Friday, June 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-56

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-56

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: சிறைக்குடி ஆந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 57

திணை:   நெய்தல்

————

பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன

நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்

பிரிவரி தாகிய தாண்டாக் காமமொ

டுடனுயிர் போகுக தில்ல கடனறிந்

திருவே மாகிய வுலகத்

தொருவே மாகிய புன்மைநா முயற்கே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

செயக்கடவனாகிய முறையை அறிந்து பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாகிய இருவேமாகப் பயின்று வந்த இவ்வுலகத்தில் பிரிவினால் ஒருவராகிய துன்பத்தினின்றும் நாம் நீங்கித் தப்புதற்கு பூவானது தம் இடையிலே பட்டாலும் அக்காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. நீரின்கண் உறைகின்ற மகன்றிற் பறவைகளின் புணர்ச்சி போல, பிரிவு அரிதாகிய குறையாத காமத்தோடு ஒருங்கே எம் உயிர் போவனவாகுக. இது என் விருப்பம்.

———

பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன

——-

இப்பாடலின் ஆரம்ப வரியான ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன’ என்பது மிகவும் அழகான கவித்துவம் மிக்க வரி.  ஒன்றையொன்று பிரியாமல் வாழும் நீர்ப்பறவைகளான மகன்றிற் பறவைகள்  பல சங்கப்பாடல்களில் இணைபிரியா காதலர்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. பரிபாடலில்  வரும்  ‘அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி’  ஐங்குறுநூறு 381 ஆவது பாடலில் வரும் , ‘குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை’  அகநானூறு 220  ஆவது பாடலில் வரும்  ‘நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்’ ஆகிய வரிகளில் மகன்றில் பறவைகளுக்கான குறிப்புகள் வருகின்றன. அன்றில் பறவைகளின் ஒரு வகையாக  மகன்றில் பறவைகள் கருதப்படுகின்றன. 

  

தலைவன் தன்னைத் தழுவும்போது பூ(அற்ப) அளவுக்கால இடைவெளி தோன்றினாலும் அதனை ஓராண்டு இடைவெளி போல இருப்பதாக தலைவி இப்பாடலில் குறிப்பிடுகிறாள்.  இப்படி பூவிடை இடைவெளி கூட அற்றுத்  தழுவுவதுதான் மகன்றில் போன்ற புணர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. உ.வே.சா. வேறுவிதமான விள்க்கமும் கொடுக்கிறார்; அவர்  “மகன்றில் பறவைகள் மலர்களிற் பயில்வனவாதலின் உடனுறையுங் காலத்தில் அப்பூ இடைப்படுதலும் கூடுமாதலால் ‘பூவிடைப்படினும்’ என்றாள்” என்று எழுதுகிறார். 

பூ இடைப்படினும்  என்பதிலுள்ள  உம்மை இழிவு சிறப்பும்மை ஆகும். 


கணவனும் மனைவியும் இணைந்து வாழும் இல்லற முறைகளைக் கடனென்றும், பலபிறவிகளிலும் விடாது தொடரும் உறவை இருவேமாகிய உலகம் என்றும் தலைவி கூறுவது அவர்களுக்கிடையிலுள்ள அபாரமான பிணைப்பையும் காதலையும் சொல்வதாக இருக்கிறது. 

—-

உயிர் போகுக

—-

தலைவனைப் பிரிந்திருத்தலிலும் உயிர் நீத்தல் சிறப்புடையது என தலைவி ‘உயிர் போகுக’ இப்பாடலில் சொல்கிறாள். அப்படி பிரிய நேரிட்டால் அதைத் தலைவி ‘புன்மை’ எனக் குறிப்பிடுகிறாள். புன்மை என்ற சொல்லுக்கு  பொ. வே. சோமசுந்தரனார் சிறுமை எனவும்  உ. வே. சா. துன்பம் எனவும்   தமிழண்ணல் இழிவு எனவும் பொருளுரைக்கின்றனர். 


No comments: