திருமூலர் என்னை விட்டாரில்லை. சிவவாக்கியரா திருமூலரா என்று கேள்வி எழுப்பி என்னை கை சொடக்கும் நேரத்தில் மலையுச்சிக்கு அழைத்துச் சென்றார் ஒரு அன்பர் என்று அதற்கு பதில் எழுதியிருந்தேனல்லவா அதற்கு வேறொரு தோழி ஹேய் எம்டிஎம்மே “ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்” என்று திருமூலர் சொல்கிறாரே சிவவாக்கியரைப் பற்றி திருமூலரை சரணடைந்த நீவிர் ஈசனோடு உம் ஆசையை அறுத்துவிட்டீரா என்று சீண்டியிருந்தார். என்னடா இந்த அன்பி அடி மடியில் கை வைத்துவிட்டாரே என்று படபடப்பாய் இருந்தது. ஈசன் - உயிரின் பற்றுக்கோடு, கொழுகொம்பு, ஆதார சுருதி, தொப்புள்கொடி இச்சை, “ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” ஆயினும் அதனுள் ஈசனோடு உண்டாகிற ஆசை வராது ஏனெனில் ஈசனின்றி உயிரே இல்லை அப்புறமல்லவா ஆசையில் விம்முவதற்கு என்று பதிலெழுதினேன். அன்பி விடுவதாயில்லை. அப்படியென்றால் திருமூலர் என்ன சொல்கிறார் என்று விளக்குங்கள் என மீண்டும் கேட்டார். அதற்கு பின்வருமாறு பதிலெழுதினேன், இது ஒரு வேளை சரியாக இருக்கலாம்.
வேறொரு இடத்தில் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று திருமூலர் எழுதுகிறாரில்லையா அதில் குலம் என்று அவர் குறிப்பிடுவது மனிதனை மையமாகக்கொண்ட குலத்தை அல்ல. குலம் என்பது புல், புழு, பூண்டு, தாவரசங்கமம், ஆடு, யானை, பிராணிகள், எனப் புவியெங்கும் விரிந்திருக்கும் உயிர்ச் சங்கிலி; இதில் மனிதன் ஒரு கண்ணி மாத்திரமே. காலத்தின் விசையில் மண் அழியும் ஒவ்வொன்றையும் இன்னொன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அழிந்து பிறந்து அழிந்து என்ற இடையறாத இயக்கத்தின் இணைப்பின் இழையாக ஒருவனே ஆகிய ஈசன் இருக்கிறான். மனித மையம் நீக்கப்பட்ட பிரபஞ்ச இயக்கத்தை உடல் வளர்த்து உயிர் வளர்த்து உணர்கையில் அதுவே ஈசனோடு ஆகிற ஆசையாகிறது. அது தியானம். அதை எனக்கு பேனா தா, பதவி உயர்வு தா, பெண் தா, மண் தா, பொன் தா என்ற சாதா பிரார்த்தனைகளாக குறுக்கும் போது தியானம் பிரார்த்தனையாக விபச்சாரமாகிவிடுகிறது; அதை அறுத்துவிடு என்றுதானே திருமூலர் உபதேசிக்க முடியும்?
பிரார்த்தனைகளை முற்றிலும் தவிர்க்கவும் முடியாது. ஏனெனில் மனித இருப்பு என்பது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட பலிபீடம். வலியும், துயருமே இருப்பை துலக்கம் பெறச் செய்கின்றன. பயமே, இதனால் மனிதனின் ஆதார உணர்ச்சியாகிவிடுகிறது. பயத்தின் கீச்சொலி பிரார்த்தனை. தவிரவும், மனித இருப்புக்கு லட்சிய சூழ்நிலைகள் அமைவதில்லை. என்னுடைய குறுங்கவிதை ஒன்றில் தோட்டத்து சிறு பறவை தனது கூட்டினைத் தவறவிடப்பட்ட பால் பாயிண்ட் பேனாக்கள், பாட்டில் மூடிகள், கொஞ்சம் பித்து ஆகியவற்றை சாந்து குழைத்து கட்டுகிறது. காய்ந்த சுள்ளிகளால் மட்டுமே கட்டப்பட்ட லட்சிய கூடு புகைப்படங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கிறது. பின்னே பிறை சூடும் பித்தனை, அவன் அருளால் அவன் தாழ் வணங்கக் கேட்காமல் இருக்கும் ஆடம்பரம் சாதாரணனுக்கு எப்படி வாய்க்கும்.
சமீபத்தில் என் தீராத கால் வலிக்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க நேர்ந்தது. அதை எனக்கு நேர்ந்த எத்தனையோ மரண அனுபவங்களுள் ஒன்று என வகைப்படுத்தி மனதில் பொதிந்து வைத்துக்கொண்டேன். கம்பளி போர்த்தி, கையில் காற்றுப் பந்து ஒன்றினை ஏதேனும் பேச விரும்பினால் அமுக்குவதற்கு என்று கொடுத்து சவப்பெட்டி போன்ற பெட்டிக்குள் அனுப்புகிறார்கள். சவப்பெட்டிக்கும் எம்.ஆர்.ஐ பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் உள்ளே குளிர்பதனக் காற்றும், ஒளியும், சத்தமும் இருக்கின்றன. முப்பத்தைந்து நிமிட நேரம் நீடித்த ஸ்கேனில் உடல் பெட்டிக்குள் சென்ற சில விநாடிகளேயே அபத்த சத்தங்களின் கோரஸை மீறி மனம் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க என்று தன் போக்கில் துதிக்கத் தொடங்கிவிட்டது. கண்கள் மூக்கு நுனியில் நிலைக்க உடல் சவப்பெட்டி சூழலுக்கு சமாதானமாகிவிட்டது. என்றாலும் ஏன் மரண அனுபவம் என்று பெயரிடுகிறேன் என்றால் உயிர் விசை மரண அனுபவங்களின் போது வீறிட்டு எழும். நாதன் உள்ளிருக்கையில் பேசும் நட்ட கல் என குறி விறைத்துவிட்டது. ஸ்கேன் செய்பவர் பார்க்கக்கூடும் என்ற கூச்ச நாச்சமில்லை. மனம்தான் மூச்சின் சிவத்தில் லயித்திருக்கிறதே. ஸ்கேன் முடிந்து வெளிவந்ததும் ஓடிச் சென்று ஆகாயத்தையும், நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்தேன். பெருவெளி தரும் ஆசுவாசம்தான் என்னே. திருமூலரே சொன்னாலும் உன் ஆசை அறுபடலாகாது என் ஈச.
No comments:
Post a Comment