Thursday, July 11, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-79

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-79

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

பரத்தை கூறியது

இயற்றியவர்: ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 80

திணை: மருதம்

————

கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்

பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி

யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ

தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர்

நுகம்படக் கடக்கும் பல்வேலெழினி

முனையான் பெருநிரைப் போலக்

கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

யாம்,  எம் கூந்தற்கண்ஆம்பல் மலரின் புறவிதழொடித்த முழுப்பூவைச் செருகி, புதுவெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி அப்புனல் விளையாட்டை செய்வோமாகி செல்வேம். தலைவி அங்ஙனம் யாம் தலைவனோடு விளையாடுவதற்கு அஞ்சுவாளானால்  வெவ்விய போரில் பகைவரை வஞ்சகத்தினால் அன்றி எதிர்நின்று கொல்லும் பல வேற்படையுடைய எழினியென்னும் உபாகாரியினது போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவனது மார்பை பாங்காயினரோடும் பாதுக்காப்பாளாக.

——-

கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும் புனல் வந்த இருந்துறை விரும்பி
——

பொதுவாகவே சங்ககாலக் கவிதைகளில் பரத்தையர் அல்லது காமக்கிழத்திகள் பேசும்போது அவர்கள் தலைவிகளையும் தோழிகளையும் விடத் துணிச்சலாகவும்,  பெண்ணின் செயல்திறத்தை (agency) வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு இக்கவிதையும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். இப்பாடல் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அது பொறாது, தலைவியின் தோழியர் கேட்பத் தலைவியைப் பழித்ததாக அமைந்திருக்கிறது. சில குறுந்தொகை உரைகளில் பரத்தை தான் ஆம்பல் தழைகளால் புனையப் பெற்ற ஆடைகளை அணிந்து புனலாடப் போவதாகச் சொல்வதாக எழுதியிருக்கிறார்கள் ( பார்க்க: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் ‘குறுந்தொகை மூலமும் விளக்கமும், சென்னை 2017- பக்கம் -197). ஆனால் கவிதையில் தெளிவாகக் கூந்தலில் ஆம்பல் மலர் செருகிப் புனலாடப் போவதாகப் பரத்தை கூறுவதாக மட்டும்தான் இருக்கிறது.  அடைச்சி என்ற சொல் செருகுதலைக் குறிக்கும்.  தன் காம விருப்பத்தை, தன் அழகைத் தன் காம அழைப்பை வெளிப்படையாகக் காட்டும் குறிப்பாக கூந்தலில் செருகிய ஆமபல் மலர் இருக்கிறது. புதுப் புனல் என்பது புதிதாக கரை புரண்டோடும், சமுகத்திற்கு அப்பாற்பட்ட ஆசைக்குக் குறிப்பாகிறது. பரத்தையர் தலைவனோடு புனலாடுதலைப் பற்றி தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் 50 “ யாறுங் குளனுங் காவு மாடிப் பதியகந்து நுகர்தலும் முரிய வென்ப” என்று சொல்கிறது. முழு நெறி என்பதற்கு உ.வே.சா. புறவிதழ் ஒடித்த முழுப்பூ என்று விளக்கமளிக்கிறார்.   

———

வெம்போர்

——-

எழினி தனக்குரிய நிரையைக் கைக்கொண்ட பகைவரிடத்திருந்து அவர்றை மீட்டுக் காத்ததைப் போல தலைவி தனக்குரிய தலைவன் மார்பை கைக்கொண்ட எம்மிடமிருந்தௌ அதனை பெற்று காப்பாளாக என்று தலைவின் தோழிகள் கேட்குமாறு சவால் விடும் காமக்கிழத்தி இப்போரை, வெம்போர், விரும்பத்தக்க போர் என்று அழைக்கிறாள். தலைவி அங்ஙனம் தலைவனின் மார்பை போர்க்களமாக காக்கக்கூடிய இயல்புடையவள் என்பது கிழத்தியின் நினைவு. தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறுபவளாதலினால் அவர்கள் நெஞ்சிலும் படவும் கூறுபவளாகி, “கிளையொடும் காக்க’ என்றாள். தொல்காப்பியம் செய்யுளதிகாரம் 199 ஆவது சூத்திரத்திற்கு பேராசிரியர் தன் உரையில் இதை “கிழத்தியைச் சுட்டாவெனவே, பாங்காயினர், கேட்பச் சொல்லினும் அமையுமென்பதாயிற்று.” என இதை விளக்குகிறார்.

——-

புனல் விளையாட்டும் பூவை அடைச்சுதலும்

——-

புனல் விளையாட்டும் பூவைக் கூந்தலில் செருகிக்கொள்ளுதலும் சிலப்பதிகாரத்தில் “ புனலாட்டமர்ந்து, தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க்குவளையும், கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற லடைச்சி” என்ற வரி குறிப்பிடுகிறது. கொழுநன் மார்பைக் காத்தலை ஐங்குறுநூற்றுப் பாடல் 42 இல் வரும் வரி, “ மார்பு நனி விலக்க ரொடங்கியோளே” என்ற வரி குறிப்பிடுகிறது. கிளையோடும் காத்தல் என தோழியர் பாங்கர் ஆகியோருக்கும் சேர்த்து சொல்லுதலை கலித்தொகை 101 அவது பாடலில் வரும், “நின் கிளையொடு போகென்று தத்தம் கொழுநரைப் போகாமற் காத்து” என்ற வரியும் சொல்கிறது. 


தலைவன் என்னுடைய விருப்பப்படியே ஒழுகுவான் தலைவி விரும்பியவாறு நடந்துகொள்ளமாட்டான், முடிந்தால் அவனைக் காத்துக்கொள் என்று கிழத்தி கூறுவதாக இப்பாடல் அமைந்திருக்கிறது. 

——

No comments: