Saturday, June 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-57

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-57

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழனிடம்  கூறியது

இயற்றியவர்: வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 58

திணை: குறிஞ்சி

————

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையி லூமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெ யுணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

இடித்துரைக்கும் நண்பரே, உங்களது காரியமாக எனது நோயை நிறுத்தினால், மிக நன்று. எனது விருப்பமும் அதுவே. ஞாயிறு காயும் வெம்மையையுடைய பாறையினடத்தே கையில்லாத ஊமையன் தன் கண்ணினால் பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப் போல என்னிடம் உண்டான காமநோய் பரவியது பொறுத்துக்கொண்டு நீக்குதற்கு அரிதாயிருக்கின்றது.

———-

கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல்

——-

பெருங்கதையில் “ சொல்லருங் கடுநோய்க் காமக் கனலெரி” என்றொரு அழகான வரி காமம் சொற்களால் கூட்டுவதற்கு அரிதாக எப்படி கனலாய் எரிக்கும் என்று சொல்கிறது. அது போலவே காமத்தினால் எரியூட்டப்பட்ட தலைவன் தன் தோழனிடம்  காமத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாததை இப்பாடலில் சொல்கிறான். 


பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் ஞாயிறின் வெப்பத்தினால் உருகிப் பரவுவது போலக் காமம் நோயாய்ப் படர்ந்தது; அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு கைகளற்றவனாகவும் ஊமையாகவும் இருக்கும் ஒருவனால் எப்படி இன்னொரு இடத்தில் வெண்ணெயை எடுத்து வைத்து பாதுகாக்கவோ அல்லது பிறரை அழைத்து பாதுகாக்கச் சொல்லவோ இயலாதோ அதே நிலைமையில் இருக்கிறேன் எனத் தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான். 


தொல்காப்பியம் களவியல் சூத்திரம் பதினொன்றுக்கு உரை எழுதும் இளம்பூரணர் தலைவன் கூற்றின்தன்மை பாங்கன் இடித்துரைத்ததை மறுத்து தன் நெஞ்சின் வருத்தங்களைக் கூறுவதாக கழற்றெதிர்மறையாக நிகழும் எனக் கூறுகிறார். இறையனார் அகப்பொருளுரை களவியல் சூத்திரம் இருபத்தி ஆறும் இப்பாடலில் வரும் தலைவன் கூற்று போன்றவற்றைக் கழற்றெதிர்மறையாக அடையாளப்படுத்துகிறது.

———

கழற்றெதிர்மறையில் வரும் பன்மைச் சொற்கள்

——

இடித்துரைத்த தோழனை மறுத்து தலைவன் பேசுகையில் கேளிர், நும், எனப் பன்மை சொற்கள் வந்தாலும் அவை நண்பன் ஒருவனையே குறித்தன. நவீன குறியியல் ஒருவரை நோக்கி சொல்லப்பட்ட பன்மைச் சொற்கள், கவிதையில், வாசகருக்கான இடத்தை (subject position of readers) விளிக்கப்பட்டவரின் இடமாக மாற்றும் என விளக்கமளிக்கும். எனவே இக்கவிதையை வாசிப்பவர்கள் தோழனினின் இடத்தில் சூசகமாக உள்ளிழுக்கப்படுகிறார்கள். இது எல்லா கூற்றுகளிலும் நிகழ வேண்டிய அவசியமில்லை; பிற கூற்றுகளில் வாசகர்கள் இருவருக்கிடையில் நிகழும் பேச்சை பார்வையாளர்களாகவோ, ஒட்டுக்கேட்பவர்களாகவோ கவனிக்கக்கூடிய்வர்களாக இருக்கலாம். 

——-

மன் எனும் இடைச்சொல்

———

 தொல்காப்பியம் இடையியல் சூத்திரம் நான்கு, கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே என வரையறுக்கிறது. இக்கவிதையில் இரண்டாவது வரியில் வரும் ‘மற்றில்ல’ என்பது மன், தில்ல ஆகிய இடைச்சொற்கள் புணர்ந்ததால் வந்ததாகும். மன் என்பது மிகுதிக்குறிப்பு, தில்ல என்பதிலுள்ள ‘தில்’ விருப்பத்தின் கண் வந்த இடைச்சொல் ஈறு திரிந்து வந்தது. மற்றில்ல என்பதற்கு பிற இலவாகும் என பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதியிருப்பது பொருத்தமானது. 

—-


No comments: