Wednesday, April 15, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 12 - டபுள்யூ.ஜி. செபால்ட் (W.G. Sebald) The Rings of Saturn



 

தியானம் போல ஒரு நாவலின் உரை நடை இருக்க முடியுமா? அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவம், வணிகநாவல்கள், ஹாலிவுட் சினிமா, அவற்றின் தமிழ்க் கள்ளக்குழந்தைகள் என்று பொதுத்தளத்தை ஆக்கிரமித்திருப்பது நாம் அறிந்ததுதான்.  அரிஸ்டாட்டிலிய நாடகக்கதை வடிவத்தினை உலக இலக்கியம்  பல வகைகளிலும் துறந்து விட்டது. அப்படி அரிஸ்டாட்டிலிய நாடக்கதை வடிவத்தினை முற்றிலும் துறந்த நாவல் The Rings of Saturn.  நாவலில் ஆழ்ந்த அமைதியை, நினைவுகளின் பவித்திரத்தை, தொலைந்து போன நினைவுகளை, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால்  தீவிர உணர்ச்சிகளை,  அபூர்வமான தியான உரைநடையாக்கியிருக்கிறார் செபால்ட்.  இங்கிலாந்தில் வாழ்ந்த ஜெர்மானியரான செபால்ட் ஜெர்மன் மொழியில் எழுதிய The Rings of Saturn 1999 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
   
    என்ன வகையான தியானத்தை வடிவமைக்கிறது செபால்டின் உரைநடை? The Rings of Saturn நாவலில் பெயரில்லாத பயணி ஒருவர் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலேயே கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறார். அந்தப் பயணியின் தன்னிலைக் கதையாடலாக சொல்லப்படுகின்ற நாவல் அவர் சந்திக்கின்ற மனிதர்கள், பார்க்கின்ற கட்டிடங்கள், அவருக்கு அனுபவமாகின்ற நிலப்பகுதிகள் ஆகினவற்றை அவை கிளர்த்துகின்ற நினைவுகளோடு, சிந்தனைகளோடு  இணைக்கிறது. பயண நூலா, நினைவுக்குறிப்புகளா, அனுபவப்பதிவுகளா என்று தனித்து சொல்லவியலாத வகையில் பிரக்ஞையின் தூண்டுதலகள் செபால்டின் உரைநடையில் இணைக்கப்படுகின்றன. இது சுதந்திர இணைவுகளில் ஓடும், மொழியின் ஒலி வழுக்கல்களால் தொடரும் நனவோடை உத்தி அல்ல. நுண்ணுணர்வுகள் உயிர்பெற சிந்தனையின் இழைகள் நனவிலிக்குள் நீர் போல கசிந்து ஊடுறுவும் உரைநடை, கதை சொல்லல். கதாபத்திரங்கள் அவர்களின் வீர தீரச் செயல்கள் இவை நிரம்பியவே கதைசொல்லல் என்று நம்புபவர்களுக்கு செபால்டின் நாவல் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கும். கதைசொல்லல்கள் பல தரப்பட்டவை அவற்றின் அழகுகள் வித்தியாசமானவை, விதிகளுக்குள் அடங்காதவை, தொடர்ந்த உரையாடல் தருகின்ற அழகிய அனுபவத்தை அளிப்பவை என்று கதைசொல்லலின் எல்லைகளை விஸ்தரித்து புரிந்துகொள்ளும் வாச்கர்களுக்கு செபால்டின் நாவல் அளிக்கின்ற ‘வாசிப்பின்பம்’ எல்லையற்றது. ஆம், அந்த தனித்துவ வாசக அனுபவத்தை ‘வாசிப்பின்பம்’ என்றுதான் சொல்ல வேண்டும். வேறெப்படி சொல்வதாம்?

    ஆனால் செபால்டின் கதைசொல்லலிலும் உரைநடையிலும் ஆழமான துக்கம் அடியோட்டமாக இருக்கிறது. The Rings of Saturnஇன் கதை சொல்லி மூன்று விதமான அழிவுகளைப் பற்றி தியானிக்கிறான்; இயற்கை உண்டாக்குகிற அழிவுகள், அழிந்துபோன நகரங்கள், அழிந்து காணாமல் போன வாழ்க்கை முறைகள். அழிவுகளைப் பற்றி தியானிக்கின்ற கதைசொல்லிக்கு இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பும் நினைவுகளூடே மேலெழுந்து வருகின்றன. 

     The Rings of Saturn இன் கதைசொல்லியின் நிலையற்ற பிரக்ஞை அவன் பயணம் செய்கின்ற  இடங்களின் காட்சிப்புலத்தினால் தூண்டப்படுகிறது. நாவலில் செபால்ட் பல தேவாலயங்கள், மரங்கள், பாலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களையும் தன் கதைசொல்லலின் பகுதிகளாக இணைக்கிறார். பயணம் என்பது எப்போதுமே ஓரிடத்திற்கு திரும்பச் செல்லும்போதுதான் உண்மையிலேயே அனுபவமாகிறதோ என்று நாம் வியக்கிறோம் வேறெந்த எழுத்தாளரிடம் செபால்டின் கதைசொல்லி போன்ற பயணியை நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்று நான் நினைத்துப்பார்த்தேன். டி.ஹெச்.லாரண்சிடம் நாம் காணக்கூடும். வி.எஸ்.நய்ப்பாலில் The Enigma of Arrivalஇல் நாம் செபால்டின் பயணிக்கு நிகரான தியானத்தையுடையவரை நாம் அடையாளம் காணக்கூடும். ஏன் வர்ஜினியா வுல்ஃபின் The Waves  நாவல் கூட நினைவுக்கு வரக்கூடும். ஆனால் செபால்டின் அபூர்வம் அவர் ஜெர்மனியைப்பற்றி ஜெர்மனிக்கு வெளியே இங்கிலாந்தில் வாழ்ந்து எழுதுவதால் செழுமை பெற்றது.    செபால்ட் ஜெர்மனியை விட்டு வெளியே வாழ்ந்ததாலே அவரின் பவித்திர நினைவலைகளில் ஜெர்மனியின் போருக்குப் பிந்தைய இலக்கியத்தின் ரொமாண்டிசச கறை படிவதில்லை. பழம்பெருமைக்கான ஏக்கமாகவும் கொச்சையாவதில்லை.

    செபால்டின் கதைசொல்லலின் வசீகரம் அது காருண்யத்தின் கொடைகளால் நிரம்பியிருப்பதுதான் என்று நான் மெதுவாகவே கண்டுபிடித்தேன். அது ஈடு இணையற்ற வசீகரமும் கூட.

    தியானத்தின் நோக்கம் மௌனம் என்று யாரேனும் சொல்வதைக் கேட்கும்போதோ, எழுதியதைப் படிக்கும் போதோ எனக்கு செபால்டின்  The Rings of Saturn நாவலில் வரும் இயற்கையைப் பற்றிய அவதானிப்புகளை, குறிப்பாக பெரிய வெடிப்புகளில் சூரிய மண்டலம் தோன்றி அதில் சனி கிரகத்தைச் சுற்றி சுழலும் வளையங்களுக்கு என்ன பொருள் என்று கேட்கத் தோன்றும். அதாவது பொருளாலான பிரபஞ்சமே அது அழிவிலிருந்து உயிர்த்ததை சனியின் வளையங்களின் ஒளிர்வுகள் என நினைவு வைத்திருக்கும்போது, மனிதப் பிரக்ஞை அழிவின் நினைவு ஒளிர்வுகளை இழந்து எப்படி மௌனம் கொள்ளும்? 

http://www.amazon.com/The-Rings-Saturn-W-Sebald/dp/0811214133 

No comments: