கிறித்தவம், இஸ்லாம், யூத மதம் ஆகியன பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதங்கள்; பௌத்தமும் சமணமும் தியானத்தை வழிமுறையாகக் கொண்டவை. இந்து மதத்தில் பல வழிகளும் தரிசனங்களும் இருப்பதால் பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் நீரோடைகள் தனித்தனியாகவும் இரண்டும் கலந்தும் ஓடுவதாகவும் இருக்கின்றன.
பிரார்த்தனை என்பது வெளியே இருக்கும் கடவுளோடு ஓர் உரையாடல்; வழிகாட்டுதலுக்கும், நன்றியறிதலுக்கும், உதவி கோரியும் எழும் மனதின் கூக்குரல். தியானம் மௌனமான ஒன்றுதல். தற்கணத்தோடும் ஒன்றலாம். கூர்ந்த கவனிப்பில் தூய உணர்வாக மனமற்றும் மலரலாம்.
பிரார்த்தனை கடவுள்-யாசகன் என்ற இருமையை தன்போக்கில் உறுதி செய்வது. தியானம் இருமையை அழித்துத் துலங்குவது. பிரார்த்தனைக்கு அசையா நம்பிக்கை அத்தியாவசியம். தியானம் உள்ளெழும் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கவனிப்பதில் சூட்சுமம் கொள்கிறது. எனவே நம்பிக்கையற்றோ நம்பிக்கை கடந்தோ, பல நம்பிக்கைகளையும் உள்வாங்கியோ தியானிக்கலாம். பிரார்த்தனை மாற்றத்திற்காகவோ விளைவுகளுக்காவோ மனுப் போடுவது; தியானம் ஆசைகளையும் விளைவுகளையும் விட்டுவிட்டு அமைதியையும் சுற்றி இருப்பதோடு சமாதானத்தையும் நிலைபேறாக்கிக்கொள்வது.
நவீன, சமகால மனிதனுக்கு இரண்டிலும் ஈடுபடத் தடையாக இருப்பது சந்தையின் முச்சந்தியில் கைவிளக்கோடு கடவுளின் இறப்பை அறிவித்த நீட்ஷேயின் ஜராதுஷ்டிரன்; அவனுடைய நிழல் நம் மனக்குகைகளில் நீண்டு கிடக்கிறது. அறிவியலின் வழிகளுக்கும் புலன்களின் நிரூபணங்களுக்கும் ஜராதுஷ்டிரனின் நிழல் படர்த்திய மனம் ஏங்கித் தெவங்குகிறது. ஃப்ராய்டுக்கு பிரார்த்தனை என்பது கருவினை நோக்கி பின்னோக்கி செல்லுதல்; கருவாக சுருண்டு கிடந்த நினைவில் அம்மாவையோ அப்பாவையோ அழுது அழிச்சாட்டியம் பண்ணி அழைத்தல். ஜூலியா கிறிஸ்தவாவுக்கு பிரார்த்தனையின் அடம் மொழிக்கு முந்தையது; தாயை நோக்கியது தந்தையை நோக்கியது. தந்தை என்பவர் தாமதமாகத்தான் வருவார்.
எப்படியிருந்தாலும் விதியின் ஓநாய்ப் பற்கள் உங்கள் அந்தரங்க உறுப்பைக் கடித்து சவைக்குமென்றால் ஜராதுஷ்டிரனின் நிழல் காணாமல் போய்விடும்.
அப்போது தத்துவத்திற்குத் தெரியாதது கவிதைக்குத் தெரிந்துவிடும். கவிதை, கவிதையின் பேசுகுரல் என்ற மூன்றாம் நபர் மூலம் அறிக்கையிடும், அறுதியிடும்; நோயாளி உயிரோடுதான் இருக்கிறார், பிரபஞ்சம் ஆனால் அக்கறையற்று இருக்கிறது என்று. மேற்கத்திய காற்றே, மேற்கத்திய காற்றே , பெத்லஹேம் எனும் சிறு நகரமே என்று மில்டன் ஒளியை அழைக்க ஒரு பெருநரைக் கண்டுபிடிப்பது இப்படித்தான். ஜான் கீட்ஸ் இப்படித்தான் ஒரு கிரேக்க பூச்சாடியை நோக்கிப் பேசி அழகும் உண்மையும் ஒன்று என்று உலகுக்கு அறிவித்தான். காளிதாசன் மேகத்தை தூதுவிடலாம் என்று கற்றுத்தந்தான். பிரார்த்தனை என்பது காதலை நோக்கிய தவிப்பும்தானே. குமாரசம்பவம் எனும் அற்புதம் கைகூடிவிடலாம். கம்பன் தன் சுந்தரகாண்ட வரி ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்’ என்று கண்டுகொண்டதால்தான் காப்புச் செய்யுளிலேயே சரணடைந்து விடுகிறான் ஒரு உலக அறிவிப்போடு. ஆனால் கம்பனின் அந்த அறிவிப்பு உலகோருக்குத்தானே தவிர அலகிலா விளையாட்டுடையோனை நோக்கிய பேச்சு அல்ல. “‘சரண் எனக்கு யார்கொல்?” என்று சானகிதான் அழுது சாம்புகிறாள். “அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!” என்று அருளின் சொற்களை அவளுக்குக் கனிந்து அளிப்பது சடாயு: ஒரு பறவை.
கவிதை இவ்வாறாக யாரை நோக்கி, எதை நோக்கி நிர்க்கதியைப் பேசினாலும் அது பிரார்த்தனையாக உய்வடைந்துவிடுகிறது. அப்போது ஜராதுஷ்டிரனின் கைவிளக்குக்கு ஏதேனும் புலப்பட்டுவிடுகிறது.
பேசுவதைக் கேட்பதற்கு யாருமே எதுவுமே இல்லாமல் போகும் அடர் இருள் சூழ்ந்த நிலை ஒன்று இருக்கிறது. அனாதைத்தன்மை அநாதியாகும் இடமது. கவிதை தன் மொழியையும் இழக்கையில் இலக்கணமற்று மூழ்கும் காரிருள். நீட்ஷே, பைத்தியக்காரன், இதனால்தான் இலக்கணத்தை நம்புவோர் கடவுளை நம்புவோரே என்று அறிவித்தான்.
காரிருளில் மூழ்கும்போது எழுத்துக்கூட்டலாம் தயவு செய்து என்று. அப்படிக்கூட்டும் எழுத்தை கேட்பது காரிருளாகக் கூட இருக்க வேண்டாம். தயவு செய்து என்ற இரு சொல் மந்திரம் எழுத்து எழுத்தாய் கூட்டப்பட்டால் ஜ்வாலை வெடித்து பெரு நெருப்பாய் பரவி, பிரார்த்தனையும் தியானமும் ஒன்றாக பிரபஞ்சம் ஒளிமயமாகிவிடும்.
No comments:
Post a Comment