Thursday, July 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-86

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-86

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தெய்வத்திடம் வேண்டியது
இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 87

திணை: குறிஞ்சி

————

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்

கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

பொதுவிடத்திலுள்ள மரத்தின்கண் தங்கும் பிறர்க்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்; குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர் அத்தெய்வத்தால் தண்டிக்கப்படவேண்டிய கொடுமையைச் செய்தவரல்லர். என் நெற்றி நான் அவரை விரும்பியதனால் பசலைபெற்றது. என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்தமையால் பரந்த என் தோள் மெலிவுற்றது. 

——

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

——

மனறெமென்றது பலர் கூடியிருக்கும் மரத்தினடி. ஊர் மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உறைகின்ற தெய்வத்தை முன்னிறுத்தித் தலைவன் நின்னைப் பிரியேன் என்று சூளுரைத்த இடமாகும். பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி துயருற்றாள்.  தன்னுடைய துயருக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுரைக்கப்பட்ட கடவுள் அவனைத் தண்டிக்குமென அவன் கலையுற்றான்.  ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தைத் தலைவி இப்பாடலில் வேண்டுகிறாள். ‘மராஅத்த பேஎ முதிர் கடவுள்’ என்பதற்கு  உ. வே. சா. பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம் என்றும்   பொ. வே. சோமசுந்தரனார் கடம்பில் உறைகின்ற பிறர்க்கு அச்சம் செய்தலில் முதிர்ந்த முருகக்கடவுள் என்றும்  இரா. இராகவையங்கார் அச்சம் செய்வதில் பழமைப்பட்ட தெய்வம் என்றும் தமிழண்ணல்  செங்கடம்பு மரத்தில் உறையும் அச்சம் மிக்க தெய்வம் என்றும் விளக்கமளிக்கின்றனர்.   பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள.(தொல்காப்பியம், உரியியல் சூத்திரம்  69). மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது; பேஎ – இன்னிசை அளபெடை. மரா அம்- செங்கடம்பு. கடம்ப மரமானது இந்திய புராணங்கள் பலவற்றிலும் தெய்வீகம் நிரம்பியதாகவும், அச்சம் தருவதாகவும் சொல்லப்படுகிறது. (பார்க்க: K.S. Arjunwadkar, "The Kadamba Tree in Indian Culture," Journal of Indian Folkloristics, vol. 12, no. 3, 1998, p. 45) மலைபடுகடாம் இதை ‘ நல் அரை மராஅத்த கடவுள்” என்று குறிக்கிறது. 

—- 

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே

——

நெற்றியில் பசலையும், தோள் மெலிவும் தலைவன் கொடுமையினால் உண்டானவையல்ல என்னுடைய மனநிலையினாலேயே அவை உண்டாயின என்று தலைவி கூறுகிறாள். தலைவன் பால் குற்றமில்லையாதலால் அத்தெய்வம் தலைவனைப் பாதுகாக்கும் என்பது உட்குறிப்பு. நுதலே, தோளே ஆகியவற்றிலுள்ள ஏகாரங்கள் அசைநிலைகள். இப்பாடலில் வருவது போல தெய்வத்தை தலைவி வேண்டுதலை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலுக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் தெய்வமஞ்செலெனும் மெய்ப்பாடு எனக் குறிக்கிறார்.  தலைவன் செய்த சூளுரை பொய்த்ததாகத் தெய்வம் அவனை வருத்தும் என தலைவி அஞ்சியபோதும் அதனால் நன்மொழி கூறும்போதும் இத்தகைய தலைவி கூற்று நிகழும் என தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 21, 23 ஆகியவற்றுக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் மேலும் தெரிவிக்கிறார்.  ஞெகிழ ஞெகிழ்ந்தன்று என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் தலைவன்  உள்ளம் என்பால் ஞெகிழ்தலை வேண்டி ஞெகிழ்ந்து காட்டுவதாயிற்று என விளக்கமளிக்கிறார். ஞெகிழ் என்பது நெகிழ் என்பதன் போலி. எம் குன்று கெழு நாடர்- என்பது என் குன்றுகளைச் சேர்ந்தவனே என சொந்தம் கொண்டாடுதலாகும். 



No comments: