இதுவரை நான் இத்தொடர் கட்டுரையில் பிரசுரித்த முதல் மூன்று பகுதிகளுக்கும் வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் படித்து எனக்கு உற்சாகம் அதிகமாகியிருக்கிறது.
பட்டியலொன்றை பலரும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அறிகிறேன். கவிதையின் உள் இயங்கு தளத்தினை நுட்பமாக அடையாளம் காட்டமுடியுமா என்று ஒரு சிலர் கேட்டிருக்கின்றனர். பல் வேறு வகையான கவிதைகளையும் நான் படிப்பேனா என்று கேட்டு பலர் சுட்டிகளையும் மின் நூல்களையும் அனுப்புகின்றனர். எல்லா வகையான கவிதைகளையும் நான் வாசிக்கக்கூடியவனாகவே இருக்கிறேன். சுட்டிகளும் மின் நூல்களும் அனுப்பிய நண்பர்கள் உறுதியாக நம்பலாம் நான் அவற்றினை படித்து விடுவேன் என்று. அவர்கள் எல்லோருக்கும் நான் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிதைகளையோ கவிஞர்களையோ பட்டியலிடுவது எனக்கு ஒப்புதலில்லாத ஒன்று. இவரை விட அவர் சிறந்தவர் என்ற படிமுறையை இலக்கியத்திலும் நிறுவுவதற்காக பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டியலிடும் காரியத்தினை நான் செய்வதாக இல்லை.
கவிதையின் உள் இயங்கு தளத்தினை அறிய நான் அதிகமும் நம்புவது கவிதையில் இயங்கும் கவிக்குரல்களை அல்லது கவிதைப் பிரதிகளுக்குள் கவிஞர்கள் தங்களுடையதாய் ஏற்று பேசும் குரல்களை அவற்றின் பாவனைகளை. காட்சிப்படிமமாய் கவிதை வடிவம் பெறுமாயின் அதிலுள்ள பார்வையினை அது தொகுக்கும் தகவல்களை. ஒரே உள்ளீட்டினை பாடுபொருளாய்க் கொண்டு பலர் எழுதியிருக்கின்ற கவிதைகளை ஒப்பிட்டுப்படிப்பதும் கவிதையின் உள் இயங்கு தளத்தினை தெளிவாகக் காட்டும் என்பது என் துணிபு. மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிஞர்கள் தங்கள் வாழும் காலம் சார்ந்து என்ன நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள், எடுக்கிறார்கள் என்பதினையும் ஒப்பீடு காண்பித்துக் கொடுத்துவிடும்.
ஆகச்சிறந்த எளிமையை நோக்கி நகர்வதாகவே என் எழுத்து இப்போதெல்லாம் இருக்கிறது. வாசிப்பையும் வாசிப்பிற்கான பல தள சாத்தியப்பாடுகளையும் ஆலோசனைகளாக, முடிந்த முடிவுகளாக அல்ல சொல்லவே நான் விருப்பப்படுகிறேன்.
---------------------------------------------
ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ என்ற கவிதையில் வரும் மேடைப் பேச்சாளர் இப்போதைய கவிதைகளில் காணக்கிடைக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். கவிதையின் எதிர்ப்பு வடிவங்களுள் ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’, ‘சினிமாச் சோழர்’, ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’, ‘ஆகஸ்ட் 15’, ஆகிய கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்பு கவிதையின் வடிவத்தினை கட்டமைத்தவை. இவற்றில் ‘காலவழுவமைதி’யும் ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’ கவிதையும் பேச்சு முறைகளை போலி செய்து பெரும் மக்கள் எழுச்சிகளான திராவிட இயக்கமும், இந்திய விடுதலைப் போராட்டமும் பொய்த்துப்போன வெற்று பேச்சுக்களாகிவிட்டன என்பதை பூடகமின்றி சொல்லின என்றால் ‘ஆகஸ்ட் 15’ இந்திய விடுதலைப் போராட்டத்தின் கனவு பொய்த்ததையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தினையும் ஆழமாகப் பதிவு செய்தது; ‘சினிமாச் சோழர்’ திராவிட இயக்கத்தின் கனவு பொய்க்கும் திசையை நோக்கி நகர்வதை காட்சிப்படுத்திக் காட்டியது. தமிழ் சமூக வரலாற்றில் நடந்த மூன்று பெரிய மக்கள் எழுச்சிகளான பக்தி இயக்கம், இந்திய விடுதலைப் போராட்டம், திராவிட இயக்கம் மூன்றுமே வர்க்கபேதமொழித்த, ஆண்-பெண் சமநிலை எய்திய, சாதி ஒழிந்த சமூகத்தினை லட்சிய இலக்காக முன் வைத்தவை. அவைகளுக்கான தேவை தமிழ் சமூகத்திற்குள் தீராத் தாகமாய் இருந்தபடியால்தான் அவை பெரிய மக்கள் திரட்சி இயக்கங்களாக உருப்பெற்றன. மூன்று மக்கள் பேரியக்கங்களுமே பெரும் சாதனைகள் பல நிகழ்த்தியிருந்தாலும் அவை உறுதி அளித்த லட்சிய சமூகத்தினை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டன. பக்தி இயக்கம் வெற்றுக் கலை வடிவங்களாகவும் கடவுளுடன் பேரம் பேசுகிற கொடுக்கல் வாங்கல் சடங்குகளாகளாகவும் இன்று எஞ்சியிருக்கிறது. திராவிட இயக்கம் சினிமாவும், தொலைக்காட்சியும் உருவாக்கிய மெய்நிகர் உலகில் அமிழ்ந்து போய் பெருந்திரள் பண்பாடுக்கென்று விழுமியங்களும் சமூக ஒத்திசைவும் இல்லாத குடிமைப் பொதுவெளியாய் நிற்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் மதிப்பீடுகள் தமிழ்ப் பொதுவெளியில் வெளி வேஷங்களாகவும் பொய்மைகளாகவும் மாறி ஓரங்கட்டப்பட்டுவிட்டன. இந்தச் சூழலின் மனசாட்சியின் குரலாக, லட்சியங்களையும் உள்ளார்ந்த ஆன்மீகத்தையும் காதலுக்கான சாத்தியப்பாடுகளையும் இழந்துவிட்ட நவீன கவிதைகளை நாம் ஞானக்கூத்தனிடமே வடிவம் பெறுவதை நாம் வாசிக்கிறோம். அவ்வடிவங்களின் தொற்றுதலும் நீட்சியும் ஆத்மாநாமிடம் தீவிரம் பெறுகின்றன. ஞானக்கூத்தனை அவருடைய நகைச்சுவை காப்பாற்றியது, ஆத்மாநாமுக்கு நகைச்சுவை செறிவாகாதது அவர் கரணம் தப்பிவிடக் காரணங்களுள் ஒன்று..
பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980களில்தான். ஈழத் தமிழ் பிரச்சினையும், மௌனி, சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன் ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்களுமே பிரமிளின் சமூக அரசியல் பார்வையினைக் கூர்மைப்படுத்தின. பிரமிளே மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமிழ் சமூகத்திற்கு அளித்த விலைமதிப்பில்லா பண்பாட்டு பங்களிப்புகளை துல்லியப்படுத்தும் வழிகாட்டி ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியும் தந்தை பெரியாரும் இணைந்த தத்துவார்த்த அரசியல் நோக்குகொண்ட பகுத்தறிவின்பாற்பட்ட, தன் விடுதலையை சமூக விடுதலையோடு இணைத்துக்கொண்ட தனி நபர்களைக் கொண்ட குடிமைச் சமூகத்தை உருவாக்கும் என்று பிரமிள் கருதியதாக நாம் இன்றைக்கு வாசிக்கலாம். மகத்தான கவி ஒருவரின் மகத்தான கனவு அது. ஆனால் கருத்தியல்/ அரசியல் கனவுகளினால் படைப்புகள் ஆக்கம் பெறுவதில்லை என்றும் அவர் உறுதியாக நம்பினார். ஆகையால் ‘அதிரடிக் கவிதைகள்’, ‘ஸ்கூட்டரில் வந்த தோழர்’ போன்ற உதிரிக்கவிதைகளின் உள்ளடக்கம் தவிர்த்து எதிர்ப்பு கவிதை வடிவத்திற்கு பெரிய பங்களிப்புகள் எதுவும் அவர் செய்யவில்லை.
‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’, ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ ஆகிய திருநாவுக்கரசரின் வெளிப்படையான பிரகடன வடிவங்களே தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எதிர்ப்பு வடிவங்கள். தமிழ் இலக்கியத்தில் எதிர்ப்பு வடிவங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம் அதிலும் கவிதையில் எதிர்ப்பு வடிவங்களை உருவாக்குவது இன்னும் கடினமான காரியமாகும். அனுபவத்தை சீராக வடிவமைக்கும் இசையமதி பொருந்திய கவிதை அரசின் ரகசிய மறு அதிகார வடிவமே என்றுதான் மேற்கத்திய விமர்சகர்கள் கோல்ரிட்ஜிலிருந்து ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் வரை, கதேயிலிருந்து அமெரிக்க புது விமர்சகர்கள் வரை சொல்கிறார்கள். இந்திய மரபுகளிலும் கவிதை அரசின் அங்கம்தான். மேற்கத்திய மரபிலோ வெகு எளிதாக பாலியல் வெளிப்பாடுகளை மதத்தின் புனிதங்களோடு எதிரிணைவு செய்யும்போது எதிர்ப்பு வடிவங்களை எளிதாக உருவாக்கிவிடலாம் ஆனால் இந்திய மரபிலோ கோவில் சிற்பங்களிலேயே பாலியல் வெளிப்பாடுகள் இருக்கின்றன. புனிதங்களும் பாலியலின் சகல வெளிப்பாடுகளும் கலவையான கலைகளாக மரபாக்கம் பெற்றுவிட்ட நம் சரித்திரத்தில் எதிர்ப்பின் கவிதை வடிவம் என்ன? ஜூலியா கிறிஸ்தவா ஃபிரெஞ்சு கவிதை மரபில் அனுபவத்தை வடிவமைக்கின்ற கவிதை என்ற கருத்தினைத் துறந்து மொழி நிகழ்வே கவிதை அதனுள் தாய் -சேயின் கூவல் கொஞ்சு மொழியினை அடையாளம் கண்டால் கவிதையின் புரட்சிகர மொழியினை அடையாளம் காணலாம் என்கிறார். ஒரு வகையில் பேச்சு மொழியினை கவிதைக்குள் கொண்டு வருவதும் அக்காரியத்தினை செய்யக்கூடும். பேச்சு மொழியினை பகடியாகக் கொண்டு வருதல் அதன் நல்ல தொடக்கம்.
கவிதைக்குள் பகடியையும் நகைச்சுவையையும் கையாள்தல் எளிதில் சாதிக்கக்கூடியதுமில்லை. பகடியில் இழை தப்பினால் அர்த்தம் சீரழியும். பேச்சு மொழியின் காலம் பிணைத்த தன்மை காலம் கடந்து நிற்கவேண்டிய கவிதையை எழுத விழைபவனுக்கு உறுதுணையாகாது; அதன் குழுத்தன்மையும் பிராந்தியத்தன்மையும் எளிதில் வெறுப்பு அரசியலுக்கு உரமாகும். பேச்சின் தொனிகளை கவிதைக்குள் பாவனை காட்ட வைப்பதில் எதிர்ப்பின் கவிதை வடிவத்தை மொழி நிகழ்வாகவே நிகழ்த்திக்காட்டுவதே உசிதமாகும் இதையே ஞானக்கூத்தனின் மூன்று கவிதைகளும் சாதித்தன. அவற்றினை கீழே தருகிறேன். மீதிக் கவிதைகளை அவருடைய தளத்தில் வாசிக்கலாம்.
“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…
அமைதி… அமைதி…
எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”
மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர்.
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?
முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர்.
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?
ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ கவிதையில் வரும் பேச்சாளரை நான் வேறு கவிஞர்களின் படைப்புகளிலும் தேடினேன் என்று சொன்னேனில்லையா அவரை நான் சபரிநாதனின் கவிதையில் கண்டுபிடித்தேன். சபரிநாதனின் கவிதையில் அவர் தூக்கம்போட்டுக்கொண்டிருந்தார்.
சபரி நாதனின் கவிதை
உயர்திரு சண்முகசுந்தரம்
ஷ்…..சத்தம் போடாதீர்கள்
சண்முகசுந்தரம் தூங்கிக்கொண்டிருக்கிறார்
எதையோ சொல்ல வந்து மறந்தது போல ஏறியிறங்குகிற தொப்பை சீராக
கரைவேட்டி தொடைகளுக்கிடையே கசங்கியிருக்க
மயிரடர்ந்த வலதுகை ஆட்காட்டிவிரல் நகம் பிட்டத்தை சொறிகிறது
மீசை மறைவில் அவரது வாய் மூடியுள்ளதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு
சண்முகசுந்தரம் தனது இருபத்தியோராவது வயதில் அரசியலில் குதித்தார்
மொட்டைமாடிலிருந்து தவறி விழுந்த ரப்பர் பந்தைப் போல
பந்து கணந்தோறும் அதிகரிக்கும் வேகத்துடன் பாய்கிறது
துமிகள் தெறிக்க ஈரத்தரையில் மோதி எழும்புகிறது அப்படியே
ஒரு கண்ணாடி சன்னலை உடைத்துவிட்டு சில்லுகளோடு மீண்டும்
குதிக்கிறது நடுரோட்டிலிருந்து
காற்றில் எம்புகிறது தூக்கியெறிந்து விளையாடப்படும் குழந்தையென
சண்முகசுந்தரம் பதறியடித்து எழுந்துகொண்டார்
வேலைக்காரனின் தாயாரை ஒரு கெட்டவார்த்தையால் திட்டியபின்
மினுங்கும் சந்தனநிறச் சட்டையின் கைப்பட்டையை மடித்துக்
கொண்டே படியிறங்குகிறார்
வாசலையொட்டியோடும் மூடப்பட்ட சாக்கடையின் முனையில்
வாளித்தண்ணீரை இறைத்தபடியிருந்தனர் குட்டித் தம்பிகள் சிலர்
எண்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவரின் கார்
புறப்பட்டுவிட்டது
முக்குத் திரும்பும்போதுதான் கைக்குட்டையை எடுக்க மறந்து போனது
ஞாபகம் வந்தது
உயர்திரு சண்முகசுந்தரத்துக்கு
ஒரு பலத்த கைதட்டல்
--------------------------------------------------
தொடரும்
1 படிக்க பிரமிள், ‘வரலாற்றுச் சலனங்கள்’ சமூகவியல் கட்டுரைகள், தொகுப்பாசிரியர் கால சுப்பிரமணியம், வம்சி புக்ஸ் வெலியீடு 2011
2 சபரிநாதன், ‘களம்-காலம்-ஆட்டம்’ புது எழுத்து வெளியீடு 2011
No comments:
Post a Comment