ஜாய்ஸின் “யுலிசஸ்” உருவாக்கிய புதுச் சொற்களஞ்சியம் 30,000 தனித்துவமான சொற்களை ஆங்கில மொழிக்குக் கொடுத்துள்ளது. ஜாய்ஸின் நாவல் மொத்தமாக 2,65,000 சொற்களைக் கொண்டது. ஒப்பீட்டில் 7,65,000 சொற்களைக் கொண்ட கிங் ஜேம்ஸ் பைபிள் 15,000 தனித்துவச் சொற்களையே ஆங்கில மொழிக்குக் கொடையளித்துள்ளது. ஷேக்ஸ்பியரின் அத்தனை நாடகங்களும் கவிதைகளும் சேர்ந்தே ஜாய்ஸுக்கு நிகராக 30,000 சொற்களை ஆங்கிலத்துக்குக் கொடுத்துள்ளன. ஜாய்ஸின் சொற்களஞ்சியத்தை வகைமாதிரிகளாகப் பிரித்து அவற்றின் அர்த்தங்கள் நாவலின் கதைச் சூழலுக்கு ஏற்ப எப்படிப் பொருள் பெறுகின்றன என்பதை அகரவரிசையில் அடுக்கியிருக்கிறேன். உம்பர்ட்டோ எக்கோவின் “ரோஜாவின் பெயர்” நாவலை மொழிபெயர்த்தபோது அதில் எத்தனை வகையான வாக்கிய அமைப்புகள் என் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றன, எத்தனை பழைய வாக்கிய அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றொரு கட்டுரை எழுதினேன். அதை அந்த நாவல் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் நான் சேர்க்காமல் விட்டுவிட்டேன். பிறிதொரு சமயத்தில் அக்கட்டுரையை வெளியிடுவேன். இப்போது என் கவனம் ஜாய்ஸைப் பொறுத்தவரை சொற்களின் மேலும், அவருடைய சொற்களஞ்சியத்தின் மேலும் குவிந்திருக்கிறது.
சொல் ஒரு மொழியின் உயிர் நாடி; வாக்கியங்கள் அதன் உடல்; சொல்லாடல், வாக்கியத்தை விடப் பெரிய மொழி அலகு என்ற அர்த்தத்தில், அதன் ஆன்மா.
பகுதி I : கூட்டுச்சொற்கள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களையோ அல்லது முன்னொட்டு பின்னொட்டுகளை மாற்றியோ சேர்த்தோ கூட்டுச்சொற்களை உண்டாக்க முடியும். ஆங்கிலத்தில் கூட்டுச்சொற்கள் compounds என்றும் Portmanteaus என்றும் அழைக்கப்படுகின்றன. ஜாய்ஸ் உருவாக்கிய கூட்டுச்சொற்கள் படைப்பூக்கம் மிக்கவை.
Anapocryphal: ‘இத்தாக்கா’ அத்தியாயத்தில் வரும் இந்த வார்த்தையை apocryphal என்ற சொல்லோடு ana எனும் எதிர்மறை முன்னொட்டைச் சேர்ப்பதன் மூலம் ஜாய்ஸ் உருவாக்கியுள்ளார். Anapocryphal என்ற சொல்லுக்குக் கற்பனையான, பௌராணிகமான, புனைவான, பொய்யான ஆகிய அர்த்தங்கள் இருக்கின்றன. அச்சொல்லோடு எதிர்மறை முன்னொட்டைச் சேர்ப்பதன் மூலம் மறுக்கமுடியாத மெய்ம்மை உடைய என்ற அர்த்தத்தை இந்தக் கூட்டுச்சொல், முன்னொட்டின் நீட்சியால், பெறுகிறது.
Bedlock- wedlock என்றச் சொல் எப்படி bed, lock என்ற இரு சொற்களின் கூட்டிணைவாக இருக்கிறதோ அது போலவே ஜாய்ஸின் bedlock இரு சொற்களின் கூட்டிணைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பரத்தமை, மண உறவு மீறிய உறவுகள், காமப்பிணைப்புகள் ஆகியவற்றை அந்த சொல் குறிக்கிறது.
Blue-nailed- பெயரடையோடு வினையெச்சத்தைச் சேர்த்து உருவாக்கிய கூட்டுச் சொல். குளிரால் அல்லது இறப்பால் நீலமாய் நிலை குத்திய நிலையை விவரிக்கும் கூட்டுச்சொல்.
Bullockbefriending- பெயர்ச்சொற்களோடு எச்சத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்ட கூட்டுச்சொல். காளையோடு நட்பினை உண்டாக்குதல் என்ற பொருள் பெறும் இந்தக் கூட்டுச்சொல்லை ஜாய்ஸ் ஹோமரின் அடைமொழிகளைக் கேலி செய்வதாகவும் பயன்படுத்துகிறார்.
Chrysostomos - தங்க வாயினையுடைய என்ற பொருள் கொண்ட இந்தக் கூட்டுச்சொல் கிரேக்கத் தத்துவ அடைமொழியிலிருந்து பொருள் மாறாமல் ஆங்கிலத்தில் கடன் வாங்கப்பட்டது.
Diambulist- பகல் நேர நடையாளர். லத்தீன் சொற்களான dies (பகல்), ambulare (நட) ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டக் கூட்டுச்சொல்.
Dreamcrossed- கனவினால் குறுக்கிடப்பட்டமை. விழித்திருக்கும் நிலைக்கும் நனவிலி நிலைக்கும் இடையிலான எல்லைகள் அழிந்த நிலை. பெயர்ச் சொற்களோடு வினையெச்சத்தைச் சேர்த்து உருவாக்கிய கூட்டுச்சொல்.
Gigglegold- பெயர்ச்சொல்லையும் பெயரடையையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட சொல். மது அருந்தகப் பணிப்பெண்களின் தங்க நிறக் கூந்தலையும் அவர்களின் கிளுகிளு நகையொலியையும் ஒருங்கே குறிக்கும் கூட்டுச் சொல்.
Hismy- அவனுடைய என்னுடையது. படர்க்கை, தன்மை, ஆகிய சுட்டுப்பெயர்களைக் கூட்டிணைத்து உருவாக்கப்பட்ட சொல். சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலுள்ள இடைவெளியை அழிக்கக்கூடியது. ஸ்டீபன் டெடலாஸ் தன்னுடைய இயல்பையும் சாத்தானாகிய லூசிபரின் இயல்பையும் ஒன்றோடொன்று கலந்ததாக நினைக்கும்போது உருவாகும் சொல்.
Lion-coloured- சிங்க நிறத்தது. மயில் கழுத்து நிற சேலை போன்ற தினசரி மொழி உபயோகத்துக்குப் பழக்கப்பட்டத் தமிழர்களுக்குச் சிங்க நிறத்தது என்ற கூட்டுச்சொல் பெரிய ஆர்வத்தை உண்டாக்காது. சிங்கத்தைப் போன்ற நிறம் என்பது இந்தக் கூட்டுச்சொல்லை உவமையாக்கியிருக்கும்; சிங்கநிறம் என்றிருந்தால் அது உருவகமாகியிருக்கும். ஜாய்ஸ் வினை/பெயர் எச்சத்தைச் சேர்த்திருப்பதால் இச்சொல் உவமை, உவமேயம், உருவகம் ஆகியவற்றின் அர்த்த இலக்கினைச் சுற்று வழியினைத் தவிர்த்து, குறுக்கு வழியில் அடைகிறது. ஜாய்ஸ் இதை ஒரு சூழலை விவரிக்கப் பயன்படுத்துவதால் இந்தக் குறுக்கு வழி ஒளி பொருந்தியதாகிறது.
Lugubru- ‘lugubrious’ (துக்கம் நிறைந்த என்ற பொருளுடைய) என்ற சொல்லைச் சுருக்கி சிதைத்ததால் பெறப்பட்டது. ப்ளூம் தன் முகத்தை உட்குழிந்த கண்ணாடி ஒன்றில் பார்க்கும்போது அவனுடைய காதல் துக்கம் அவனை எப்படிக் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போலச் சிதைத்திருந்தது என்று சொல்வது.
Mist-wrought - மூடுபனியால் மூடப்பட்ட என்ற காட்சியை ஜாய்ஸ் இந்தக் கூட்டுச்சொல்லின் மூலம் மூடுபனியால் வேலை செய்து உருவாக்கப்பட்ட என்று காட்சியை விவரிக்கிறார்.
Scrotumtightening- விதைப்பையினை இறுக்குவது என்ற பொருள்தரும் கூட்டுச்சொல்லை ஜாய்ஸ் ஐரிஷ் கடல் எவ்வளவு குளிர்ந்திருக்கிறது என்று விவரிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்.
Smiledyawnednodded- புன்னகைத்துக்கொட்டாவிவிட்டுத்தலையைஆட்டினார் - என மூன்று வினைச்சொற்களை ஒன்றாக இணைத்து ஒருவரின் அனைத்து ஒரேசமய முகபாவனைகளையும் ஜாய்ஸ் ஒரே வினைச்சொல்லாக மாற்றுவதன் மூலம் சுட்டிக்காண்பிக்கிறார்.
Smilesmirk- இளக்கார புன்னகை- வெளிப்படையாகப் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் இளக்காரமாக இருக்கக்கூடிய ஒருவனின் வெளிப்பாட்டினைப் புறமும் அகமுமாக ஜாய்ஸின் இந்தக் கூட்டுச்சொல் விளக்கிவிடுகிறது.
Snotgreen- சளிப்பச்சை என கடல்நீரை ஜாய்ஸ் விவரிப்பது அருவருப்பை உண்டாக்கக்கூடியது. ஹோமரின் திராட்சை ரசக் கருப்புக் கடல் போன்ற விவரணைகளுக்கு ஜாய்ஸின் விவரணை எதிர்வினை என்று வாசிக்கும்போது ஜாய்ஸ் ஹோமரின் சாகச மதிப்பீடுகளை எப்படித் தலைகீழாக்குகிறார் என்று தெரியவரும்.
Strandentwining- ஸ்டீபன் தொப்புள்கொடியை ஒரு தொலைப்பேசி கேபிள் போல உருவகித்து அது எப்படி உடலின் அத்தனை தசைகளையும் சதையையும் பின்னிப்பிணைந்து ஆதி நினைவுகளோடு பிணைத்திருக்கிறது என சிந்திக்கிறான்.
Womoonless - நிலவும் நங்கையுமற்ற - womanless, moonless என்ற இரண்டு சொற்களை இணைத்து நிலவும் நங்கையுமில்லாத முழுமையாகத் தரிசாகிவிட்ட சதுப்புநிலத்தை ஜாய்ஸ் விவரிக்கிறார்.
மேற்சொன்ன கூட்டுச்சொற்கள் தங்களின் கதைச்சூழலில் என்ன அர்த்தசாயைகள் பெறுகின்றன என்பது இன்னொரு விரிவான கட்டுரைக்கான பொருள். ஏன், அந்தப் பொருளில் ஒரு நூலே எழுதலாம். அது “யுலிசஸ்” நாவல் அளவுக்கே விரியும் என்பதால் தவிர்க்கிறேன்.
பகுதி 2: உருமாறிய சொற்கள்
ஜாய்ஸ் பல பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாகவும், வினைச்சொற்களைப் பெயர்ச்சொற்களாகவும் பெயரடைகளையும், வினையடைகளையும் வினைச்சொற்களாகவும் உருமாற்றுகிறார். நாவலின் கதைச்சூழலில் எந்த இடங்களில் ஜாய்ஸ் இந்த மாதிரியான உருமாறிய சொற்களைப் பாவிக்கிறார் என்பதைக் கவனித்தால் ஜாய்ஸ் பருப்பொருட்களுக்கு உயிரோட்டமிக்க செயல்திறனை வழங்குவதற்கும், அருவமான புலனுணர்வு நிலைகளைப் பௌதீகமான, தற்செயலான செயல்களாக மாற்றுவதற்கும் அவற்றைப் படைப்பூக்கத்துடன் கையாளுகிறார் என்பது தெரியவரும்.
Almosting- ஏறத்தாழ, கிட்டத்தட்ட என்ற வினையடையை வினைச்சொல்லாக மாற்றுதல் - உளவியல்ரீதியாக ஒரு கருத்து பிரக்ஞையின் நுழைவாயிலில் உள்ளே வருவதற்காகச் சுற்றிக்கொண்டிருக்கும் தருணத்தைக் குறிப்பதற்கு ஜாய்ஸ் இந்த உருமாறிய சொல்லைப் பயன்படுத்துகிறார்.
Arabesquing- காட்சிக்கலை ஒன்றைச் சிக்கலான அலங்காரம் மிக்க வடிவமைப்பாக மாற்றுதல் என்பதைக்குறிப்பது. அலங்காரமான சிக்கலான வடிவமைப்பு என்பதைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றுவது.
Bagged- பை என்ற பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றி பயன்படுத்துவது சாதாரண ஆங்கில உபயோகத்தில் இருப்பதுதான். ஜாய்ஸ் விரைவாகப் பௌதீக நகர்வு ஒன்றைக் கட்டுப்படுத்தி அடக்குவது என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.
Bassooned- மிகத் தாழ்ந்த உள்ளடங்கிய ஒலியை எழுப்பும் இசைக்கருவியைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை மனிதர்களின் அத்தகு பேச்சொலியைக் குறிக்க ஜாய்ஸ் பயன்படுத்துகிறார்.
Bellowsed- உறுமுதல், கனைத்தல் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்லைச் சத்தமான மூச்சிரைப்பைக் குறிக்கும் வினைச்சொல்லாக ஜாய்ஸ் பயன்படுத்துகிறார்.
Crookeding- ஒன்றை வளைப்பது என்று அர்த்தம் தரும் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாகப் பயன்படுத்துதல்
Girling - ஒருவர் இளம்பெண் போல நடந்துகொள்வதைக் குறிக்க ஜாய்ஸ் பயன்படுத்துவது.
Happied- வினையடையை வினையாகப் பயன்படுத்துதல். மகிழ்ச்சியாக மாற்றப்பட்டதைக் குறிப்பது.
Sausaged- ஒரு இறுக்கமான பொதிக்குள் அடைக்கப்பட்ட நிலையைக் குறிப்பது. ஜாய்ஸ் ப்ளூம் தன்னுடைய இறந்து போன தந்தையைப் பிரமையில் ஒரே பொதியாகக் காண்பதைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
Sherlockhomesing- பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றுதல். ஒன்றை உற்று கோக்கி நுணுகி துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் போலப் பார்ப்பதைச் சுட்ட பயன்படுத்தப்படும் சொல்.
Wolfing- ‘To wolf down’ ஓநாய் போல அவசரமாக விழுங்குதல் என்பது ஆங்கில மரபுத்தொடர்களுள் ஒன்று. ஜாய்ஸ் மனிதர்கள் சாப்பிடும்போது, அவசரமாக விழுங்கும்போது எப்படி மிருகமாகச் சீரழிகிறார்கள் என்பதைச் சுட்டுவதற்கு ஜாய்ஸ் பயன்படுத்துகிறார்.
ஜாய்ஸ் புதிதாக உருவாக்கிய சொற்களஞ்சியம் பற்றி இன்னும் ஒரு கட்டுரை எழுதி “யுலிசஸ்” நாவல் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொடரை நிறைவு செய்வேன். இந்தக் கட்டுரைத்தொடர் 1985, 2005லிருந்து 2008வரை ஆகிய ஆண்டுகளில் நான் எழுதிய ஆங்கில இலக்கியத்துறை ஆய்வேடுகளை மூலங்களாகக் கொண்டது.

No comments:
Post a Comment