Wednesday, June 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-67

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-67

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 68

திணை: குறிஞ்சி

————

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்

ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்

அரும்பனி யச்சிரந் தீர்க்கும்

மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

குறும்பூழ்ப்பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும்பொருட்டுக் கொள்ளும், பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் பரிகாரம் என்னை மணந்த அவருடைய மார்பேயாகும், வேறு இல்லை.

——

அரும்பனி யச்சிரந் தீர்க்கும்

———-

முன்பனிக்காலத்தின் அழகான சித்திரமொன்று இக்கவிதையில் இருக்கிறது. இந்த குளிர்ந்த விடியற்காலை பனிமூட்டத்தில் என்ற மூன்றாவது வரி (அரும்பனி)  வெறும் வானிலை விவரிபபு மட்டுமல்ல, அது தலைவியின் தனிமையும் சோகமும கலந்த  உணர்வு நிலையின் அடையாளமுமாகும். அச்சிரம் என்பது முன்பனிக்காலம். இது அற்சிரம் என்றும் வழங்கும். தலைவனைப் பிரிந்து தலைவி முன்பனிக்காலத்தில் துன்புறுவதும் புலம்புவதும் பல அகப்பாடல்களில் வருகின்றன. 

———

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்

——-

உளுந்து பயறு போன்ற தானியங்கள் முன்பனிக்காலத்தில் முதிரக்கூடியவை. இப்பாடலில் முற்றிய உளுந்தினை மான்கள் மேய்வது தலைவியின் அக விழைவினைக் குறிப்பதாகிறது . அது

இயற்கையின் செழுமை அழகு ஆகியவற்றின் படிமமாக இருக்கிறது.  அருள், அப்பாவித்தனம் ஆகியவர்றின் சின்னங்களான மான்கள், வளம், ஊட்டச்சத்தின் அடையாளமான முற்றிய உளுந்துடன் ஒப்பிடப்படுகின்றன. உளுந்துச்செடியின் வேர்கள் மேலே தெரிய அவையோ பூழ்க்கால்களை ஒத்திருக்கின்றன. பூழ் என்பது குறும்பூழ் என்பதன் குறை; குறும்பூழ் என்பது காடைகளைக் குறிக்கும். செங்கால் உளுந்தென்றது உளுந்து செடியின் சிவப்பு நிற தண்டுகளைக்குறிக்கும். காடைகளை முற்றத்தில் மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கும் விளையாட்டுக்களைப் பற்றியும் அகப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. இந்த பல்கூட்டான உவமைகள் இக்கவிதைக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பலதள அர்த்தங்களைத் தரக்கூடியனவாகவும் இருக்கின்றன. 

——

பனியும், உளுந்தும், காடையின் கால்களும், மான்களும்

——-

பனியை மார்பென்றதால் அது நோயாயிற்று என இரா. இராகவையங்கார் உரை எழுதுகிறார். விதைத்த உளுந்து பூப்பதற்கு முன் வருவேன் என்று கூறிப்போன தலைவன் உளுந்து முதிர்ந்து மான்களைக் கவரும் நிலை அடைந்த பின்னரும் வரவில்லை எனத் தலைவி வருந்துகிறாள். மானினம் முற்றிய உளுந்தினைக் கவரும் அற்சினம் (முன் பனிக்காலம்) என்றதனால் விலங்குகள் கூட தங்களுக்கு வேண்டிய நுகர்ச்சியை இனத்தோடு பெற்று மகிழ்ச்சியாய் இருக்கும் காலத்தில் தான் மட்டும் எவ்வகை நுகர்வின்பமும் இன்றித் தனியே இருக்கிறேன் என்று தலைவி குறிப்புகளால் உணர்த்துகிறாள். எனவே இதை திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் இறைச்சி என்று அழைக்கிறார். 

———

மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே

———

நினைவின் இடமாக உடலும்,ஆசையின் வாகனமாக மொழியும் அவை எதிரொலித்து அடங்கும் இடமாக மணந்த மார்பும் இருப்பதாக இக்கவிதை சொல்கிறது. மணந்த மார்பே என்பதிலுள்ள ஏகாரம் பிரிநிலையைக் காட்டி, நெஞ்சறி சுட்டாய் அம்மார்பு மருந்தாததலை முன்னமே அறிந்தேனே என்பதையும் சொல்கிறது. மருந்து பிறிதில்லை என்றது பிரிவின் துயர் உச்சமடைவதன் சமிக்ஞை; ஏக்கம் விரக்தியாய் பரிமாணம் பெறுவதன் வெளிப்பாடு. 


அச்சிரந்தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே, பிறிதில்லை. அவர் உடன் இராமையால் இந்த முன்பனிக்காலம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று எனத் தலைவி கூறுகிறாள். 

——


No comments: