Saturday, April 18, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 14 & 15 கார்லோஸ் ஃபுயெண்டெஸ் (Carlos Fuentes) “The Death of Artemio Cruz” and “Inez”





    கார்லோஸ் ஃபுயெண்டெஸ்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு- பல முறை பரிந்துரைக்கப்பட்டபோதிலும்- கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு. கொலம்பியாவுக்கு மார்க்வெஸ், பெருவுக்கு லோசா என்றால் மெக்சிகோவுக்கு கார்லோஸ் ஃபுயெண்டெஸ் எனலாம். ஆனால்  ஃபுயெண்டெஸ் மெக்சிகோவில் ஒரு வகையான அந்நியராகவும் வெளியுலகில் மெக்சிகராகவும் உணர்ந்தார். ஃபுயெண்டெஸின் குழந்தைப்பருவம் வெவ்வேறு  லத்தின் அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்காவிலும் கழிந்தது. பதினாறு வயதில் மெக்சிகோ திரும்பிய ஃபுயெண்டெஸ் நாட்டின் பெரும்பான்மை இடதுசாரி அரசியலை ஆதரிப்பவராக இருந்தாலும் அவருடைய வாழ்க்கை பெரும் செல்வந்த வாழ்க்கை முறையாக இருந்தபடியால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். நிகாரகுவா நாட்டின் சாண்டினிஸ்டா இயக்கத்தை ஆதரித்ததில் ஃபுயெண்டெஸுக்கும் சக மெக்சிகரான ஆக்டேவியா பாஸுக்கும் பெரும் மோதல் வெடித்தது. ஆக்டேவியா பாஸ் ஃபுயெண்டெஸின் மெக்சிக அடையாளத்தை விமர்சனத்துக்குள்ளாக்கினார். ஃபுயெண்டெஸ் தன்னுடைய அடையாளத்தை  ஒரு விமர்சனபூர்வமான அந்நியன் என்றே வரையறை செய்துகொண்டார்.  பிறப்பு, வளர்ப்பு, வர்க்கம் ஆகியவற்றினால் அல்ல, படைப்புகளில் வெளிப்படும் கலைப்பார்வையினால் தான் ஒரு அந்நியன் என்று ஃபுயெண்டெஸ் அறிவித்தார். தன் சமூகத்திலிருந்து விலகிய பார்வையினை மெக்சிகோவின் வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் அவரால் நாவல்களாக முன்வைக்க முடிந்தது. ஃபுயெண்டெஸின் மிக முக்கியமான படைப்பான “Terra Nostra” உலக இலக்கியத்தில் ஒரு பெரும் சாதனை. மெக்சிகோவின் வரலாறு என்றில்லாமல் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாறுகளையும் அவற்றின் உள் இணைவுகளையும் கவித்துவமாக, ஃபுயெண்டெஸின் விலகலோடு சொன்ன நாவல் Terra Nostra. வாய்மொழிக்கதைகள், புராணங்கள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் கலந்து எழுதப்பட்ட டெர்ரா நோஸ்டிராவை தமிழில் மொழிபெயர்ப்பது கடினம். கூடுதலாக டெர்ரா நோஸ்டிராவின் கதை பதினாறாம் நூற்றாண்டுக்கும் சமகாலத்துக்கும் மாறி மாறி நடப்பதால் அதன் வரலாற்று விபரங்கள் பிற பண்பாடுகளைச் சேர்ந்த்வர்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால் டெர்ரா நோஸ்டிரா ஒரு எழுத்தாளன் தன் தேச வரலாற்றினை தேசப்பற்று கொண்ட அசட்டுத்தனத்தோடு எழுதாமல் எப்படி காத்திரமான விமர்சனத்தோடும் கற்பனையின் விரிவோடும் எழுத வேண்டும் என்பதற்கு  சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

    டெர்ரா நோஸ்டிரா அளவுக்கு கடினமில்லாத ஆனால் தன் தேச வரலாற்றினை புனைவாக்கத்தின் விலகலோடும் விமர்சனத்தோடும் சொல்கிற ஃபுயெண்டெஸ்ஸின் இன்னொரு நாவல் “The Death of Artemio Cruz”. மார்க்வெஸ் “The General in his labyrinth”, லோசா “The Feast of the Goat” ஆகிய நாவல்களின் தங்கள் நாடுகளின் சர்வாதிகாரிகளைப் பற்றி எழுதியிருந்தாலும் அந்த நாவல்களைவிட சிறப்பானதும் அவற்றிற்கான மூல வடிவத்தை வழங்கியதும் ஃபுயெண்டெஸின் The Death of Artemio Cruz என்று பல இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளை நினைவுபடுத்தும் ஆர்தேமியோ க்ரூஸ் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல அவன் ஒரு பத்திரிக்கையாளன்,பெரும் வியாபாரி, காதலன்; தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் ஊழல் மலிந்தவன். சாவுப்படுக்கையில் இருக்கும் ஆர்தேமியோ க்ரூஸ் நாவலில் தன் வாழ்க்கையின் சம்பவங்களை நினைவு கூர்கிறான். ஆர்தேமியோ க்ரூஸின் உயிலைக் கைப்பற்றி விட அவனுடைய குடுமப்த்தினர் அவன் சாவுப்படுக்கையைச் சுற்றி சுற்றி வருகின்றனர். ஆர்தேமியோ க்ரூஸ் யேசுவின் பிறப்பு பற்றி கெட்ட பாலியல் சிந்தனைகளை வெளிப்படுத்தியதால் கிறித்தவ திருச்சபைக்கும்  அவனுக்கும் ஏற்பட்ட தகறாறினைத் தீர்க்க திருச்சபை முயற்சி செய்கிறது. க்ரூஸின் காரியதரிசி அவனுடைய லஞ்ச ஊழல் பேரங்களின் ஒலிநாடாக்களை வைத்து மிரட்டுகிறாள். இதையெல்லாம் மீறி க்ரூஸ் தன் காதல்களைப் பற்றியும் இதர புலனின்ப வாழ்க்கை சம்பவங்களையும் பற்றி தன் சாவுப்படுக்கையில் யோசித்துக்கொண்டிருக்கிறான். The Death of Artemio Cruz ஐ வாசிப்பவர்களுக்கு நம் நாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி இப்படி யாரேனும் தீவிர நாவலொன்றை எழுத மாட்டார்களா என்ற ஏக்கம் மேலிடும். ஃபுயெண்டெஸின் இந்த நாவலில் கதைசொல்லும் உத்திகள் அபாரமானவை. ஃபுயெண்டஸ் திரைப்படத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மார்க்வெஸ்ஸோடு இணைந்தும் தனியாகவும் பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். திரைப்படத்தின் உத்திகளான க்ளோஸப், ஜம்ப் கட், ஃப்ளாஷ் பேக், போன்றவற்றை ஃபுயுண்டெஸ் இந்த நாவலில் அழகாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இதையெல்லாம் விட இந்த அரசியல் நாவலின் முக்கியத்துவம் என்ன்வென்றால் ஃப்யுண்டெஸ் இந்த நாவலில் மெக்சிகோவின் நிலச்சீர்திருத்தம் எப்படி ஊழல்களினால் தோற்றுப்போனது என்று விரிவாக எடுத்துச் சொல்கிறார்.

    பல நாவல் வடிவங்களையும் ஃபுயெண்டெஸ் கையாண்டிருக்கிறார். Crystal Frontiers நாவல் கிட்டத்தட்ட கநாசு தமிழில் “மதகுரு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ஸ்வீடிஷ் நாவலாசிரியை ஷெல்மா லாகார்லாஃபின் “கோஸ்டாபெர்லிங்” என்ற நாவலின் வடிவத்தினை ஒத்தது. அதாவது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப் போல இருக்கும் அத்தியாய சிறுகதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புறுத்தப்பட்டு நாவல் பரிமளிக்கும். ஃபுயெண்டெஸின் Crystal Frontiers மெக்சிகோவிலிருந்து வட அமெரிக்காவில் குடியேறியவர்கள் வாழ்க்கைகளைச் சொல்வது. அந்த நாவலின் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் முழுமையாக பெயர்வதற்கு சாத்தியமில்லை.

    “Inez” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கவித்துவமும் கதையாடல் முறையும் தமிழுக்கு அறிமுகமாகும். இறந்தால் வெனிஸ் நகரத்தில் இறக்கவேண்டும் ஏனென்றால் அங்கேதான் காதலின் மடியில் சாகலாம் என்ற உலகளாவிய ‘முதுமொழி’ உருவாவதற்கு காரணமான தாமஸ் மன்னின் நாவல் “Death in Venice” இன் பாதிப்பில் ஃப்யுண்டெஸ் எழுதிய நாவல் “இனெஸ்”. தூய கன்னி என்ற பொருளுடைய கிரேக்க தேவதையை நினைவுபடுத்தும் ‘இனெஸ்’ என்ற பெயரில் அமைந்த நாவல் வெனிஸில் நடக்கும் காதலையும் துரோகத்தையும் பற்றிய கதை. இரண்டு இசைக்கலைஞர்களுக்கிடையே உள்ள தொழில் போட்டி, காதல் ஆகியவற்றை கருவாகக்கொண்ட “இனெஸ்” லாசராவின் உரைநடைக்கு நிகரான உணர்ச்சியையும் வேகத்தையும் கவித்துவத்தையும் வெளிப்படுத்துவது. தாமஸ் மன்னின் நாவலின் பாதிப்பில் உருவானதே சால்மான் ருஷ்டியின் “Enchantress of Florence”, Kazuo Ishiguro வின் “The Unconsoled” ஆகிய நாவல்களும் ஆனால் ஃபுயெண்டெஸே இந்த காதல் கதையை புதிய உயர்தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். வழக்கம்போல ஏராளமான நாட்டுப்புற கதைகளையும் புராணங்களையும் கார்லோஸ் ஃபுயெண்டெஸ் நாவலுக்குள் பயன்படுத்துவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் நாவலின் apocalyptic vision ஒவ்வொரு வாக்கியத்திலும் வெளிப்படுவது.

    தமிழில் சமீப காலமாக சிலர், இந்து மதத்தின் பிரளயத்தை நோக்கி பிரபஞ்சம் செல்வதான உலகநோக்கு கிறித்தவத்தின் ஆப்ரஹாமிய மதங்களின் தீர்ப்பு நாள் உலக நோக்கிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். அவர்கள் “இனெஸ்” நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்படியொன்றும் பிரபஞ்ச முடிவும் மறுபிறப்பும் பற்றிய இந்து உலக நோக்கு இதர மத உலகப்பார்வைகளிலிருந்து வேறுபட்டதல்ல என்பது புலப்படும்.










http://www.amazon.in/The-Death-Artemio-Cruz-Classics/dp/0374531803 

http://www.amazon.in/Inez-Carlos-Fuentes-ebook/dp/B008JP4RSO/ref=sr_1_2?ie=UTF8&qid=1429367875&sr=8-2&keywords=Inez+carlos+fuentes 


No comments: