பகுதி 3: ஒலிப்போன்மைச் சொற்கள் (Onomatopoeia)
காகத்தை, தமிழில், அது கா, கா என்று கரைவதை வைத்து காகம் என்று பெயரிடப்பட்டதை போலக் குயிலை, ஆங்கிலத்தில் அது குக்கூ குக்கூ என்று கூவுவதை வைத்து cukoo என்று பெயரிடப்பட்டதைப் போல ஜாய்ஸ் பல ஓலிப்போன்மை சொற்களை “யுலிசஸ்” நாவலில் உருவாக்கியிருக்கிறார். இந்த ஒலிப்போன்மைச் சொற்கள் (Onomatopoeia) உருவாகும் விதம் மொழிகள் எப்படித் தோற்றம் கொண்டன என்ற கோட்பாட்டிற்கு மொழியியலில் வித்திட்டது. ஜாய்ஸ் தன்னுடைய ஒலிப்போன்மைச் சொற்கள் மூலமாக மொழியின் ஆதி நிலைக்கு வாசிப்பை எடுத்துச் செல்கிறார். சில இடங்களில் இசைத்தன்மையை மொழிக்குக் கொடுப்பதற்கும் ஜாய்ஸ் ஒலிப்போன்மைச் சொற்களைப் பயன்படுத்துகிறார்.
Bababadalghara…: இடியின் சத்தத்தை வைத்து ஜாய்ஸ் உண்டாக்கிய சொல் அவருடைய “ஃபென்னிகன்ஸ் வேக்” நாவலில் நூறு எழுத்துக்களைக் கொண்ட சொல்லாக, “Bababadalgharaghtakamminarronnkonnbronntonnerronntuonnthunntrovarrhounawnskawntoohoohoordenenthurnuk” என்று வளர்ச்சி அடைந்தது. கிரேக்கம், ஃபின்னிஷ், ஜப்பானிய மொழி, ஃபிரெஞ்ச், இத்தாலிய மொழி, டேனிஷ், ஐரிஷ் எனப் பல மொழிகளிலிருந்து இடியைக் குறிக்கும் சொற்களை எடுத்து ஜாய்ஸ் உருவாக்கிய இந்தச் சொல்லை ஜாய்ஸ், ஐரிஷ் வரலாற்றில் ஒரு குழப்பமான, பெருங்கேடான காலம் ஒரு பெரிய உறுமலோடு முடிவுக்கு வந்ததைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.
Clappyclap / Clipclap : கரவொலியைக் குறிக்கும் சொல்
Krandlkrankran : நகரத்தில் டிராம் வண்டிகள் எழுப்பும் ஒலியைப் போன்மை செய்யும் வார்த்தை.
Longindying- இசைக்கருவிகளைச் சுருதி கூட்டும் கருவி எழுப்பும் ஒலியை ஒத்த சொல்.
Poppysmic: லத்தீன் மொழியிலுள்ள poppysma என்ற சொல்லிலிருந்து ஜாய்ஸ் உருவாக்கிய சொல் நாக்கால் உதடுகளை நக்கி சப்புக்கொட்டுவதைக் குறிக்கிறது. பாலியல் திருப்தி, உணவு அருந்தும்போது ஏற்படும் திருப்தி, அவற்றிலுள்ள அவலட்சணம் ஆகியவற்றைக் குறிக்க ஜாய்ஸ் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
Ripripple- நீர் அலை அலையாகச் செல்வதைச் சுட்டும் சொல்லை இருமுறை படியெடுத்து, கிழித்து அதிர்வலையடிக்கும் என்ற சொல்லை உருவாக்குவதன் மூலம் ஜாய்ஸ் தொடர்ச்சியான நகர்வைச் சுட்டுகிறார்.
Rtststr- உடல் பெருத்த சாம்பல் நிற பெருச்சாளி ஒன்று டப்ளின் நகரில் உலவுவதை விவரிக்கும்போது ஜாய்ஸ் ‘ரிட்ஸ்ட்ஸ்டிர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். உயிரொலிகள் நீக்கப்பட்ட இச்சொல்லில் உயிரி மெய்யொலிகளின் மிருக உராய்வாகக் குறுக்கப்படுகிறது.
Smellsip- முகர்ந்துஉறிஞ்சுதல் என்று பொருள்பெறும் இச்சொல் பௌதீகமாக ஒன்றை உணர்தலையும் உட்கொள்ளுதலும் ஒரே சமயத்தில் நடப்பதைக் குறிக்கிறது.
Tattarrattat- முஷ்டியின் கணுக்களால் மர மேற்பரப்புகளைத் தட்டுவதால் உண்டாகும் ஒலியைப் போன்மை செய்யும் ஜாய்ஸின் இந்தச் சொல்லை ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி the longest palindromic word என்று குறிக்கிறது.
பகுதி 4: பழஞ்சொற்களை உயிர்ப்பித்தல், இறையியல் சார்ந்த சிறப்புச் சொற்கள்
ஜாய்ஸின் “யுலிசஸ்” ஏகப்பட்ட பழஞ்சொற்கள், இறையியலில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள் ஆகியவற்றைப் புது உபயோகத்துக்குக் கொண்டு வந்தது. நாவலின் முக்கிய கதாபாத்திரமான ஸ்டீபன் டெடலாஸ் சேசு சபைக் கல்வி பெற்றவனாக இருப்பது, அவனுடைய மத்திய கால இறையியல் பற்றிய ஆழமான ஞானம், அவனுடைய செவ்வியல் தத்துவப் பயிற்சி, ஆகியவை ஜாய்ஸுக்கு பழஞ்சொற்களையும் இறையியலின் சிறப்புச் சொற்களையும் நவீன நாவலில் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை வழங்கின.
Adiaphane / Diaphane- அரிஸ்டாட்டிலின் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட அடியாஃபேன்/ டயாஃபேன் ஆகிய சொற்கள் ஒளி ஊடுறுவும்தன்மையையும் , ஒளிப்புகாத் தன்மையையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டீபன் பார்வையின் எல்லைகளைக் குறிக்க இச்சொற்களைப் பயன்படுத்துகிறான்.
Apocrypha- விவிலியத்தையும் இதர சமயத் திருநூல்களையும் தவிர அவற்றில் மரபாகத் தொகுக்கப்படாத, சந்தேகத்திற்குரிய உண்மைத்தன்மையுடைய, அல்லது மறைக்கப்பட்ட தொடக்கநிலைகளைக் கொண்ட நூல்களைக் குறிக்கும் சொல்.
Behoof- பழைய சட்டம் சார்ந்த சொல். ஒருவருடைய லாபம், அல்லது பயனைக் குறிப்பது
Chivy- எலிசபெத்தின் கால ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தையும் அதன் நினைவையும் தூண்ட ஜாய்ஸ் பயன்படுத்துவது. திரும்பத் திரும்ப ஒருவரைச் சினமூட்டி ஒருவரை ஒரு செயலைச் செய்யவைப்பதைக் குறிப்பிடுவது.
Consubstantial- ஒரே சாரம்சத்தைச் சார்ந்தவை என்பதைக் குறிக்க இறையியலில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொல். ஸ்டீவன் தேவனாகிய தந்தைக்கும் தேவகுமாரனாகிய மகனுக்குமிடையில் இருக்கச் சாத்தியமுள்ள ஒரே சாரம்சம் என்ன என்று அடிக்கடி யோசிக்கிறான். அவனுடைய யோசனைகளில் ஒத்த சாராம்சம் உயிரியல்ரீதியாக, ஆன்மீகரீதியாக ஓர் உருவகமாகிறது.
Demisemiquaver- இசைக் கோட்பாடுகளில் புழங்கும் சொல். முப்பது விநாடி இசைக்குறிப்பினைச் சுட்டுவது. இடையிசை (interlude) என மேற்கத்திய செவ்வியல் இசைக்கோவைகளில் அழைக்கப்படும் இடைவெளி இசைகளில் வரும் சின்னஞ்சிறிய இசைத்துணுக்கைக் குறிப்பிடும் சொல்.
Doff- மரியாதையைத் தெரிவிக்கும் பொருட்டு ஒருவரின் தொப்பியை அகற்றும் செயல்களைப் போன்ற செயல்களைக் குறிக்கும் பழஞ்சொல்.
Entelechy- அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை ஒருவரின் அல்லது ஒன்றின் சாத்தியப்பாடு தூலமாக யதார்த்தமாவதைக் குறிக்கும் சொல். சாத்தியம் தூலமாகுதல்.
Heaventree- பாலினீஷிய புராணங்களில் குறிப்பிடப்படும் பாதாளலோகத்திலிருந்து ஆகாயம் நோக்கி வளரும் மரம். ஜாய்ஸ் இரவை நட்சத்திரங்களின் சொர்க்க விருட்சம் என்று விவரிப்பார்,
Heresiarch- தீயவையாகக் கருதப்படும் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர். ஸ்டீபன் கத்தோலிக்கத் திருச்சபையின் இறையியல் கோட்பாடுகளை மறுக்கும்போது தன்னை பழங்கால தீயமத நம்பிக்கைகளைப் பின்பற்றுவோரோடு தன்னை அடையாளம் கண்டுகொள்கிறான்.
Honorificabilitudinitatibus- லத்தீன் மொழியிலிருந்து எழும் இந்த பல சொல் கூட்டிணைவு எல்லாக் கௌரவங்களையும் பெறுவதைக் குறிக்கிறது. ஷேக்ஸ்பியரின் Love's Labour's Lost நாடகத்திலிருந்து இந்தச் சொல் கடன்பெறப்பட்டது.
Houyhnhnm- ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய “கலிவரின் பயணங்கள்” நாவலில் வரும் மிக அதிகமான புத்திக் கூர்மையுடைய இனத்தைக் குறிக்கும் கற்பனைச் சொல். ஜாய்ஸ் ஐரிஷ் புத்திஜீவிகளிடையே புழங்கி வந்த cynical பார்வை ஒன்றைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
Ineluctable- எதிர்க்க இயலாத, தவிர்க்க முடியாத, தப்பிக்க இயலாத என்பவற்றைக் குறிப்பிடும் பெயரடை. புலனுணர்வு அனுபவங்களின் தொகுப்பாக விலங்கும் அனுபவங்களைக் குறிக்க ஸ்டீபன் இந்தப் பெயரடையைப் பயன்படுத்துகிறான்.
Inwit - மத்தியகால ஆங்கிலம். அகம் சார் அறிவு, புரிதல் அல்லது பிரக்ஞை என்பதை அடையாளப்படுத்தும் சொல். பதினான்காம் நூற்றாண்டு பாவசங்கீர்த்தன உரைநடை நூல்களில் வாசிக்கக் கிடைப்பது.
Lollard- தீய மத நம்பிக்கைக் கொண்டோரைச் சுட்டும் அவச்சொல். குறிப்பாகப் பதினான்காம் நூற்றாண்டில் ஜான் வைக்கிளிஃபை பின்பற்றியோரைக் குறிப்பது.
Omphalos - கிரேக்கப் பழஞ்சொல். தொப்புள் என்ற பொருள் தருவது. டெஃபியில் இருக்கும் ஒரு புனிதக் கல் இப்புவியின் தொப்புளாகக் கருதப்படுவதைக் குறிப்பது.
Parallax - வானவியல் புலத்திலிருந்து எடுக்கப்பட்ட சொல். ஒரே பொருள் வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்படும்போது வெவ்வேறு விதமாகக் கண்ணுக்குத் தெரிவதைக் குறிப்பது. “யுலிசஸ்” நாவலின் அமைப்பு உருவகமாகக் கூட இந்தச் சொல்லை எடுத்துக்கொள்ளலாம்
Pelurious- அரிய பெயரடை. ‘மயிரடர்ந்த’ எனப் பொருள் பெறுவது
Videlicet- லத்தீன் வினையடை- அதாவது, இவ்வாறாக, இந்த வரிசைப்படுத்தலின்படி என்றெல்லாம் சம்பிரதாயமாக ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன் கூறும் வார்த்தை.
பகுதி 5: கொச்சை, பேச்சு வழக்கு, இருளுலகச் சொற்கள், ஆங்கிலக் கலப்புச் சொற்கள்
“யுலிசஸ்” எந்த அளவுக்கு இறையியலிலும், தத்துவத்திலும், ஐரிஷ் பண்பாட்டு வரலாற்றிலும் தோய்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு வேசியர் விடுதிகள், சேரிகள், மது அருந்தகங்கள் ஆகியவற்றிலும் கதை நிகழும் இடங்களாக மூழ்கியிருக்கும் நாவல். எனவே ஜாய்ஸ் தன்னுடைய நாவலில் கொச்சை, பேச்சு வழக்குகள், இருளுலகச் சொற்கள் பலவற்றையும் பயன்படுத்துகிறார்.
Bantam - குள்ளமான, ஆனால் வன்முறையான, அல்லது மூர்க்கமான ஆணைக் குறிக்கும் சொல். டப்ளின் நகரின் தெருச் சொல்.
Bookies / Brolly- டப்ளின் நகர உழைக்கும் வர்க்கத்தினரின் பேச்சு வழக்குச் சொல். மது அருந்தகங்கள் போன்ற இடங்களில் கணக்காளர்களாக வேலை செய்வோரையும் அவர்களின் குடைகலிஅயும் குறிப்பது.
Chokey / Copper's nark- சிறையையும் போலீஸ் தகவலாளியையும் குறிக்கும் இருளுலகச் சொற்கள்.
Crubeen - பன்றியின் வேகவைக்கப்பட்ட, சமைக்கப்பட்ட கால். ஐரிஷ் உழைக்கும் வர்க்கத்தினரின் உணவு.
Cruiskeen- மதுவை ஊற்றி வைத்திருக்கும் சிறிய ஜாடி.
Flash houses- குற்றப் பின்னணியுள்ளோர் பரத்தையர் விடுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தும் கொச்சை.
Galoot- தெருக் கொச்சை. புத்திசாலித்தனமில்லாத மனிதரை இளக்காரமாகக் குறிப்பிடப்பயன்படுத்தும் வார்த்தை. அபிஷ்டு, அசடு, அரைவேக்காடு, மக்கு, ஆஃப் பாயில் எனப் பல சொற்கள் தமிழில் இதற்கு இணையாகப் புழங்குகின்றன.
Joggerfry- Geography என்ற சொல்லைப் பள்ளிக்குழந்தைகள் வேகமாகப் பேசும்போது உச்சரிப்பால் பிழையுறுவது.
Mumchanciness- அரிய பேச்சு வழக்குச்சொல் ஒன்றை எடுத்து ஜாய்ஸ் மேலும் அதைக் கடினமாக்குகிறார். அமைதியாக இருப்பது, அல்லது பேசுவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடுவது என்று பொருள் தருவது.
Oxter- கட்கம். ஆங்கிலக் கலப்பு மொழி
Peloothered- அதிகமாகக் குடித்துவிட்டு மட்டையாவதைக் குறிக்கும் ஐரிஷ் மது அருத்தகச் சொல்.
Scutter - வயிற்றுப்போக்கு. பேதி.
Skeeze- சைக்கிளில் செல்லும் பெண்களைக் காமத்தோடு பார்க்கும் டப்ளின் நகர ஆண்களின் பார்வை.
Stag - இருளுலகக் கொச்சை. போலீஸ் தகவலாளியைக் குறிப்பது.
Weggebobble- vegetable என்ற வார்த்தையை நகைச்சுவையாகச் சிதைப்பது.
பகுதி 5 : அறிவியல், தாவரவியல் சொற்கள்
Cascara sagrada - மலமிளக்கி. தாவர மருத்துவத்திலிருந்து எடுத்துக் கையாளப்பட்ட சொல். ப்ளூம் தன்னுடைய மனதைப் போலவே வயிற்றின் அசைவுகளைக் கூர்மையாக நாவலில் கவனிக்கிறார்.
Cither- பழமையான இசைக்கருவி. தந்திகளாலானது. ஜாய்ஸ் வரலாற்றுக் குறிப்பீடுகளாகப் பல இசைக்கருவிகளை நாவல் முழுவதும் பயன்படுத்துகிறார்.
Loofah- குளிக்கும்போது உடலைத் தேய்த்துக் குளிக்கத் துடைப்புப் பஞ்சாகப் பயன்படுத்தப்படும் தாவரம்.
Rinderpest - ஆடு மாடுகளுக்கு உயிரிழப்பை உண்டாக்கும் வைரஸ் நோய். ஆடு, மாடுகள் அழிந்து போவதால் உண்டாகக் கூடிய பொருளாதார வீழ்ச்சியும் அதன் பதற்றங்களும் சமகால அயர்லாந்தைப் பீடித்திருப்பதை “யுலிசஸ்” பேசும்போது பயன்படுத்தப்படுகிற சொல்.
Shipworm- கடல் சார் உயிரியல் துறையில் பயன்படுத்தப்படும் சொல். கப்பல்களின் தண்ணீருக்குள் ஆழ்ந்திருக்கும் மரப்பகுதிக்குள் பதுங்கி இருந்து அழிவை உண்டாக்கும் புழு. ஜாய்ஸ் மனித உடலின் மெதுவான அழிவைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
Tympanum- காதுக்குள் இருக்கும் மெல்லிய ஜவ்வு.
பகுதி 6: பிரமையில் சிதையும் சொற்கள்
“யுலிசஸ்” நாவலில் வரும் சர்க்கே அத்தியாயம் நாடகப் பிரதி போல எழுதப்பட்டிருக்கிறது. இந்த அத்தியாயத்தை நாவலின் நனவிலி உச்ச முடிவாகச் சில விமர்சகர்கள் வாசித்திருக்கிறார்கள். டப்ளின் நகரின் பரத்தையர் விடுதிகளினூடே ப்ளூமும் ஸ்டீபனும் அலையும்போது அவர்களின் ஒடுக்கப்பட்ட பாலியல் விருப்பங்கள், குற்ற உணர்வுகள், பயங்கள் எனப் பல உணர்ச்சிகளும் பிரமையாக மாறுகின்றன; அப்போது சொற்களும் சிதைகின்றன.
Epicene- ஆண், பெண் என்ற இரு பாலினங்களின் குணங்களையும் கொண்டிருத்தல். ப்ளூம் தான் பெண்ணாக உருமாறுவதாகக் கற்பனையில் ஆழும்போது ஜாய்ஸ் பயன்படுத்தும் சொல்.
Pornosophical- பரத்தையர் விடுதிகளின் தத்துவம். பரத்தமையைப் போலியான, கேலி செய்கிற விதத்தில் கல்விப்புலத் துறையாக மாற்றுகிற சொல்.
Pud- ஆண்குறியைக் குறிக்கும் கொச்சை. முதலில் விலங்குகளின் பாதத்தையோ அல்லது மனிதனின் முஷ்டியையோ குறிப்பதாக இருந்த சொல் நாளடைவில் பேச்சு வழக்கில் அர்த்தம் திரிபடைந்தது.
Yogibogeybox- ஆன்மிகவாதி தன்னுடைய பயிற்சிகளுக்காக வைத்திருக்கும் துணைப்பொருட்களின் தொகுதியைக் குறிப்பது. கேலியாக ஜாய்ஸ் பயன்படுத்தும் சொல்.
பல சொற்களின் கூட்டிணைவையும் ஜாய்ஸ் நாவலில் பயன்படுத்துகிறார். முப்பத்து ஒன்பது எழுத்துக்கள் இணைந்த Contransmagnificandjewbangtantiality என்ற சொல் ஓர் உதாரணம். Con- உடன் trans-மாற்றம்/ கடந்த Magnificand - பூதாகரமாகப் பெரிது படுத்தப்பட்ட Jew- யூதர் (ப்ளூம்) - Bang -பாலியல் இயக்கத்தைக் குறிக்கும் வன்சொல் Tantiality -சாராம்சம். தமிழில் இச்சொல்லை யூதரின்பெரிதுபடுத்தப்பட்டஓழுடன்வரும்சாராம்சமாற்றம் என்று மொழிபெயர்க்கலாம்.
ஜாய்ஸ் உருவாக்கிய 30,000 சொற்கள் கொண்ட புதுச் சொற்களஞ்சியத்தில் சிறு பகுதிகளையே நான் இங்குக் கவனப்படுத்தியிருக்கிறேன்.
இந்த ஐந்தாவது கட்டுரையோடு ஜாய்ஸின் “யுலிசஸ்” நாவலை அறிமுகப்படுத்தும் என் கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.
புகைப்படம் : ஜாய்ஸின் கைப்பிரதி

No comments:
Post a Comment