Wednesday, July 3, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-72

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-72

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவிடம்  கூறியது

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 73

திணை: குறிஞ்சி

————

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ

அழியல் வாழி தோழி நன்னன்

நறுமர் கொன்று நாட்டிற் போகிய

ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைவிக்குத் தோழி கூறியது: தோழி, தலைவனது மார்பையே எப்பொழுதும் அணைத்துக்கொள்ளும் விருப்பம் உடையவளாக உள்ளாய். நன்னனது காவல் மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி அவனது நாட்டினில் புகுந்து அவனையும் கொன்ற வஞ்சினத்தையுடைய கோசரைப் போல சிறிதளவு வன்கண்மையுடைய சூழ்ச்சியும் வேண்டும். அதன் பொருட்டு வருந்தற்க.

———

கோசர்களின் சூழ்ச்சி

——

கோசர்களின் சூழ்ச்சி என இப்பாடலில் தோழி தலைவிக்குக் கூறும் செய்திகள் அறியத்தக்கன. நன்னன் என்ற குறுநில மன்னன் தன் நாட்டின் காவல் மரமாக ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். நன்னன் கொங்கு நாட்டுக்கருகில் மலைநாட்டில் இருந்தவன் போலும் என உ.வே.சா. குறிப்பிடுகிறார். காற்றுவீசி அம்மரத்திலுள்ள காய் ஒன்று அருகில் ஓடிய ஆற்றில் விழ அப்போது நீராடிக்கொண்டிருந்த கோசர் குலப் பெண்ணொருத்தி அக்காயை உண்டுவிட்டாள். அது பெரிய குற்றமாக நன்னனால் கருதப்பட்டது. அப்பெண் செய்த தவறுக்காக கோசர்கள் ஒன்பதிற்று ஒன்பது களிறுகளோடு அப்பெண்ணின் எடையளவு  பொன்னைக் கொடுத்தும் பெறாமல் நன்னன் அவளைக் கொன்றுவிட்டான். இதனால் கோசர்கள் நன்னனின்  மாமரத்தை அழித்து அவனையும் பழி வாங்க நினைத்தனர். கோசர்கள் பெண் யானைகளைப் பரிசாக வழங்கும் அவனுடைய தந்தையிடம் அகவல் மகளிரை அனுப்பி பரிசு பெறச்செய்தனர். அவர்கள் பரிசு பெற்றுத் திரும்பும்போது அக்களிறுகளை நன்னனுடைய மாமரத்தில் பிணைக்குமாறு கூறினர். அக்களிறுகள் அந்தக் காவல் மாமரத்தை அடியோடு சாய்த்து அழித்துவிட்டன. ஊர் திரும்பி இதனை அறிந்த நன்னன் கோசர்களோடு போரிட்டான்; அந்தப் போரில் அவன் கோசர்களால் கொல்லப்பட்டான். இதுவே இப்பாடல் குறிப்பிடும் கோசர்களின் வன்சூழ்ச்சியாகும். இச்சூழ்ச்சி பிற்கால உரையாசிரியர்களால் எடுத்துரைக்கப்படுகிறது.  உ.வே.சா.  கோசர்களின் சூழ்ச்சி என்ன என்று தெரியவில்லை எனத் தன் உரையில் குறிப்பிடுகிறார். குறுந்தொகை 292 ஆவது பாடலில் வரும் ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்ற வரி நன்னன் கதைக்கு சான்று சேர்ப்பதாகும்.  கோசர்கள் பற்றிய குறிப்பு, அகநானூற்றின் 205 ஆவது பாடலில் வரும், “வாய்மொழி நிலைஇய சோண்விளங்கு நல் இசை வளம் கெழு கோசர்”” என்ற வரியிலும் இருக்கிறது.  

———

ஒன்றுமொழிக் கோசர் போல

————

ஒரு வஞ்சினத்தோடு கூடிய சூழ்ச்சியை காதலுறவில் இப்பாடல் கொண்டுவருவது ஆச்சரியகரமானது. “மகிழ்நன் மார்பே வெய்யை யானீ” என்று இனிமையாக ஆரம்பிக்கும் இப்பாடல் “ஒன்றுமொழிக் கோசர் போல” என்ற வரிக்கு வரும்போது பெரும் மாற்றத்தை உணர்ச்சி உள்ளீட்டில் கொண்டுவருகிறது; அது காதலுறவை பலகீனளுக்கும் பலவானுக்கும் இடையிலான அதிகார உறவாகப் பார்க்கிறது. நல்லவேளையாக, வெஞ்சின சூழ்ச்சி ‘சிறிதே’ வேண்டுமென்று மட்டுமே தோழி சொல்கிறாள். தோழி ,  தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து, பின்னர் அதனையும் மறுத்து, திருமணம் கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறுவதாலும் அவளைத் தேற்றுவதாலும் இப்பாடல் குறிஞ்சித்திணையாகவே மீள்கிறது. தோழி இப்படி வன்மையாகப் பேசுவதை தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 24 “தோழி வன்புறை” எனக் குறிப்பிடுவதை இளம்பூரணர் உரையில் வாசிக்கலாம். 

——-

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ

———-

தலைவன் மார்பை தலைவி விரும்புதலை பல சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள், நற்றிணை 104 ஆவது பாடலில் வரும் , “ ஆர்கலி வெற்பன மார்பு நயந்து உறையும் யானே”, ஐங்குறுநூறு 51 ஆவது பாடலில் வரும் வரியான, “ மலர்ந்த மார்பில் பாயல் துஞ்சிய வெய்யன்” என்ற வரியும் இப்பாடல் வரியோடு இணைத்து வாசிக்கத் தக்கன. 

————-

No comments: