Monday, April 13, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 11- ஹருகி முராகமி (Haruki Murakami) “1Q84”

தமிழில் சமீபத்தில் அதிகமும் மொழி பெயர்க்கப்பட்ட ஆசிரியர் ஹருகி முராகமியாகத்தான் இருக்க வேண்டும் . சென்னை புத்தகக்கண்காட்சியில் முராகமியின் ‘நார்வேஜியன் வுட்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். சில பக்கங்களைப் புரட்டி பார்த்து சில பத்திகளை வாசித்துப் பார்த்தேன். தமிழே விசித்திரமாக இருந்தது. ஏர்டெல்லின் மாதாந்திர மொபைல் பில் கூட விளங்கிவிடும்  போல ஆனால் இந்த முராகமி நாவல் தமிழில் சுத்தமாகப் புரியாது என்று தோன்றியது. திருச்செந்தூர் முருகனுக்கு நேர்ந்து புத்தகத்தை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அப்பன் முருகன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.

முராகமியின் 1Q84 நாவலில் வரும் ஒரு அத்தியாயம் ‘பூனைகளின் நகரம்’, தனியாக சிறுகதையாகவும் வாசிக்கப்படுகிறது சிறுகதையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையை எங்கே வாசித்தேன் என்று குறித்துவைத்துக்கொள்ளவில்லை ஆனால் நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தது. முராகமியின் உரைநடை எளிமையானது ஆகையால் மொழிபெயர்ப்பது சிரமமாக இருக்காது. மூன்று பாகங்களைக் கொண்ட பெரிய நாவலான 1Q84 தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டால் புதிய புனைவுலகம் தமிழுக்கு அறிமுகமாகும். 

ஹருகி முராகமியின் புனைவுலகம் எப்படிப்பட்டது? அது லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் மூலமாக அறிமுகமான மாந்தரீக யதார்த்தவாத இலக்கிய வகையைச் சார்ந்ததும் இல்லை, ஜப்பானிய மரபிலிருந்து கிளைத்த காவபட்டா நாவல் வகையும் இல்லை. முராகமியின் புனைவுலகம் உலகமயமான சமகால ஜப்பானிய சமூகத்தின் நனவிலியை நோக்கி கீழே இறங்கிச் செல்வதாக இருக்கிறது.   “கீழே இறங்கிச் செல்லுதல்” என்பது தனது எழுத்தில் அலுப்பூட்டக்கூடிய அளவில் ஏணியில் இறங்குதல், கிணற்றுக்குள் இறங்குதல் என பலவகைகளிலும் வர,  இறங்கியபின் கதையில் தள மாற்றம் நிகழ்வது தனக்கே பிடிக்கவில்லை என முராகமி ஒரு பேட்டியில் சொல்கிறார். அதனால்தானோ என்னவோ 1Q84 நாவலில் கதையின் நாயகி அமோமி முதல் அத்தியாயத்தில் டோக்கியோ நகர பாலமொன்றில் மேலேறிச் செல்லும்போது நனவின் தள மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. டோக்கியோவில் வசிக்கும் முராகமி டோக்கியோவில் மாயாஜாலங்கள் எதுவும் நிகழ்வதில்லை, பறக்கும் கம்பளங்கள் போன்ற மாயப்பொருட்கள் எதுவும் காணக்கிடைப்பதில்லை மயாஜாலங்கள் நிகழவேண்டுமென்றால் நீங்கள் உங்களுள்ளேயே உங்கள் மனதின் அடியாழத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார். முராகமியின் நாவல்கள் இப்படி ஜப்பனியர்களை அவர்கள் மனதின் அடியாழத்துக்கு உண்மையிலேயே கூட்டிச் செல்கிறது போலும். ஓவ்வொரு முரகாமி நாவல் வெளியீட்டின் போதும் ஒட்டு மொத்த ஜப்பானே அதை எதிர்பார்த்து காத்திருக்கிறது. முராகமியின் நாவல்களின் கரு என்ன என்று  பலவிதமான யூகங்கள் வெகுஜன ஊடகங்களில் எழுப்படுகின்றன. அதனால் முராகமி 1Q89 நாவலின் கருவை படு ரகசியமாக வைத்திருந்தார். நாவல் வெளியான மூன்று மணி நேரத்திலேயே நான்கு மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.  2008-2009 ஜப்பானிய மொழியில் வெளியான 1Q84 நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2011 இல் ஆங்கிலத்தில் வெளியானது அது இன்றுவரை தொடர்ந்து அதிகம் விற்பனையான இலக்கிய படைப்பாக இருந்துவருகிறது.
முராகாமியின் நாவலின் ஈர்ப்பு அது ஒரு கனவு போலவே எழுதப்பட்டிருப்பதுதான் என்று நான் நினைக்கிறேன். கனவு போலவே அனுபவமாகின்ற 1Q84  ஒரு காதல் கதையாகவும், மர்ம நாவலாகவும், சுயகண்டுபிடிப்பின் சாகசமாகவும், அதீத கற்பனையாகவும், தேவதைக்கதையாகவும்,  வார்த்தைகளற்ற துக்கமாகவும், அபத்தத்தின் வெற்றிகளாகவும் முழுமை கொள்கிறது.

கதை நாவலின் கதாநாயகி அமோமி முதல் அத்தியாயத்தில் அனாமதேய டாக்சி டிரைவர் ஒருவனின் அமானுஷ்ய ஆலோசனையின் படி டோக்கியோ நகர பாலமொன்றில் ஏற அவள் நனவின் தளங்கள் மாறுகின்றன. நாவலின் தலைப்பு ஆர்வெல்லின் புகழ்பெற்ற நாவலான “1984” ஐ நினைவுபடுத்தும்படி பெயரிடப்பட்டிருக்கும் 1Q84 இல் நாவலின் நிகழ்வுகளும் புனைவாக்கப்பட்ட 1984 இல் நடக்கின்றன.1984இல் ஜப்பானில் பிரசித்திபெற்று விளங்கிய பாப் இசைப் பாடல்கள் நாவல் முழுக்க வெவ்வேறு விபரக்குறிப்புகளாக வருகின்றன. அமோமி ஒரு தொழில்முறை கொலைகாரி; அவள் Sakigake  என்ற ரகசிய மதக் குழு ஒன்றின் தலைவரை கொலை செய்யுமாறு  பணிக்கப்பட்டிருக்கிறாள். அவளை அனுப்பிய செல்வந்த மூதாட்டி விதவை (the dowager ) என்று மட்டுமே நாவலில் அழைக்கப்படுகிறாள். அந்த சீமாட்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விடுதி நடத்தி வருகிறாள். அவளுடைய விடுதியில் தாபூசா என்ற பத்து வயது சிறுமி  வேறொரு Air Chrysalis என்ற நாவலில் வரும் சிறிய மனிதர்களால் காற்றில் ஒரு கூண்டு அமைத்து கடத்தப்படுகிறாள்.  விதவை சீமாட்டி ரகசிய மதக் குழுவின்  குருவும் ஆஸ்ரமத் தலைவருமான ‘தி லீடர்’ தான் கடத்தியிருக்க வேண்டும்  என்று துப்பறிந்து அவனைக் கொல்வதற்கு அமோமியை அனுப்புகிறாள். அமோமி ஆன்மீக குரு தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் பணியாள் வேடமிட்டு நுழைந்து அவனை சந்திக்கும்போது அவனுக்கு உண்மையிலேயே சில அபூர்வ சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவன் கடுமையான கழுத்து தசைப்பிடிப்பினால் அவதிபட்டுக்கொண்டிருக்கிறான். அவன் அமோமியிடம் தன்னை வலியில்லாமல் கொன்றுவிடுமாறு வேண்டுகிறான். இந்த சம்பவங்களின் போதே அமோமி 1Q84 என்ற மாற்று யதார்த்த தளத்தினுள் தள்ளப்பட்டு விடுகிறாள். அமோமி இந்த சம்பவங்களை ஆவணக்காப்பகத்திலுள்ள செய்தித்தாள்களின் மூலம் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறாள். ஆன்மீக குரு கொலை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறவில்லை அதை இயற்கை மரணம் என்றே அறிவிக்கிறது.

அமோமியின் கதை நடக்கும்போதே இணையாக அமோமியின் பள்ளித் தோழன் டெங்கோ கவானாவின் கதையும் சொல்லப்படுகிறது. டென்கோ ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கிறான். அவன் ஒரு இலக்கிய எழுத்தாளனும் கூட. டெங்கோவிடம் அவனுடைய பதிப்பாளர் 17 வயது பெண் எழுதிய கதையைக் கொடுத்து திருத்தி தருமாறு கேட்கிறார். அந்தக் குறு நாவல் Air Chrysalis. அதை எழுதிய ஃபூக்கோ எரி மனவளர்ச்சி குன்றிய பெண். அவள் அமோயியால் கொல்லப்படுகிற ஆன்மீக குருவின் மகள். அவள் பத்து வயது வரை ரகசிய மதக்குழுவின் ஆஸ்ரமத்தின் கம்யூனில் வளர்ந்து அதன் பிறகு அந்த ஆஸ்ரமத்திற்கு  எதிர் கம்யூன் அமைத்த புரபசர் எபிசுனோவின் வீட்டில் வளர்கிறாள். எபிசுனோவின் மகள் Air Chrysalis கதையை, அதாவது பத்து வயது வரையிலான அவளுடைய ஆஸ்ரம நினைவுகளை குத்துமதிப்பாக வார்த்தைப்படுத்த உதவுகிறாள். Air Chrysalis ஒரு தேவதைக்கதை. அதில் சிறிய மனிதர்கள் சிறுமிகளை தொந்திரவு செய்கிறார்கள். டெஙோ ஃபூக்கொ எரியின் கதையை செழுமைப்படுத்திக்கொடுக்க அது அதிகம் விற்று விற்பனையில் சாதனை படைக்கிறது. 

தங்கள் தலைவரின் கொலையை துப்பறிய யூஷிக்காவா என்ற அசிங்கமான வக்கீலை நியமிக்கிறது ரகசிய மதக்குழு. யூஷிக்காவா முராகமியின் வேறொரு கதையிலும் வரும் கதாபாத்திரம். உஷிக்காவா டென்கோவும் அமோமியும்  பள்ளித்தோழர்கள் என்று கண்டுபிடித்துவிடுகிறான். அவன் ஃபூக்கொ எரி Air Chrysalis கதையை டெங்கோவின்  உதவியுடன் எழுதினாள் என்றும் கண்டுபிடித்துவிடுகிறான். அமோமியும் டெங்கோவும் யூஷிக்காவின் துப்பறிதலின் மூலமாக இருபது வருடங்களுக்குப் பின் இணைகிறார்கள். அதாவது இரண்டு இணைகதைகளும் சந்திக்கின்றன. யூஷிக்காவாவை சீமாட்டி விதவையின் காவலன் டமரு கொன்று அமோமியை காப்பாற்றி விடுகிறான். டமரு நாவலில் ஒரு சுவாரஸ்மான கதாபாத்திரம். ஓரின சேர்க்கையாளன். பெரிய படிப்பாளி. ஷேக்ஸ்பியரையும் ஆண்டன் செகாவ்வையும் அடிக்கடி மேற்கோள் காட்டி  பேசுகிறவன். டமரு யுச்சிக்காவை கொல்லும்போதும் ஆண்டன் செகாவ்வை மேற்கோள்களை சொல்கிறான் ( எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் நூலை படித்திருப்பான் போல) 

மேற்சொன்ன சிக்கலான கதை தொய்வில்லாமல் சொல்லப்படுகிறது. பாலியல் சித்தரிப்புகளுக்கும் காட்சிகளுக்கும் குறைவில்லை. அமோமியும் அவளுடைய போலீஸ் தோழி அயோமியும் சேர்ந்து சிங்கிள்ஸ் பார்களுக்கு சென்று அவர்களுடைய அப்போதைய பாலியல் இச்சைக்கேற்ப ஆண்களைத் தேர்ந்தெடுத்து  உடலுறவு கொள்கிறார்கள். ஒரு முறை அவர்கள் வழுக்கைத் தலை ஆண்களை இச்சை கொள்வதும் தேர்ந்தெடுத்து உறவு கொள்வதும் நாவலில் விரிவாக விவரிக்கப்படுகிறது. அயோமி மர்மமான முறையில் நாவலில் கொல்லப்பட்டுவிடுகிறாள். பொலீசும் கொலையாளியும் ஒரே மன அமைப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

டெங்கோ மருத்துவமனையில் இருக்கும் தன் தந்தையை பார்க்க பூனைகளின் நகரத்திற்கு செல்கிறான். போகிற வழியில் நர்ஸ் பெண் ஒருத்தியுடன் உறவு கொள்கிறான். இலக்கற்ற, காதலற்ற உறவுகள் நாவலில் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் தொடர்பற்றும் தொடர்புடனும் இருக்கின்றன. கேபிள் டிவி சந்தா சேகரிக்க வீடு வீடாக அலையும் உருவம் டெங்கோவின் தந்தை என்று வாசகனுக்கு தெரிகிறது. டெங்கோவுக்கு மருத்துவமனையில் இருக்கும் தந்தையைத்தான் தெரியும்.

  அமோமிக்கும், டெங்கோவுக்கும் இருக்கும் சிறிய பள்ளி நினைவு அவர்களின் வன்முறையான வாழ்க்கை சம்பவங்களூடே காதலென மலர அவர்கள் முழு நிலவினை பார்த்து நிற்க நாவல் முடிகிறது. அவர்கள் அன்று ஆனால் இரு முழு நிலவுகளின் உதயத்தைப் பார்க்கிறார்கள். ஒன்று யதார்த்தம் சார்ந்தது மற்றொன்று 1Q84 ஐ சார்ந்தது. 


No comments: