Saturday, July 6, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-75

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-75

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

இயற்றியவர்: கிள்ளிமங்கலம் கிழார்

குறுந்தொகையில் பாடல் எண்; 76

திணை: குறிஞ்சி

————

காந்தள் வேலி யோங்குமலை நன்னாட்டுச்

செல்ப வென்பவோ கல்வரை மார்பர்

சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை 

பெருங்களிற்றுச் செவியின் மானத்தைஇத்

தண்வரல் வாடை தூக்கும்

கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் பிரிவினை முன்கூட்டியே உணர்ந்திருந்த தலைவி, அதனைத் தன்னிடம் உணர்த்திய தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 


தோழி, மலைப்பக்கத்திலுள்ள சேம்பின் வளம்பொருந்திய இலையை, வாடைக்காற்று, பெரிய களிற்றின் செவியைப் போலத் தோன்றும்படி தடவி அசைக்கும். மிக்க பனியையுடைய, அந்த சிரமமான காலத்தில், நடுங்குதற்குரிய காரணமாகிய துன்பத்தை அடையும்படி, கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் காந்தளை வேலியாகிய உடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து என்னைப் பிரிந்து போவரென்று கூறுகின்றனர்.

———-

காந்தள் வேலி யோங்குமலை நன்னாட்டுச்செல்ப

———

இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு என்ப  என்று தலைவி கூறியமையால் தலைவன் பிரிந்து செல்வான் என்று தான் முன்னமையே அறிந்ததை விளக்கினாள் என்று உ.வே.சா. உரை எழுதுகிறாள். அதாவது இயல்பாக வளர்ந்த காந்தளை சங்கேத குறிப்பு கொண்டதாக இருக்கிறது. காந்தள் மலர்ந்து வாடைக்காற்றின் வருகையை உணர்த்தும் என்ற குறிப்பு அவன் முன்பனிக்காலத்தில் தன்னோடு சேர்ந்திருக்க வேண்டும் என்ற விருப்பத்தை புலப்படுத்தியது, அச்சிரம் என்ற சொல் முன்பனிக்காலத்தைக் குறிக்கும். கடும்பனியில் நடுங்கும் தன் உடல் தலைவனின் மார்புக்கு ஏங்கும் என்று தலைவி தன் காதல் உணர்ச்சியை வெளிப்படுத்தியதால் இப்பாடல் குறிஞ்சித் திணையின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. அகநானூற்றுப் பாடல் 125 இல் வரும் “செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின் ஓடுவை மன்னால் வாடை நீ எமக்கே” என்ற் வரியும் ஐங்குறுநூறு 223 ஆவது பாடலில் வரும் “தண்பனி வடந்தை அர்ச்சிரம்” என்ற வரியும் இங்கே இணைத்து வாசிக்கத்தக்கவை.

——-

சேம்பின் இலையும் களிற்றின் காதும்

——-

பெருக்களிற்றுச் செவியின் மான என்பதில் இன் சாரியை, மான உவம உருபு.  வாடைக்காற்று மட்டுமின்றி சேம்பின் இலையும் யானையின் செவி போல அசைந்து பனிக்காற்றை அதிகமாக்கின. களிற்றின் செவிக்கு சேம்பின் இலையும் அதன் அசைவிற்கு வாடையில் அதன் அசைவும் உவமைகளாயின. சிலம்பிற் சேம்பு என்பது மலைச்சேம்பில் ஒரு வகையைக் குறிக்கும். கம்பராமாயணம் நாட்டுப்படலத்தில் 35 ஆவது வரியில் ‘சேம்புகால் பொர ‘ என்று இந்தச் செடிக்கு ஒரு  குறிப்பு வருகிறது. சேம்பு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, கறிக்குதவும் கிழங்கைத்தரும் ஒரு வகைச் செடியாகும். தோட்டத்தில் வளர்க்கக்கூடியது வறட்சேம்பு என்றழைக்கப்படுகிறது. 

——-

கல்வரை மார்பர்

——-

‘கல்வரை மார்பர் செல்ப என்பவோ’ என்பதற்கு

இரா. இராகவையங்கார் கல் நெஞ்சினர் என்று உரை எழுதுகிறார். உ.வே.சா. கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் என்று குறிக்கிறார். அஞர் என்ற சொல் அச்சத்தையும் வருத்தத்தையும்  ஒருங்கே குறிக்கும். தைஇ தண்வரல் வாடை என்பதில் தைஇ வருடிச்செல்லக்கூடிய என்பதையும் ( இகாரம் சேர்வது சொல்லிசை அளபெடை), தண் குளிர்ச்சியையும், வரல் வருகையையும் வாடை குளிர்காற்றையும் குறிக்கும். 

——

தலைவி தோழியிடம் என்ன சொல்கிறாள்?

——-

தலைவன் பிரிந்து செல்வதைத் தடுப்பது உன் கடமையாக இருக்க அதைச் செய்யாமல் அயலாரைப் போல நீயும் அவன் பிரிவை உணர்த்த வந்தது உனது தகுதியன்று என்றும் தோழிக்கு இந்தப்பாடலில் தலைவி சொல்கிறாள். இதே போன்ற உட்கருத்தை “அழுங்குவித்து வந்தது கூறற்பாலைய நீயும் இவ்வளைகள் செய்தனவே செய்தாயெனப் புலந்து கூறியவாறு” என்று  1157 ஆவது திருக்குறளுக்கு பரிமேலழகர் உரையில் வாசிக்கிறோம். 

——


No comments: