Tuesday, January 8, 2013

கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 5


எதிர்ப்பின் கவிதை வடிவங்கள் பேச்சின் தொனிகளை மொழி நிகழ்வுகளாக நிகழ்த்திக்காட்ட எதிரியை அடையாளம் காண்பதும் முக்கியமானதாகும். எதிரியை அடையாளம் காணும் முறைகளையும் அதன் தொனிகளையும் சங்கரராம சுப்பிரமணியனின் சமீபத்திய கவிதைகள் சுட்டுகின்றன.  

சித்ரகதி ஓவிய மரபினை பின்பற்றி பாரதக் கூத்தினை பாலாஜி ஶ்ரீனிவாசனின் வழிகாட்டுதலில் ஓவியங்களாக்கிய  கலைஞர்களின் படைப்புகளுக்கு கவிதைகள் எழுதிய சங்கரராம சுப்பிரமணியன் தன் கவிதைகளுக்கான தொனியை நகுலன், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன் ஆகியோரின் கவிதைகளிலிருந்து அமைத்துக்கொண்டதாகக் கூறுகிறார். தான் மகாபாரத ஓவியங்களைப் பார்த்து கவிதைகள் எழுதியபோது ஞானக்கூத்தனின் ‘அழிவுப்பாதை’ கவிதையில் வரும் ‘சொல்லப்பட்டது போல் இல்லை இந்த அழிவுப்பாதை’ நினைவில் மேலேறி வந்தபடி இருந்தது என்று எழுதும் சங்கரராம சுப்பிரமணியனின் மூன்று கவிதைகள்:

பரசுராமர் கர்ணணை சபிப்பதை வரைந்த இந்திரா சேஷாத்ரியின் ஓவியத்திற்கு


“ என் பிறப்பை
எனது பெற்றோரை
எனது அடையாளங்களை
நான் தேர்வு செய்யவில்லை
என் நண்பர்களையும் கூட
என் செயல்களும் 
அதையொட்டியவை
எனும்போது
இதுவே விதி என்றும்
அதுவே சாபம் என்றும் 
நான் சில பொழுதுகளில் 
என்ணுவதை
உங்களால் எப்படி 
குறை கூற முடியும்?”


காந்தாரி தன் கர்ப்ப வயிறை அம்மிக்குழவியால் இடித்து துரியோதனாதிகளை பெற்றெடுப்பதை வரைந்த மீனாட்சி மதனின் ஓவியத்திற்கு 

“நம்மைத் துரத்தும் 
எதார்த்தத்தை கௌரவப்படை
என்றும் உரைக்கலாம்
மனம் என்னும் கர்ப்பம் 
கொண்ட
ஆண், பெண் யாவர்க்கும்
இது பொதுதானே”


துரியோதனனுக்கு பீமனுக்கும் நடக்கும் கடைசி யுத்தத்தினை காட்சிப்படுத்திய மீனாட்சி மதனின் ஓவியத்திற்கு

“எதிரியை
வெளியிலே
பாவித்துக்கொண்டால் 
தெருத்தெருவாய் 
ஓடி
துரத்தி
கடைசிவரை 
மூச்சு வாங்கத்தான்
வேணும்”

முதல் கவிதையில் கர்ணணின் குரலை ஏற்கும் கவிதைப் பிரதி பிறப்பினால் எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிட்டால் சாபம் எது வரம் எது என்று வினவுகிறது. பிறப்பினால் தீர்மானிக்கப்படவேண்டும் அனைத்தும் என்பதன் கருத்தியல் எந்தச் செயலைத்தான், என்ன நட்பைத்தான், எந்த உறவைத்தான் விம்ர்சிக்கமுடியும் என்று கேட்கிறது. செயல் என்பது குலதர்மமாய்   பின்னால் மகாபாரதத்தில் போதிக்கப்படும் கீதையின் நீதிக்கு அர்த்தம் என்ன என்று கேட்கிறது. இந்தக் கருத்தியலின் மூலம்  என்ன என்று  வினவிய தந்தை பெரியார் பார்ப்பனீயத்தை அடையாளம் காட்டினாரே என்று யாரேனும் பேசினால்  எந்தப் பார்ப்பனர் தருமபுரியில் போய் சாதிக் கலவரத்தில் ஈடுபட்டார் என்று கட்டுரைகள் எழுதுகிறார்கள். பிறப்பினால் தீர்மானிக்கப்பட்டதில்லை சாதி, இந்து மூல நூல்கள் தீண்டாமையைப் பற்றி பேசவில்லை என்று நாரயணகுரு மகாத்மா காந்திக்கு சொல்லிவிட்டார், ஸ்மிருதி நூல்கள்தான் தீண்டாமையைப் பற்றியும் பிறப்பினால் தீர்மானிக்கப்படும் சாதியைப் பற்றியும் பேசுகின்றன என்றும் அவர் காந்திக்குச் சொல்லிவிட்டார் அதனால்தான் காந்தி அம்பேத்கரின் வாதங்களை மீறி வர்ணாசிரம தர்மத்தை ஆதரிப்பவராக இருந்தார், காந்தியின் ஆழ்மனமே ஒரு பனியா மனம் அதுவே அவருடைய சாபம் அதுவே அவருடைய வரம் அவர் பனியாவாக இருந்தது நம் நல்லூழ், அவர் எனவே ஒரு மெய்ஞானியல்ல அவர் எனவேதான் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே காந்திக்கான தேவை இல்லாமல் ஆகிவிட்டது இத்தியாதி இத்தியாதி என்று பகடை உருட்டுகிறார்கள் ( படிக்க: ஜெயமோகனின் “இன்றைய காந்தி”). 


எதன் அடிப்படையில் தர்மபுரியில் சாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கலப்பு மணம் காதல் மணத்தினை எதிர்க்கிறார்கள்? சாதியின் தூய்மை போய்விடுமே என்றுதானே? சாதியின் தூய்மை அகமணத்தின் வழி காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் என்ன? சாதியே பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது என்பதுதானே? சாதி பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்கு தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்  சுட்டிக்காட்டிய பார்ப்பனீயம் என்ற கருத்தியல் தவிர்த்து வேறெந்த கருத்தியல் பாரதத் திருநாட்டில் தொழில்படுகிறதாம்?  சாதிகளுக்கிடையிலான மோதலை வரவேற்று சரித்திரம் மோதல்களின் வழி நகரத் தொடங்கிவிட்டது என்று களிக்கும் மனநிலை என்ன மனநிலை? எதிரியை வெளியில் பாவித்தால் கடைசியில் குருட்சேத்திரமும் பேரழிவுமே மிஞ்சும்.

 தன்னடையாளத்தின் ஒரு பகுதி சாதி என்றால் சுயசாதி விமர்சனமே கலையாகும். பிறப்பினால் சைவ வேளாளாராகிய புதுமைப்பித்தன் போல தன் சாதியை நாசகாரக் கும்பலாகக் கண்டதையும் கண்டதை  உரத்துச் சொன்னவரும் அவர் காலத்தில் யாருமில்லை. நம் நல்லூழாக சுயசாதி விமர்சனம் எம்.வி.வெங்கட் ராம், தி.ஜானகிராமன், கிருத்திகா என்று தொடர்ந்து தமிழ்ச்செல்வன், ராஜ்கௌதமன், இமையம், தோப்பில் முகமது மீரான், ஜோ டி குரூஸ் என சமகால சிந்தனையாக்கமும் படைப்பாக்கமும் பெற்றவண்ணம் இருக்கின்றன. இந்தப் படைப்புக்களின் முக்கியத்துவத்தை சங்கரராம சுப்பிரமணியனின் மகாபாரத ஓவியக் கவிதைகளின் மூலம் அறிகிறோமென்றால் அவருடைய இன்னொரு கவிதையின் மூலமே பகடைகளைப் பற்றியும், பகடையுருட்டபவர்களின் ஆத்மசுத்தியையும் நாம் அறிகிறோம்.

ராஜஶ்ரீ மணிகண்டனின் மகாபாரத ஓவியத்திற்கு சங்கரராம சுப்பிரமணியனின் கவிதை:

“பகடைகள் 
ஒன்றுகொன்று
பேசிக்
கொள்வதில்லை
பகடைகள்
சதியாலோசனை
செய்வதும்
இல்லை
பகடைகள் உலர்ந்த
எலும்பாலானவை
அங்கே ரத்தம் இல்லை”





------------------------------------------------------

தொடரும்

---------------------

மகாபாரத ஓவியங்களுக்கான சுட்டிகள்:
Innerflow webpage http://www.theinnerflow.in/

Innerflow facebook page  http://www.facebook.com/theinnerflow    

Paintings http://www.facebook.com/media/set/?set=a.353950044688605.85856.346424328774510&type=3

No comments: