யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டி ஒருத்தனை சிறைக்கு அனுப்பி அவன் வாழ்க்கையை சீரழித்த பின்பு அவன் மேல் குற்றம் சாட்டியது தவறு, உண்மை வேறு என்று தெரியவந்தால் அதற்கான பிராயசித்தம் என்ன? அதுவும் குற்றம் சாட்டியது ஒரு எழுத்தாளர் என்றால் எழுதி பிராயசித்தம் தேட முடியுமா என்பதை ஆராய்கிறது அயன் மக் ஈவனின் நாவல் “Atonement” (பிராயசித்தம்). 2001 இல் வெளிவந்த இந்த நாவலைப் பற்றி நான் பல முறை உரையாற்றிருக்கிறேன். தாஸ்தவ்ஸ்கியின் குற்ற களம், அயன் மக் ஈவனின் கதை சொல்லலினால் எப்படி மனசாட்சியில் வடிவம் கொள்ளாமல் கற்பனையில் திரள்கிறது என்பதை எனக்கு என் உரைகளில் சொல்லி மாளாது. ஐரோப்பிய நாவலின் களத்தினை குற்றமும் தண்டனையுமிலிருந்து , குற்றமும் கற்பனையும் பிராயசித்தமும் என்ற தளத்திற்கு நகர்த்திய நாவல் “Atonement”. இருபதாம் நூற்றாண்டில் ஆங்கில நாவல் பிரித்தானிய தீவுகளைத் தவிர மற்ற எல்லா தேசங்களிலும் எழுதப்படுகிறது, வில்லியம் கோல்டிங்கிற்குப் பிறகு பெரிதாக நாவலே பிரித்தானிய தீவுகளில் இல்லை என்று தொடர்ந்து பேசப்பட்டபோது இல்லை இங்கிலாந்திலும் ஆங்கில நாவல் உயிர்ப்புடன் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் எழுதியவர்களில் முக்கியமானவர் அயன் மக் ஈவன். அவர் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதைகள் தொகுப்பு First Love, Last Rites (1975), In Between Sheets and Other stories (1978), முதலிரண்டு நாவல்கள் The Cement Garden (1979), The Comfort of Strangers (1981) ஆகியன பதின்ம வயதினரின் வன்முறையான பாலியல் உறவுகளை சித்தரித்ததால் மக் ஈவனின் எழுத்து அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்தது எனற பொதுக் கருத்தினை உருவாக்குவதாக இருந்தது. அடோன்மெண்ட் நாவல் வருவதற்கு முன் மக் ஈவன் தொலைக்காட்டிச் நாடகங்கள் சினிமாவுக்கான திரைக்கதைகள் என பல எழுதினார். எல்லாமே பொதுவாக மக் ஈவனை தீமையின் சித்தரிப்புகளை துல்லியமாக ஆனால் விலகலுடன் எழுதக்கூடியவராக ஆனால் யாதார்த்தவாத எழுத்தாளராகவே உலகுக்கு காட்டின. ஆனால் அடோன்மெண்ட் மக் ஈவனின் கலை வேறுவிதமான பின் நவீனத்துவ கூறுகள் நிரம்பியது என்று காட்டி வாசிப்பு உலகை திகைக்க வைத்தது.
அடோன்மெண்ட் நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் மக் ஈவனின் கலையை விளக்க இயலாது. மூன்று பாகங்கள், நான்காவதாக பின்கதை இணைப்பு என பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பாகமே நாவலில் பாதிக்கு இருக்கிறது. முதல் பாகத்தில் பிரியோனி டால்லிஸ் என்ற 13 வயது பெண் தன்னுடைய பெற்றோருடன் கிராமப்புற வீட்டில் வாழ்ந்து வருகையில் நடைபெறுகிற சம்பவங்களை விவரிக்கிறது. பிரியோனி எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சியமுடையவள், நிறைய எழுதிப் பழகுகிறாள். பிரியோனியின் சகோதரி சிசிலியாவும் வீட்டில் வேலைசெய்பவர்களின் மகனான ராபியும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஒன்றாகப் படிக்கிறார்கள். அவர்களும் அவர்களுடைய தாய்வழி மாமா பிள்ளைகளும் லோலா ஃபிலிப் ஆகிய நண்பர்களும் கோட விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறார்கள். பிரியோனி ராபியும் சிசிலியாவும் உடலுறவு கொள்வதை தற்செயலாக பார்த்துவிடுகிறாள். ராபி ஒரு செக்ஸ் வெறியன் என்ற எண்ணம் பிரியோனிக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு நாள் லோலாவை யாரோ வன்புணர்வு செய்வதை பிரியோனி பார்த்துவிடுகிறாள்; அவ்வாறு வன்புணர்வு செய்தவன் ராபிதான் என்று முடிவுக்கு வரும் அவ்வாறே போலீசுக்கும் சாட்சி சொல்ல ராபி சிறை செல்கிறான். சிசிலியாவும் அவர்களுடைய தாயையும் தவிர யாரும் ராபி குற்றமற்றவன் என்று நம்புவதில்லை. ராபி சிறை சென்றபின் சிசிலியா மீண்டும் பல்கலைக்கு சென்று படிப்பைத் தொடராமல் செவிலியாக பயிற்சி எடுக்க செல்கிறாள். சிசிலியாவும் சிறையிலிருக்கும் ராபியும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் உலகப் போர் வெடிக்கிறது. சிறையிலிருக்கும் ராபி ராணுவத்தில் சேர்ந்து போருக்கு செல்லவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப் படுகிறான். அவன் சிசிலியாவை போருக்குச் செல்லுமுன் அரை மணி நேரம் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் அவளை முத்தமிட்டு பிரிந்துபோய் போர்முனையில் அவளையே நினைத்து கற்பனையில் வாழ்கிறான். பிரியோனியும் லண்டனுக்கு சென்று செவிலியாகிறாள். மூன்றாம் பாகத்தில் பிரியோனி தொடர்ந்து எழுதக்கூடியவளாக இருக்கிறாள் ஆனால் அதிகம் எழுத ஆசைப்படுவதில்லை. அவளுக்கு லோலாவை வன்புணர்வு செய்தவன் ராபி அல்ல ஃபிலிப் என்று ஒரு கட்டத்தில் தெரியவருகிறது அந்த உண்மை தெரியவரும்போது லோலாவும் ஃபிலிப்பும் மண்ம செய்துகொண்டு தம்பதிகளாகியிருக்கின்றனர். பிரியோனிக்கு போர் முனையில் செவிலியாக பணிபுரியும்போது சாகக்கிடக்கும் ராணுவ வீரன், லுக் என்பவனோடு மெலிதாக காதல் ஏற்படுகிறது. அவனை மணந்துகொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் ஆழ்கிறாள். சிசிலியாவும் ராபியும் அவளை மன்னிக்க மறுத்துவிடுகிறார்கள். பிரியோனி ராபி குற்றமற்றவன் என்று நிறுவுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறாள். நாவலின் நான்காவது பகுதியில் இதுவரையிலான மூன்று பாகக் கதையினை எழுதியவள் பிரியோனி என்று தெரியவருகிறது. அவள் தன் நாவலில் காதலர்களான சிசிலியாவையும் ராபியையையும் சேர்த்து வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் சேரவில்லை என்று அறிகிறோம். 77 வய்தாகியிருக்கும் பிரியோனி நாவலின் வேறுபட்ட கதைப்போக்கு முடிவுடன் கதையை திரும்ப எழுதி வேறு வகையான பிராயசித்தம் தேடலாமா என்று யோசிப்பதோடு நாவல் முடிகிறது.
கடைசி பாகத்தில்தான் மக் ஈவன் எழுதியிருப்பது யதார்த்தவகை நாவலல்ல இது மெடாஃபிக்ஷ்ன் நாவல் என்று தெரிகிறதா என்றால் அதுதான் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பல நூறு உட்குறிப்புகள கொடுக்கப்படுகின்றன. ஆனால் நாவலை வரிக்கு வரி உன்னிப்பாக அணுக்கமாக வாசிக்காதவர்கள் மக் ஈவனின் நாவல் ஒரு மெடாஃபிக்ஷன் என்று உணரவே முடியாது. நாவலின் ஆரம்ப இரங்கற்பாவிலேயே இந்த புனைவு எப்படிப்பட்டது அதை எப்படி வாசிக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. ஜேன் ஆஸ்டனின் நாவல் “Northanger Abbey” எடுக்கப்பட்ட மேற்கோள் மற்றவருடைய வாழ்க்கையைப் பற்றிய கற்பனை எப்படி அடுத்தவரை பலிகடா ஆக்கக்கூடியது, என்று சொல்கிறது. ஆனால் மற்ற்வருடைய வாழ்க்கையை பற்றி கற்பனை செய்யாமல் எப்படி நாவல் எழுதுவது? நாவலின் கதை சொல்லி பிரியோனி ங்கள் வீட்டில் நடந்த சம்பவங்களைப் வைத்து எழுதுகின்ற ஒரு நாடகத்தோடு நாவல் ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த நாடகத்தின் மொழி நவீன இலக்கியமாக ஏர்றுக்கொள்ளத்தக்க மொழியாக இருக்கிறது. இந்த நவீன மொழியின் வழி விளைந்த கற்பனையே பிரியோனியை ராபியை தவறாக குற்றம் சாட்டத் தூண்டுகிறது. நாவலின் கதை சொல்லி வர்ஜினீனியா வுல்ஃபோ என்று சந்தேகிக்கத்தக்க அளவு வர்ஜீனியா வுல்ஃபின் The Waves , Between the Acts, To the lighthouse ஆகிய நாவல்களை நினைவுபடுத்தும் பல பத்திகள். வர்ஜீனியா வுல்ஃபின் பாதிப்பு இந்த நாவலில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மக் ஈவனின் நடைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் வீட்டோடு இருக்கும் பெண்கள் அனைவரும் ரமணிச்சந்திரன், லஷ்மி, ஆகியோரின் நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகிய புனைவுகளுக்குள் சிக்கியிருப்பது போல வர்ஜினீயா வுல்ஃபின் புனைவுகளுக்குள் இங்கிலாந்தின் வாசகர்கள் சிக்கியிருந்தார்களோ? என்ன மாதிரியான மெடாஃபிக்ஷன் நாவல் அடோன்மெண்ட்? தெற்கு இங்கிலாந்தின் இரண்டாம் போர்க்கால வருடங்களில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்வதான தோற்றத்தைக் கொண்டிருக்கும் அடோன்மெண்ட்டின் பிரதியினை அகழ்ந்து அகழ்ந்து நாம் படிக்கும்போது போர் என்பதே யாருடைய கற்பனையில் விளைந்தது? என்ன் மாதிரியான கற்பனை அது? போர்க்காலத்தை என்ன கற்பனைகளைக்கொண்டு மக்கள் திரள் கடந்தது? கற்பனையின் உள்ளீடுதான் என்ன? ஆங்கில அமெரிக்க விமர்சகர்கள் அடோன்மெண்ட் நாவலில் பிற நாவல்களுக்கான ஊடுபாவு குறிப்புகளை ஏராளமாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருகிறார்கள். அவர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் அடோன்மெண்ட் எவ்வளவு செறிவான பிரதி என்பது அதிசயிக்கத்தக்க அளவில் தெரியவருகிறது. தாஸ்தவ்ஸ்கியை ஐரோப்பிய நாவல் எத்தனையோ தளங்கள் தாண்டி ஓடிவிட்டது. ஆனால் gothic romance நாவல்களைப் படித்து, அதன் கற்பனைக்கும் புனைவுக்கும் பலியாகி உலகை வென்று வர சாஞ்சோ பாஞ்சோவின் துணையுடன் கிளம்பிய டான் கெஹிட்டேயின் நிழல் மக் ஈவனின் அடோண்மெண்ட் வரை நீண்டுகிடக்கிறது. ஃபுயெண்டெஸின் கதைசொல்லிகளைப் போலவே மக் ஈவனின் கதைசொல்லியும் நம்பகத்தகுந்தவளாக இல்லை. லோசாவின் கதாபாத்திரமோ என்று கூட பிரியோனியை நாம் சந்தேகப்படலாம். வித்தியாசங்கள் என்னவென்றால் மக் ஈவனின் கதாபாத்திரங்கள் முற்றிலும் பிரித்தானிய தீவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாவலும், அதன் பிரித்தானிய கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உள்ளடங்கிய உணர்ச்சிகளைப் போலவே, தன் மெடாஃபிக்ஷன் தன்மையினை ஒளித்துவைத்திருக்கிறது. நாவலை வாசித்து முடிந்த பின்பும் பிராயசித்தம் என்றால் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
http://www.amazon.com/Atonement-A-Novel-Ian-McEwan/dp/038572179X
No comments:
Post a Comment