Tuesday, June 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-60

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-60

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி கூற்று

இயற்றியவர்: தும்பிசேர் கீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 61

திணை: மருதம்

————

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்

ஈர்த்தின் புறூஉ மிளையோர் போல

உற்றின் புறேஎ மாயினு நற்றேர்ப்

பொய்கை யூரன் கேண்மை

செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டிய வண்டியை ஏறிச் செலுத்தி இன்பமடையாராயினும், கையால் இழுத்து இன்புறும் இளையோரைப் போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும் பொய்கையையுமுடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மென்மேலும் பெருகச் செய்து இன்பமடைந்தோம். அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.

———

இப்பாடலின் சூழல்

——-

இப்பாடலுக்கு உரிய சூழலாக பரத்தையின் பொருட்டு பிரிந்த தலைவனுக்கு தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி வாயில் மறுத்து தோழி கூறியதாக உ.வே.சா குறிப்பிடுகிறார். தலைவன் இங்கே வந்து இன்புற்று இருக்காவிடினும் அவனது நட்பை மனதால் நினைத்து அமைதியாகத் தலைவி இருப்பதால் அவள் வளையல்கள் நெகிழாமல் செறிந்திருக்கின்றன. ஆகையால் தலைவன் வந்து செய்யும் குறை ஏதுமற்று இருக்கிறது எனத் தோழி வாயில் மறுக்கிறாள்.

——

உள்ளப் புணர்ச்சி

—-

இப்பாடல் அங்கதமாக உள்ளப்புணர்ச்சியாலேயே தலைவி திருப்தியுற்றிருக்கிறாள் என்று கூறுகிறது. திருக்குறள் 785 “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்” என்று கூறுவது போல தலைவியின் நடப்பார்ந்த உள்ளப்புணர்ச்சியே புணர்ச்சிக்குரிய பயனாகிய வளை செறிதலை உண்டாக்குவதாக இருக்கிறது. 


இதை மேலும் விளக்குகிற உ.வே.சா. விளையாட்டுத் தேரை இழுத்து இன்புறும் பருவம் கடந்து மெய்த்தேரை ஊர்ந்து இன்புறுவார் போல களவுக்காலம் முடிந்து மெய்யுறு புணர்ச்சியை இடையீடில்லாமற் பெறுதற்குரிய கற்பு காலத்தில் யாம் சிறாரைப் போலக் களவுக்குரிய உள்ளப்புணர்ச்சியையே உடையவர்களானோம் என்ற குறிப்பும் பெறப்படும் என்று எழுதுகிறார். 

—-

பொய்கை யூரன் கேண்மை

——

நற்றேர்ப் பொய்கை ஊரன் என்றது, தலைவன் தன் தேரில் ஏறிப் பரத்தையருடன் பொய்கை நீராடுவான் என்று தோழி அறிந்ததைக் குறித்தது. இரா. இராகவையங்கார்  பொய்கை ஊரன் என்றது எல்லோரும் தோயும் நீர்நிலை போல வரையாது தோயப்படுவான் எனக் குறித்ததாம் என மேலும் விளக்கமளிக்கிறார். கேண்மை என்பது நெஞ்சற் பயின்ற நட்பு எனப் பொருள்படும் அதுவே உள்ளப்புணர்ச்சியாக விரிகிறது.

——-  

தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின்

——

தச்சன் செய்தவை மாவும் வையமுமாகிய இரண்டும் ஆகும். சிறுமா என்பது சிறு வையமாகும். நற்றேரையுடைய ஊரனைப் பற்றி சொல்லப்புகுவாள் அத்தேரோடு தொடர்புடைய உவமையைக் கூறினாள். 


இளையோர் பெரியோர் ஊரும் பெருந்தேரை ஊர்ந்து இன்புறாவிடினும் அத்தேரை நினைத்து பண்ணிய சிறு தேரை ஈர்த்து அப்பெரியோர் அடையும் இன்பத்தைப் பெறுவது போல பரத்தையர் பெறும் மெய்யுறுபுணர்ச்சியை அதன் இன்பத்தை தலவனை நினைத்து உள்ளப்புணர்ச்சியால் பரத்தையர் பெற்ற அதே இன்பத்தை யாமும் பெற்றோம் எனத் தலைவியைப் பற்றி தோழி கூறுகிறாள். தேரோட்டி விளையாடுதல் என்பது மெய்யுறுபுணர்ச்சிக்கும், உள்ளப்புணர்ச்சிக்கும் உவமையாகிறது. 


இளையோர் சிறு தேரை இழுத்து விளையாடுவது என்பது பட்டினப்பாலையில் ‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர்”, என்றும்  மணிமேகலையில் ‘விளையாடு சிறுதே ரீர்த்து மெய் வருந்தி , யமளி துஞ்சும்” என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்பாடலில் தேரிழுத்து விளையாடுதல், உண்மையாகத் தேரிழுத்தல் இரண்டும் உள்ளப்புணர்ச்சிக்கும், மெய்யுறு புணர்ச்சிக்கும் உவமைகளாகச் சொல்லப்படுவது கவனிக்கத்தக்கது. 

——-


No comments: