Tuesday, July 30, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-93

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-93

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: கந்தக்கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 94

திணை: முல்லை

————

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்

தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே

யானே மருள்வேன் ரோழி பானாள்

இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்

என்னாகுவர்கொல் பிரிந்திசி னோரே 

அருவி மாமலைத் தத்தக்

கருவி மாமழைச் சிலைத்தருங் குரலே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மிகுந்த குளிர்ச்சியையுடைய மழைக்காலத்திற்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே சிவந்தன. அவற்றைக் கண்டு இது கார்பருவமென்று நானா மயங்குவேன்? மயங்க மாட்டேன். ஆயினும் என்னைப் பிரிந்திருப்பவராகிய, இன்னும் என்பால் வந்து சேராமல் தனித்து இருக்கும் தலைவர், அருவியானது பெரிய மலையில் தத்தி வீழும்படி, தொகுதியையுடைய பெரிய மேகங்கள் முழக்கும் ஓசையை நடு இரவில் கேட்டால் முன்னரே பிரிவினால் வருந்தும் அவர் மீண்டும் எந்த நிலையை அடைவாரோ?

——-

பித்திகத் தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே

——

பித்திகம் என்பது பிச்சிப் பூ,  இதை செம்முல்லை எனவும் வேறு சிலர் குறிப்பிடுகின்றனர். பெருமழைக்காலத்தில் சிவக்க வேண்டிய பிச்சிப்பூக்கள் மேகம் முழங்கிய மாத்திரத்திலேயே சிவந்தன ஆகையால் இவை பேதமையுடையன என்பதைக் குறிக்க ‘பெருந்தண் மாரிப் பேதை பித்திகத்தரும்பு’ என்றாள். இந்த பிச்சி மாரிக்காலத்து அரும்பி மலருமென்பதை குறுந்தொகைப் பாடல் 42 இல் வரும் வரி “ மாரிப் பித்த்கத்து நீர்வார் கொழுமுகை” என்ற வரி விளக்கும்.  தலைவி தன் பருவத்துக்கு முன்பே சிவந்த பூவை பொய்சொல்லும் குறிப்பானாக (lying signifier) இங்கே காணவில்லை என்பது கவனிக்கத்தக்கது; ஏனென்றால் இயற்கை சார்ந்த பொருட்களுக்கு எதையேனும் அறிவிக்க வேண்டிய நோக்கம் இருக்கவேண்டியதில்லை. இதைப் பற்றி எழுதுகிற உ.வே.சா. பருவத்தை தெரிவிக்கும் பொருள்களின் மேல் அறியாமையை ஏற்றிக்கூறுதல் மரபு என எழுதுகிறார். அதாவது இது ஒரு பண்பாட்டு  குறியீட்டு முறையாக ( cultural code) நிலைபெற்றிருக்கிறது. 

—-

யானே மருள்வேன் ரோழி பானாள்

——-

பானாள் என்பது பால் + நாள், பால் - பகுதி, நடுப்பகுதியைக் குறித்தது. பானாள் நடு யாமம்; இது நடுநாளெனவும் வரும். யானே என்பதில் ஏகாரம் எதிர்ம்றையானது. யானே மருள்வேன்,  நானா மயங்குவேன் என்று  கேட்பதாகும்.  கார்காலத்துக்கு முன்பாகவேப் பூத்த செம்முல்லையைப் பார்த்து நானா மயங்குவேன் தலைவன் திரும்பிவருவதற்கான மழைக்காலம் வந்துவிட்டதென்று தலைவி தோழியைப் பார்த்துக் கேட்கிறாள். தலைவன் கார்ப்பருவத்து இடிமுழக்கமிடுவதைக் கேட்டு தன்னை நினைத்து சென்ற வேலையை முடிக்காமல் திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி வருத்க்துவதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேகம் இடி முழங்கியதை இருவரும் ஒருங்கு கேட்டல் இனிமையானது என்றும் தனியராய்க் கேட்பது தகாது என்றும் கருதினாள்.

—-

என்னாகுவர்கொல் பிரிந்திசி னோரே

——

பிரிந்திசினோர்- தலைவரைப் பிரிந்தோராகிய பிற மகளிரென்றும் பொருள்படும். இசின் படர்க்கையில் வந்தது; என்னாகுவர் கோல் என்பது மீண்டு வருவாரோ என்பதாகும். மழை பெய்தலினால் அருவி உண்டாவதால் ‘அருவி மாமலை தந்த’ என்றாள். சிலைதரும் என்பது ஒரு சொல்; யானே என்பதிலுள்ளது அல்லாது ஏனைய ஏகாரங்களும் கொல்லும் அசைநிலைகள். யானே மருள்வேனென்றபடியால் ஆற்றுவலென்பது படவும், என்னாகுவர் கொல் பிரிசிந்தினோரே என்றமையால் தான் கவலைப்பட்டதற்குக் காரணம் தோன்ற தலைவி கூறினாளாயிற்று. 

தோழி, பித்தகத்தின் அரும்பு மிகச் சிவந்தன, யானே மருள்வேன்?, பிரிந்திசினோர் இன்னும் தனிமையில் மழைக்குரலைக் கேட்டபின் என்னவாகுவார்? தலைவர் இம் மேக முழக்கத்தைக் கேட்டு சென்ற வேலையை முடிக்காமல் திரும்பி வந்துவிடுவாரோ? 

Sunday, July 28, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-92

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-92

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 93

திணை: மருதம்

————

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்

இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்

கன்னையு மத்தனு மல்லரோ தோழி

புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, நல்ல பெண்மை நலம் கெடவும், மேனியழகு மிக மெலியவும், எல்லாவற்றிலும் இனிய உயிர் நீங்கினாலும் அவர் பால் பரிவு கூர்ந்த சொற்களைச் சொல்லற்க, அவர் நமக்கு தாயும் தந்தையும் அல்லரோ? தலைவன் தலைவியர்பாலுள்ள அன்பு இல்லாவிடத்து ஊடல் உண்டாவது எதன் பொருட்டு?

——

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்

——

நீ தலைவனை வெறுத்தல் தகாது என்று கூறிய தோழியிடம் வாயில் மறுத்து தலைவி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. என்னுடைய நலமும் உயிரும் தொலையுமென்றாலும் கூட அவரை ஏற்றுக்கொள்ளுதல் என் கடன்; அவர் அன்னையும் தந்தையும் போல மரியாதை செய்யத் தக்கவர் ஆனால் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவரிடத்தில் இல்லை அந்த அன்பு இல்லாத அவரோடு ஊடுவதும் அது தீர்வதும் என்ன பயனைத் தரும் நான் அவரை வெறுக்கவில்லை எனத் தலைவரிடமிருந்து அவள் அந்நியமாகி இருப்பதை தலைவி கூறினாள். இவ்வாறாக தலைவரிடமிருந்து அயன்மை தோன்றக் கூறியதால் தலைவி வாயில் மறுத்தாள் என்பது உட்குறிப்பாகப் பெறப்படுகிறது.  ‘நன்னலந் தொலைய’, ‘நலமிகச் சாஅய்’ என்ற வரியில் இரண்டு நலங்கள் குறிப்பிடப்படுகின்றன. உ. வே. சா. முன்னது பெண்மை நலம், பின்னது அழகு என்றும்  பொ. வே. சோமசுந்தரனார் முன்னது அழகு பின்னது நாணம் என்று இரண்டு நலங்களுக்கும் உரை விளக்கம் எழுதுகின்றனர்.  

—-

கன்னையு மத்தனு மல்லரோ தோழி

——

தலைவி தலைவனுடன் உள்ள உறவை அன்னையுடன் பிள்ளைக்கு இருக்கக்கூடிய உறவைப் போன்றது என்றது அந்த உறவு பிரித்தற்கரிய உறவாகும் என்பதை உணர்த்துவதற்காகும்; தந்தையுடன் இருக்கக்கூடிய  உறவைப் போன்றது என்றது அவனுடைய ஆணைக்கு அடங்கி ஒழுகுவதைப் பற்றியதாகும். அன்னையும் தந்தையும் போன்ற அவருக்கும் எனக்கும் உள்ள உறவில் காமம் இல்லை அதனால் ஊடல் கொள்வதால் எந்தப் பலனும் இல்லை என்று தலைவி மேலும் கூறுகிறாள். திருக்குறள் 1130  சொல்லும் “ ஊடுதல்  காமத்திற்கின்ப மதற்கின்பம் கூடி மயங்கப் பெறின்” என்பதை தலைவி நன்றாகவே அறிந்திருக்கிறாள். காமமில்லாமல் ஊடி என்ன பயன் என்பதால் புலவியாற் பயனில்லை என்பதை, “புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே”, என்று தலைவி மேலும் சொல்கிறாள். காமம் உள்ள இடத்தேதான் புலவியாற் பயன் என்பது உட்குறிப்பு.  எவனோ என்பதில் ஓகாரமும் கடையே என்பதில் ஏகாரமும் அசைநிலைகள். அஃது: பகுதிப்பொருள் விகுதி. சாஅய் – இசை நிறை அளபெடை. 

——

அல்லரோ தோழி

—-

மணவாழ்க்கையின் ஊடல்களையும் புலவிகளையும் பேசும் மருதத்திணை சார்ந்த சங்கக்கவிதைகளில் இப்பாடல் தலைவன் தலைவி உறவில் காம இழப்பு நேர்வதைச் சொல்வதால் சிறப்பானதாகிறது. தலைவன் தன்னளவில் பெற்றோர் போல அன்பு செய்வதற்கு உரியவனேயன்றி மனைவி போல ஊடுவதற்கும் வெறுப்பதற்கும் உரியவனல்லன் என்று தலைவி சொல்கிறாள். மண உறவு சம்பிரதாயமான பிரிக்கமுடியாத உறவாக நீடித்திருப்பதை தலைவி சொல்கிறாள். பரத்தையர் தோய்ந்த மார்பை தோய்வதற்கு நாணியதாலும் அந்த நாணம் கெட ஊடியதாக தலைவனிடம் சொல்லாதே என்றும் தலைவி தன் நலன் இழப்புகளைச் சொல்கிறாள்.  தோழி உரையாதே, அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? அன்பிலங்டை புலவி எவன்? தலைவன் என்னிடம் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.  

—-

Friday, July 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-91

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-91

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: தாமோதரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 92

திணை: நெய்தல்

————

ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்

தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை

இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த

பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கதிரவன் மறைந்த, அகன்ற இடம் பொருந்திய வானத்தில் வளைந்த சிறகுகளை உடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த வழியின் அயலில் வளர்ந்த கடம்பின்கண் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் வாயுனுள்ளே செருகும்பொருட்டு இரையைத் தம் அலகில் எடுத்துக்கொண்டமையால் விரைந்து செல்லும் அவை இரங்கத்தக்கன.

——-

கழிபடர் கிளவி

——

தலைவியின் கூற்றாகிய இப்பாடல் காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என விரித்து சொல்லப்படுகிறது. கழிபடர் கிளவி என்பது மிக்க துன்பத்தை புலப்படுத்துஞ் சொல் எனப் பொருள் தரும். அந்தி நேரம் என்றேன்றைக்கும் காமத்தின் துன்பத்தையும் தனிமையையும் தருவதாக இருந்திருக்கிறது போலும். மாலைக்காலம் வந்தது இனியும் காம நோயை ஆற்றேன் எனத் தலைவி தனக்குத்தானே சொல்லிக்கொண்டதாக அமைந்திருக்கும் இப்பாடலில் அந்தியில் கூடு திரும்பும் பறவைகளைப் பற்றிய ஒரு காட்சியே உள்ளது.  வரைவு நீட்டித்ததால் பெரிதும் வருந்தியிருந்த தலைவி பொழுது கண்டு சொன்னது என எழுதும்  பொ. வே. சோமசுந்தரனார்  அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரக்கத்தக்கன என்னுமுகத்தால் அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்புதானும் அறிகிலரே என்று கருதி இரங்கியதாய் இப்பாடலின் அர்த்ததை விளக்குகிறார்.   தமிழண்ணல்  இறைச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டான பாட்டு இது என உரை எழுதுகிறார். இரங்கல் நிமித்தம் உள்ள உரிப்பொருள் என தொல்காப்பியம் அகத்திணையியல் சூத்திரம் 14 இந்த உணர்ச்சியைக் குறிக்கிறது. 

——

கொடுஞ்சிறைப் பறவை

—-

கொடுஞ்சிறைப் பறவை என்பது வளைந்த சிறகுகளை உடைய பறவை எனப் பொருள்தரும். குறுந்தொகை 352 ஆவது பாடலிலும் இதே விதமான சொற்சேர்க்கையை ‘கொடு மென்சிறைய கூர் உகிர்ப் பறவை’ என வாசிக்கலாம்.  மாலைக்காலத்தில் பறவைகளும் விலங்குகளும் தங்கள் கூட்டிற்கும் வீட்டிற்கும் விரைந்து சென்று அடைவதை ‘விலங்கும் பறவையும் வீழ்துணைப் படர’ எனப் பெருங்கதையில் வரும் மாலைப்புலம்பல் பாடல் வரி 43 விவரிக்கும். புறத்து நிகழும் நிகழ்ச்சிகள் காமத்தை வளர்ப்பன என்பது பறவைகளின் செயலால் உணர்த்தப்படுகிறது. கொடிஞ்சிறை எனும் அடைமொழி பறவைகள் தங்கள் கூடுகள் நோக்கி விரைந்து வருவதற்கு ஏற்ப உள்ளதையும் உணர்த்துவதாக இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளின் முன் வாயில்  இரையை வைத்தால் அது விழுந்துவிடும் என்பதால் வாயின் உள் இடத்தில் செருகுவதற்காக இரையுடன் வந்தன.  பறவைகளின் விரைவும் நோக்கமும் தலைவியைப் பொறுத்தவரை காமக்குறிப்பையும் உள்ளடக்கியவை. 

“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை”  என தொல்காப்பியம் மரபியல் சூத்திரம் 4 கூறுவதற்கு இணங்க பறவைக் குஞ்சுகளைப் பிள்ளையென்றாள். செரீஇய- என்பது செருகும்பொருட்டு, செருகியென்பது செரீஇ என்று வந்தது, செரீஇய - செய்யுளிசை அளபெடை. அருகிலிருந்த கடம்பமரமென்பது, ‘இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த’ என்ற வரியால் குறிப்பிடப்படுகிறது. மராஅத்த –  என்பதில் அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது.  மாலைப்பொழுதில் கூடு திரும்பும் பறவைகளைப் போல தானும் இன்புற்று பிள்ளைப் பேறு எய்தி,  தன் பிள்ளைகளைப் பாதுகாத்து மகிழ்தல் வேண்டும் எனத் தலைவி விரும்பினாள்.  காலம், இடம் தெரிதலும் பிள்ளையை ஊட்ட விரைவாக வருதலும்  ஆகியன பறவைகளின் அறிவுடமையைக் காட்டுவதாகவும் தலைவி கூறுகிறாள். ‘அளியதாம்’ என்ற சொல் பறவைகளின் அறிவுடமையைக் குறிக்கும். இந்த அறிவுடமை இல்லாதவனாய் தலைவன் இருக்கிறான் என்பது அதன் உட்குறிப்பு. அந்த உட்குறிப்பின் எள்ளல் விரக்தியும் காதலும் நிறைந்தது; அவற்றின் முன்னால் தலைவன் மடையனாய் தீற்றப்படுகிறான்.  


Wednesday, July 24, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-90

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-90

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று
இயற்றியவர்: ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 91

திணை: மருதம் 

————

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி

குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்

தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்

பலவா குகநின்னெஞ்சிற் படரே

ஓவா தீயு மாரி வண்கைக்

கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி

கொன்முனை யிரவூர் போலச்

சிலவா குகநீ துஞ்சு நாளே.

——

நெஞ்சே, ஒன்றோடொன்று பிணங்குதலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை ஆழமாக நீரையுடைய குளத்திலுள்ள கெண்டைமீன் கவ்வுதற்கிடமாகிய தண்ணிய நீர்த்துறைகளுடைய ஊர்த்தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாகுக. காலமும் இடமும் பெறுவார் தகுதியும் நோக்கியொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும்  மேகம் போன்று கைம்மாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செயலையுடைய ஆண்யானைகளையும் உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியென்னும் உபகாரியினது அச்சங்கொள்ள வைக்கும் போர்க்களத்திலுள்ள இரவையுடைய ஊரிலுள்ளோர் போல  நீ துயிலும் நாட்கள் சிலவே ஆகுக. 

——

நெஞ்சிற்கு நெஞ்சு கூறுதல்

——

இப்பாடலை யார் யாருக்கு கூறுகிறார்கள் என்பதை பற்றி உரையாசிரியர்கள் இரண்டு விளக்கங்கள் அளிக்கின்றனர். ஒன்று தலைவி தன் நெஞ்சிற்கு நெஞ்சின் வழி கூறுதல், இன்னொன்று தோழி தலைவிக்குக் கூறுதல். 

பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் வாயில் வேண்டி புக்கவழி, அவன்பால் ஊடலையுடையவளாயினும் தன் நெஞ்சம் அவன் பால் செல்லுவதை அறிந்த தலைவி கூறியது.  தலைவன் பரத்தையரிற் பிரிந்தமையால் ஊடிய தலைவி அவனைக் கண்டதும் நெஞ்சு நெகிழ்ந்ததால் தோழி இடித்துரைத்ததுமாம். 


இதில் நெஞ்சிற்கு நெஞ்சு கூறுதல் என்பது மிகவும் சுவாரஸ்யமான கூற்றாகும். 1286 ஆவது திருக்குறள் இதைக் “காணுங்கால் காணேன் தவறாய, காணாக்கால் காணேன் தவறு அல்லவை” என்று சொல்கிறது. நெஞ்சினை தன்னிடமிருந்து தனியான உணர்வுடையது போலக் கூறுவது இது என தொல்காப்பியம் பொருளதிகாரம் குறிக்கிறது.  தலைவனுக்கு உடன்பட்டு அளவளாவ மீண்டும் பிரிய நேர்கையில் அதனால் உண்டாகும் துன்பம் பலவாகும் அதனால் நீ துயில்கின்ற நாட்களோ சிலவாகும் என்றாள்.  


இன்னொரு விளக்கம் தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயில் வேண்டி நிற்க, தலைவி அவனை எதிர்கொள்ளும் குறிப்பினை அறிந்த தோழி, அவன் இத்தனை கொடுமையுடையவனாக இருந்தும் அதை மறந்து நீ அவனை அனுமதிப்பாயானால் மீண்டும் அவன் கொடுமைக்கு ஆளாகித் துன்புறுவாய் என்று கூறியதாகும். உ.வே.சா. இந்த இரண்டாவது விளக்கமே முதல் விளக்கத்தை விடச் சிறப்பானது எனக் குறிக்கிறார்.    விளை கனி - வினைத்தொகை குண்டு நீர் – ஆழமான நீர், இலஞ்சி – குளம் கெண்டை – மீன் வகை கதூஉம் – கடித்துத் தின்க- கதூஉ இன்னிசை அளபெடை தண்துறை ஊரன் – குளிர்ச்சியான குளத்தையுடைய ஊரன். கெண்டை மீன்கள் கடித்துத் தின்கும் விளைகனி,  பரத்தையரால் விழுங்கப்பட்ட தலவனுக்கு உவமையானது. 

—-

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி

——

பிரம்பினிடையே காய்த்து பழுத்து முதிர்ந்த கனியை எளிதிற் கெண்டை பெறும் ஊரன் என்றது தன்னுடைய சிறப்பால் அன்பும் செல்வமும் முதிர்ந்த தலைவனை பரத்தையர் எளிதிற் கவர்ந்து கொள்வாரென்ற குறிப்பு உடையது. பவர்ப் பிரம்பு  என்பது இரு பெயரொட்டு,  அது கொடியாகிய பிரம்பு எனப் பொருள்தரும். 

—-

கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி

கொன்முனை யிரவூர் போலச்

——

அஞ்சி என்ற சொல் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கும். அஞ்சி கடயெழு வள்ளல்களில் ஒருவன் தகடூர் என்ற ஊரைச் சேர்ந்தவன். இப்பாடலை இயற்றிய ஒளவையாரைப் பெரிதும் போற்றியவன். யானையுடைய படை என்று படையின் பெருமையைச் சொல்ல தலைவி யானையைக் கூறினாள். கொன் என்பது அச்சப்பொருளைத் தரும் இடைச்சொல். கொல்முனை என்பது பகைவர்களைக் கொல்கின்ற போர்முனை ஆகும். போர்க்களமுள்ள ஊரினர் அச்சத்தினால் இரவில் தூங்காமல் இருப்பது போல , ‘சிலவாகும் நீ  துஞ்சுக்கின்ற நாட்களே” என உவமை கூறினாள்.  கொல் என்னும் இடைச்சொல் போர்முனையை விசேடித்து நின்றதை தொல்காப்பியம் எச்சவியல் 60 ஆவது சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியார் எழுதுகிற உரையில் வாசிக்கலாம்.  தலைவனைப் பிரிந்து துயிலிழந்த தலைவியின் தவிப்பு போர்முனை ஊரில் தூக்கமிழந்தவர்களின் அனுபவத்தோடு ஒப்பிடப்படுவது சிறப்பானதாகும். அஞ்சியின் பகைப்புலத்து இரவு ஊர் போல நின் நெஞ்சில் படர் பல ஆகுக, நீ துஞ்சும் நாள் சில  ஆகுக எனக் ‘கொன் முனை இரவு போல’ என்ற உவமை இரண்டு இடங்களிலும்  கூட்டிப் பொருள் உரைக்கப்படக்கூடியதாக இருக்கிறது. கூடுதலாக இப்பாடலில் அஞ்சியின் வீரமும் கொடையும் கூறப்பட்டுள்ளன. 

——


Monday, July 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-89

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-89

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 90

திணை: குறிஞ்சி

————

எற்றோ வாழி தோழி முற்றுபு

கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய

மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்

கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம்

குன்ற நாடன் கேண்மை 

மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, சூல் முற்றி மிளகுக்கொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில் இராக்காலத்தில் முழக்கத்தை செய்த மேகத்தினது மழைக்கால் வீழ்ந்தனவாக, மிக்க மயிரையுடைய ஆண்குரங்கு தீண்டியதனால் நழுவிய மலர் மணத்தை வீசும் பலாப்பழத்தை மலைப்பக்கத்தில் வீழும் அருவியானது, நீருண்ணுந்துறையின்கண் கொண்டு வருகின்ற குன்றுகளையுடைய நாட்டையுடைய தலைவனது நட்பு நின் மெல்லிய தோள்களை மேலும் மெலியச் செய்தும், உனக்கு அது அமைதியைத் தருவதாகவே உள்ளது. இஃது எத்தன்மையதோ?

———

எற்றோ வாழி தோழி

——-

தலைவன் மணம் புரிந்து கொள்வதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்க, அதனால் ஆற்றாதவளுக்காக, தலைவன் கேட்க தோழி தலைவிக்குக் கூறியதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தை வரைவு என்ற சொல்லால் குறிக்கும் உரையாசிரியர்கள்   திருமணத்தை ஒழுக்க நெறியாக வரையறுக்கிறார்கள். உதாரணமாக தொல்காப்பியம் பொருளதிகாரம் 256 ஆவது சூத்திரத்திற்கு  உரை எழுதுகிற இளம்பூரணர் “வரைவு என்பது செய்யத்தகுவனவும், தவிரத் தகுவனவும், வரைந்து ஒழுகும் ஒழுக்கம்"  என்று எழுதுகிறார். தலைவி தலைவன் வரைவு நீட்டித்தமையால் மெலிந்தாள் அவன் தன்னை வரைந்து கொள்வான் என்ற நம்பிக்கையால் அமைதியுற்றாள். மெலிவும் அமைதியும் ஒருங்கே காணப்பட்டதை தோழி வியந்து ‘ஏற்றோ தோழி” என்றாள். இயல்பாகவே மென்மையான தோள்களை உடையவள் என்பதால் மென் தோள் சாய்த்தும் என்றாள். சால்பானது தலைவன் மணம் புரிந்துகொள்வான் என்ற உறுதியோடு அமைதியாக இருப்பதைச் சொல்லுதலாகும். 986 ஆவது திருக்குறள் ‘சால்பு என்னும் திண்மை’ என்று குறிப்பதைக் கவனிக்க வேண்டும்.  எற்றோவில் ஓ, வாழி, சால்பீன் றன்றே வில் ஏ ஆகியன அசைநிலைகள். 

—-

கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

——-

மரத்தில் இருந்த பலாப்பழம் கலையினால் (ஆண்குரங்கினால்) தொடப்பட்டமையினால் கீழே விழுந்தது; அதன் மணம் எங்கும் பரவுவதாக இருந்தது அது போல தலைவன் களவில் பெற்ற இன்பம் தலைவின் உடல் மெலிவிற்கும் ஊர் அலர் பேசுவதற்கும் காரணமாயிற்று. மலை உச்சியில் ஒருவருக்கும் பயன்படாது பழுத்த பலாக்கனி குரங்கு தொட்டமையால் அருவியில் விழுந்து நீர்த்துறையில் வாழ்கின்றவர்களுக்குப் பயன்பட்டது போல தலைவியின் நலமும் தலைவன் மணமுடிக்கும்போது இல்லறத்தின் பயனைப் பலருக்கும் தரும் என்பது உட்குறிப்பு என உ.வே.சா.விளக்கமளிக்கிறார். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் இதை உள்ளுறை என அடையாளப்படுத்துகிறார். மலைபடுகடாமில் வரும் ‘அருவி தந்த பழம் சிதை வெண்காழ்” என்ற வரி இதோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. 

——  

கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய

——

கறி வளர் – மிளகு, அடுக்கத்து –  மலைத் தொடரில் , இரவில் முழங்கி – இரவில் பெரும் ஓசை எழுப்பி, மங்குல் – மேகம்  மா மழை வீழ்ந்தென-  என்ற விவரிப்பு தலைவனுக்கும் தலைவிக்கும் களவின் போது இருந்த காத்திரமான உடலுறவை உட்குறிப்பாகக் கொண்டிருக்கிறது. மமயிரடர்ந்த ஆண் குரங்கு குளிரின் துன்பம் நீங்க மிளகினைக் கடித்து விட்டு அதன் காரத்தை தணிப்பதற்காக பலாக்கனியை உண்ண முற்பட்டது தலைவியை இயற்கைப் புணர்ச்சியில் நுகர்ந்த தலைவன் களவைத் தொடர விரும்பியதை புலப்படுத்துவதாக இருக்கிறது. 

தலைவி பலாப்பழமாகவும் தோழி திருமணத்தை வலியுறுத்துதல் அருவியில் அப்பழம் வீழ்வதாகவும்,  பலாப்பழம் பலருக்கும் பயன்படுதல் இல்லற இன்பம் பலருக்கும் பயன்படுதலைக் குறிப்பதாகவும் குறிப்பு பொருள்கள் பெறப்பட்டதென்றால், மிளகைக் கடித்த மயிரடர்ந்த ஆண்குரங்கு பலாப்பழத்தை சுவைத்தல் தலைவன் தலைவியின் களவொழுக்கத்திற்கு உவமை ஆயிற்று. 

குன்ற நாடனின் கேண்மை (நட்பு) தலைவிக்கு புறத்தே ஏற்கனவே மெலிந்த தோள்களை மேலும் மெலிவாக்கியது என்றால் அகத்தே அமைதியையும் திண்மையையும் தந்தது. இஃது எற்றோ!


Saturday, July 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-88

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-88

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தனக்குத் தானே கூறியது
இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 89

திணை: மருதம்

————

பாவடி யுரல பகுவாய் வள்ளை

ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப

அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கெ

பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை யன்னவிம்

மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அதிகமான அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய கொல்லி மலை, பெரிய அணிகலன்களை அணிந்த சேர மன்னனுக்கு உரியது. நல்ல இயல்புடைய தலைவி அம்மலையின் மேற்குப்புறத்தைச் சார்ந்த பாவையைப் போல மெல்லிய இயல்புகளுடையவள் ஆவாள். அவள் அகலமான அடிப்பகுதியை உடைய உரலில் வள்ளைப் பாட்டினைப் பாடி உலக்கையை உரலில் ஓங்கி இடிக்கும்போது தலைவன் பெயரை அமைத்துப் பாடினாள். அதைக் கேட்ட ஊரார் அலர் தூற்றினர். இத்தகைய அறிவின்மையையுடைய ஊரார் கூறும் சொற்களுக்காக வருந்திப் பயன் என்ன?

——

வள்ளைப் பாட்டு

——

மகளிர் நெற்குத்தும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு வள்ளைப்பாட்டு என்றழைக்கப்படுகிறது. பதிற்றுப்பத்தில் வரும் 

"மகளிர் வள்ளை கொய்யும்" என்ற  வரி இதைக் குறிப்பிடுகிறது. வல், வள், வள்ளை என இச் சொல் வளர்ந்ததாகத் தொல்காப்பியம் பொருளதிகாரம் 63 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். இது உரற்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. மணிமேகலையில்  "வள்ளைத் தாள்போல் வடிகாதிவைகாண்” என்ற வரி  இந்தப் பாட்டிற்கான குறிப்பீட்டினைக் கொண்டிருக்கிறது.  தலைவி தலைவன் பெயரை வள்ளைப் பாட்டில் வைத்து பாடியதால் ஊரார் அவளை அலர் தூற்றுகின்றனர் ஆகையால் தலைவன் விரைவில் வந்து அவளை மணம்புரிதல் வேண்டும் எனத்  தோழி தலைவனுக்கு அறிவுறுத்தும் வகையில் அவன் காதுபடக் கூறுகிறாள்.

இப்பாடலில் முதல் வரியில்,  பாவடி - அகலமான அடிப்புறத்தை உடைய,  உரல – உரல், அ சாரியைப் பெற்று வந்தது, பகுவாய் – ஆழமான , வள்ளை – வள்ளைப் பாட்டினையும் குறிப்பனவாகும்.  


அரசனையும் தெய்வத்தையும் வள்ளைப்பாட்டில் வாழ்த்திப் பாடும் மரபும் உண்டு. போர்க்களத்தில் இப்பாட்டைப் பாடுவதாக பரணி நூல்கள் கூறும். ‘சும்மேலோ சும்முலக்காய்’ எனும் ஈற்றடியைக் கொண்ட வள்ளைப்பாட்டுகள் அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி, பாசவதைபரணி ஆகியவற்றில் இருப்பதாக உ.வே.சா.குறிப்பிடுகிறார். 


வள்ளைப்பாட்டு ஒரு தனி இலக்கிய வகையாகவும் கருதத்தக்கது.  சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுகிற அடியார்க்கு நல்லார் வள்ளைப்பாட்டை பல்வரி கூத்தினுள் அடக்குவார். 

——

கொல்லி மலை

——

பொறையன் என்ற சொல் சேர மன்னனைக் குறிப்பதாகும். பெரும்பூட் பொறையன் என்பது பெரிய அணிகலன்களை அணிந்த சேர மன்னன் எனப் பொருள் தரும். பேஎ – இன்னிசை அளபெடை. இங்கே பேம் என்பது அச்சப்பொருளில் வந்தது. பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள என தொல்காப்பியம், உரியியல் சூத்திரம்  69 கூறுகிறது. 


கொல்லி மலை வல்வில் ஓரி என்ற வள்ளலுக்கு சொந்தமாக இருந்தது. காரி என்பவன் ஓரியைக் கொன்று அம்மலையை சேரனுக்குக் கொடுத்தான்; ஆகையால் அது சேரனுக்கு உரியதாகியது. கொல்லிமலையின் மேற்குப் பகுதியில் தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாகக் கதையொன்று இருக்கிறது. அந்தக் கொல்லிப்பாவை கண்டோரை மயக்கி உயிர்விடச் செய்யும் ஆற்றலும் அழகும் வாய்ந்ததாகக் கருத்தப்பட்டது. அழியா அழகுடைய பெண்களுக்குக் கொல்லிப்பாவையை உவமை சொல்லுதல் மரபு. இப்பாடலில் கொல்லியின் மலையின் மேற்கு ‘எழுதிய’ பெண்ணாகத் தலைவி குறிப்பிடப்படுகிறாள். தலைவி ‘குட வரை எழுதிய’ – மலையால் எழுதப்பட்ட ஆனால் கொல்லிப்பாவையப் போல அல்லாமல் , நல் இயல் பாவையாக இருக்கிறாள். மேலும் அவளைத் தோழி ‘மெல்லியல் குறுமகள்’ எனவும் சித்தரிக்கிறாள்.  இம்மெல்லியர் குறுமகள் என்று சுட்டிக்காட்டியதால்  தலைவியும் அருகிலிருக்கிறாள் என்பது பெறப்படும்.

——-

ஏதின் மாக்கள்,  அழிவதென் கொல்

——

 ‘ஏதின் மாக்கள்’ எனத் தோழி  குறிப்பிடும் மக்கள்  யாவர் என்பதற்கு இரு விளக்கங்கள் இருக்கின்றன. ஏதில் மாக்கள்  என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார்  அயலோராகிய அறிவிலிகள், அயற்றன்மை உடையார் என்றும்  உ. வே. சா தலைவியின் நிலையை அறிந்து இரங்கும் தன்மை இல்லாதவர்கள் என்றும் விளக்கமளிக்கின்றனர். இந்த மாக்கள் அலர் பேசும் ஊரார் என்பது ஒரு விளக்கமாயின் இன்னொரு விளக்கம் பரத்தையர் என்பதாகும்.  தோழி, இந்தமாக்கள் எப்படி அழிவார்களோ என்று சொல்லும் விதமாக ‘ அழிவதென் கொல்’ என்றும் சொல்லுகிறாள். இரண்டாவது விளக்கம், அதாவது ஏதின் மாக்கள் என்போரை பரத்தையர் எனப் பொருள்கொள்வது முதல் கருத்தைவிட சிறப்புடையது அல்ல எனக் குறிப்பிட்டு  உ.வே.சா. இப்பாடலின் முடிபாக குறுமகள் பாடினள் குறின், மாக்கள் நுவல்ப; இப்பேதையூர்க்கு அழிவது  எவன் கொல் என உரைக்கிறார்.

—-

Friday, July 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-87

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-87

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: மதுரைக் கதக்கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 88

திணை: குறிஞ்சி

————

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்

சிறுகட் பெருங்களிறு வயப்புலித் தாக்கித்

தொன்முரண் சோருந் துன்னருருஞ் சாரல்

நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகள் உள்ள  நாட்டையுடைய தலைவன்  சிறிய கண்களையுடைய  பெரிய களிறு வலிமையுடைய புலியோடு சண்டையிட்டு தன்னுடைய பழைய வலிமையை இழந்ததற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய மலைச்சாரலின் வழியே  இரவின் நடுப்பகுதியாகிய யாமத்தில் வருவான். அவன் அப்படி வருவதனால் உண்டாகும் குற்றத்திற்கு நாம் நாணம் கொள்ள மாட்டோம்.

——

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்

——

தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்.  இனி இரவில் வருவான் என்று தோழி தலைவியிடம் கூறியதாக அமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலில் அவன் எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறான், எத்தனை வளம் மிக்க மலைப்பகுதியிலிருந்து வருகிறான்,எத்தனை அபாயங்களைக் கடந்து வருகிறான் என்பதைத் தோழி தலைவிக்குக் கூறி அவளை இரவுக்குறிக்கு சம்மதிக்க வைக்கிறாள். இதற்கு அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிறங்கி நிலப்பரப்பிலுள்ளார்க்கு பயன்படுவது போல தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து நமக்குப் பயன்படுவான் என்பதைச் சொல்ல “ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்’ என தலைவனைக் குறிப்பிட்டாள். தலைவன் வருதல் அருவி ஒலி உண்டாக்குதல் போல அனைவருக்கும் தெரிந்துவிடும் அதனால் ஊரார் பேச்சு எழும் என்பது உட்குறிப்பு .

—-

சிறுகட் பெருங்களிறு வயப்புலித் தாக்கித்

தொன்முரண் சோருந் துன்னருருஞ் சாரல்

—-

தலைவன் கடந்து வரும் மலைப்பாதையின் அபாயங்களைக்கூறும் தோழி வயப்புலியும் களிறும் சண்டையிடும் மலைச்சாரல் எனக் கூறுகிறாள். வயப்புலி என்பதை உ.வே.சா சிங்கம் எனக் குறிக்கிறார். பிற உரையாசிரியர்கள் வலிமை வாய்ந்த  புலி என உரை எழுதுகின்றனர். வயப்புலி சிறிய கண்களை உடைய பெருங்களிற்றைத் தாக்கி வலுவிழக்கச் செய்வது போல கடப்பதற்கு சிரமங்களைத் தரக்கூடிய மலைச்சாரலைத் (துன் அருஞ்சாரல்) தாண்டி தலைவன் வருகிறான். அப்படி அவன் வருவதால்,  அவன் வருவதால் உண்டாகக்கூடிய அலர் மொழிகளாலான ஊரார்பேச்சு குற்றம் வந்தாலும் அதற்காக நாம் நாணவேண்டாம் என்று தோழி சொல்கிறாள் .

—-

நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே

——

வழியின் அபாயங்களுக்கு அஞ்சாமல் அவனே வரும்போது அவனை ஏற்றுக்கொள்ளாமல் வடுவை நாணி மறுத்தல் அழகல்ல என்று தோழி சொல்கிறாள்.. நடுநாள் என்பது யாமமாகும். வடுவென்றது தலைவன் வருவதை பிறர் அறிந்து பழிகூறுதலை. வரூஉம் –இன்னிசை அளபெடை.  நாணலமே என்பதில் ஏகாரம் அசைநிலை, நாண வேண்டாம் என்பது அறிவுரை. 

—-

Thursday, July 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-86

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-86

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தெய்வத்திடம் வேண்டியது
இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 87

திணை: குறிஞ்சி

————

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்

கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

பொதுவிடத்திலுள்ள மரத்தின்கண் தங்கும் பிறர்க்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்; குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர் அத்தெய்வத்தால் தண்டிக்கப்படவேண்டிய கொடுமையைச் செய்தவரல்லர். என் நெற்றி நான் அவரை விரும்பியதனால் பசலைபெற்றது. என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்தமையால் பரந்த என் தோள் மெலிவுற்றது. 

——

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

——

மனறெமென்றது பலர் கூடியிருக்கும் மரத்தினடி. ஊர் மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உறைகின்ற தெய்வத்தை முன்னிறுத்தித் தலைவன் நின்னைப் பிரியேன் என்று சூளுரைத்த இடமாகும். பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி துயருற்றாள்.  தன்னுடைய துயருக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுரைக்கப்பட்ட கடவுள் அவனைத் தண்டிக்குமென அவன் கலையுற்றான்.  ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தைத் தலைவி இப்பாடலில் வேண்டுகிறாள். ‘மராஅத்த பேஎ முதிர் கடவுள்’ என்பதற்கு  உ. வே. சா. பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம் என்றும்   பொ. வே. சோமசுந்தரனார் கடம்பில் உறைகின்ற பிறர்க்கு அச்சம் செய்தலில் முதிர்ந்த முருகக்கடவுள் என்றும்  இரா. இராகவையங்கார் அச்சம் செய்வதில் பழமைப்பட்ட தெய்வம் என்றும் தமிழண்ணல்  செங்கடம்பு மரத்தில் உறையும் அச்சம் மிக்க தெய்வம் என்றும் விளக்கமளிக்கின்றனர்.   பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள.(தொல்காப்பியம், உரியியல் சூத்திரம்  69). மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது; பேஎ – இன்னிசை அளபெடை. மரா அம்- செங்கடம்பு. கடம்ப மரமானது இந்திய புராணங்கள் பலவற்றிலும் தெய்வீகம் நிரம்பியதாகவும், அச்சம் தருவதாகவும் சொல்லப்படுகிறது. (பார்க்க: K.S. Arjunwadkar, "The Kadamba Tree in Indian Culture," Journal of Indian Folkloristics, vol. 12, no. 3, 1998, p. 45) மலைபடுகடாம் இதை ‘ நல் அரை மராஅத்த கடவுள்” என்று குறிக்கிறது. 

—- 

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே

——

நெற்றியில் பசலையும், தோள் மெலிவும் தலைவன் கொடுமையினால் உண்டானவையல்ல என்னுடைய மனநிலையினாலேயே அவை உண்டாயின என்று தலைவி கூறுகிறாள். தலைவன் பால் குற்றமில்லையாதலால் அத்தெய்வம் தலைவனைப் பாதுகாக்கும் என்பது உட்குறிப்பு. நுதலே, தோளே ஆகியவற்றிலுள்ள ஏகாரங்கள் அசைநிலைகள். இப்பாடலில் வருவது போல தெய்வத்தை தலைவி வேண்டுதலை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலுக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் தெய்வமஞ்செலெனும் மெய்ப்பாடு எனக் குறிக்கிறார்.  தலைவன் செய்த சூளுரை பொய்த்ததாகத் தெய்வம் அவனை வருத்தும் என தலைவி அஞ்சியபோதும் அதனால் நன்மொழி கூறும்போதும் இத்தகைய தலைவி கூற்று நிகழும் என தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 21, 23 ஆகியவற்றுக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் மேலும் தெரிவிக்கிறார்.  ஞெகிழ ஞெகிழ்ந்தன்று என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் தலைவன்  உள்ளம் என்பால் ஞெகிழ்தலை வேண்டி ஞெகிழ்ந்து காட்டுவதாயிற்று என விளக்கமளிக்கிறார். ஞெகிழ் என்பது நெகிழ் என்பதன் போலி. எம் குன்று கெழு நாடர்- என்பது என் குன்றுகளைச் சேர்ந்தவனே என சொந்தம் கொண்டாடுதலாகும். 



Wednesday, July 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-85

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-85

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது
இயற்றியவர்: வெண்கொற்றனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 86

திணை: குறிஞ்சி

————

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்

பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்

பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்

தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்

நாநவில் கொடுமணி நல்கூர் குரலே

—-

————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மழைத்துளி மிகும், வாடைக்காற்று வீசித்தூவுகின்ற கூதிர்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந்தோறும் அலைக்கின்ற நாவினால் முழக்குகின்ற கொடிய மணியின், மெல்லிய ஓசையை, தடுக்கப்பட்டு நீர் உடைந்து துளித்துளியாக விழுகின்ற, செம்மையான அரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணோடும் பொறுத்தற்கரிய காமநோயோடும், தனிமை வருந்துதலாற் கலங்கி கேட்டு வருந்துவோர் என்னையன்றிப் பிற மகளிரும் உள்ளாரோ?

———

நோயொடு புலம்பலைக் கலங்கி

—-

தலைவி நோயென்றெது பிரிவாற்றாமையினால் உண்டாகின்ற துன்பத்தை. கூதிர் காலத்தில் யாமத்தில் அனைவரும் அசந்து உறங்கும் வேளையில் தலைவி மட்டும் எருதின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கேட்டனள். தலைவனோடு இருந்து இன்புறுதலுக்குரியவை கூதிர்காலமாகிய பெரும்பொழுதும் யாமமாகிய சிறு பொழுதும். இவை குறிஞ்சித் திணையின் ஒழுக்கத்துக்குரியன. அக்காலத்திலும் தலைவன் வராததால் தலைவி துன்புற்றாள். துளம்பு என்பது ஈ, இங்கே மாட்டு ஈ. தன்னைத்துன்புறுத்தும் ஈயினைக் கேட்ட மாத்திரத்தில் அதனால் முன்பு துன்புற்றிருந்த எருது தலையை அசைக்க அதன் கழுத்து மணி ஒலித்தது. அச் சிறு ஒலி தூக்கமற்ற  யாமத்தில் அவளைத் துன்புறுத்தியதால் கொடுமணி என்றழைத்தாள். அவ்வொலி யாமத்தையும் அவளுடைய தனிமையையும் காமத்தையும் மிகுதியாக்கித் துன்புறுத்தியது.  குறுந்தொகை 190 ஆவது பாடலில் வரும் ‘உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் நல் ஏறு இயங்குதொறு இயம்பும் பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக்குரலே” வரிகள் இப்பாடலோடு இணைத்து வாசிக்கத் தக்கன.

——

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கண்

——

சிறைபனி என்பது இமைகளால் தடுக்கப்பட்ட கண்ணீர் என்று பொருள்தரும். செ அரி மழைக்கண்- செம்மையான வரிகளையுடைய குளிர்ச்சியையுடைய, கண்ணீரால் நிரம்பிய கண். மழைக்கண் என்பது அழகான பிரயோகம். மழைக்கண்ணோடு தலைவி கலங்கி வருந்துகிறாள்.  அகநானூறு 126 ஆவது பாடலில் வரும் “யாமம் கொள்வரின் காமம் கடலுனும் உரைஇக் கரைபொழியும்மே” வரி போல தலைவியின் காம நோய் தாங்க இயலாதாதாய் இருக்கிறது.

——

மழைத்துளியும் வாடைக்காற்றும்

—-

மழைத்துளியும் வாடைக்காற்றும் வெளியே மட்டும் இல்லை தலைவியின் மழைக்கண்களிலும், உடல் காமத்தில் தாங்கவொணாமல் நடுங்வதிலும் கூட இருக்கின்றன. அதனால் தலைவி என்னைப் போல வேறு யாரும் இப்படித் துன்புறுகிறார்களா என விரக்தியில் புலம்புகிறாள். காதலின் தனிமை, யாமம், காமம், சிறு ஒலிக்கும் துன்பம் அதிகமாகும் நுண்ணுர்வு ஆகியனவற்றை அழகாக சொல்லும் பாடல்.

——


Tuesday, July 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-84

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-84

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் கூறியது
இயற்றியவர்: வடமன் தாமோதரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 85

திணை: மருதம்

————

யாரினு மினியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாண ரூரன் பாணன் வாயே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

ஊரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையையுடைய சேவல், கர்ப்பம் முதிர்ந்த பெண்குருவிக்கு பொறையுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலையுடைய கரும்பினது பூ மணம் வீசாத வெள்ளிய பூவை கோதி எடுக்கும். புதுவருவாயையுடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லோரிலும் இனிமையை உடையவன், தலைவியின்பால் பெரிய அன்பினை உடையவன்; உண்மையில் அவன் அங்ஙனம் இலன்.

——-

யாண ரூரன் பாணன் வாயே

——-

தோழி, பாணன் பொய்யுரைப்பதை நன்கு அறிந்தவள். பாணன் தலைவன் யாரினும் இனியன் பேரன்பினன் எனக் கூறக்கேட்ட தோழி அவனது சொல்லால் மட்டுமே தலைவன் அங்ஙனம் இருத்தலன்றிச் செயலில் இல்லையெனும் கருத்துப்படக் கூறி அவள் வாயில் மறுப்பாதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.  ஊர்க்குருவியின் சேவல் கூட சூல் முதிரும் பெண் குருவிக்கு மென் கூடு அமைக்கும் அன்புடையது அந்த இயல்பு தலைவன் பால் இல்லை எனத் தோழி உரைக்கிறாள். பாணன் வாய் என்பது பாணனுக்காக நின்ற ஆகுபெயர். வாயே என்பதில் ஏகாரம் பிரிநிலை, வாய்ச்சொல்லில் மட்டுமே அன்புடையவன் என்ற பொருளைச் சுட்டியது. 

——

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

——-

இப்பாடலில் வரும் ஊர்க்குருவியின் சேவல் தன் சூல் முதிர்ந்த பெண் குருவிக்காக மென் கூடு அமைக்கும் உவமை மிகவும் அழகானது. பேடை என்ற சொல் இப்பாடலில் குருவியில் பெண்ணைக் குறிக்கும். பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே  எனத் தொல்காப்பியம், மரபியல் சூத்திரம்  3 பெண்ணைக் குறிக்கும் சொற்களை வரிசைப்படுத்துகிறது.  ஊர்க்குருவியின் சேவல் துள்ளு நடையை உடையது. அது சூல் முதிர்ந்த தன் பெண் குருவிக்காக மென்மையான கூட்டினை அமைக்கிறது. அதற்காக அது கிடைத்த சுள்ளியை பொறுக்கி வருவதில்லை; தேர்ந்தெடுத்த கரும்பின் தேம் பொதி கொண்ட மணமற்ற கரும்பின் வெண் பூவைக் கொண்டுவந்து கட்டுகிறது. தேம் பொதி என்றது தேம் தேன் என்பதன் திரிபு தேனைப் போல இனிமையானது என்ற பொருளுடையது.  மணம் ஒவ்வாமை சூல் முதிர்ந்த பெண் குருவிக்கு ஏற்படக்கூடாது என மணமற்ற பூவைத் தேர்ந்தெடுத்தது. தேம் பொதி என்றது தேனடையையும் தேன் போன்ற இனிய சாறு என்பதையும் ஒருங்கே மேலும் குறிக்கும். தீங்கழை என்பதும் சுவையினிமையுடைய கரும்பின் கோல் எனப் பொருள் பெறும்.  வேறொன்றிற்குத்  தன் சூல் முதிர்ந்த பெண் குருவி செல்லாமல் தடுத்து தன்னையே உண்ணச்செய்யும் தேம்பொதியை உடையதேனும் தன் கருமமே கண்ணாகிப் பூவைக் கொழுவி வந்தது அச்சேவலின் பேரன்பைப் புலப்படுத்துகிறது.  உள்ளூர்க் குரீஇ – என்பதில் குரீஇ – இயற்கை அளபெடை.

—-

உட்குறிப்பு

——

இனிய தேனடையும், தீங்கழையும் இருக்கக்கூடிய மணமில்லாத வெண்மை நிறத்திலான கரும்பின் பூவைக் குருவி கொழுவிக் கொண்டு வரும் ஊரன் என்றது அறத்தோடு பொருந்திய இன்பத்தைத் தரும் தலைவி இருக்க அவள் பாலன்றி, வெறும் வாய்ச்சொல் பாணனை தூது அனுப்பி விட்டு அன்பும் கற்பும் இல்லாத பரத்தையரை தலைவன் விருப்பினான் என்ற உட்குறிப்பினை உடையது. ‘யாணர் ஊரன்” என்ற அடைமொழி அவன் பரத்தையர்க்கு பயனுள்ளவனாக இருப்பதைக் குறிப்பதாகும். அதனால் தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள். 

 

Monday, July 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-83

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-83

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

செவிலித்தாய் கூற்று

இயற்றியவர்: மோசிகீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 84

திணை: பாலை

————

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனே னென்றனள்

இனியறிந் தேனது துனியா குதலே

கழறொடி யாஅய் மழைதவழ் பொதில்

வேங்கையுங் காந்தளு நாறி

ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவி தன்னைப் பிரிந்து தலைவனோடு உடன் போக அதனை அறிந்த செவிலித்தாய் கூறியதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.  உழல இட்ட தோள்வளையையுடைய ஆய் எனும் வள்ளலுடைய மேகங்கள் தவழும் பொதிகை மலையில் உண்டான வேங்கையும் காந்தளும் மணக்க ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையவளாகிய என் மகள் நான் ஒரு தடவை தழுவியதோடு அமையாமல் மீண்டும் தழுவும்போது நான் வியர்த்தேன் என்று கூறினாள். அவளுக்கு அப்படி வெறுப்பு உண்டானதற்கான காரணத்தை அப்போது அறியவில்லை இப்பொழுது அறிந்தேன்.

——-

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனே னென்றனள்

——

இப்பாடலில் வருவது போலத் தலைவி தலைவனோடு ஓடிப்போய்விட, தலைவியை நினைத்து செவிலித்தாய் கூறுவதாக அமைந்தவற்றை தொல்காப்பியம் அகத்திணையியல் 39 ஆம் சூத்திரத்திற்கு உரை எழுதுகிற இளம்பூரணர் உடன் போக்கிய செவிலி கனன்று உரைத்தது எனக் குறிப்பிடுகிறார். இறையனார் அகப்பொருளுரை களவியல் சூத்திரம் 23, இதை “பிற்றை ஞான்று தலைமகளது போக்கு உணர்ந்து செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய் நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும்” என்று உரைக்கிறது. தலைவியை அருகில் துயிலச் செல்லுதல் செவிலியர் வழக்கம். அதனால் செவிலித்தாயக்கு தலைவியின் உடல் ஆம்பல் மலர் போல குளிர்ச்சியையுடையதாக இருப்பது தெரிந்திருந்தது, அதனால அவள் ‘ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே’ என்று சொல்கிறாள். ஆம்பல் நீர்ப்பூ ஆதலால் தண்மைக்கு உவமையானது. 

 அப்படிக் குளிர்ச்சியான உடலை  உடைய தலைவிக்கு, தலைவனின் மார்பைத் தழுவிய பிறகு, செவிலியைத் தழுவல் வியர்வையையும் வெறுப்பையும் உண்டாக்குவதாக இருக்கிறது. தலைவியின் இவ்வுணர்வு ‘பயில்வு’ என அழைக்கப்படும். தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 23 இக்கு உரை எழுதுகிற  நச்சினார்க்கினியர் “ தலைவி செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது வேறோர் இடத்தில் பயிறல்” என இதை விளக்குவார். 

——-

கழறொடி யாஅய் மழைதவழ் பொதில்

வேங்கையுங் காந்தளு நாறி

———-

ஆய் ஏழு வள்ளல்களுள் ஒருவன். அவனுக்குரியது பொதிகை மலை. அவனுடைய குறிஞ்சி நிலத்திற்கு உரிய வேங்கையின் மணமும் காந்தளின் மணமும் தலைவியின் உடலில் இயற்கையாக இருப்பதாக செவிலிதாய் சொல்வதாக உ.வே.சா. குறிக்கிறார். ஆனால் அத்தகைய வேங்கையும் காந்தளும் சேர்ந்த நறுமணம் தலைவனைத் தழுவியதாலும் தலைவிக்கு உண்டாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது. வேங்கை, காந்தள் ஆகிய மலர்கள் தலைவன் சூட்டியிருந்த மலர்கள் என்பது உட்குறிப்பு. ஆம்பல் மலரைப் போல குளிர்ச்சியை உடையவளாக இருந்த தலைவி தலைவனின் நினைவால் ஏற்பட்ட உடல் வெப்பத்தினால் உடல் வியர்த்தனள் என்பதும் இன்னொரு உட்குறிப்பு. கழறொடி ஆய்- என்பது கழல் தொடி ஆய் எனப்பிரியும், வளைகள் அணிந்த ஆய் வள்ளல் எனப் பொருள் தரும். 

——-

இனியறிந் தேனது துனியா குதலே

——-

தலைவி தன் தழுவுதலை மறுத்தபோதும் அவளுடல் வெப்பத்தில் வியர்த்தபோதும் அவள் தன்னை விட்டுப்பிரிந்து தலைவனோடு ஓடிப்போவாள் என்று அப்போதே அறிந்திருக்க வேண்டும் எனப் புலபம்பும் செவிலிதாய் “இனியறிந் தேனது துனியா குதலே

“ எனப் புலம்புகிறாள். அப்போதே தெரிந்திருந்தால் தலைவனுக்கு மணம் முடித்துக்கொடுத்திருப்போமே என்பது ஒரு உட்குறிப்பு என்றால் இன்னொரு உட்குறிப்பு இனியாகுதலே என்று முடியும் ஏகாரத்தில் இருக்கிறது. இரக்கக்குறிப்பாக வரும் அந்த ஏகாரம் தலைவனோடு உடன் போகிய தலைவி பாலைநிலத்தில் என்ன துன்பங்களை எதிர்கொள்வாளோ என அன்பினையும் கவலையையும் வெளிப்படுத்துகிறது. 

——