Wednesday, July 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-85

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-85

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது
இயற்றியவர்: வெண்கொற்றனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 86

திணை: குறிஞ்சி

————

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்

பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்

பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்

தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்

நாநவில் கொடுமணி நல்கூர் குரலே

—-

————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மழைத்துளி மிகும், வாடைக்காற்று வீசித்தூவுகின்ற கூதிர்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந்தோறும் அலைக்கின்ற நாவினால் முழக்குகின்ற கொடிய மணியின், மெல்லிய ஓசையை, தடுக்கப்பட்டு நீர் உடைந்து துளித்துளியாக விழுகின்ற, செம்மையான அரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணோடும் பொறுத்தற்கரிய காமநோயோடும், தனிமை வருந்துதலாற் கலங்கி கேட்டு வருந்துவோர் என்னையன்றிப் பிற மகளிரும் உள்ளாரோ?

———

நோயொடு புலம்பலைக் கலங்கி

—-

தலைவி நோயென்றெது பிரிவாற்றாமையினால் உண்டாகின்ற துன்பத்தை. கூதிர் காலத்தில் யாமத்தில் அனைவரும் அசந்து உறங்கும் வேளையில் தலைவி மட்டும் எருதின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கேட்டனள். தலைவனோடு இருந்து இன்புறுதலுக்குரியவை கூதிர்காலமாகிய பெரும்பொழுதும் யாமமாகிய சிறு பொழுதும். இவை குறிஞ்சித் திணையின் ஒழுக்கத்துக்குரியன. அக்காலத்திலும் தலைவன் வராததால் தலைவி துன்புற்றாள். துளம்பு என்பது ஈ, இங்கே மாட்டு ஈ. தன்னைத்துன்புறுத்தும் ஈயினைக் கேட்ட மாத்திரத்தில் அதனால் முன்பு துன்புற்றிருந்த எருது தலையை அசைக்க அதன் கழுத்து மணி ஒலித்தது. அச் சிறு ஒலி தூக்கமற்ற  யாமத்தில் அவளைத் துன்புறுத்தியதால் கொடுமணி என்றழைத்தாள். அவ்வொலி யாமத்தையும் அவளுடைய தனிமையையும் காமத்தையும் மிகுதியாக்கித் துன்புறுத்தியது.  குறுந்தொகை 190 ஆவது பாடலில் வரும் ‘உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் நல் ஏறு இயங்குதொறு இயம்பும் பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக்குரலே” வரிகள் இப்பாடலோடு இணைத்து வாசிக்கத் தக்கன.

——

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கண்

——

சிறைபனி என்பது இமைகளால் தடுக்கப்பட்ட கண்ணீர் என்று பொருள்தரும். செ அரி மழைக்கண்- செம்மையான வரிகளையுடைய குளிர்ச்சியையுடைய, கண்ணீரால் நிரம்பிய கண். மழைக்கண் என்பது அழகான பிரயோகம். மழைக்கண்ணோடு தலைவி கலங்கி வருந்துகிறாள்.  அகநானூறு 126 ஆவது பாடலில் வரும் “யாமம் கொள்வரின் காமம் கடலுனும் உரைஇக் கரைபொழியும்மே” வரி போல தலைவியின் காம நோய் தாங்க இயலாதாதாய் இருக்கிறது.

——

மழைத்துளியும் வாடைக்காற்றும்

—-

மழைத்துளியும் வாடைக்காற்றும் வெளியே மட்டும் இல்லை தலைவியின் மழைக்கண்களிலும், உடல் காமத்தில் தாங்கவொணாமல் நடுங்வதிலும் கூட இருக்கின்றன. அதனால் தலைவி என்னைப் போல வேறு யாரும் இப்படித் துன்புறுகிறார்களா என விரக்தியில் புலம்புகிறாள். காதலின் தனிமை, யாமம், காமம், சிறு ஒலிக்கும் துன்பம் அதிகமாகும் நுண்ணுர்வு ஆகியனவற்றை அழகாக சொல்லும் பாடல்.

——


No comments: