Friday, June 21, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-63

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-63

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: கருவூர்க் கதப்பிள்ளை

குறுந்தொகையில் பாடல் எண்; 64

திணை: முல்லை

————

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்

புன்றலை மன்ற நோக்கி மாலை

மடக்கட் குழவி யணவந் தன்ன

நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட்டாரே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, பல பசுக்கள், நெடிய வழியின் கண் நீங்கிச்சென்றனவாக, அவை தங்கியிருத்தற்குரிய புல்லிய இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து மாலைக்காலத்தில், மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள் தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தையுடையமாதலை அறிந்திருந்தும் நெடுதூரத்தேயுள்ள காட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுதூரத்திலேயுள்ளார்.

——-

புன்றலை மன்ற நோக்கி

——-

இப்பாடலில் சட்டகப்படுத்துதல்  (Framing) தலைவி தோழியிடம் கூறுவதாக இருக்கிறது; பிரிவாற்றாமையில் வாடியிருக்கும் தலைவியைப் பார்த்து தோழி ‘அவர் நின் துன்பத்தை அறிந்திரார்’ என்று சொல்ல அதற்கு பதிலாக ‘அறிந்தும் இன்னும் சேயராயினார்” என்று தலைவி இப்பாடலில் தலைவி தோழிக்கு பதிலுரைக்கிறாள். இதைச் சொல்வதற்கு தலைவி பயன்படுத்தும் உவமை  “பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் புன்றலை மன்ற நோக்கிய’ கன்றுகள் என்பதாகும். பசுக்களின் இன்மையில் பொலிவிழந்த இடம் புன்றலை ஆகும்; மன்றம் என்பது தொழுவத்தைக் குறித்ததாகும். மேயச்சென்ற பசுக்கள் மாலையில் திரும்பி வருவதை எதிர்நோக்கி தொழுவத்தை கன்றுகள் பார்த்து இருப்பதை தலைவி தன்னுடைய நிலைக்கு உவமையாகக் கூறுகிறாள்.

———

தாய் சேய் அன்பு

——

தாய்ப்பசுவிற்கும் கன்றுக்கும் உள்ள அன்பு தலைவன் தலைவிக்கு இடையிலுள்ள அன்பாக உவமிக்கப்படுவது தமிழ்க் கவிதா மரபுகளில் ஒன்றாகும். அகநானூற்றுப் பாடல் ஒன்றில் “பண்பில் கோவலர் தாய்பிரிதியாதத நெஞ்சமர் குழவி போல நொந்துநொந் தினா மொழிது மென்ப’ என்று தலைவியின் அன்புக்கும், கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் ‘கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி’  என்று தாயன்புக்கும், திருவாசகத்தில், ‘காற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே” என்று அடியாரது இறை அன்புக்கும் உவமையாக வருதலை வாசிக்கலாம்.  இப்பாடலில் கன்றுகள் பசுக்களை (எதிர்) நோக்கி, தொழுவத்தைப் பார்த்து ஏங்குகின்றன என்பதில் நோக்குதலின் தூரம் ஏக்கம் ஏற்படுத்திய உணர்வு, உடல் இடைவெளியாகச் சிறப்பு பெறுகிறது. . இப்படி நோக்குதல் உருவாக்குவதை குறியீட்டு களம் எனக் குறியியல் அறிஞர்கள் அழைப்பார்கள். (பார்க்க: Silverman, Kaja. The Subject of Semiotics. Oxford University Press, 1983.)

——

மடக்கண்ணும் மாலை நேரமும்

———

மாலை நேரத்தின் காதல்  மன அலைவுறுதல் இப்பாடலிலும் சொல்லப்படுகிறது.  அந்தியில் தொழுவத்தில் இருள் கவிய அதை மடக்கண்ணுடன் (மன்ற நோக்கி மாலை மடக்கட் குழவி) கன்றுகள் பார்த்து நிற்பது காதல் ஏக்கத்தின் கள்ளமின்மை, மென்நிலை ஆகியவற்றையும் சொல்கின்றன. மடக் கண் குழவி என்பதற்கு  பொ. வே. சோமசுந்தரனார்  மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள் என்றும் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அறியாமையைப் புலனாக்கும் கண்ணையுடைய கன்றுகள் என்றும் உ.வே.சா மென்மை பொருந்திய கண்களுடைய க்ன்றுகள் என்றும் உரை எழுதுகின்றனர். 

———


No comments: