Monday, July 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-89

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-89

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 90

திணை: குறிஞ்சி

————

எற்றோ வாழி தோழி முற்றுபு

கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய

மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்

கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம்

குன்ற நாடன் கேண்மை 

மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, சூல் முற்றி மிளகுக்கொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில் இராக்காலத்தில் முழக்கத்தை செய்த மேகத்தினது மழைக்கால் வீழ்ந்தனவாக, மிக்க மயிரையுடைய ஆண்குரங்கு தீண்டியதனால் நழுவிய மலர் மணத்தை வீசும் பலாப்பழத்தை மலைப்பக்கத்தில் வீழும் அருவியானது, நீருண்ணுந்துறையின்கண் கொண்டு வருகின்ற குன்றுகளையுடைய நாட்டையுடைய தலைவனது நட்பு நின் மெல்லிய தோள்களை மேலும் மெலியச் செய்தும், உனக்கு அது அமைதியைத் தருவதாகவே உள்ளது. இஃது எத்தன்மையதோ?

———

எற்றோ வாழி தோழி

——-

தலைவன் மணம் புரிந்து கொள்வதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்க, அதனால் ஆற்றாதவளுக்காக, தலைவன் கேட்க தோழி தலைவிக்குக் கூறியதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தை வரைவு என்ற சொல்லால் குறிக்கும் உரையாசிரியர்கள்   திருமணத்தை ஒழுக்க நெறியாக வரையறுக்கிறார்கள். உதாரணமாக தொல்காப்பியம் பொருளதிகாரம் 256 ஆவது சூத்திரத்திற்கு  உரை எழுதுகிற இளம்பூரணர் “வரைவு என்பது செய்யத்தகுவனவும், தவிரத் தகுவனவும், வரைந்து ஒழுகும் ஒழுக்கம்"  என்று எழுதுகிறார். தலைவி தலைவன் வரைவு நீட்டித்தமையால் மெலிந்தாள் அவன் தன்னை வரைந்து கொள்வான் என்ற நம்பிக்கையால் அமைதியுற்றாள். மெலிவும் அமைதியும் ஒருங்கே காணப்பட்டதை தோழி வியந்து ‘ஏற்றோ தோழி” என்றாள். இயல்பாகவே மென்மையான தோள்களை உடையவள் என்பதால் மென் தோள் சாய்த்தும் என்றாள். சால்பானது தலைவன் மணம் புரிந்துகொள்வான் என்ற உறுதியோடு அமைதியாக இருப்பதைச் சொல்லுதலாகும். 986 ஆவது திருக்குறள் ‘சால்பு என்னும் திண்மை’ என்று குறிப்பதைக் கவனிக்க வேண்டும்.  எற்றோவில் ஓ, வாழி, சால்பீன் றன்றே வில் ஏ ஆகியன அசைநிலைகள். 

—-

கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

——-

மரத்தில் இருந்த பலாப்பழம் கலையினால் (ஆண்குரங்கினால்) தொடப்பட்டமையினால் கீழே விழுந்தது; அதன் மணம் எங்கும் பரவுவதாக இருந்தது அது போல தலைவன் களவில் பெற்ற இன்பம் தலைவின் உடல் மெலிவிற்கும் ஊர் அலர் பேசுவதற்கும் காரணமாயிற்று. மலை உச்சியில் ஒருவருக்கும் பயன்படாது பழுத்த பலாக்கனி குரங்கு தொட்டமையால் அருவியில் விழுந்து நீர்த்துறையில் வாழ்கின்றவர்களுக்குப் பயன்பட்டது போல தலைவியின் நலமும் தலைவன் மணமுடிக்கும்போது இல்லறத்தின் பயனைப் பலருக்கும் தரும் என்பது உட்குறிப்பு என உ.வே.சா.விளக்கமளிக்கிறார். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் இதை உள்ளுறை என அடையாளப்படுத்துகிறார். மலைபடுகடாமில் வரும் ‘அருவி தந்த பழம் சிதை வெண்காழ்” என்ற வரி இதோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. 

——  

கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய

——

கறி வளர் – மிளகு, அடுக்கத்து –  மலைத் தொடரில் , இரவில் முழங்கி – இரவில் பெரும் ஓசை எழுப்பி, மங்குல் – மேகம்  மா மழை வீழ்ந்தென-  என்ற விவரிப்பு தலைவனுக்கும் தலைவிக்கும் களவின் போது இருந்த காத்திரமான உடலுறவை உட்குறிப்பாகக் கொண்டிருக்கிறது. மமயிரடர்ந்த ஆண் குரங்கு குளிரின் துன்பம் நீங்க மிளகினைக் கடித்து விட்டு அதன் காரத்தை தணிப்பதற்காக பலாக்கனியை உண்ண முற்பட்டது தலைவியை இயற்கைப் புணர்ச்சியில் நுகர்ந்த தலைவன் களவைத் தொடர விரும்பியதை புலப்படுத்துவதாக இருக்கிறது. 

தலைவி பலாப்பழமாகவும் தோழி திருமணத்தை வலியுறுத்துதல் அருவியில் அப்பழம் வீழ்வதாகவும்,  பலாப்பழம் பலருக்கும் பயன்படுதல் இல்லற இன்பம் பலருக்கும் பயன்படுதலைக் குறிப்பதாகவும் குறிப்பு பொருள்கள் பெறப்பட்டதென்றால், மிளகைக் கடித்த மயிரடர்ந்த ஆண்குரங்கு பலாப்பழத்தை சுவைத்தல் தலைவன் தலைவியின் களவொழுக்கத்திற்கு உவமை ஆயிற்று. 

குன்ற நாடனின் கேண்மை (நட்பு) தலைவிக்கு புறத்தே ஏற்கனவே மெலிந்த தோள்களை மேலும் மெலிவாக்கியது என்றால் அகத்தே அமைதியையும் திண்மையையும் தந்தது. இஃது எற்றோ!


No comments: