Friday, June 28, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-69

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-69

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம்  கூறியது

இயற்றியவர்: ஓரம்போகியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 70

திணை: குறிஞ்சி

————

ஒடுங்கீ ரோதி யொண் ணுதற் குறுமகள்

நறுந்தண் ணீர ளாரணங் கினளே

இணைய ளென்றவட் புனையள வறியேன்

சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங்காலே

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, ஒடுங்கிய நெய்ப்பையுடைய கூந்தலையும் ஒளியுடைய  நெற்றியையும் உடைய இளையவளாகிய தலைவி, மணத்தையும் தண்மையையும் உடைய தன்மையினள். ஆயினும் பிரிந்த காலத்தில் பொறுத்தற்கரிய வருத்தத்தைத் தருபவள்; அவளை இத்தகையவளெனப் புனைந்துரைக்கும் எல்லையை அறியேன். அவளுடைய சொற்கள் சிலவாகவும், மென்மையுடையனவாகவும் இருக்கின்றன. அவளை நான் தழுவும்போது அவள் பஞ்சணையைப் போன்ற மென்மையை உடையவளாக இருக்கிறாள்.

——-

ஐம்புல இன்பங்களும் அதற்கு மேல் எல்லையற்று விரிதலும்

———

இப்பாடலில் தலைவன் தலைவியிடம் ஐம்புல இன்பங்களும் பெற்றதாக உரைக்கிறான். ஓதியும் ஒண்ணுதலும் கண்ணுக்கு இன்பம்; நறுந்தண் நீரள் முகர்தற்கு இன்பம்;  மெல்லிய கிளவி செவிக்கு இன்பம்; அணை மெல்லியளாதல் தொடுவதற்கு இன்பம்; முயங்குதல் குறிப்பால் சுவைக்கும் இன்பம். புனையப் புனைய தலைவனுக்குத் தலைவியைப் பற்றி மேலும் புனையத் தோன்றுவதால் இவ்வளவே என வரையறுத்து அவளை நிறுத்த இயலாமல் போவதால் புனையளவறியேன் என்றும் சொல்கிறான். இதனால்  தலைவி தலைவனுக்கு இந்தப்பாடலில் வெறும் நுகர்வு உடலாக இல்லாமல்  அதற்கு மேலுமானவளாக இருக்கிறாள்.  கிளவி சில் மெல்லிய என்று தலைவன் தலைவியின் சொற்களைப் பற்றிச் சொல்லும்போது அவை சின்மையும் மென்மையும் உடையன என்று சொல்கிறான். இதனால் தலைவி ஒரு ஆளாக, சொற்ப வார்த்தைகளை மென்மையாகப் பேசக்கூடிய குணங்களுடைய  நபராகத் தெரியவருகிறாள். இது இப்பாடலின் சிறப்பு.  அதனால் பாலியல் களமாக்கப்பட்ட உடலாக இல்லாமல் பெண்ணுடல் இப்பாடலில் நெருக்கத்தின் மென்மையை சித்தரிப்பதாக மாறுகிறது. 


1101 ஆவது திருக்குறளான, “ கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண் தொடி கண்ணே உள” இப்பாடலோடு இணைத்து வாசிக்கத்தக்கது. 

——

அணை போன்ற மென்மை

——

பஞ்சணை போன்ற மென்மை என்ற சித்தரிப்பு பல சங்க இலக்கியப்பிரதிகளிலும் வாசிக்கக் கிடைக்கிறது. அவற்றில் பெருங்கதையில் வரும் “அணைபுரை மென்மை யமைபடு பணைத்தோள்” என்ற வரியும் சீவகசிந்தாமணியில் வரும் “செம்பஞ்சியணையனைய வாடமைத் தோள்” என்ற வரியும் ஒப்புமைக்காக கவனிக்கத்தக்கன. 

—-

சொற்பொருள்

——

சில சொற்பொருள்களை இப்பாடலில் அறிந்துகொள்வது நல்லது. ஓதி- ஐவகைக் கூந்தல் பாகுபாட்டில் ஒன்றாகிய சுருள். ஈர் ஓதி- சீமந்த ரேகை பட நடுவில் பிரித்துவிடப்பட்ட கூந்தல், குறுமகள்- இளையவள். நீரள்- நீர்மையுடையவள். கிளவி- சொல். ஆரணங்கு- அவளன்றி வேறெதெனாலும் நீங்கற்கு அரிய வருத்தம்.

———



No comments: