் எழுதியகண்கள்என்று தலைப்பிடப்பட்ட கவிதையும், 1980இல் அவர் அதைபுகைகள்என்று மீண்டும் எழுதிய கவிதையும் இன்றைக்கும் அர்த்தமுள்ளதாக இருப்பதில்    தெரிகிறதுகாமப் புனித பெருவெளிஇல்லாமல்ப் போனதற்கான ஒரு காரணம்.

 பிரமிளின் கவிதைகள் கீழே:

கண்கள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு 
என்பறை நகம் மோதி 
மனம் அதிர்ந்தது.

கோபத்தில் மோதி 
கலந்தன கண்கள்

பிறந்தது ஒரு 
புதுமின்னல்

ஜாதியின் 
கோடை மேவிப் பொழிந்தது 
கருவூர்ப் புயல்…..

புகைகள் 

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என்பறை நகம் மோதி 
ஊர் அதிர்ந்தது.

ஐயாயிரம் வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என் சேரி.

புகைகள் கலந்து 
இருண்டது இன்றென் 
உதய நெருப்பு

இக்கவிதைகளில் நான் எப்போதும் கவனிப்பது பிரமிள் தன் கவிக்குரலைபறை நகத்தோடுஅடையாளப்படுத்திக்கொள்வதினைஅநீதிக்கு பலிகடா ஆகும் பாத்திரத்தின் குரலாக மன அடியாளத்திலிருந்து மாறி உருமாற்றம் பெறுகின்ற கவிக்குரல்கள் மிகவும் குறைவு. அந்த உருமாற்றத்தினை துணிந்து ஒலித்த கவனிக்கப்படாத வேறொரு குரல் .அமிர்தராஜுடையது.

. அமிர்தராஜின் கவிதைகளில் இரண்டு

ஆத்தாள் கொடை

இன்றும் 
தெளிவாகத் தெரிகிறது 
என் கண்ணாடியில் என் தலித்து முகம் பற்பல
பூவாய் சிரிக்கும் முகம்
ஜாதிய முலாமிட்ட 
உன் கண்ணாடியில் தெரிகிறதா
என் சிரித்த முகம் மாறி
நேசமற்ற நெருப்பாய் சீறும் 
வேறு முகம்?

நீயும் தெரிந்து கொள்

நேசமாய் நேற்றுதான் கடன் வாங்கினேன்
என் சிரிப்பை சிங்காரிக்க
ஆத்தாளின் 
கோரைப் பற்களை

தலமுறை தவறாமல்
முலை பறிக்கத் 
துரத்தும் நாய்களை
மிரட்டி விரட்ட
கடன் வாங்கிய 
துருத்திய பற்கள்
என் பாட்டிக்கும் இருந்தன

தெளிவாய்
சீறத் தெரிந்ததால்
இனி எக்கண்ணாடியிலும் 
எனக்கு சிரித்த முகம் 
சாதகமாய் உனக்கிருக்கும்
ஜாதிக் கண்ணாடி மோதி
என் பிம்பப்பூஞ் சிரிப்பு
நையாண்டியாகி
உன்னை நொறுக்கினால் 
என் சிங்காரப் பல் முகம் 
என் செய்யும்?

சுட்டு விரலின் வரம்

என் 
ஆள் காட்டி விரலால் 
என் முன்னோர் சிந்திய
இரத்த சிவப்பில் 
நியாயப் பொட்டு நெற்றியிலிட்டு
நீ தலை வணங்கா தலித் என்று 
எனக்கு நானே மறுபெயரிடுகிறேன்
அச்சுடும் பெயர்
சுமரணையில் சுட்டு இளிக்கிறது

வாயடைத்து அழுத்தும் 
மாய முத்திரையாய்
என் மேனியில்
ஜாதி கீறிய பிறபெயரெல்லாம் 
உறக்கத்திலும் பிராண்டி
புரையோடி வலிக்கையில்
ரணத்திலே எரிமருந்திடுகிறது 
தலித் என்ற தனிப்பெயர்

என் புண் ஆற்றி
கோபமாய்
தாபமாய்

சாபமாய்
நானே தலித்
என்று பறையடிக்கையில் 
என் வெற்றி எதிரொலிக்கிறது 
உன் எண்திக்கும்
நிலமற்ற கூலியாய் எட்டத்திலிட்டு 
எம்முயிரை ஏய்த்துப் பிழிந்த 
தீண்டாமலே கொல்லும் ஆயக்கலை 
அறிந்த
உன் மூதாதயரை 
நீ குற்றவாளியென நெற்றியில் 
நிஜப்பெயர் குத்தி 
நான்தான் நீ கொன்ற 
தலித் என்று மறிக்கையில்
என் குருதியில் நீ துப்பிய 
சாபத்தை முறித்து 
என் பெயரில் முளைக்கிறது 
என் இன்றின் செயல் வீரம்.



----------------------------------------------------------------------------------

தொடரும் 





  
1 .அமிர்தராஜ்மகா கோலம்மதி நிலையம் வெளியீடு 2003

No comments: