நவீனத்துவ இலக்கியத்தின் புலம்பல்—கடவுளின் இறப்பைக் குறித்து துயரமும் மகிழ்ச்சியும் கொள்ளும் அந்தச் சலிப்பூட்டும் புகார்—ஒருவிதமான தவிர்க்க முடியாத வற்புறுத்தலுடன் மீண்டும் என் உரைநடையிலும் கவிதையிலும் ஊடுருவும் போலத் தோன்றுகிறது. இக்காலத்தில், மெஃபிஸ்டோபிலஸை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இல்லை. அதிகாரம், அறிவு, செல்வம் அல்லது காதல் வெற்றிகளுக்காக ஒருவரின் ஆன்மாவை விற்கும் நேரடியான வர்த்தகம் காலாவதியாகிப் போய்விட்டது உம்பர்ட்டோ எக்கோ "அசிங்கத்தைப் பற்றி" (On Ugliness) என்ற நூலில் குறிப்பிடுவது போல, சாத்தானின் முந்தைய "களங்கமற்ற அசிங்கம்" என்பது நவீன இலக்கியத்தின் “இல்லறப்படுத்துதலால்’ படிப்படியாக அரிக்கப்பட்டுவிட்டது.
கிறிஸ்டோஃபர் மார்லோவின் நாடகமான “டாக்டர் ஃபாஸ்டஸில்” நான் மெஃபிஸ்டோவின் வக்கிரமான வசீகரம் என்று நினைவுகூர்வதை—அந்த மகிழ்ச்சியூட்டும் விதத்தில் தெளிவாகத் தெரியும் கோரவுருவத்தை—எக்கோ வெறும் "அடையாளம் காணக்கூடிய அசிங்கம்" என்று குறிப்பிடுகிறார். அந்தத் தெளிவு இப்போது தொலைந்துவிட்டது. நமது பரிதாபத்திற்குரிய சாத்தான், கதேயின் உருமாற்றும் கற்பனைக்கு ஆட்பட்டான்—ஒரு கருப்பு நாய், ஒரு நீர்யானை, இறுதியில் அலைந்து திரியும் அறிஞர், ஒரு புத்திஜீவி என மிகவும் சூழ்ச்சிமிக்க வேடத்தில் வெளிப்பட்டான்: ஆயினும், கதேயின் கற்பனாவாதப் புரட்சியாளன், மேலும் அமைதியற்ற ஒரு நவீனத்துவத்திற்கான முன்னிகை மட்டுமே.
எக்கோ, "நவீன உலகில் சாத்தான்" என்ற அத்தியாயத்தில் சாதாரணத்தை நோக்கிய சாத்தானின் சரிவைப் பற்றி விவரிக்கிறார். இந்த மாற்றத்தின் உண்மையான சிற்பிகள் என தாஸ்தோவ்ஸ்கி, பாதலேர், மான், வாலெரி— ஆகியோரை சாத்தானிய உருமறைப்பின் "நால்வர் குழு” எனக் குறிப்பிடுகிறார்.
தாஸ்தோவ்ஸ்கி, இருளின் இளவரசன் மீது, இவான் கரமசோவின் மாயத்தோற்றத்தை, இழிந்த, நடுத்தர வர்க்க அபிலாஷைகளைச் சுமத்தினார். இவான் கரமசோவ் ஒரு தந்தையும் கூட. ஒரு ஒட்டுண்ணி. தீமையை தன் அகமாக உள்ளீர்த்துக்கொண்டவன். பாதலேர், அவனை நாடுகடத்தப்பட்டவர்களின் இளவரசன் என்று மறுவடிவமைத்தார்; அவன் மாநகர சலிப்பையும் அழகியல்மயப்பட்ட சிதைவையும் காதில் ஓதினான்.
தாமஸ் மான், டாக்டர் ஃபாஸ்டஸில், சாத்தானியத்தை பயமுறுத்தும் வகையில் சாதாரண உருவங்களாக—ஒரு தரகன், ஒரு தந்திரமான அறிவாளி—என வடிவம்கொடுத்தார். அவர்களின் சாத்தானுடனான ஒப்பந்தம் என்பது மேதைமைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட ஆன்மீகப் பால்வினை நோயாக இருந்தது. வாலெரியின் நிறைவு செய்யப்பட்டாத "Mon Faust", தூய, முரண்நகையான அறிவின் மெஃபிஸ்டோவை முன்வைத்தது.
அவர்கள் நால்வரும் சேர்ந்து, சாத்தானிடமிருந்து கொம்புகளையும் கோரப்பற்களையும் நாடகீயத்தன்மையையும் பறித்துவிட்டனர். அதன் பிறகு சாத்தானாக நம்மிடத்தில் எஞ்சுவது சந்தேகம், இழிந்த பக்கத்து வீட்டுக்காரன், கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் என தீமையின் சாதாரண முகங்கள் மட்டுமே.
ஹன்னா அரென்ட், அந்த நூற்றாண்டின் படுகுழியைக் கவனித்து, இந்த பரிணாம வளர்ச்சிக்கு பிற்சேர்க்கையை தீமையின் சர்வ சாதாரணத்தன்மை (the banality of evil) எனப் பெயரிட்டார். யூத இனப்படுகொலையை நிறைவேற்றிய அடால்ஃப் எய்ச்மேனிடம், அவர் மில்டனின் விழுந்துவிட்ட தேவதையையோ அல்லது மார்லோவின் குதூகலமான, ஆன்மாவை விலைக்கு வாங்கும், தீயவனையோ காணவில்லை, மாறாக பதவி உயர்வுகளில் வெறி கொண்ட ஒரு குமாஸ்தாவின் பேயுருவையே கண்டார். தீமையிடம் எஞ்சியிருந்த உளவியல் பிரம்மாண்டமும் கூட பறிக்கப்பட்டு, சிந்தனையற்ற குமாஸ்தா செயல்பாடாக ஆரெண்ட்டிடம் அது சுருங்கிவிட்டது.
உண்மையாகவே திகிலூட்டும் நவீன சமகாலத்திய மெஃபிஸ்டோபிலஸ், கதேயின் புத்திசாலித்தனத்துடனோ அல்லது தாஸ்தோவ்ஸ்கியின் காதாபாத்திரங்களின் இழிநிலையுடனோ இயங்குவதில்லை, மாறாக நரகத்தின் கோப்புக் கிடங்குக்குள் இருக்கும் குமாஸ்தாவைப் போல சாதாரணத்தன்மையுடன் இயங்குகிறான். நரகமானது பயமுறுத்தும் வகையில் சாதாரணமாகவும் நடுத்தர வர்க்கமாகவும் மாறிவிட்டது. இலக்கியத்தில் அவன் அதே careerist ஆக இருக்கிறான். ஆள் பிடிக்கிறான். குழைந்து நெளிந்து பரிசுகளை வெல்லுகிறான். தன்னை அங்கீகரிக்கவில்லை என்று புலம்புகிறான். சுய சாதிக் கூட்டத்தை தன் பின்னால் சேர்த்து வைத்துக்கொள்கிறான். தனக்குத் தெரியாதவற்றைப் பற்றி ஆணித்தரமாகப் பேசுகிறான். Personality cultஇல் சேர்ந்து வழிபட்டு மேலே மேலே போவதாக கற்பனை செய்கிறான்.
ஹருகி முரகாமி எழுதிய '1Q84'-ல் மட்டுமே அந்தப் பழைய பயங்கரத்தின் ஒரு கண நேர, கோரமான காட்சியைப் படித்தேன் —ஒரு ஒப்பந்தக் கொலையாளி, பிளாஸ்டிக் பையால் ஒருவனை மூச்சுத் திணறடிக்கும்போது ஷேக்ஸ்பியரையும் செகாவையும் மேற்கோள் காட்டுகிறான். இல்லறப்படுத்தப்பட்ட சமகால திகில் நிலப்பரப்பில் இது காலத்துக்கு ஒவ்வாப் பிழை.
நவீனத்துவவாதியின் கடவுள் இறந்துவிட்ட புகார் சொல்லும் தொனியை ஏற்றுக்கொள்வது, கட்டளைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றும் ஒரு நடுத்தர வர்க்க குமாஸ்தாவை போன்ற சாத்தானிடம் ஆன்மாவை நேரடியாக விற்பதைவிட, அந்தத் தரங்கெட்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதை விட, மிகக் குறைந்த ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment