Sunday, June 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-58

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-58

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம்  கூறியது

இயற்றியவர்: மோசிகீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 59

திணை: பாலை

————

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்

அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்

குவளையோடு பொதிந்த குளவி நாறுநின்

நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்

சுரம்பல விலங்கிய வரும்பொருள்

நிரம்பா வாகலி னீடலோ வின்றே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கிணையை இயக்கும் தாளத்தையுடைய பாணர் முதலிய இரவலரைப் பாதுகாப்பவனது அரலையென்னும் குன்றத்தின் கண் உள்ள அகன்ற வாயையுடைய ஆழமுள்ள சுனையின்கண் அலர்ந்த குவளைமலர்களோடு சேர்ந்து கட்டிய காட்டுமல்லிகையின் மணம் வீசும் நினது நல்ல நெற்றியை தலைவன் மறப்பானோ? பல நாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலை நிலம் முற்றக் கைகூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வேமென்று கருதித் தலைவன் காலம் நீட்டித்துத் தங்குதல் இலதாகும்; ஆதலின் நீ வருந்துதலை ஒழிவாயாக.

——-

அரலைக் குன்றம்

——

இப்பாடலில் வரும் அரலைக் குன்றம் என்பது சேலம் ஓசூர்ப் பகுதியிலுள்ள அரலிக்குண்டா என்று இப்போது அழைக்கப்படுகிற மலையாகும் என்றும் ஆண்டே நள்ளி என்னும் பெருவள்ளலுடைய தோட்டி மலையாகிய அங்குசகிரியும் உண்டு என்றும்  இவற்றால் இப்பாடலில் சொல்லப்படுபவன் நள்ளி என்பது பொருந்தும் என்றும் 

இரா. இராகவையங்கார் எழுதியிருக்கிறார். உ.வே.சாவோ அரலைக்குன்றமென்பது ஒரு குன்றத்தின் பெயரென்று தோன்றுகிறது; ஆயினும் அதன் தலைவன் இன்னானென்பதும் அதன் இருப்பிடமும் இப்போது விளங்கவில்லை என்று எழுதுகிறார்.

———

பதலைப் பாணி

——

பதலை எனப்படுவது ஒருகண் மாக்கிணையென்னுன் பறை. ‘நொடிதரு பாணிய பதலை’ என்று மலைபடுகடாமில் வரும் வரியும் பதலை எனும் பறையைக் குறிப்பிடுகிறது. பதலை எனும் பறையை குறிப்பிட்ட பாணியில் இசைக்கும் பாணருக்குப் பரிசில் வழங்கி பாதுகாக்கின்ற கோமான் என்று தலைவன் இப்பாடலில் புகழப்படுகிறான். 

— 

குண்டுசுனைக் குவளையோடு பொதிந்த குளவி

——

குண்டு சுனை என்பது ஆழமான சுனை என்ப பொருள்படும். அப்படி ஆழமான சுனையில் பூத்த நீலக்குவளை மலர்களோடு காட்டுமல்லிகை (குளவி) மலர்களும் சேர்த்து கட்டிய மாலையைத் தலைவி தன் நெற்றியில் அணிந்திருக்கிறாள். புறநானூற்றுப்பாடலொன்றில் வரும் “பொல நறுந் தெரியல்’ என்ற வரி இம்மாலையை பொன்னானியன்ற நல்ல மாலை எனச் சிறப்பிக்கிறது. குவளை பொதிந்த குவளைக்கண்ணியை நெற்றி மாலையாக அணிந்தமையால் நெற்றி அம்மலர்களின் மணங்கமழ்ந்தது. அதைத் தலைவியின் நெற்றியின் இயற்கை மணம் எனத் தோழி கூறுவதாகவும் வாசிக்கலாம்.

——-

நாறுநின் நறுநுதன் மறப்பரோ

——-

தலைவியின் நெற்றியின் நறுமணத்தை தலைவன் மறப்பானோ என்று தோழி வினவுவது நறுமண புலனின்பத்தின் அழகை (sensuous beauty) முன்னிறுத்துவது. தலைவன் தலைவியின் நெற்றியை நீவிப் பிரிந்து சென்றிருக்க வேண்டும். நறுமணம் என்பது காலத்தால் குறையக்கூடியது. பிரிவு நீட்டிக்குமென்றால நறுமணமும் எனவே அழகும் குறையும் என்பதை அறிந்த தலைவன் தன் நோக்கம் நிறைவேறாவிட்டாலும் கூட சீக்கிரம் திரும்பி வந்துவிடுவான் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். இதை உ.வே.சா. அன்புடையார் காலம் நீட்டிப்பப் பொருள்தேடிநில்லாரென்பதைப் புலப்படுத்துவதாகக் குறிக்கிறார். 

—-

 


No comments: