Tuesday, June 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-48

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-48

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்:  அம்மூவனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 49

திணை: நெய்தல் 

————-

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து

மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை ஆயினும்,

நீ ஆகியர் என் கணவனை,

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச்செடியையும் நீல மணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ, இப்பிறப்பு நீங்கப் பெற்று நமக்கு வேறு பிறவி உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்து ஒழுகும் நீயே ஆகுக. நின்னுடைய மனதிற்கு ஒத்த காதலி இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

———-

நெஞ்சு நேர்பவள்

———

இந்தப் பாடலின் சூழலை விவரிக்கிற உ.வே.சா. உள்ளிட்ட உரையாசிரியர்கள் அனைவருமே தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த காலத்தில் முன்பு இருந்த ஆற்றாமை நீங்கி அவனோடு கூடி மகிழ்ந்த தலைவி கூறியதாகச் சொல்கின்றனர். ஆனால் பாடலிலோ தலைவன் தலைவியை பிரிந்துகூடியதற்கான சான்றுகள் வெளிப்படையாக இல்லை. உ.வே.சா. இப்பாடலிலுள்ள  குறிப்புகளை வாசிப்பதன் மூலமே அம்முடிவுக்கு வருகிறார். ‘நீ ஆகியர் என் கணவனை’ என்பதற்கு ஏற்ப மனைவியென்று சொல்லாது நெஞ்சு நேர்பவள் என்று தலைவி சொல்லியது மனைவியாக இருப்பினும் நெஞ்சு நேர்பவளாகும் பேறு பரத்தைக்கும் கிடைக்கும் என்பதினால் வாளா மனைவியாக வாழாமல் நெஞ்சு பொருந்தியவளாகவும் வேண்டும் என்பது நினைவாதலும் என உ.வே.சா. உரை எழுதி பாடலின் சூழலைக் கணிக்கிறார். நீ என் கணவனாக,  நானும் உன் மனைவியாக,  இதைப் போல நம் அடுத்த பிறவியிலும் இருக்கவேண்டும் என்று  திரும்பச் சொல்வதில் தலைவியின் நீடித்த பந்தத்திற்கான ஏக்கம் தெரிகிறது.

——-

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து

——

அணில் பல் முண்டகத்தின் (கழிமுள்ளிச் செடி) முள்ளுக்கு உவமை சொல்லப்பட்டதாலும் அது முதிர்ந்திருந்தது என்று சொல்லப்பட்டதாலும் முள்ளிச்செடி புறத்தே முட்களையுடைதாயினும் மலர்களும் அம்மலர்களில் பூந்தாதும் குறைவறப் பெற்றிருத்தலைப்போல தலைவன் பரத்தையரிடம் செல்லக்கூடியவானாக இருந்தாலும் தன் மாட்டிலும் அன்புடையவனாகவே இருக்கிறான் என்பது தலைவி குறிப்பு. இதைக் கவனித்து எழுதுவதாலேயே உ.வே.சா. தலைவி கூற்றிற்கான சூழல் பரத்தையிடமிருந்து திரும்பி வந்து தலைவியோடு களித்திருந்த தலைவனிடம் தலைவி கூறியது  என எழுதுகிறார்.

——-

மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப

———-

‘மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப’ என்ற வரிக்கு இராகவையங்கார்  அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய முண்டக மலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் (கறுப்பு அன்னங்கள்) மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப என்று உரை எழுதுகிறார். மணிக் கேழ் அன்ன என்பதில் ‘அன்ன’ என்பதற்கு ‘போன்ற’ என்று பொருள்; ஆகவே  காரன்னங்கள் என்று உரையெழுதுவது பிழை. ‘மா நீர்’ என்று அடுத்து வரும் சொற்களின் பொருளாகிய கரி நிறமுடைய நீர் என்பதை ‘அன்ன’ என்பதன் மேல் ஏற்றி கரிய அன்னங்கள் இராகவையங்கார் உரை எழுதியிருப்பதாக  யூகிக்கலாம். ‘சேர்ப்ப’ என்பது அண்மை விளி. தலைவி தலைவனை நோக்கி கரிய நீல நிறமுடைய நீரையுடய கடலையும் முண்டக மலர்கள் இருக்கும் கடற்கரையையும் சேர்ந்தவனே என விளிக்கிறாள்.  

சேர்ப்ப, மறுமையாயினும் நீ என் கணவன் ஆகுக, நின் நெஞ்சு நேர்பவள் யான் ஆகுக எனக் கொண்டு கூட்ட வேண்டும்.

No comments: