Friday, July 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-87

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-87

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: மதுரைக் கதக்கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 88

திணை: குறிஞ்சி

————

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்

சிறுகட் பெருங்களிறு வயப்புலித் தாக்கித்

தொன்முரண் சோருந் துன்னருருஞ் சாரல்

நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகள் உள்ள  நாட்டையுடைய தலைவன்  சிறிய கண்களையுடைய  பெரிய களிறு வலிமையுடைய புலியோடு சண்டையிட்டு தன்னுடைய பழைய வலிமையை இழந்ததற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய மலைச்சாரலின் வழியே  இரவின் நடுப்பகுதியாகிய யாமத்தில் வருவான். அவன் அப்படி வருவதனால் உண்டாகும் குற்றத்திற்கு நாம் நாணம் கொள்ள மாட்டோம்.

——

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்

——

தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்.  இனி இரவில் வருவான் என்று தோழி தலைவியிடம் கூறியதாக அமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலில் அவன் எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறான், எத்தனை வளம் மிக்க மலைப்பகுதியிலிருந்து வருகிறான்,எத்தனை அபாயங்களைக் கடந்து வருகிறான் என்பதைத் தோழி தலைவிக்குக் கூறி அவளை இரவுக்குறிக்கு சம்மதிக்க வைக்கிறாள். இதற்கு அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிறங்கி நிலப்பரப்பிலுள்ளார்க்கு பயன்படுவது போல தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து நமக்குப் பயன்படுவான் என்பதைச் சொல்ல “ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்’ என தலைவனைக் குறிப்பிட்டாள். தலைவன் வருதல் அருவி ஒலி உண்டாக்குதல் போல அனைவருக்கும் தெரிந்துவிடும் அதனால் ஊரார் பேச்சு எழும் என்பது உட்குறிப்பு .

—-

சிறுகட் பெருங்களிறு வயப்புலித் தாக்கித்

தொன்முரண் சோருந் துன்னருருஞ் சாரல்

—-

தலைவன் கடந்து வரும் மலைப்பாதையின் அபாயங்களைக்கூறும் தோழி வயப்புலியும் களிறும் சண்டையிடும் மலைச்சாரல் எனக் கூறுகிறாள். வயப்புலி என்பதை உ.வே.சா சிங்கம் எனக் குறிக்கிறார். பிற உரையாசிரியர்கள் வலிமை வாய்ந்த  புலி என உரை எழுதுகின்றனர். வயப்புலி சிறிய கண்களை உடைய பெருங்களிற்றைத் தாக்கி வலுவிழக்கச் செய்வது போல கடப்பதற்கு சிரமங்களைத் தரக்கூடிய மலைச்சாரலைத் (துன் அருஞ்சாரல்) தாண்டி தலைவன் வருகிறான். அப்படி அவன் வருவதால்,  அவன் வருவதால் உண்டாகக்கூடிய அலர் மொழிகளாலான ஊரார்பேச்சு குற்றம் வந்தாலும் அதற்காக நாம் நாணவேண்டாம் என்று தோழி சொல்கிறாள் .

—-

நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே

——

வழியின் அபாயங்களுக்கு அஞ்சாமல் அவனே வரும்போது அவனை ஏற்றுக்கொள்ளாமல் வடுவை நாணி மறுத்தல் அழகல்ல என்று தோழி சொல்கிறாள்.. நடுநாள் என்பது யாமமாகும். வடுவென்றது தலைவன் வருவதை பிறர் அறிந்து பழிகூறுதலை. வரூஉம் –இன்னிசை அளபெடை.  நாணலமே என்பதில் ஏகாரம் அசைநிலை, நாண வேண்டாம் என்பது அறிவுரை. 

—-

No comments: