Sunday, April 12, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 10 ஜெர்சி கோசின்ஸ்கி (Jerzy Kosinski) “Steps”- (கூடவே ஜெயமோகனுக்கு சில விளக்கங்களும், ஆர். அபிலாஷுக்கு ஒரு வாழ்த்தும்)


ஜெர்சி கோசின்ஸ்கியின் புகழ்பெற்ற “Painted Bird” என்ற நாவலில் இரண்டாம் உலகப்போரின்போது சிறுவன் ஒருவன் ஐரோப்பிய கிராமங்களில் சுற்றியலைகிறான்; அவனை சாதாரண கிராமமக்களும் ராணுவத்தினரும் சொல்லவொணாத வன்கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்கும், யூத இன அழிப்புக்கும் தப்பிய ஜெர்சி கோசின்ஸ்கி அமெரிக்காவில் குடியேறினார். அவருடைய நாவல்கள் அனைத்துமே போருக்குப் பிந்தைய, யூத இன அழிவினை நினைவுகளாகவும், கற்பனைகளாவும், ஏந்திய அகத்தினை ஆராய்வதாக இருக்கிறது. Pinball,  Being There, The Hermit of the 69th street, Cockpit, Blind Date, Passion Play ஆகியன அவருடைய இதர நாவல்கள். Being There திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

    ஜெர்சி கோசின்ஸ்கியின் Steps எனக்கு ஏன் ‘பிடித்த’ நாவலாகிறது என்பதை எழுதும்போதே எனது தேர்வுகளின் அடிப்படையைப் பற்றியும் ஒரளவேனும் விளக்கமளிக்கலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் ஏழு நாவல்கள் பட்டியலுக்கு  ஜெயமோகன்  அவருடைய தளத்தில் “எம்.டி.எம்மின் ரசனையில் புனைவை ஒரு விளையாட்டாகக் காட்டும் முறைக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது” என்று எழுதியிருக்கிறார். ஆனால் என்னுடைய தேர்வுகள் மொழி, வடிவ விளையாட்டுக்களின் நேர்த்தியை வெளிப்படுத்துகிற நாவல்கள் மட்டுமல்ல. ஏனெனில் நாவல் வடிவத்தினை நான் அவ்வளவு எளிய மகிழ்ச்சிகளை அளிப்பவையாக மட்டும் கருதவில்லை. ஜெயமோகன் தன் ‘வெண்முரசு’  வரிசை நாவல்களை காப்பிய வடிவத்தில் எழுதும்போது எப்படி ஒரு தேச உருவாக்கத்தினை அதன் பாரம்பரியத்தோடு சேர்த்து புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்று எண்ணுகிறாரோ அது போலவே அதன் வெவ்வேறு காலகட்டங்களில் நாவல் என்ற வடிவம் தன் நிலமும் வரலாறும் சார்ந்து பல மதிப்பீடுகளை உருவாக்குகிறது அந்த மதிப்பீடுகளை அந்தந்த நாவல்களின் விளையாட்டுக்களின் வழி அறிந்து அடையாளம் காட்ட முடியும் என்று நான் எண்ணுகிறேன். உலக இலக்கியத்தில் படைக்கப்பட்ட  பல நாவல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுமென்றால் அவற்றைப்பற்றிய சொல்லாடல் பரவலாகுமென்றால் நம் படைப்புகள் உருவாக்க விரும்புகின்ற  விழுமியங்கள் வேறு வகைமையினதாக இருக்கும் என்பது என் எண்ணம். அதாவது ‘வெண்முரசு’ பின்னை காலனீய தமிழ்சமூகத்தில் உருவாக்க யத்தனிக்கும் இந்திய தேச புனருத்தானம், வீர நாயகர்களின் வழிபாடு, பராம்பரிய குல, சாதிய உறவுகள் மற்றும் மோதல்கள், சடங்குகள், மரபுகள், ‘குலச்சபைகள்’, உணவு பழக்கவழக்கங்கள், சமஸ்கிருத மந்திரங்கள், பழம்பெருமை  ஆகியவற்றால் ஆன பாரம்பரியம், பழமையின் பிடிப்பில்  வாசகனையும் தலைமுறைகளையும் நிரந்தரமாகப் பிணைக்கும் கதையாடல்- ஆகிய மதிப்பீடுகளுக்கு அப்பால் சமகாலத்திய நவீன மனித இருத்தல்களின் பிரச்சனைகள் என்ன அவற்றை சமகாலத்திய உலக இலக்கியம் எவ்வாறெல்லாம் நவீனப்படுத்திப் பேசுகிறது என்பனவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியே என் ‘ரசனை’ பட்டியல்.

    கதேயின் நாவல்கள் இல்லாமல் மேற்கத்திய சமூகத்தில் ‘தனிமனிதன்’,  சட்டம், சமூகம், ‘அறம்’ ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் மதிப்பு  வாய்ந்த சமூக அலகாக தோற்றம் பெற்றிருக்க முடியாது, வளர்ச்சி பெற்றிருக்க இயலாது என்று அறிந்த அனைவருக்குமே நாவல் வடிவத்தின் வரலாற்று பலம் என்ன என்று தெரிந்திருக்கும்.  ஆனால் Sorrows of Young Werther ஐ படிக்கும் அனைவருக்கும் அந்த நாவல் மொழியின் கவித்துவம், நேர்த்தி, செழுமை, விளையாட்டு நிறைந்த ‘கலையாக’ மட்டுமே அனுபவமாகும்.  மொழி மற்றும் வடிவ விளையாட்டின் மேல் கவனத்தைக் குவிக்கும் நாவல்கள், அவற்றை மறைத்து வைத்திருக்கும் நாவல்கள் உருவாக்கும் மதிப்பீடுகளையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகளின்’ போதாமையையும், நபகோவின் The Real Life of Sebastian Knight-இன் உயர்வையும் உடனே சுட்டிவிடுவது போல.  ‘நினைவுப்பாதை’ சிதைந்துவிட்ட எழுத்தாளனின் சுயத்தை வரைபடமாக்கி தமிழின் நவீனத்துவ பரப்பினை எடுத்தியம்பியதென்றால், ‘ஜே ஜே சில குறிப்புகள்’ எழுத்தாளனின் சுயத்தை சாதாரணர்களிடமிருந்து வேறுபடுத்தி, புனிதப்படுத்தி தமிழ் சமூகத்தில் Me Generation, Selfie Generation இன் வருகையை அறிவிக்கிறது. Me generation இன் அதீதம் அயன் ராண்டின் virtue of selfishness என்ற வக்கிர எல்லையினை அடைந்துவிட்ட அமெரிக்க சமூகத்தில் எழுத்தாளனின் சுயமே ஒரு புனைவு, வேறு பல புனைவுகளோடு பிணைக்கப்பட்டது என்ற தீவிரத்தினை சொல்கின்ற நபகோவின் The Real Life of Sebastian Knight புனைவின் ‘நிஜத்தினை’ சொல்கிறது.  ஆகவே மொழி, வடிவ விளையாட்டுக்கள் கொண்ட நாவல்கள் திறவுகோல்கள், அவை திறப்பவை அவற்றின் பிரதி எல்லைகள் தாண்டியவை.  “எல்லையில்லா விளையாட்டுடையவர் யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று கம்பன் நமக்கு சொல்லித் தரவில்லையா? விஷ்ணு மாயை என்ற விளையாட்டாக உலகைக் காணவேண்டும் என்ற நம் தத்துவஞானிகள் நம்முடைய பொது அறிவில் இருப்பதில்லையா?

    மேற்சொன்ன பின்னணியுடன் வாசித்தால் நான் ‘எனக்குப் பிடித்த நாவல்கள்’ வரிசைக்கான குறிப்புகள் ‘ரசனை’, ‘பிடித்திருக்கிறது’, ‘பிடிக்கவில்லை’ போன்ற பதங்களை பயன்படுத்தும் mode of discourse அவ்வளவுதான் என்பது விளங்கும். சொல்லாடல் பாங்குகளை போன்மை செய்வது அவற்றை கவிழ்ப்பதற்கே, அவற்றை நிலைநிறுத்துவதற்கு அல்ல.

    ரசனை விமர்சனத்தை நான் கையாளும் விதம் இப்படி இருக்க, ஜெயகாந்தனுக்கு நான் எழுதிய அஞ்சலி குறிப்பினை ரஜினி ரசிகனின் உயற்வு நவிற்சி போல இருக்கிறது என்று வாசித்திருக்கிறார் ஆர்.அபிலாஷ். வேடிக்கைதான். ஜெயகாந்தனுக்கு நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஜெயகாந்தனின் எழுத்து என்னை வசீகரிக்கவில்லை என்று ஆரம்பித்து, என் தந்தையின் தலைமுறையினர் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் எதைக் கொண்டாடினார்கள் என்று சொல்லி, அதன் நீட்சியாக அவருடைய ‘கம்பீரத்தை’ என்ன மாதிரியான வாய்மொழி anecdotes வழி நாம் அறிகிறோம் என்பதை உதாரணங்கள் காட்டி, அவற்றை மீறிய விதத்தில் நான் அவரை சந்தித்த போது ‘கைக்கடக்கமாக குள்ளமாக இருந்தார்’ என்று எழுதுவது எப்படி ரஜினி ரசிகன் ரஜினியை வியந்தோதுதல் போல அமைந்த கட்டுரையாகும்? அபிலாஷுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா? இவர்  சாகித்ய அகாடமி இலக்கியத்திற்கு வழங்கும் யுவ புரஷ்கார் விருது பெற்றவர். ஆர். அபிலாஷ் மேலும் வளர்ந்து தன்னுடைய மழலைச்சொற்களுக்கு சிசு புரஷ்கார் விருது பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். நிற்க.

    என்னுடைய ‘ரசனை’ யின்படி எனக்குப் ‘பிடித்த’ ஜெர்சி கோசின்ஸ்கியின் Steps  நாவலை நான் இரண்டாம் முறை வாசிக்க விரும்பமாட்டேன். ஏனென்றால் Steps மனிதனின் கற்பனை வன்முறையினை எந்த எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தது என்பதனையும் யூத இன அழிப்பின் குரூர நினைவுகள் நவீன மனிதனின் பிரக்ஞையின் அங்கமாக எப்படி மாறிவிட்டது என்பதையும் வாசகனின் நரம்புகள் கூழாகும் விதத்தில் சொல்லும் நாவல். கோசின்ஸ்கியின் நாவல்கள் செர்ஜி டூப்ரோவ்ஸ்கி ஃப்ரெஞ்ச் மொழியில் அறிமுகப்படுத்திய Autofiction வகையைச் சார்ந்தது என்று பொதுவாகக் கருதப்படுக்கின்றன.  சுய வரலாற்றினை தன்னிச்சையான சுதந்திர எழுத்துடன் கற்பனை கலந்து எழுதும் ஆட்டோஃபிக்‌ஷனை இந்த நாவலில் பிரம்மை கலந்து எழுதுகிறார் கோசின்ஸ்கி. கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. நினைவுகளும் கற்பனைகளும் பிரம்மைகளும் துண்டு துண்டாக அத்தியாயங்களாகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக சில சமயங்களில் இருக்கின்றன; பல சமயங்களில் இருப்பதில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதி குரூர வன்முறை சித்தரிப்புகள் இருக்கின்றன. நாவலின் நாயகனுக்கு அடையாளமில்லை அவன் நகரத்தின் மிருகக்காட்சி சாலையில் ஆக்டோபஸ் ஒன்று தன்னைத்தானே சாப்பிட்டு அழித்துக்கொள்வதைப் பார்ப்பதற்காக போவதில் நாவல் ஆரம்பிக்கிறது. போர்ச்சூழலில் உள்ள கிராமம், மன நோயாளிகளுக்கான மருத்துவமனை, கழிப்பறை, புகைப்படம் கழுவுவதற்கான இருட்டறை, மயானம், அறியப்படாத இடம் ஆகிய இடங்களில் சம்பவங்கள் நடக்கின்றன. Hermit of the 69th street இல் இருந்த நகைச்சுவை கிஞ்சித்தும் Steps இல் இல்லை. Paris Review : Art of Fiction பேட்டியில் கோசின்ஸ்கி தான் ஒரு புகைப்படக் கலைஞரும் ஆகையால் புகைப்படம் கழுவதற்கான இருட்டறையே உலகினை காட்சிப்படுத்துவதற்கான தன்னுடைய உருவகம் என்று குறிப்பிடுகிறார். இந்த வன்முறைக்காட்சிகளில் வன்முறையாளன்-பலிகடா, ஒடுக்குபவன் - ஒடுக்கப்படுபவன் ஆண்டான் - அடிமை இருவருமே ஒரே மாதியான மன அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தில் இதற்கான முன் மாதிரி ஜெனெயின் எழுத்துக்களில் இருக்கிறது. The Art of the Self: Essays à propos Steps (1968) என்ற நூலில் புகைப்படம் கழுவுவதற்கான இருட்டறையாகிய இவ்வுலகிலிருந்து தான் ஏன் தப்பித்து ஓட நினைக்கிறேன் என்று கோசின்ஸ்கி ஸ்டெப்ஸ் நாவலை மையமாக வைத்து எழுதுகிறார். அதீதமான வன்முறையை எழுதிய கோசின்ஸ்கி தன் வாழ்க்கையில் தாந்திரீக பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அதை Hermit of the 69th street நாவலிலும் பதிவு செய்தார். யூத இன அழிப்பின் கொடூர நினைவுகளிலிருந்து தப்ப இயலாத கோஸின்ஸ்கி 1991 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோஸின்ஸ்கியின் Steps நாவலை வாசிக்கும் அனுபவம் உங்கள் நரம்புகளை கூழ் கூழாக்கும் என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை.

http://www.amazon.com/Steps-Jerzy-Kosinski/dp/0802135269

No comments: