Friday, October 30, 2026

எழுத்து ஒரு புதிய தொழில்நுட்பமாக அச்சத்துடன் பார்க்கப்பட்டபோது



பிளேட்டோவின் நூல் “ஃபியாட்ரஸ்” சாக்ரட்டிஸுக்கும் ஃபியாட்ரஸுக்கும் இடையே நடைபெற்ற  முக்கியமான தத்துவ உரையாடலைப் பதிவு செய்கிறது. 

அன்பு,  ஆன்மாவின் இயல்பு  ஆகியவற்றைக் குறித்த விவாதமாகத் தொடங்கும் இந்நூல், பின்னர் சொல்லாட்சிக் கலை, அக்காலத்தில் வளர்ந்து வந்த எழுத்து என்ற புதிய தொழில்நுட்பத்தின் மீதான கூர்மையான விமர்சனமாக மாறுகிறது. பண்டைய கிரேக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த வாய்மொழிப் பண்பாடு மெல்ல மெல்ல எழுத்தறிவுப் பண்பாடாக மாறிக்கொண்டிருந்த ஒரு முக்கிய வரலாற்றுக் காலகட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டது. எழுதப்பட்ட வார்த்தைகள் மனித மனதையும் உண்மையைத் தேடும் முயற்சியையும் எவ்வாறு சிதைக்கக்கூடும் என்பது குறித்த மிகப்பழமையான,  அச்சங்களை இப்படைப்பு பதிவுசெய்திருப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியதாக இருக்கலாம்.  ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும், ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித குலத்தால் அச்சத்துடன் எதிர்கொள்ளப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. 



ஃபியாட்ரஸ் நூலின் இறுதிப் பகுதியில், எழுத்து எனும் புதிய தொழில்நுட்பத்தின் ஆபத்துகளை விளக்க சாக்ரட்டீஸ் எகிப்திய உருவகக் கதை ஒன்றைக் கூறுகிறார். இதில் கணிதம், வானியல், எழுத்து உள்ளிட்ட கலைகளைக் கண்டுபிடித்த கடவுளான தியுத்தும் (மாற்றுப் பெயர்: தோத் - Thoth) எகிப்தின் மன்னரான தமுஸும் (மாற்றுப் பெயர்:அம்மோன் - Ammon) இடம்பெறுகின்றனர்.


தியுத் தனது எழுத்துக் கலையை மன்னரிடம் சமர்ப்பிக்கும்போது, அது எகிப்தியர்களை மேலும் ஞானமுள்ளவர்களாக மாற்றும் என்றும், அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் ஒரு "அமிர்தம்" அல்லது "மருந்து" (pharmakon) என்றும் புகழ்கிறார். ஆனால் மன்னர் தமுஸ் அந்தப் பரிசை நிராகரிக்கிறார்; ஒரு கலையைக் கண்டுபிடிப்பவரே அதன் உண்மையான விளைவுகளைக் கணிப்பதில் மிக மோசமான நடுவராக இருப்பார் என்று வாதிடுகிறார்.  பிளேட்டோ இங்கு ஃபார்மகான் (pharmakon) என்ற கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இச்சொல்லுக்கு இரு வேறு பொருள்கள் உண்டு: இது மருந்து/நிவாரணி என்பதையும்  விஷம் என்பதையும் என இரண்டையுமே குறிக்கும். தியுத் எழுத்தை மறதிக்கான மருந்தாகக் கருதும் வேளையில், தமுஸ் அதை உண்மையான புரிதலுக்கு எதிரான விஷம் என்று வாதிடுகிறார்.


மன்னர் தமுஸின் வார்த்தைகள் மூலமாகவும், அதைத் தொடர்ந்து வரும் சாக்ரட்டீஸின் உரையாடல் பகுப்பாய்வு மூலமாகவும், வாய்மொழியிலிருந்து  எழுத்து வடிவத்திற்கு மாறுவது குறித்த நான்கு முக்கிய அச்சங்களை பிளேட்டோ முன்வைக்கிறார்:


அகத்திற்குப் பதிலாக புறத்தில் எழுதிச் சேமிப்பதால் நினைவாற்றல் சிதைவடையும் என்பது முதல் அச்சம். கற்பவர்கள் தங்கள் உள்ளார்ந்த நினைவாற்றலைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்பதால், எழுத்து அவர்களின் ஆன்மாவில் மறதியை உண்டாக்கும் என்று தமுஸ் எச்சரிக்கிறார். அக நினைவாற்றலை (mnēmē - internal recollection) நம்புவதற்குப் பதிலாக, புற எழுத்து வடிவங்களை (hypomnēsis - வெறும் நினைவூட்டல்) சார்ந்திருப்பதன் மூலம் மக்கள் தங்கள் மன ஆற்றலை இழக்கிறார்கள். இது, கால்குலேட்டர்களும் தேடுபொறிகளும்  மனிதர்களின் மனக்கணக்கு போடும் திறனையும் நினைவாற்றலையும் பலவீனப்படுத்துவதாக இன்றைக்கு நாம் கவலைப்படுவதைப் போன்றதாகும்.


 முறையான வாய்மொழி வழிகாட்டுதல் இன்றி, எழுதப்பட்டவற்றை  மட்டுமே அதிகளவில் வாசிப்பவர்கள், அதிகம் அறிந்தவர்கள் போலத் தோன்றுவார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் எதையுமே அறியாதவர்களாக இருப்பார்கள் என்று சாக்ரட்டீஸ் வாதிடுகிறார். உண்மையை முழுமையாக உள்வாங்கத் தேவையான கடினமான தத்துவ உழைப்பின்றி, ஞானத்தைப் பெற்றது போன்ற ஒரு போலித் தோற்றத்தை விரைவாகப் பெற எழுத்து வழிவகுக்கிறது. இது மனிதர்களை உண்மையான ஞானிகளாக மாற்றுவதற்குப் பதிலாக, அகந்தை கொண்டவர்களாகவும் பழகுவதற்குக் கடினமானவர்களாகவும் மாற்றுகிறது.


 சாக்ரட்டீஸ் எழுத்தை ஓவியக்கலையுடன் ஒப்பிடுகிறார்: ஓவியத்தில் உள்ள உருவங்கள் நம் முன் உயிருள்ளவை போலவே நிற்கின்றன; ஆனால் அவற்றிடம் நாம் ஏதேனும் கேள்வி கேட்டால், அவை மிகவும் கம்பீரமான மௌனத்தை மட்டுமே பதிலாகத் தருகின்றன. நேரடி வாய்மொழி விவாதத்தில்  ஈடுபடுபவரால்  தவறானப் புரிதல்களைத் தெளிவுபடுத்தவும், கேட்பவரின் மனநிலைக்கு ஏற்பத் தனது பேச்சை மாற்றியமைக்கவும், தனது வாதங்களை நிகழ்காலத்தில் தற்காத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், எழுதப்பட்ட ஒரு பிரதியானது, தன்னை விளக்கவோ அல்லது தவறான புரிதல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவோ முடியாமல், கூறிய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும்.


ஒரு படைப்பாளி எதையாவது எழுதிவிட்டால், அந்தப் பிரதி எந்தப் பாகுபாடுமின்றி எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகிறது—அதைப் புரிந்துகொள்ளும் தகுதியுடையவர்கள் கைகளிலும், அதைப் படிக்கத் தகுதியற்றவர்கள் கைகளிலும் அது ஒரே மாதிரியாகச் சென்று சேர்கிறது. பேசப்படும் வார்த்தைகள் ஒரு ஆசிரியரால் குறிப்பிட்ட மாணவரின் பக்குவத்திற்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. ஆனால், எழுதப்பட்ட பிரதியானது ஒரு அனாதையைப் போன்றது; அது நியாயமின்றி விமர்சிக்கப்படும்போதோ அல்லது தவறாகப் பொருள் கொள்ளப்படும்போதோ, அதைக் காப்பாற்ற அதைப் “பெற்றவர்" (எழுத்தாளர்) எப்போதும் தேவைப்படுகிறார்.


பண்டைய காலத்தில், பாணர்கள், கவிஞர்கள்,  தத்துவஞானிகள் ஆகியோரால் கடுமையான நினைவாற்றல் பயிற்சிகள் மூலமாகவும் நேருக்கு நேர் அளிக்கப்படும் குரு-சிஷ்ய வழிகாட்டுதல்கள் மூலமாகவும் அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது. எழுத்துக்கலையின் வருகையானது வாய்மொழி ஆசிரியர்களின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்ததோடு, குருவிற்கும் சீடனுக்கும் இடையிலான அறம் சார்ந்த உறவிலிருந்து அறிவைப் பிரித்தது. பண்டைய கிரேக்கர்களைப் பொறுத்தவரை, ஞானம் என்பது ஒரு தோல் சுருளில் சேமித்து வைக்கக்கூடிய நிலையான தகவல்களின் தொகுப்பு அல்ல; அது உரையாடலின் வழியாகப் பரிமாறிக்கொள்ளப்படும், ஆன்மாவின் துடிப்பான  வாழும் ஒரு நிலை.


பேசிக்கொண்டு மட்டுமே இருந்த சாக்ரட்டீஸ் ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைக்கவில்லை; ஆனாலும், எழுத்தின் மீதான அவரது தீவிரமான விமர்சனத்தை பிளேட்டோ எழுதி வைத்ததால் மட்டுமே இன்று நம்மால் அறிய முடிகிறது. பிளேட்டோ இந்த முரண்பாட்டைத் தீர்க்க, வறட்சியான கட்டுரைகளுக்குப் பதிலாகத் தனது படைப்புகளை முழுக்க முழுக்க உரையாடல்களாகவே எழுதினார். முரண்நகை, விடையளிக்கப்படாத கேள்விகள் ,மாறிவரும் கோணங்கள் நிறைந்த நாடகத்தன்மை கொண்ட உரையாடல்களை உருவாக்குவதன் மூலம், உயிருள்ள பேச்சைப் பிரதிபலிக்கும் ஒரு எழுத்து வடிவத்தை பிளேட்டோ உருவாக்க முயன்றார். இது வாசகர்களைத் தகவல்களை வெறுமனே உள்வாங்குபவர்களாக இல்லாமல், வாதங்களோடு நேரடியாக மோதிச் சிந்திப்பவர்களாக மாற்றியது.


1968-ஆம் ஆண்டு வெளியான தனது புகழ்பெற்ற "பிளேட்டோவின் மருந்தகம்" (Plato’s Pharmacy / La pharmacie de Platon — பின்னர் 1972-இல் அவரது Dissemination நூலில் தொகுக்கப்பட்டது) என்ற கட்டுரையில், பிரெஞ்சு தத்துவஞானி  தெரிதா (Jacques Derrida), மேற்கத்திய மெய்யியல் வரலாற்றை முழுமையாகக் கட்டுடைக்க  பிளேட்டோவின் ஃபியாட்ரஸ் நூலையும், குறிப்பாக ஃபார்மகான் (pharmakon) என்ற கிரேக்கச் சொல் குறிக்கும் மருந்து/விஷம் என்ற இரட்டைப் பொருளைப் பயன்படுத்துகிறார்.


தெரிதாவைப் பொறுத்தவரை, ஃபார்மகான் என்பது பிளேட்டோ பயன்படுத்திய வெறும் இரட்டைப் பொருள் கொண்ட ஒரு சொல் மட்டுமல்ல; அது எழுதப்பட்ட பிரதியை விடப் பேச்சு மொழியே உயர்ந்தது என நிறுவ முயலும் பிளேட்டோவின் வாதத்தை உள்ளிருந்தே தகர்க்கும் ஒரு தீர்மானிக்க முடியாத கருத்தாக்கம் ஆகும். 


பிளேட்டோவின் காலம் தொட்டு மேற்கத்திய தத்துவம் முழுவதுமே அறுதியான, நிலையான உண்மை அல்லது logos மீது கொண்ட நம்பிக்கையின்மீதும், எழுத்தை விடப் பேசப்படும் குரலே ஆன்மாவிற்கும் உண்மைக்கும் நெருக்கமானது என்ற நம்பிக்கையின் மீதும்  அடிப்படையில்  கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிதா வாதிடுகிறார்.



ஃபியாட்ரஸ் நூலில், அகத்தே நிகழும் உயிருள்ள பேச்சைச் சிதைக்கும் ஒரு புற ஒட்டுண்ணியாக எழுத்தைச் சித்தரிப்பதன் மூலம், இந்த இருமை எதிர்வுகளைத் தனித்தனியே பிரித்து வைக்க பிளேட்டோ முயல்கிறார். ஆனால், ஃபார்மகான் என்ற ஒற்றைச் சொல் பிளேட்டோவின் இந்த இருமைக் கட்டமைப்பை உள்ளிருந்தே எவ்வாறு தகர்க்கிறது என்பதை தெரிதா எடுத்துக்காட்டுகிறார்.


பண்டைய கிரேக்க மொழியில், ஃபார்மகான் என்ற சொல் ஒரே நேரத்தில் மருந்து, விஷம், செய்முறை, போதைப்பொருள், வசிய மருந்து. வண்ணச்சாயம்/ஒப்பனைப் பொருள் ஆகிய பல பொருள்களைத் தருகிறது.


தியுத், மன்னர் தமுஸிடம் எழுத்தை நினைவாற்றலுக்கான ஒரு ஃபார்மகான் என்று வழங்கும்போது, அதை "மருந்து" என்ற பொருளில் கூறுகிறார்; ஆனால் மன்னர் தமுஸ் அதை "விஷம்" என்ற பொருளில் அணுகிப் பதிலளிக்கிறார். மொழிபெயர்ப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான சிக்கலை தெரிதா இங்கு சுட்டிக்காட்டுகிறார்: பாரம்பரியமாக மொழிபெயர்ப்பாளர்கள் இடத்திற்கு ஏற்றவாறு இச்சொல்லை "மருந்து" அல்லது "விஷம்" என ஏதேனும் ஒரு பொருளில் மட்டுமே மொழிபெயர்த்து வந்துள்ளனர்.


அந்தச் சொல்லின் மீது ஏதேனும் ஒரு பொருளை மட்டுமே திணிப்பதன் மூலம், மொழிபெயர்ப்பாளர்கள் மூலக் கிரேக்கச் சொல்லில் உள்ள இயங்கியல் பதற்றத்தை  அழித்துவிடுகிறார்கள்;  பிளேட்டோ தனது இருமை எதிர்வுகளைச் சிக்கலின்றித் தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறார்கள். தெரிதாவைப் பொறுத்தவரை, ஃபார்மகான் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று —அது வெறுமனே இதுவோ அல்லது அதுவோ அல்ல; இரண்டின் இணக்கமான கலவையும் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும், அகத்திற்கும் புறத்திற்கும், மருந்திற்கும் நஞ்சிற்கும் இடையிலான பிரிவினைகள் உருவாவதற்கு முந்தைய நிலையற்ற ஊடகமே அது.


பண்டைய கிரேக்க மொழியில் ஃபார்மகான் என்ற சொல்லின் "சொற் குடும்பத்தை"  ஆராய்வதன் மூலம் தெரிதா ஒரு முக்கியமான பார்வையை முன்வைக்கிறார்


ஃபார்மகான் என்ற சொல்லிலிருந்து பெறப்படும்  ஃபார்மகியூஸ் என்ற கிரேக்க சொல்  மந்திரவாதி / சூனியக்காரர் / விஷம் வைப்பவர் என்ற பல அர்த்தங்களைக் கொண்டது.  பிளேட்டோ தனது பிற நூல்களில் சோஃபிஸ்டுகளை மட்டுமன்றி, தனது வார்த்தைகளால் கேட்பவர்களை மயக்கிச் செயலிழக்கச் செய்யும் சாக்ரட்டீஸையும் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறார். 


பண்டைய ஏதென்ஸ் நகரில், கொள்ளைநோய், பஞ்சம் அல்லது நெருக்கடி காலங்களில், சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள சில மனிதர்களை (pharmakoi) அரசாங்கச் செலவில் பராமரிப்பார்கள். பின்னர், நகரின் உள்பகுதியைத் (அகத்தை) தூய்மைப்படுத்துவதற்காக, சடங்கு ரீதியாக அவர்களைத் துன்புறுத்தி நகர மதில்களுக்கு வெளியே (புறத்தே) விரட்டியடிப்பார்கள்.


பிளேட்டோ தனது படைப்புகளில் ஃபார்மகான் மற்றும் ஃபார்மகியூஸ் ஆகிய சொற்களைப் பயன்படுத்திய போதிலும், ஃபார்மகோஸ் என்ற சொல்லை மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் தவிர்த்துள்ளார் என்பதை தெரிதா சுட்டிக்காட்டுகிறார். ஆயினும், அந்தச் சொல்லின் தர்க்கமே ஃபியாட்ரஸ் நூல் முழுவதையும் வழிநடத்துகிறது. பிளேட்டோ எழுத்தை தத்துவத்தின் பலிகடாவாக (pharmakos) நடத்துகிறார். பேச்சையும் அக நினைவாற்றலையும் தூய்மையானதாகவும் களங்கமற்றதாகவும் காட்டுவதற்காக, மொழியின் அனைத்து ஆபத்துகளையும் (தவறான புரிதல், திரிபுபடுத்தல், உயிரற்ற திரும்பக் கூறல்) எழுத்தின் மீது சுமத்தி, அதை உண்மையான தத்துவத்தின் மதில்களுக்கு வெளியே பிளேட்டோ விரட்டியடிக்கிறார்.


பிளேட்டோ தன்னை அறியாமலேயே எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதைக் காட்டுவதுதான் தெரிதாவின் வாசிப்பின்  உச்சக்கட்டமாகும். ஃபியாட்ரஸ் நூலின் பிற்பகுதியில், உயிருள்ள தத்துவப் பேச்சின் மிகத் தூய்மையான வடிவத்தை விவரிக்க விரும்பும் சாக்ரட்டீஸ், அதை எவ்வாறு வர்ணிக்கிறார்? அது "கற்பவரின் ஆன்மாவில் அறிவோடு எழுதப்படும்" ஒரு உரையாடல் என்கிறார்.


இந்த உருவகத்தை தெரிதா இறுகப் பற்றிக்கொள்கிறார்: பேச்சின் மிக உயர்ந்த வடிவத்தை விளக்குவதற்கு பிளேட்டோ ஏன் எழுத்து என்ற உருவகத்தைப் பயன்படுத்த வேண்டும்?


ஏனெனில், அக நினைவாற்றல் (mnēmē) செயல்படுவதற்கும் கூட குறியீடுகள், தடயங்கள் (traces), திரும்பச் செய்தல் (repetition), கட்டமைப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆன்மாவில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டுமானால், அது அங்கே "பொறிக்கப்பட" (inscribed) வேண்டும். எனவே, புற எழுத்தில் பிளேட்டோ எதைக் கண்டிக்கிறாரோ (அதாவது, உடனடி மூலத்திலிருந்து பிரிந்த, திரும்பப் பயன்படுத்தக்கூடிய குறியீடுகளைச் சார்ந்திருப்பது, அதுவே பேச்சு உட்பட அனைத்து மொழி மற்றும் சிந்தனையின் அடிப்படை நிபந்தனையாகும். இந்த அடிப்படைக் கட்டமைப்பை தெரிதா ஆதி-எழுத்து (arche-writing / archi-écriture) என்று அழைக்கிறார். பேச்சு என்பது எழுத்தின் தூய்மையான தந்தை அல்ல; மாறாக, பேச்சே ஏற்கனவே எழுத்தின் ஒரு வடிவமாகத்தான் இருக்கிறது.


பிளேட்டோவின் பிரதிக்குள் ஃபார்மகான் என்ற சொல்லின் தடத்தைப் பின்தொடர்வதன் மூலம், எந்தவொரு பிரதியும் தன்னைத்தானே கட்டவிழ்த்துக்கொள்ளும் விதைகளைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறது என்பதை தெரிதா நிரூபிக்கிறார். இது பிளேட்டோவின் கவனக்குறைவால் நிகழ்ந்ததல்ல; மாறாக, மொழி என்பதே இயல்பாகவே நிலையற்றதாகவும், பன்முகப் பொருள் கொண்டதாகவும் (polysemous), இறுக்கமான தத்துவ எல்லைகளுக்குள் பூட்டி வைக்க முடியாததாகவும் இருப்பதே இதற்குக் காரணமாகும். 

No comments: