Tuesday, January 15, 2013

கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு | பகுதி 6



சங்கரராம சுப்பிரமணியன் தன் மகாபாரதக் கவிதைகளுக்கான தொனியை நகுலன், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன் ஆகியோரின் கவிதைகளிலிருந்து அமைத்துக்கொண்டதாகச் சொல்வதை நான் ஏற்கனவே குறித்தேன். இதில் விக்கிரமாதித்யன் கவிதைகளின் தொனியை சங்கரராம சுப்பிரமணியன் சேர்ப்பதை நானும் ஆதரிக்கிறேனா என்று கேட்டு சிலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். விக்கிரமாதித்யன் என்றில்லாமல் அவர் தலைமுறையைச் சார்ந்த கலாப்ரியா, வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஆகியோரின் கவிதைகளிலும் எதிர்ப்பு வடிங்களுக்கான தொனிகளை எப்படிப் பெறமுடியும் என்றும் கேள்விகள் கூடவே எழுப்பப்பட்டிருக்கின்றன. பார்ப்பதும், படிப்பதும், புலனாகுவதும், அதைப் பற்றி நான் சொல்ல விழைவதும்  ஒன்றாயிருப்பதில்லை என்பதினால் எல்லா வகைக் கவிதைகளும் எல்லா கவிஞர்களும் முக்கியமானவையே முக்கியமானவர்களே என்பதே என் நிலைப்பாடு. இதைத் தொடர்ந்தே என் அணுகுமுறையினை மேலும் கவிதைகளின் வழி விளக்க விரும்புகிறேன்

 சங்கரராம சுப்பிரமணியனின்அந்தி என்ற கவிதையை வாசியுங்கள்:

அந்தி

கோடை உதிர்த்த
உலர் சருகுகளுக்குள்
முகம் புதைத்து 
கால்கள் அகன்று 
வளைந்திருக்க 
கூர்மையற்று
உலவும்
மர்மங்கள் உதிர்த்த
முதிய பூனை ஒன்றை 
அந்தி இருளில்
முதல் முறையாகப் பார்த்தேன்
நான் 
அதை ஒரு நாயென்று
சொல்ல விரும்பினேன்


அந்தியில் பார்ப்பதாலாமர்மங்கள் அனைத்தையும் உதிர்த்தபூனை நாயென்றே அழைக்க விரும்பும்படிக்கு ஏதுவாகயிருக்கிறது? அல்லது முதன் முதலாகப் பார்ப்பதாலா? இல்லை காலமும் இடமும் சேர்கையில் ஒன்று மற்றொன்றாக உருமாறுகிறதா? ஒன்று தற்சுட்டுப் பொருளாக புற யதார்த்தத்தில் என்னவாக இருக்குமென்றாலும் அதன் mediation அதை கால இட வர்த்தமானம் பொறுத்து வேறொன்றாகவே அழைக்க விருப்பம் துணியும். ஒன்று மற்றொன்றிற்காக நிற்பது மொழி மொழியாக செயல்படுவதற்கான அடிப்படை. இதில் யதார்த்தம் என்பதினை எந்த மொழியும் எந்தக் காலத்திலும் கைவசப்படுத்துவதில்லைபேயோனின்பிரதியும் பலிப்பும்என்ற கவிதை, புகைப்படம் கூட பிரதிபலிப்பதில்லை எனபடம் பிடித்து காட்டுகிறது



புன்னகைப்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்
புகைப்படத்தில் அது விழவில்லை
புகைப்படம்தானே, சிரியேன் என்கிறாய்
அதனாலென்ன, நேரில் சிரிக்கிறேனே என்றால்
வேண்டாம், சிரித்த மாதிரி ஒரு போட்டோ எடுவாம்

வாசிப்பின் வழி மனதிலாகும் உலகும் கவிதை எழுதுகிறவர்கள் மீண்டும் மீண்டும் கவனப்படுத்துகிற மொழிகளால் கட்டமைக்கப்பட்ட உலகேருஷ்ய குறியியல் அறிஞரான யூரி லோட்மன் கவிதையை இந்தக் காரணத்தினாலேயே ஒற்றை அமைப்பாகக் (structure or system of signs)  காணக்கூடாது கவிதையை ஒழுங்கமைப்புகளின் ஒழுங்கமைப்புகளாகக் (system of systems) காணவேண்டும் என்கிறார். கவிதைப்பிரதி என்பது பல தள ஒழுங்கமைப்பு உடையது; அதன் ஒவ்வொரு வடிவ அம்சமும் - யாப்பு (மரபுக் கவிதையெனில்), லயம், சப்த ஒத்திசைவு- முதலியன தனித்தனி ஒழுங்கமைப்புகளாக கவிதை என்ற பெரிய ஒழுங்கமைப்பின் கீழ் இயங்குகின்றன. லோட்மனின் கவிதை பற்றிய குறியியல் கோட்பாடு நவீன கவிதைகளிலிருந்து விலகி புது தடம் பதித்த கவிதைகளுக்குத்தான் பொருந்துமா, மரபான நாட்டுப்புறக் கதைப்பாடலுக்கு பொருந்துமா என்றால் என்னைப் பொறுத்தவரை எல்லா வகைக் கவிதைகளுக்கும் பொருந்தும் என்பதுதான் பதில். ஏனெனில் என் முனை வாசகனின் முனை

வாசகனாகக் கவிதையை அர்த்தப்படுத்தும்போது நவீன கவிதை, அதி நவீன கவிதை, மரபுக் கவிதை, நாட்டுப்புறக்கவிதை, என்ற வகைப்படுத்தல்களும் ஆசிரிய அடையாளப்படுத்தல்களும் பொருட்படுத்தத்தக்கவையாக இருப்பதில்லை. ஒரு மொழி மண்டலத்தை ( language universe)  விளக்கக்கூடிய இன்னொரு மொழி மண்டலம் என்பதாகவே கவிதை வாசிப்பு இன்றைக்கு இருக்க முடியும். அதிலும் முன்புபோலல்லாமல் கணிணித் திரையில் சங்கக் கவிதையும், நவீன கவிதையும், இரண்டு நிமிடங்களுக்கு முன் எழுதப்பட்டு வலைத்தளம் மூலம் உடனடியாக எழுதிய வேகத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் கவிதையும் சம தள ஒழுங்கில் இருப்பதாக அமைகிறது இன்றைய வாசிப்பு சூழல். இந்த சம தள ஒழுங்கிலேயே கவிதை வாசிக்கப்படுகிறது.  “மழை: மரம்: காற்று கவிதைகளில் நகுலனின் வரிகள் இவ்வகையில் கவனிக்கத்தக்கவை 

 கீழே தரப்படுபவை நகுலனின் முழுக் கவிதைகள் அல்ல மேற்கோள்கள்  

மழை: மரம்: காற்று 10

ரகு
நான் மீண்டும் சொல்கிறேன்;
.
நான் 
புதுக்கவிஞனே 
இல்லை என்னைப் புதுக்கவிஞன் 
என்று 
யார் சொன்னது?

மழை: மரம் : காற்று 9

ரகு
தமிழில் மகத்தான
கவிஞன் சொன்னது
ஞாபகம் வருகிறது
வாய்ச் சொற்களினால்
என்ன பயனுமில்லை
மூளையின் நேர்த்தியான 
கோடுகளினாலும்
கண்கள்
உள்ளத்தின் 
சாளரங்களாகப் போகும் 
பொழுது
அவை மூலம்
யார் எதைப் பார்க்கிறார்கள்?
எட்டிப் பார்க்கிறார்கள்
விலகிப் போகிறார்கள்
கூச்சலிடுகிறார்கள்
அழுகிறார்கள்
சிரிக்கிறார்கள்
கோபப்படுகிறார்கள்
தங்களைக் கண்டு 
தாங்களே பயப்படுகிறார்கள்

மழை: மரம் காற்று 10

ரகு
இங்கு நாம் வரும்பொழுதும்
போகும் பொழுதும் 
தனியாகத்தான் 
வருகிறோம்-போகிறோம்
அப்படியென்றால 
ரகு
யாருக்கு யார் துணை?
நாம் 
என்னதான் 
செய்துவிட்டோம்?
அவன் கூறிய
மாரி
இது வீடு
இது பாலம்
இது புனல் சிதறும் செயற்கை
ஊற்று
வாசல் கதவு 
ஜாடி
பழ-மரம்
ஜன்னல்
இருக்கலாம்;
ஸ்தூபி
கோபுரம்?’
என்று சொல்வதைத் தவிர?

மழை: மரம்: காற்று 8

ஆம் 
நிமித்த மாத்ரம் பல
நான் வேறு, இந்தச் சற்றே
சாய்வான நாற்காலி வேறு 
என்ற பேதமில்லாமல் நாற்காலியும் 
நானுமாக இருக்கும் இந்நிலையில்
மரமும், மன்ணும், புல்வெளியும்
நிழலும் வெயிலும் எல்லாம் எல்லாம்
அலை அலையாக, நிலை பெயராத
மரம் என்றென காற்று சலிக்கிறது
நிழல் பரவுகிறது
பறவைகள் கூவுகின்றன
மரம் நிற்கிறது
நிமித்த மாத்ரம் பவ
காலை: மணி 10.10


நகுலனின் நவீன கவிதையின் லயத்தோடு கூடிய மழை மரம் காற்று எட்டில் நிமித்த காரணங்களையும் நிமித்த மாத்திரங்களையும் கடந்து  காலை மணி பத்து பத்து என்று திரும்புகிற இடம் இருக்கிறதே அதுவே வாசக முனை. மொழியுலகின் விழிப்பு மொழியுலகிலிருந்தும் விழிப்பு. ஆனால் தொடர்ச்சியற்ற காலத்தினை அளந்து காலை மணி பத்து பத்து என்று அறிவதும் புனைவா என்றால்  இல்லை அந்தப் புள்ளியே அந்த மணித்துளியே இன்றைக்கு இப்போது இங்கே மனதிலாகும் கவிதை என்பேன். யூரி லோட்மேன் அதை ஒரு civilizational moment என்பார். புற உலக யதார்த்த நிகழ்வுகளை கவிதைகளின் வழி படிப்பதென்பது ஒரு நாகரீகத்தினை மீட்டெடுக்கும் விமர்சன செயல்பாடாகும். அதற்காக நாகரீகத்தின் தருணத்தினை என்றைக்கும் நிலைபெற்றது என்றும் கூறுவதல்ல என் தரப்பு. மீண்டும் சங்கரராம சுப்பிரமணியனின் ஒரு கவிதை

ஒரு கணம்

முதல் நடையில் 
என் பக்கவாட்டில்
நான் பார்த்தது
சுருண்டு உறங்கும்
பழுப்பு நிற நாயை
இரண்டாம் நடையில்
நான் கண்டது
பழுப்பு நிற பாறையை
நான் 
திகைத்தபோது
நாயாய் எழுந்து வாலை ஆட்டிவிட்டு
பாறை திரும்ப உறைந்தது.





--------------------------------------------------------------------------


தொடரும்






1 சங்கரராம சுப்பிரமணியன்அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள்குருத்து வெளியீடு ஈரோடு 2008 

2 1975. Lotman Jurij M.; Uspenskij B.A.; Ivanov, V.V.; Toporov, V.N. and Pjatigorskij, A.M. 1975. "Theses on the Semiotic Study of Cultures (as Applied to Slavic Texts)". In: Sebeok Thomas A. (ed.), The Tell-Tale Sign: A Survey of Semiotics. Lisse (Netherlands): Peter de Ridder, 57–84. 

3நகுலன் கவிதைகள்தொகுப்பாசிரியர் .சண்முகசுந்தரம் காவ்யா வெளியீடு சென்னை 2001

No comments: