நண்பர் ‘அடையாளம்’ சாதிக் தமிழில் மொழிபெயர்ப்பதற்காக நூறு நாவல்களை பரிந்துரைக்க முடியுமா என்று என்னை கேட்டார். அவருக்காக தயாரித்த பட்டியலையும், சிறு குறிப்புகளையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்தேன். நண்பர்கள் சிலர் அவற்றை தொடர்ந்து வலைத்தளத்தில் பகிர்ந்தால் மீண்டும் தேட, வாசிக்க வசதியாக இருக்கும் என்று கடிதமெழுதியதால் பகிர்வுகளை இங்கே மாற்றுகிறேன்.
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் - (தரவரிசைப்படி அல்ல) 1 மிலொரெட் பாவிக்கின் (Milorad Pavic) Last love in Constantinople
--------------------------------------------------------------------------
யூலியா கோர்த்தசாரின் Hopscotch நாவல் போன்ற வடிவத்தை உடையது மிலொரெட் பாவிக்கின் Last Love in Constantinople. பாவிக்கின் வடிவ உத்திகள் பிரசித்தமானவை, தனித்துவமானவை என்றாலும் அவை அவர் ஒவ்வொரு நாவலிலும் முன்வைக்கும் கலைப் பார்வையை மேம்படுத்துபவை, அவற்றோடு ஒன்றிணைந்தவை. வடிவ உத்தி, உத்தியாக மட்டும் துருத்திக்கொண்டிருப்பதில்லை. ஜோதிட அதிர்ஷ்ட அட்டைகளின் வழி கதை சொல்லுதல் இந்த நாவலில் சந்தர்ப்பங்களின் வழி வாழ்வும், சரித்திரமும், காதலும் கூடி வருவதைச் சொல்வதாகிறது. இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த பத்தி:
“You know what, my dear, I learned something in war. Those of my peers in the unit who were to die earlier were wiser and knew more about the world around them than the others, and that is how we recognized them and sensed that they would soon be killed. They knew that every murder is committed with a thousand years of premeditation . . . The others, who were to die later, were more stupid. But none of that had anything to do with the innate brightness or dull-wittedness of the ones or the others. So, there are two cases. We belong to the latter.' 'How do you mean?' 'We are happy lovers. Aren't we? And happiness makes one stupid. Happiness and wisdom do not go together, just as body and thought do not go together. Because only pain is the thought of the body. In other words, happy people become stupid people. It is only when they get tired of their happiness that lovers can become wise again, if that is what they otherwise are. So let us not decide now about unbelting my sabre . . . Your steps”
http://www.amazon.com/Last-Love-Constantinople…/…/080231323X
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் - 2 Ursula K le Guin எழுதிய அறிவியல் புனைவு “The left hand of darkness”
------------------------------------------------------------------------
“Light is the left hand of darkness
and darkness the right hand of light.
Two are one, life and death, lying
together like lovers in kemmer,
like hands joined together,
like the end and the way.”
-Ursula K le Guin "The Left hand of Darkness"
http://www.amazon.com/Left-Hand-Darkness-Ursul…/…/0441478123
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் - 3 ஜார்ஜ் பெரெக் (Georges Perec) எழுதிய Life A User’s Manual
---------------------------------------------------------------------------------
ஜார்ஜ் பெரெக் (Georges Perec) எழுதிய Life A User’s Manual 1978 இல் ஃப்ரெஞ்சில் வெளிவந்தது. ஆங்கிலத்தில் 1987இல் டேவிட் பெல்லோஸினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1992-இல் இந்த நாவலை நான் முதன் முதலாகப் படித்தேன். படித்த நாளிலிருந்து நான் மீண்டும் மீண்டும் படிக்கின்ற நாவலாய் இது இருக்கிறது. இடாலோ கால்வினோ, பெரெக்கினை தனக்கு ஒப்புமை இல்லாத தனித்துவ எழுத்தாளர் என்று அழைத்தார். பெரெக் நாவலில் தனித்துவமான வடிவத்தை ஏற்படுத்தியவர். நாவலின் நாயகனான பார்ட்டில்பூத் தன்னுடைய பாரிஸ் நகர அபார்ட்மெண்ட்டில் இறந்து கிடப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. பார்ட்டில்பூத் இரண்டு உலகப்போர்களின் நடுவே இருபதாண்டுகள் பயணம் செய்து பலதுறைமுகங்களைக் கண்டு அவற்றை நீரோவியங்களாக ஃபிரான்ஸிற்கு அனுப்பி வைக்கிறான். அவற்றை வெட்டி, புதிர்களாக puzzles மாற்றிவைக்கிறான் பார்ட்டில்பூத்தின் நண்பன் காஸ்பார் வின்க்லர். இந்தப் புதிர்களை மீண்டும் நீரோவியங்களாக சீரமைக்கின்றபடியாக கதை சொல்லப்படுகிறது. புதிர்கள் அவிழ்வது உறைந்துவிட்ட காலத்தில். அதாவது நாவலில் ஜூன் மாதம் 1975 ஆம் ஆண்டு 23 ஆம் தேதி பார்ட்டில்பூத்தின் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்படுகிறது. கதை அவருடைய அபார்ட்மெண்டில் இருக்கும் ஒவ்வொரு அறையாக நகர்ந்து அதில் வாழ்ந்த கதாபாத்திரங்களைப் பற்றி சொல்வதாக இருக்கிறது. நீரோவியங்கள் அனைத்தும் ஒரு தருணத்தில் கலைந்து வெறுமையாகிவிடுகின்றன.
அசாத்தியமான நாவல் வடிவத்தினை உடைய Life A User’s Manual நினைவு, வாழ்கின்ற தருணம், வாழந்த தருணம், அதன் பதிவுகள், அதன் எல்லைகள் ஆகியவற்றினை விளையாட்டாகவும் எல்லையுடையதாகவும் முன்வைக்கிறது. ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசெஸ் நாவலைப் போல இதுவும் ஒரு மாஸ்டர்பீஸ். புதிர்கள் அவிழ்வது ஒரு துப்பறியும் கதை போல இந்நாவலில் கதை நகர்கிறது. கதை மாந்தர்களையும் அவர்களுடைய செயல்களையும் நாம் வெகு அருகிலிருந்து உன்னிப்பாக கவனிக்கிறோம்.
எனக்குப் பிடித்த பத்தி: “From this, one can make a deduction which is quite certainly the ultimate truth of jigsaw puzzles: despite appearances, puzzling is not a solitary game: every move the puzzler makes, the puzzlemaker has made before; every piece the puzzler picks up, and picks up again, and studies and strokes, every combination he tries, and tries a second time, every blunder and every insight, each hope and each discouragement have all been designed, calculated, and decided by the other.”
http://www.amazon.in/Life-Users-Manual-Georges…/…/0099449250
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 4 & 5 விளாடிமிர் நபகோவின் (Vladimir Nabakov), “Despair” மற்றும் “Ada”
----------------------------------------------------------
வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ். அவருடைய “லோலிதா” மிகப் பெரும் வெற்றியடைந்த நாவலாக மாறியபோது அதை அமெரிக்க விமர்சகர்கள் பலரும் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு விமர்சனத்திற்கு உட்படுத்தி விளக்கம் அளித்தபோது பதின்பருவ சிறுமியோடு ஒரு நடுத்தரவயதினனுக்கு ஏற்படும் காம ஈர்ப்பு ஆழமான நகைச்சுவையோடும் அதன் புதிர்த்தன்மை குறைவுபடாமலும் அணுகப்படவேண்டும், விளக்கங்கள் அளித்து அதன் புதிர்த்தன்மையினை அழித்துவிடலாகாது என்று நபகோவ் கூறினார். உளப்பகுப்பாய்வு முடிவுகள் தொடர்ந்தபோது அவர் ஃபிராய்டினை Sick Mind Fraud என்று அழைக்கவும் தயங்கவில்லை. “லோலிதா”வை விட மிக அதிகமான புதிர்த்தன்மை வாய்ந்த நாவலாக “ Despair” நாவலையே கருத வேண்டும். நவீன இலக்கியத்தில் இரட்டைகள் கலா உத்தியாக மாறி தன்னிலையைப் பற்றி அதிகமும் சொல்லக்கூடியதாக, நாவலில் கதை சொல்லுதலைப் பற்றி அதிகமும் சொல்லக்கூடியதாக உணரப்பட்டபோது அதன் நுட்பங்களை புதிர்த்தன்மையோடு விவரித்த நாவல் “Despair”. போர்ஹெஸின் “Borges and I” சிறுகதையின் நீட்சி போலவும் Despair நாவலை வாசிக்கலாம்; ஆனால் நபகோவின் புதிர் என்னவென்றால் கதையின் நாயகனான ஹெர்மானும் அவன் இரட்டையான ஃபெலிக்சும் தோற்றத்திலோ, குணத்திலோ, வாழ்நிலை சூழல்களிலோ ஒருவரைப் போல ஒருவர் இருப்பதில்லை. தன்னைத் தானே கொலை செய்துகொள்ள விரும்பும் ஹெர்மான் ஒரு சாக்லேட் தொழிற்சாலை முதலாளி. அவன் தன் மனைவி தன்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக நம்புகிறான் ஆனால் அவளுக்கு ஒரு கள்ள உறவு இருப்பதும் அவனுக்குத் தெரியும். ஹெர்மான், பிச்சைக்காரன் போல தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஃபெலிக்சை ஏன் தன்னுடைய இரட்டையாக உணர்கிறான் என்று ஏதும் விளக்கமில்லை. ஆனால் அவனிடம் தன்னுடைய அடையாள அட்டை அனைத்தையும் கொடுத்து அவனை ஹெர்மானாக மாற்றி அவனை சுட்டுக் கொன்று விடுகிறான். போலீஸ் கொலைகாரன் ஹெர்மானை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவர்கள் அவனை கைது செய்தபின் கதைசொல்லல் தன்னிலைக்கு மாறிவிடுகிறது. ஹெர்மானின் டைரிக்குறிப்புகளை நாம் வாசிக்கிறோம் அதில் அதன் கடைசி பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருக்கிறது. நபகோவின் இன்னொரு நாவலான “Invitation to a beheading”, போலவே “Despair” நாவலும் காப்ஃகாவும் தாஸ்தோவ்ஸ்கியும் சேர்ந்து எழுதியதோ என்ற சந்தேகத்தை உருவாக்கும். ஆனால் தாஸ்தோவ்ஸ்கியின் ரஸ்கல்னிக்கொவின் மனம் போல நபகோவின் ஹெர்மானின் மனம் புலம்புவதில்லை ஊளையிடுவதில்லை. நபக்கோவும் தாஸ்தோவ்ஸ்கி போல கிறித்துவிடம் நம்பிக்கை வைத்தவரில்லை. தாஸ்தோவ்ஸ்க்கியின் நாவல்களின் நாடகீயத்தினை நபகோவ் பலமுறை ஏளனம் செய்திருக்கிறார். Despair நாவலை ஜெர்மன் சினிமா இயக்குனர் ஃபாஸ்பைண்டர் பிரமாதமான படமாக எடுத்திருக்கிறார்.
நாவலில் ஒரு பத்தி: “That man, especially when he slept, when his features were motionless, showed me my own face, my mask, the flawlessly pure image of my corpse […] in a state of perfect repose, this resemblance was strikingly evident, and what is death, if not a face at peace – its artistic perfection? Life only marred my double; thus a breeze dims the bliss of Narcissus; thus, in the painter’s absence, there comes his pupil and by the superfluous flush of unbidden tints disfigures the portrait painted by the master.”
“Ada” நாவலைப் பற்றி நான் ஏற்கனெவே விரிவாக எழுதிருப்பதால் நான் இங்கே குறிப்பெதுவும் எழுதப்போவதில்லை. ஆனால் வாழ்நாளில் ஒருவன் மொழியின் வீச்சுக்கும் அழகுக்கும் மட்டுமே படிக்க வேண்டிய நாவல் ஒன்று உண்டென்றால் அது Ada நாவல்தான்.
நபகோவின் The real Life of Sebastian Knight, Pale Fire ஆகிய நாவல் பிறருக்கு பிடித்தமான நாவல்களாக இருக்கக்கூடும்.
http://www.amazon.com/Despair-Vladimir-Nabokov/dp/0679723439
http://www.amazon.com/Ada-Ardor-Penguin-Moder…/…/ref=sr_1_1…
எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் - 6 & 7 மரியோ வர்காஸ் லோசா ( Mario Vargas Llosa) “Aunt Julia and the Scriptwriter”, மற்றும் “Death in the Andes”
—————————————————————
என்னுடைய நண்பர்கள் பலருக்கும் லோசாவின் “Conversations in the cathedral”, The war of the end of the world” ஆகிய நாவல்கள்தான் பிடிக்கும் எனக்கு மட்டும்தான் Aunt Julia and the Scriptwriter மற்றும் Death in the Andes ஆகிய நாவல்கள் பிடித்த நாவல்களாக இருக்கின்றன.
Aunt Julia and the Scriptwriter ஒரு பிரமாதமான நகைச்சுவை நாவல் மட்டுமல்ல, எழுத்து, கலை, பாப்புலர் மீடியா, கதை சொல்லல், யதார்த்தத்திற்கும் கதைசொல்லலுக்கும் உள்ள உறவு ஆகியனவற்றையும் பற்றி கலைப்பார்வையை வாசகனின் அசைபோடுதலுக்கு உருவாக்கித் தருகின்ற நாவலுமாகும். நாவலின் கதையை லோசா இரண்டு தளங்களில் வடிவமைத்திருக்கிறார். ஒரு தளம் லோசாவின் சுயசரிதையை ஓட்டி எழுதப்பட்டுள்ள அத்தியாயங்கள் இன்னொரு தளம் கதை சொல்லியும் நாயகனுமான மரியோ வேலை பார்க்கும் வானொலி நாடக எழுத்தாளர் பெட்ரோ கமோச்சோ ஒலிபரப்பும் கதைகள். சுயசரிதைக் கதை ஒரு அத்தியாயம் என்றால் அடுத்த அத்தியாயம் பெட்ரோ கமோச்சோவின் கதை என்று நாவல் நகர்கிறது. சுயசரிதைக் கதையில் 19 வயதான மரியோ எழுத்தாளனாகும் முயற்சியில் பெட்ரோ கமோச்சோவோடு வேலை பார்க்கிறான். அவனுக்கு 32 வயதான ஒன்றுவிட்ட அத்தை முறையுடைய ஜூலியாவோடு காதல் ஏற்படுகிறது. இந்தக்காதல் யதார்த்த தளத்தில் நடந்துகொண்டிருக்கும்போதே லிமா நகரமே பெட்ரோ கமோச்சோவின் வானொலி நாடகங்களில் மயங்கிக்கிடக்கிறது. Sensational soap opera கதைகள் தினமும் பட்டி விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் போல புதிருடனும் கூடுதலாக புதிருடனும் முடிகின்றன. உதாரணமாக ஒரு கதையில் போலீஸ்காரன் ஒருவன் கற்கால ஆப்பிரிக்கன் ஒருவனை தற்செயாலக கண்டுபிடிக்கிறான். ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கும் அந்த கற்கால ஆப்பிரிக்கன் பட்டினியாகக் கிடக்கிறான்; நிர்வாணமாக இருக்கிறான். நகர நிர்வாகத்திற்கு அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனை கொன்றுவிடலாம் என்று முடிவாகிறது. போலீஸ்காரனிடம் அவனைக் கொல்லவேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அவன் அந்த கற்கால ஆப்பிரிக்கனை கொன்றானா இல்லையா என்ற கேள்வியோடு அன்றைய வானொலி நாடகம் முடிகிறது. தினசரி இந்த மாதிரி கடுமையான அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய கதைகளை எழுதக்கூடிய பெட்ரோ கமோச்சோவை முதலில் ஒரு surreal clown போல மரியோ சித்தரிக்கிறான். ஆனால் நாவல் நகர நகர பெட்ரோ கமோச்சோவின் கதைகள் சிக்கலாகின்றன, மரியோ பெட்ரோ கமோச்சோ சார்த்தரின் committed writer என்பதற்கான ஒரு சீரிய நகைச்சுவை உதாரணம் என்று உணர்கிறான் அவனுக்கு அவர் மேல் மரியாதை கூட ஏற்படுகிறது. பெட்ரோ கமோச்சோவின் வானொலி நாடக கதாபாத்திரங்களும் மரியோ, ஜூலியோ ஆகியோரின் வாழ்க்கையும் நாவலின் இறுதிப்பகுதியில் கால்ப்பந்து மைதானத்தில் இணைகிறது. லோசாவின் மொழி மார்க்வெசின் மொழி போல கவித்துவமானதல்ல, ஆனால் மார்க்வெசின் மொழி போல ஒரே நடையினை உடையதும் அல்ல. பல்வேறு நடைகளைக் கையாளுவது போலவே லோசா பல்வேறு நாவல் வடிவங்களைக் கையாளுகிறார். அவருடைய எந்த ஒரு நாவலும் இன்னொரு நாவலைப் போல இருப்பதில்லை.
இந்த நாவலில் வரும் ‘’Why should those persons who used literature as an ornament or a pretext have any more right to be considered real writers than Pedro Camacho, who lived only to write? Because they had read (or at least knew that they should have read) Proust, Faulkner, Joyce, while Pedro Camacho was very nearly illiterate? … I felt sad and upset. It was becoming clearer and clearer to me each day that the only thing I wanted to be in life was a writer. … I didn’t want in the least to be a hack writer or a part-time one, but a real one, like - who?” என்ற பத்தி மிகவும் பிரசித்தமானது.
“Death in the Andes” நாவலை லோசா பெரு நாட்டின் அதிபர் பதவிக்கு நின்று தோற்ற பிறகு, இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற பிறகு எழுதினார். அனேகமாக அத்தனை இலக்கிய விமர்சகர்களுமே லோசாவின் தோல்வியுற்ற நாவல் என்றுதான் இந்த நாவலை விமர்சிக்கிறார்கள். ஆண்டிஸ் மலைதொடரில் வாழும் பழங்குடி மக்களின் வழக்காறுகளால் நிரம்பிய இந்த நாவல் மட்டும்தான் லத்தீன் அமெரிக்க நாவல்களின் மாந்தரீக யதார்த்த பாணியில் லோசாவால் எழுதப்பட்டது. லோசாவின் இன்னொரு நாவலான “Who Killed Palomino Molero?” வரும் போலீஸ்காரர் லித்துமா இந்த நாவலில் ஆண்டிஸ் மலைப்பகுதிக்கு மாற்றலாகி வருவதோடு கதை ஆரம்பிக்கிறது. ஆண்டிஸ் மலைப்பகுதி பழங்குடி மக்களின் வாழ்க்கை Shining Path தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது லித்துமாவின் மூன்று பழங்குடி உதவியாளர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க லித்துமா அலைவதோடு கதையும் சொல்லப்படுகிறது.
லோசாவின் “Storyteller”, “In praise of stepmother” ஆகிய நாவல்களும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள் ஆனால் இந்த நூறு நாவல்கள் பட்டியலில் ஒரு ஆசிரியருக்கு இரண்டு நாவல்கள் மட்டுமே போதும் என்று நான் நினைத்திருப்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
http://www.amazon.com/Aunt-Julia-Scriptwriter-…/…/0312427247
http://www.amazon.in/Death-Andes-Mario-Vargas-…/…/0312427255
No comments:
Post a Comment