Thursday, June 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-55

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-55

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் கூற்று

இயற்றியவர்: சிறைக்குடி ஆந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 56

திணை:   பாலை

————

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்

வளையுடை கைய ளெம்மோ டுணீஇயர்

வருகதில் லம்ம தானே

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிப்பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சில்வாகிய நீரை வளையையுடைய கையளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வந்தால், என் நெஞ்சின்கண் விரும்பிப் பொருந்திய தலைவி மிகவும் இரங்கத்தக்காள்!

————

பாலை நிலத் தீமைகள் கனவா, நனவா?

——-

பாலை நிலத்தில் உள்ள தீமைகளைக் கண்டு தலைவன் கூறியதாக அமைக்கப்பட்டுள்ள இப்பாடலில் அவன் காட்சிகளைக் கனவில் கண்டானா நனவில் கண்டானா என்பதற்கு இரண்டிலும் கண்டான் என்பது போன்ற விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. தொல்காப்பியம், பொருளாதிகாரம், அகத்திணையியல் 44வது சூத்திரத்திற்கு இளம்பூரணரின் உரையைப் பின்பற்றி இரா. இராகவையங்கார் இது களவில் தலைவன் தலைவியை உடன்கொண்டு போகத் துணிந்தது என குறிக்கிறார். அகத்திணையியல் 44வது சூத்திரம் தலைவன் கூற்று தலைவியின் தமர் ஏற்றுக்கொள்ளாதபோது பருவநிலை, சுரம் பற்றிக் கூறித் தலைவி உடன்வருதலைத் தடுப்பதற்காகப் பேசுவதாக இருக்கும் என்று சொல்கிறது. இப்படிக் கொள்ளப்படும்போது தலைவன் பாலை நிலத்தின் தீமைகளை போவதற்கு  முன்பாகவே கனவிலோ கற்பனையிலோ கண்டு சொன்னதாகக் கருதப்படும். 

தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் ஐந்திற்கு நச்சினார்க்கினியரின் உரையை வைத்து இப்பாடலின் சூழலை விளக்கும்போது அது கற்பின் தலைவன் தோழி கேட்கக் தலைவன் பாலை நிலத்தின் கொடுமைகளை எடுத்துச் சொன்னதாகக் கருதப்படும்.

———

வேட்டச் செந்நாயின் ஊண் மிச்சிலும் குளவி மொய்த்த அழுகல் சின்னீரும்

——————-

பாலை நிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிது நீரை விலங்குகளும் மக்களும் அருந்துதல் வழக்கம் என்பதை அகநானூற்றுப் பாடலில் வரும் ‘ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட சிரு பல கேணி’ என்ற வரியால் அறியலாம். பாலை நிலத்தில் வேட்டைச் செந்நாய் விட்டு சென்ற ஊண் மிச்சத்தையும் அழுகல் நீரையும் தலைவி உட்கொள்ளவேண்டுமே எனத் தலைவன் புலம்புகிறான்.  குளவி என்பது காட்டு மல்லலிகைப் பூ. குளவி  என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார்  காட்டு மல்லிகை, ஈண்டு அதன் சருகிற்கு ஆகுபெயர் என்று மேலும் விளக்குகிறார்.  அருகிலிருந்த மரங்களிலிருந்து  உதிர்ந்த குளவிமலர்கள் மூடி நெடுநாளிருத்தலால் அவை அழுகி நீரில் அழுகல் நாற்றத்தை உண்டாக்கின. சில் நீர், சின்னீர் என்பது சிறிய அளவிலான நீர். ‘குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாது சிலவென்றலும் வழக்கம்’ என தொல்காப்பியம் கிளவியாக்கம் 17 ஆவது சூத்திரம் சொல்கிறது. 

———

வருகதில்

——

வருகதில் என்ற சொல்லிலுள்ள ‘தில்’ விழைவுப் பொருளும் ஒழியிசைப் பொருளும் ஒரு சேரக் குறித்து நின்றது, எனவே வருகதில் என்பதற்கு வருவாளாக என்பது பொருள் என பொ. வே. சோமசுந்தரனார் உ.வே.சாவைப் பின்பற்றி உரை எழுதுகிறார். உ.வே.சா. தலைவி வருவாளென்றால் அவள் பாலை நிலத்தின் இந்தக்கொடுமைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எழுதி ‘வருகதில்’ என்பதற்கு ‘வருவாளென்றால்’ எனப் பொருளுரைக்கிறார். நமது தமிழாசிரியர்களும்  உரையாசிரியர்களும் எப்படி ஒவ்வொரு சொல்லையும் அணுக்கமாக வாசித்தார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

———

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே

——-

தலைவி பிரிந்திருந்தால் பிரிவைத் தாங்க முடியாமல் துன்புறுபவளாவாள், உடன் வந்தாலோ பாலை நிலத்தின் தீமைகளைத் தாங்க முடியாதவளாவாள் ஆகையால் தலைவன் அவளை ‘அளியள்’ என்றழைக்கிறான். ‘அளியளோ வளியல்’ என்றது மிகவும் அளியல் எனப் பொருள் பெறும். இப்படி அளியளோ வளியளாகி இருப்பவள் வளையலணிந்த மென்மையான கையுடையவள் என்பது தலைவியின் மென்மையை மேலும் சிறப்பிப்பதாகும். தலைவியைப் பிரிந்து வந்தேனென்றாலும் எப்போதும் அவளையே நினைக்கும் நிலையிருப்பதால் தலைவன் அவளை நெஞ்சமர்ந்தோளே என விளிக்கிறான். 

இத்தகைய காதலின் மென் உணர்வுகள் (tenderness) அபூர்வமானவை அவற்றை நாம் மனித வாழ்வின் விழுமியங்களாக அடையாளம் காணவேண்டும். 

—-

No comments: