Friday, July 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-80

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-80

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்:  வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 81

திணை: குறிஞ்சி

————

இவளே நின்சொற்கொண்ட வென்சொற் றேறி

பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்

புதுநல னிழந்த புலம்புமா ருடையவள்

உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்

கடலுங் கானலுந் தோன்றும்

மடறாள் பென்ணையெஞ் சிறுநல் லூரே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வெற்ப, குறையுறும் நின் சொற்களை ஏற்றுக்கொண்ட நான் அவற்றைத் தலைவியிடம் கூறினேன். அவளும் அவற்றைத் தெளிந்து பசிய அரும்புகளையுடைய ஞசழல் மரத்தின் பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து இதுகாறும் புதியதாய் இருந்த தன் பெண்மை நலத்தை இழந்ததனாலுண்டான தனிமையையுடையவள். நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனை மரங்களையுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ உள்ளது, காண்பாயாக. இனி எம்மை மறவாது நினைக்க வேண்டும்.

——-

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்

கடலுங் கானலுந் தோன்றும்

———

அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோன்றும் கடலுக்கு நிலவும் அடர்த்தியால் இருண்டு ததோன்றும் கானலுக்கு இருளும் உவமை. ஒன்றை ஒன்று சமமாக நிறைப்பதால் இந்த வகை உவ்மைகள் நிரனிறை என்ற்ழைக்கப்படுக்கின்றன. எதிர் நிரனிரையாகக் கொண்டு கருநீர்க் கடலுக்கு இருளையும் கடற்கரை மணற்பரப்பிற்கு நிலைவையும் உவமை கொள்ளுதலும் ஏற்புடயதே. தலைவியும் தோழியும் நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலினால்  ஊர் பனை மரங்களை உடையதாயிற்று. நெடுந்தூரத்திரத்திலிருந்து வரும்போது தோன்றும் அடையாளங்களாகிய கடலையும் கானலையும் முன்பும் அணுகிய பின்னர் தோன்றுவதாகிய மடல்கள் தாழ்ந்த பனை மரங்களைப் பின்பும் கூறினாள். சிறியதாயினும் சிறப்புடையது என்பதால் சிறு நல்லூர் என்றாள். நீ வருவதற்கு உரிய நல்லூர் என்பது உட்குறிப்பு.

———

தோழி களஞ் சுட்டிக் கூறுவது

——-

உள்ளல் வேண்டும் என்று தோழி கூறுவது தலைவியை நினைத்து வரவேண்டும் என்ற குறிப்பு உடையது. அதன் பொருட்டே தோழி தலைவி வாழும் ஊரைக் காட்டினாள். இப்படித் தோழி களஞ் சுட்டிக் கூறுவதற்கு விதி தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 30 ‘தோழியின் முடியு மிடனுமா ருண்டே”  என்பதாகும். ஞாழல் மரம் புலிநகக்கொன்றை என்றும் அழைக்கப்படுகிறது. நெய்தல் நிலத்திற்குரிய மரமாகும். தலைவன் தலைவியோடு ஞாழல் மரத்தின் நிழலில் அளவளாவினான் என்பதால் “ஞாழல் பல்சினை யொருசிறைப் புதுநலனிழந்த புலம்புடையள்” என்றாள். பல்சினை என்பது புது அரும்புகள் எனப் பொருள்படும்.  புலம்பு என்ற சொல் இங்கு நலனிழந்தமையால் உண்டான தனிமையைக் குறிக்கும். தலைவி தானாக விரும்பி இதைச் செய்யவில்லை. நான் கூறியதால் சம்மதித்தாள். நானும் நீ குறைவேண்டி  இரந்து கேட்டதால் அவளை சம்மதிக்கச் செய்தேன். ஆகையால் அவள் நலனிழந்தமைக்கு நீ யே காரணம். இனி நீ அவள் துயருறாதவாறு அவ்வூருக்கு வந்து அளவாளாவுவாயாக என்று தோழி களஞ்ச் சுட்டிக் கூறுகிறாள்.  தோழியற் கூட்டத்தின் முன்பு பணிந்து பின்னின்ற தலைவனைத் தோழி பணிந்தொழுகும்போது இக்கூற்று நிகழ்கிறது.

——-


No comments: