பௌத்தம் வைதீகமானதையும் அதனால் ஏற்பட்ட பெரும் தமிழின அழிவினையும் தமிழின் நவீன கவிதைகள் பல விதமாய் ஒரு பக்கம் பதிவு செய்கின்றன என்றால் இன்னொரு பக்கம் பௌத்தத்தினை இந்து வைதீகத்திற்குள் இழுக்கும் முயற்சிகளுக்கான எதிர்ப்பினை பல கவிதைகள் பதிவு செய்கின்றன. இந்து வைதீகத்தின் கொடூர இறுக்கத்திலிருந்து தப்பி போதிசத்துவரை உண்மையாகவே சரணடையும் போக்கினையும் பல கவிதைகள் பதிவு செய்கின்றன. இந்த மூன்று வகைக் கவிதைகளுக்குமிடையில் நடக்கும் போராட்டங்களின் சாயல்களினால் இனி வரும் காலங்களில் நம் அகம் வடிவமைக்கப்படும் என்பது என் கணிப்பு. பௌத்தம்/ புத்தரை பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளை எந்தெந்த வரிசைகளில் வாசிக்கிறீர்களோ அந்தந்த வரிசையின் படி நமக்கொரு தெளிவு கிடைக்கிறது. ஏகப்பட்ட வரிசைகளின் சாத்தியப்பாடுகளில் நான் கீழே தருவது ஒரு சாத்தியப்பாடு.
முதலில் ஈழத் தமிழ் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் கவிதை ( சு.வில்வரெத்தினத்தின் ‘அகங்களும் முகங்களும்’ கவிதைத் தொகுதியை முழுவதும் வாசிக்க http://noolaham.net/project/01/02/02.htm )
புத்தரின் மௌனம் எடுத்த பேச்சுக்குரல்
இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்
நெடுஞ்சாலைகள் தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே
இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்
எனது வெளி நடப்புக்கான பிரகடனம்
பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இனசங்காரப் பெரஹாராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும்
போதிமரத்து நிழலும் எனை ஆற்றுமோ?
வெக்கை தாழவில்லை: வெளி நடக்கிறேன்.
புழுதி பறந்த வீதிகள் எங்கும்
குருதி தோய்ந்து புலைமையின் சுவடுகள்.
விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பிஷா பாத்திரம்.
ஒருகணம்
அமுதசுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது
எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின்
மங்காத அடையாளங்கள்
ஓ! என் மனதை நெருடுகிறது.
இன்னும் காற்றிலேறிய அந்தப்
படப்படப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை
எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி
காற்றிலேறிக் கலந்தோடும்
ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே!
இவை கேட்டதிலையா உமக்கெல்லாம்?
எனக்குள் கேட்டதே!
இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே!
ஓ....
இதயமே இல்லா உங்களை இந்த
எதொரொலி எங்கே உரசிச் செல்லும்?
சந்திகள் தோறும் என்னைக்
கல்லில் வடித்து வைத்துக்
கல்லாய் இருக்கக் கற்றவர் மீது
கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெல்லாம்
மனித இறைச்சிக்கடைகள் விரித்து
மானுடத்தை விலை கூறியிருப்பீரா?
வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா?
ஓ? எத்தனை குரூரம்.
இத்தனை குரூரங்களும் கொடுமைகளும்
எனது பேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன; அரங்கேறி ஆடின
எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை.
எனது பெயரால்தான் இனப்படுகொலை
குருதி அபிஷேகம் இவை எல்லாமும்.
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக
நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.
நான் போதித்த அன்பு, கருணை எல்லாம்
கல்லறைக்குள் போக்கிய
புதைகுழி மேட்டில் நின்று என் சிலைகளைப்
பூசிக்கிறீர்
உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை
கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள்
கற்பனையை என்னென்பேன்?
நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
கண்டந்துண்டமாய் அவர்களை நீங்கள்
வெட்டியெறிந்தபோதெல்லாம்
உதிரமாய் நானே பெருகி வழிந்தேன்
நீங்கள் அதனைக் காணவேயில்லை.
கைவேறு கால்வேறாய்க் காட்டிலே கிடந்து
‘தாகமாயிருக்கிறேன்’ என்று கதறியதும் நானே
அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.
ஆணவந் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம்
எனக்குள் மறைந்து கோண்ட எத்தனிப்பே
என்னை வெறிங்கல்லில்மட்டும்
கண்டதன் விளைவன்றோ?
நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல
மாறுதல் இயற்கை நியதி என்ற
உயிர்நிலை ஓட்டத்தின் உந்து சக்திநான்.
கல்லல்ல: கல்லே அல்ல.
எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக்
கல்லாக்கிவிட்டு உங்கள்
சிங்கள பௌத்த ராங்கத்துள்
சிம்மாசனம் தந்து சிறை வைக்கப் பார்க்கிறீர்.
யாருக்கு வேண்டும் உங்கள்
ஆக்கிரமிப்புய்க் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?
நான் விடுதலைக்குரியவன்.
நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.
சிங்கள பௌத்தத்துள் சிறையுண்ட உமக்கெல்லாம்
எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின்
விஸ்தீரணம்
புரியாது அன்பரே
பிரபஞ்சம் மேவி இருந்த என்ராஜ்யம்
பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்;
வழிவிடுங்கள் வெளிநடக்க.
நெஞ்சில் கருணைபூக்காத நீங்கள்
தூவிய பூக்களிலும் குருதிக்கறை;
சூழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.
ஓ! என்னை விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன்
என்னைப் பின்தொடராதீர் இரத்தம் தோய்ந்த சுவடுகளோடு.
நான் போகிறேன்,
காலொடிந்த ஆட்டுக்குட்டியுமாய் நானுமாய்
கையொடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி,
அதுதான் இனி என் இருப்பிடம்.
வருந்தி அழைத்த பெரும்பிரபுக்களை விடுத்து
ஓர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில்
விருந்துண்டவன் நான்.
அத் தாழ்வாரத்தில் உள்ளவர்களிடந்தான்
எனக்கினி வேலையுண்டு.
நீங்கள் அறிவீர்
வரலாற்றில் என் மௌனம் பிரசித்திபெற்றது.
ஆனால், நான் மௌனித்திருந்த சந்தர்ப்பங்களோ வேறு.
இப்போதோ
என்மௌனத்துட் புயலின் கனம்.
ஒருநாட் தெரியும்
அடக்கப்பட்டவர் கிளர்ந்தே எழுவர்
அப்போதென் மௌனம் உடைந்து சிதறும்;
அவர்களின் எழுச்சியில்
வெடித்தெழும் என் பேச்சு.
இரண்டாவதாக மனோ மோகனின் கவிதை. மனோ மோகனின் “பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி” கவிதைத் தொகுப்பிற்கு ரமேஷ் பிரேதன் எழுதிய முன்னுரையையும் இங்கே வாசிக்கலாம் http://manomohanthepoet.blogspot.in/2012/09/blog-post_29.html
வார்த்தை விளையாட்டு
தேர்ந்த கதைசொல்லியான நீ வரலாறெழுதத் திட்டமிடுகிறாய்
நான்காயிரம் வருடமாய் ஆற்றங்கரையில் புதைந்திருந்த எருது
குதிரையாக மாறி கனைக்கத் தொடங்குகிறது
நீயெழுதும் அந்த எருதைப் பற்றிய ஆவணக் குறிப்புகளுக்கு
வெள்ளைக் குதிரையின் கதை எனப் பெயரிடுகிறாய்
எம திசையில் பிணமெரிக்கும் நாகார்ஜுனனை
புத்தனென்றே விளிக்கிறாய்
தியான புத்தனின் பின்னால் சுவரில் பதியும்
நிழலை விநாயகனென்று வழிபடுகிறாய்
வார்த்தையென்பது ஒரு கண்ணாமூச்சி
உனது வார்த்தையை வேடிக்கை பார்க்க வந்த என்னையும்
சொல் விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறாய்
மொழியின் பொருண்மை வெளியில் ஆட்டம் தொடங்குகிறது
தூய்மை விரும்பியான நீ பூனைக்குட்டியாக
மாறி ஒளிந்துகொள்கிறாய்
நான் கொழுத்த பன்றியாகி வார்த்தைகளைக் கிளறுகையில்
மல வாடை வீசுவதாய் முகம் சுழிக்கிறாய்
சினந்த இராணுவ வீரனின் தொனியில்
எனக்கும் நீயே பெயரிடுவதாகக் கூறி
என்னை ஒளிந்துகொள்ளச் சொல்கிறாய்
பிடிமானமற்று சரியும் வார்த்தைகளின் வெளியில்
பதுங்கு குழி தேடிக் களைத்துப் போகிறேன்
நான் மூச்சு வாங்கும் கணத்தில் நீ கொழுத்த பூனையாக மாறி
முட்டுச் சுவரில் எழுதத் தொடங்குகிறாய்
என் பெயரை சுண்டெலியென
மூன்றாவதாக தேவதேவனின் கவிதை
மேக முடி சூடி
எல்லாவற்றிற்கும் அப்பால்
மகாமவுனமாய் அமர்ந்திருக்கும்
பிரக்ஞையற்ற மெய்மையல்ல;
ஒரு சிகரம் தன் உக்கிரம் குன்றாது
தன் பள்ளத்தாக்கினை
உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் பார்வை.
ஓய்ந்து போய்
நமக்கு நாமே
உபயோகமற்ற ஆறுதல் வேண்டி
நம் வழிபாட்டுக்குரியதாய்ச் செதுக்கிக்கொண்ட
உயிர்மையற்ற விக்கிரகமல்ல;
மானுடத் துயரும், நீதியின்மேல்
பசி தாகமும் கொண்டோர்
நெஞ்சிற் கனலும் வேட்கை.
விழிப்பு
தயை
மெய்ஞ்ஞானம் தந்த
உன்னதப் பொலிவு
உலராத புன்னகை
உறுதிமயமான இருப்பு
உருளும் தர்ம சக்கரம்
ஒளி.
No comments:
Post a Comment