Thursday, October 6, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்


ஆப்பிள் கணிணி நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று மரணமடைந்ததைத் தொடர்ந்து இணையம் முழுக்க எழுதப்படும் அஞ்சலிகள் தவறாமல் ஜாப்ஸ் அறுபதுகளில் எழுந்த ஹிப்பி எதிர்கலாச்சார குழுக்களின் வாழ்வியல் முறைகளினாலும் கலைகளினாலும் தாக்கம் பெற்றவர் என்பதினைக் குறிப்பிடுகின்றன. இந்தத் தாக்கத்தினை உற்று கவனிப்பது நமக்கு அவசியமாகும். அமெரிக்காவின் வியட்நாம் போருக்கு எதிரான பரவலான இயக்கங்களே எதிர்கலாச்சார வாழ்வியலாகவும் கலைகளாகவும் இசையாகவும் இலக்கியமாகவும் பரிணமித்தன. ஆண்-பெண் சம உறவு, அதிக பட்ச ஜனநாயகம், பாலியல் சுதந்திரம், இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு, கூட்டுப் பரிணாம வளர்ச்சி, வன்முறையற்ற சிறு குழு வாழ்வு, தன் மதங்களைத் தவிர்த்து பிற மதங்களைக் கற்றல், பிரஞ்கையின் அறியப்படாத தளங்களைக் கண்டறிதல், புதிய கலை வடிவங்களை கண்டுபிடித்தல், எளிமையின் அழகியலைப் பேணுதல் என்று பல வழிகளில் எதிர்கலாச்சார இயக்கங்கள் தங்களை வெளிப்படுத்தின. ஆலென் கின்ஸ்பெர்க் இந்து மதத்தின் தாக்கத்திற்கு உள்ளானதும், ஜேக் கெரோக் பௌத்தரானதும் இந்த எதிர்கலாச்சாரப்போக்கின் வடிவங்களே. பீட்டில்ஸ் இசைக்குழுவினர் இந்திய யோகிகளின் சிஷ்யர்களானதும் இவ்வாறகவே நடந்தது. பீட் சீகர் போன்றோரின் தலைமையில் நாட்டுப்புற இசையின்பால் பெரும்பான்மையினரின் கவனம் பெற்றதும் எதிர்கலாச்சார இயக்கங்களின் மூலம்தான். எதிர்கலாச்சாரக் குழுக்கள் அமைத்த கம்யூன்கள் இவற்றில் முக்கியமான கலாச்சார பரிசோதனைகளாகும். இவை ரஷ்யாவில் டால்ஸ்டாய் அமைத்த பண்ணையார் கம்யூன்கள் போன்றவை அல்ல. மனித பரிணாம வளர்ச்சி என்பது தனி மனிதனிடத்தில் நிகழ்வதில்லை குழுவினரிடத்தே கூட்டாக நிகழக்கூடியது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை. போதைப் பொருள் உபயோகத்தை பிரஞ்கையின் அறியப்படாத தளங்களைக் கண்டறிய பயன்படுத்தத் தயங்காதவை. இந்த ஹிப்பி கம்யூன்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை தாமஸ் பிஞ்ச்சனின் Gravity’s Rainbow நாவலும் ரொனால்ட் சுகெனிக்கின் 98.6 நாவலும் காத்திரமாக பதிவு செய்கின்றன.

இந்த எதிர்கலாச்சார இயக்கங்களின் தொழில் நுட்ப முகமாக ஆரம்பித்தவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் கற்றுகொண்ட பௌத்தம் ஆப்பிள் பொருட்களின் எளிமை அழகியலைக் கட்டமைத்தது. மதக் குறியீடுகளின் மறைமுகமான பயன்பாடு ஆப்பிள் பொருட்களுக்கு எராளமான விசுவாசிகளை உருவாக்கியது. உதாரணமாக் ஒன்று: கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ, ஆதியாகமத்தில் கடவுளின் ஆணையை மீறி ஆப்பிளைக் கடித்து அறிவின் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆதாம் ஏவாளின் ஆப்பிளை மறைமுகமாக நினைவுகூர்கிறது. ஹிப்பிகளைப் போலவே தான் LSD எடுத்துக்கொள்வதை ஜாப்ஸ் பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். மனித பரிணாம வளர்ச்சி என்பது கூட்டாகவே சாத்தியம் என்ற எதிர் கலாச்சார விழுமியமே கணிணிகள் எல்லோரையும் சென்றடையவேண்டும் எல்லோரும் பயனர்களாக வேண்டும் என்ற பாதையை ஜாப்ஸிற்குக் காட்டக்கூடியதாக இருந்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் சிறு குழு விழுமியங்களும் கண்டுபிடிப்புகளும் எல்லோரையும் சென்றடையச் செய்யும்போது, பொதுத் தளத்தை அடையும்போது, அவை எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடூரங்களாகின்றன என்பதற்கும் ஸ்டீவ் ஜாப்ஸே சிறந்த எடுத்துகாட்டாவார். எதிர் கலாச்சாரக் குழுக்களின் விழுமியங்களில் தாக்கம் பெற்றவையே திறந்த அமைப்பாக்கம் பெற்ற மென் பொருள் இயக்கங்கள் (Open source software movements). கணிணியும் கணிணியின் மென் பொருட்களும் திறந்த அமைப்பாக்கம் பெற்றிருந்தால்தான் ஜனநாயக அறிவுப் பரவலாக்கம் நிகழும் என்ற அடிப்படையில் தனி காப்புரிமையை மென்பொருள்களுக்கு பெறுவதை மறுப்பவை திறந்த அமைப்ப்பாக்க மென்பொருள் இயக்கங்கள். இதனாலேயே திறந்த அமைப்பாக்க மென்பொருட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஆப்பிளின் எந்த மென்பொருளுமோ அல்லது கணிணி உள்கட்டுமானங்களோ திறந்த அமைப்பாக்கம் பெற்றவையல்ல. மாறாக ஜாப்ஸையும் ஆப்பிள் நிறுவனத்தையும் போல கார்ப்பரேட் காப்புரிமை உரிமத்தைக் கறாராக நிலை நிறுத்தியவர்கள், அதன் மூலம் அதீத லாபம் அடைபவர்கள் வேறு யாருமே இல்லை எனலாம். இது தவிர ஆப்பிள் பொருட்கள் எல்லாமே சீனாவிலேயே சல்லிசாகத் தயாரிக்கப்பட்டு கொள்ளை விலைக்கு உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. ஜாப்ஸின் இந்த மாற்றம் அவர் ஆப்பிளுக்கு இரண்டாம் முறை திரும்பி வந்தபோதுதான் நிகழ்ந்தது அவர் ஆப்பிளை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என்றும் வாதிடக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த அறக்கட்டளைகளையும் நிறுவவில்லை; தன்னுடைய கல்லூரி நாட்களில் ஏழு மைல் நடந்துபோய் கலிஃபோர்னியாவிலுள்ள ஹரே கிருஷ்ணா இயக்கக் கோவிலில் இலவச மதிய உணவை தொடர்ந்து சாப்பிட்டதை அவர் பல பேட்டிகளில் சொல்லியிருந்தாலும் கூட.

இந்தக் கட்டுரையை நான் ஆப்பிள் மடி கணிணியில்தான் தட்டச்சு செய்கிறேன். ஆப்பிளுக்கு மாறியபின் என் கணிணி வேலைகள் எத்தனையோ மடங்கு சுலபமாக ஆகியிருக்கிறது.

சில முரண்பாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பதிவு செய்ய ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த சந்தர்ப்பத்தினைத் தந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

எதிர்கலாச்சாரத்திற்கும் கணிணி தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி மேலும் படிக்க: http://books.google.com/books?id=2SNFpgX_WigC&printsec=frontcover&dq=cyberculture&ei=_kvOR-W3F4vIsQPJ7_m-Aw&sig=CzrAl__6QqNibx71d4Ap2f9SYVo#v=onepage&q&f=false

ஆப்பிள் தொழில் நிறுவனம் எப்படி மதக்குறியீடுகளைப் பயன்படுத்தியது என்பதற்கு கீழ்கண்ட சுட்டிகளிலுள்ள தகவல்களைப் படித்துப் பாருங்கள்.
http://futurima.wordpress.com/tag/apple/
http://www.amazon.com/Third-Apple-Personal-Computers-Revolution/dp/0151898502
http://en.wikipedia.org/wiki/Apple_(symbolism)

Post a Comment